Wednesday, 31 October 2012

ஜேம்ஸ்பாண்ட் 007 பகுதி 3


ஹொலிவுட்டின் நடிகைகள் எல்லோருக்குமே பாண்டுடன் ஜோடி சேர கொள்ளைப் பிரியம். ஆனால் அந்த பாத்திரத்திற்கு சில சிறப்பு தகுதிகளும் உண்டு. ஜேம்ஸ்பாண்ட் படங்களின் தனிச்சிறப்புகள் சில. அவற்றுள் அழகிய பெண்களின் அணிவகுப்பும்  அடங்கும். ஒவ்வொரு படத்திலும் புகழ்பெற்ற நடிகைகள் யாராவது இடம்பெறுவது தவறியதே இல்லை. எல்லா காலகட்டங்களிலும் பல நாடுகளின்  அழகிகள்  இந்த பாண்ட் படங்களில் நடித்து பெயர் பெற்றிருக்கின்றனர்.

ஜேம்ஸ் பாண்டினுடைய பாஸின் காரியதரிசியாக எல்லா படங்களிலும் ஒரு கதாபாத்திரம் உண்டு. மணிபென்னி என்பது அவர் பெயர். பாண்டுக்கு அவ்வப்போது அலுவலக ரகசியங்களை தேவைக்கேற்றாற்போல் தருவதில் வல்லவர். பாண்டின் மேல் அதிக ஆர்வமும் அக்கறையும் கொண்டவர். ஆனால் ஏனோ, பாண்ட் இவரை மட்டும் தன்னுடன் இணைத்துக்கொண்டதிலை.

விதவிதமான கார்களும், நவீனமான ஆயுதங்களும் கடைசியாக வெளிவரும் படங்களில் அப்போது மார்க்கெட்டில் இருப்பது போன்று காண்பிக்கப்படும். இதிலும் அதுபோல் சில ஆயுதங்களைக் காண்பிக்கின்றனர். ஆனால், 1962ம் ஆண்டு பாண்ட் பயன்படுத்திய கார் இதில் எதிரிகளால் தகர்க்கப்படுகிறது. அதனால் வெகுண்டெழும் பாண்ட் கடுங்கோபத்தில் வில்லனை அழிக்க காஸ் சிலின்டர்களை உபயோகப்படுத்துவது நல்ல கிளைமாக்ஸ்.

( மேலுள்ள படங்கள் : சில இணையத்தளங்களிலிருந்து எடுக்கப்பட்டவை )

Tuesday, 30 October 2012

ஜேம்ஸ்பாண்ட் 007 பகுதி 2

இப்போதுள்ள டேனியல் கிரேக்கிற்கு முன் ஐந்து பேர் ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவரவர் காலத்தில் தனித்தன்மை கொண்ட சிறந்த நடிகர்களாகவே இருந்திருக்கின்றனர்.


1962ல் அறிமுகமாகி ஆறு படங்களில் "ஜேம்ஸ்பாண்ட்" பாத்திரத்தில் நடித்து அதற்கு பெருமை சேர்த்தவர் 'ஷாவ்ன் கொனரி'.  ஐம்பது ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் இவரே சிறந்த "பாண்ட்" என சொல்வோர் நிறையவே இருக்கிறார்கள். அதிகாரபூர்வமற்ற முறையில் இவர் " நெவெர் சே நெவெர் அகைய்ன்" எனும் படத்திலும் நடித்திருக்கிறார். படம் சிறப்பாக இருந்தாலும் வழக்கமான பாண்ட் படங்களுக்கான பின்னனி இசை இல்லாததால் அவ்வளவாக ரசிக்க இயலவில்லை.  முகத்தை மிகவும் சீரியசாக வைத்துகொண்டு வில்லன் களை புரட்டிப்போடும் நாயகன் இவர்.
 நவீனங்களுக்கு எப்போதுமே மக்களிடம் ஒரு தாக்கம் இருக்கும். அந்த தாக்கத்துக்கு தீனியாய் வந்தவை இவரது பாண்ட் படங்கள். "டாக்டர் நோ" தொடங்கி "டைமன் ஸ் ஆர் ஃபோர் எவர்" வரைக்குமான இவரது படங்கள் மேற்கத்திய சினிமா வளர்ச்சிக்கு ஒரு முத்திரையாக அமைந்தன.



