நான் செஸ் விளையாடத் தொடங்கிய போது, கஸ்பராவ்வும் கர்பாவ்வும் ஒருவரை ஒருவர் எதிர்த்து அறிக்கைகள் விட்ட காலம். ரஷியாவின் தேசிய வீரரான கர்பாவ் பல வழிகளிலும் அவர் சார்ந்திருந்த நம்பிக்கையினாலும், அரசாங்கத்தினாலும் தற்காத்துப் பேசப்பட்டார். கஸ்பராவ் எவ்வித ஆள் பலமும் அரசாங்க பலமும் இல்லாமல் இருந்தாலும், பொது அமைப்புக்களினாலும் அனைத்துலக விளையாட்டாளர்களாலும் பெரிதும் விரும்பப் பட்டவர்.
அவரின் புரட்சிகரமான கருத்துக்களும், நடவடிக்கைகளும் அனைத்துலக செஸ் விளையாடும் சமூகத்தினரால் வரவேற்கப் பட்டன.
விஸ்வ நாதன் ஆனந்த், அப்போதுதான் அனைத்துலக அரங்கில் தடம் பதிக்கத் தொடங்கி இருந்தார்.
அன்றைய மலாய் மெயில் மதிய நாளேடு, செஸ் பற்றிய செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து முழுப் பக்க செய்திகளை வெளியிட்டு வந்தது. குவா கிம் சியோங் என்பவர் வாரா வாரம் செஸ் பற்றிய நுணுக்கமான கட்டுரைகளை எழுதி வந்தார். ஆரம்பம் முதல் இறுதிவரை செஸ் என்றால் என்ன, அது எப்படி விளையாடப்படுகிறது என மிகவும் அழகாக விளக்கக் கட்டுரைகள் பல வெளிவந்த வண்ணம் இருந்தன.
அந்த காலகட்டத்தில் தான் கர்பாவ் மற்றும் கஸ்பராவ் பற்றிய சர்ச்சைகள் வெளி உலகிற்கு தெரியத் தொடங்கின. அதன் பின்னர், கஸ்பராவ் தனியே சென்று செஸ் அமைப்பொன்றை ஏற்படுத்தி தனியே உலக செஸ் போட்டிகளை நடத்தியது முதல் பல செய்திகள் செஸ் விளையோடுவோருக்கு ஆர்வத்தை கொடுத்து வந்தன.
அன்றைய பல சுட சுடச் செய்திகளைப் படித்த பின்பு அதன் ஈர்ப்பு என்னுள் புகுந்து நானும் செஸ் விளையாட்டினை எங்களூரில் பிரபலப் படுத்தத் தொடங்கினேன்.
அந்த ஆர்வத்தில் எடுத்துக்கொண்ட இரட்டை வேட படமே மேலே உள்ளது. நானே என்னுடன் செஸ் விளையாடுவது போல ஒரு கற்பனையில் இந்த போஸ்.
No comments:
Post a Comment