Thursday, 11 October 2012

தவறு செய்யாதவர்களா மருத்துவர்கள். . .? 3

வயதானவர்களில் பெரும்பாலோர் மருத்துவமனைகளுக்கு செல்வதை விரும்பாதவர்கள். மருத்துவர்கள் தங்களின் உயிருக்கு   எவ்வித உத்தரவாதமும் தர முடியாதென அவர்களுக்கு தெரியும். உயிரை மீட்டுத்தரும் இடமென பலர் நினைத்தாலும் அது சிலருக்கு உயிரை எடுக்கும் பலிபீடமாக மாறிவிட்டிருப்பதையும் நாம் கேள்விப்படுகிறோம்.

சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் நாம் குற்றவாளிகளாக்க முடியாது. இதை ஏற்றுக்கொள்ளும் அதே நேரம் அந்த சந்தேகத்தின் பலனை நாம் பயனீட்டாளர்களுக்கு விட்டுக்கொடுத்தே ஆக வேண்டும். இதுவே இயற்கை மரபு.
சாதாரன நோய்களுக்கான சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு சென்று,  அங்கிருந்த உயிர்கொல்லி நோய்க்கிருமிகளால் தாக்கப்படூ உயிர் இழந்தோரும் உண்டு.

சிறுவர்களும் வயதானவர்களும் மருத்துவ மனைகளுக்கு செல்வதை அவசியம் இல்லையேல் தவிர்த்துவிடவேண்டும். இது தெரியாமல் அங்கு நண்பர்களையும் உறவினர்களையும் பார்க்கவரும் பலர் தங்களின் பச்சிளம் குழந்தைகளையும் வயதுமுதிர்ந்தோரையும் அழைத்துவருகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்  இவர்களை  மற்றவித தொற்று நோய்கள் தாக்கும்   சூழ் நிலைகள் பல உண்டு.

மருத்துவமனை என்பது நோயாளிகள் வந்து போகும் இடம். நோய்க்கிருமிகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் இடம். தொற்று நோய்கள் பரவும் சந்தர்ப்பம் அதிகம் உள்ள இடம். இவை நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அப்படியானால் அங்கே வேலையில் இருக்கும் அனைவரும் ஆபத்தில் உள்ளவர்களா என எதிர்கேள்வி கேட்பதை தவிர்த்து, சொல்லும் கருத்தினை புரிந்துகொள்ளவும். அந்தக் கேள்விக்கான பதிலை வேறொரு பதிவில் பார்ப்போம்.

இத்தருணத்தில் இன்னொன்றையும் சொல்லக்கடமைப்பட்டுள்ளேன். என்னுடைய ஆதங்கத்தின் பிரதிபலிப்பாகத்தான் இந்த பதிவுகளை எழுதி வருகிறேனே அன்றி வேறு எவ்வித உள் நோக்கமும் இல்லை என்பதை இங்கே தெளிவு படுத்த விரும்புகிறேன்.  இவை என்னுடைய அனுபவங்களே. யாருக்கும் சொல்லப்படுகின்ற அறிவுரைகள் அல்ல.

ஒரு பாலிசிதாரரின் இன்சுரன்ஸ் விசயமாக அவரை சந்திக்க ஒரு புகழ்பெற்ற மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். தாதியர் சிலர் அங்குள்ள நோயாளிகளை கோபமாக திட்டிக்கொண்டிருந்தனர். அவர்களை  அணுகி  விவரத்தைக் கேட்டேன்...
" இவர்களுக்கு எங்கே போகவேண்டும், யாரைப் பார்க்கவேண்டும் எனத் தெரியாமல் இங்கே வந்து எங்கள் உயிரை எடுக்கின்றனர்..." என விலாசிக்கொண்டிருந்தனர்.

இது யார் தவறு? மருத்துவமனையின் தவறல்லவா? முறையான அடையாளங்களோ உதவியாளர்களோ இருந்திருந்தால் இன் நிலை ஏற்பட்டிருக்காதே...
மருத்துவமனை நிர்வாகத்தினரின் அலட்சியத்துக்கும், கவனமின்மைக்கும் பொதுமக்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இது எந்த வகையிலும் சரியென எனக்குப் படவில்லை. காதில் விழுந்த கடுஞ்சொற்களைக் கேட்க அன்று அங்கு வந்த நோயாளிகளின் மேலும், அவர்களை அழைத்துவந்தவர்களின் மேலும் 'ஐயோ பாவம் ' எனத் தோன்றியது. தாதியரின் நல்ல நேரம் அப்போது முரட்டு சுபாவம் கொண்ட எவரும் அங்கு இல்லை.

இது போன்ற சம்பவங்கள் எங்கோ நடக்கும் ஒன்றல்ல. பல இடங்களில் நாம் பார்த்து பழகிப்போன ஒன்றே. இப்போது தனியார் மருத்துவமனைகளும் இது போன்ற தரங் குறைந்த நிலைக்கு இறங்கிக் கொண்டிருக்கின்றன. நோயாளிககளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காது பன்மடங்கு பெருகிவிட்டதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

உயிருக்கு பயந்து சிகிச்சைக்கு போகும் பலர் இது போன்ற அனாகரிகச் செயல்களினால் மன உளைச்சலுக்கு ஆளாகி தேவை இல்லாமல் மற்ற சில நோய்களுக்கும் உள்ளாகிறார்கள். மன உளைச்சல் இரத்தக்கொதிப்பையும், இருதய நோயையும் அதிகரிக்கச் செய்யும் என்கின்றனர். இதற்கு மருத்துவமனைகளே ஒரு காரணமாகிவிடுகின்றன.

இப்போது பணியில் இருக்கும் பலருக்கு மருத்துவமனையின் உண்மைத் தத்துவம் தெரிந்திருப்பதில்லை. அனைவரும் சம்பளத்துக்கு மட்டுமே வேலை செய்வது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால், தூய மனப்பான்மையோடு, தியாக உள்ளங்களின் சேவையும் அடிபட்டுப்போகிறது.




No comments:

Post a Comment