அடுத்து வந்தவர் "ஜோர்ஜ் லேசன்பி". 1969ல் "ஒன் ஹெர் மெஜெஸ்டிஸ் சீக்ரட் சேர்விஸ்" எனும் ஒரே படத்தில் நடித்திருந்தார். படம் பிரமாதமாக வந்தது. கார்கள் ஒன்றை ஒன்று விரட்டிக் கொண்டு போகும் போது பின்னனியில் அந்த ஜேம்ஸ்பாண்ட் இசை காட்சிகளுக்கு மிருகேற்றியது. ஆனால் ஏனோ ஒரே படத்துடன் இவர் நிறுத்திக்கொண்டார். இவரின் படத்தில் தான் இவரின் மனைவியை வில்லன் "கோஜெக்" டெல்லி சவலஸ் சுட்டுக் கொண்றுவிடுகிறார். வழக்கமான முடிவாக இல்லாமல், சற்று சோகமாகவே படம் முடிந்திருக்கும். தேவையற்ற இந்த 'சென்டிமென்டல்' முடிவு அடுத்தப் படங்களில் தொடரவில்லை...( நல்லவேளை தப்பிச்சோம் ).


மூன்றாவதாக வந்து ஜேம்ஸ்பாண்ட் நாயகனை உலகமெங்கும்  கொண்டு சென்று சேர்த்தவர் ,  'ரோஜர் மோர்'. 1972 முதல் 1985 வரை ஏழு படங்களில் அந்த நாய வேடத்தில் சாகசங்களை செய்தார்.  'லிவ் என்ட் லெட் டை" திரையில் அந்த இயந்திர படகு விரட்டும் காட்சிகளை உண்மையான பாண்ட் பிரியர்கள் இன்னும் நினைவில் வைத்திருப்பார்கள். அதில் இன்னொரு காட்சியும் நம்மைக் கவர்ந்தது. ஒன்றன் பின் ஒன்றாக முதலைகள் வரிசையில் நிற்க அதன் மேல் பாண்ட் ஓடி தப்பிப்பது போன்று வரும் காட்சியும் நம்மை பரவசப் படுத்தியது.  இவரின் படங்களில் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் இருக்கும். வில்லன்களை அடித்து நொறுக்கும் அந்த குணம் எப்போதும் இருப்பதில்லை. இதுவரை வந்த ஜேம்ஸ்பாண்ட்களில் இவர்தான் ரொம்பவும் அழகானவர்.
இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்பே இவர் 'தெ பெர்சுவேடர்ஸ், தெ சேய்ன்ட்' போன்ற தொலைகாட்சித் தொடர்களில் பிரபலமாக தோன்றியவர்.



டிமோதி டால்டன் 1986 முதல் 1994 வரை ஜேம்ஸ்பான்ட் ஆக நடித்தார். இவரும் ஷாவ்ன் கோனரியைப் போலவே சீரியசான நடிகர். இவரின் லைசன் ஸ் டு கில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.


1995 முதல் 2005வரை ஜேம்ஸ்பாண்ட் ஆக நடிக்க வந்தவர் 'பியர்ஸ் புரொஸ்னன்'. இவரை கம்ப்யூட்டர் நாயகன் என்றும் அழைப்பதுண்டு. காரணம் இவர் ஜேம்ஸ்பாண்டாக நடிக்கும் போது தான் கம்ப்யூட்டர், இன்டெர் நெட் என பெரிதாக பேசப் பட ஆரம்பித்தது. இளம் வயதினரை கவரும் வண்ணம் காட்சியமைப்புக்களும் மாற்றியமைக்கப் பட்டன. நான் கு படங்களில் இவர் நடித்திருந்தார்.


2005 க்கு பிறகு இன்றுவரை புதிய பாணியில் துப்பறியும் நுணுக்கங்களைக் கொண்டு விறு விறு நடையில் ஜேம்ஸ்பாண்டாக வளம் வருபவர் டேனியல் கிரேக். இவரின் முதல் பாண்ட் படமான கசினோ ரோயல் புதிய தலைமுறையை வெகுவாகக் கவர்ந்த படங்களில் ஒன்று. அதன் தொடக்க காட்சிகள் பாண்ட் நாயகனின் புதிய பரிமாணத்தைக் வெளிப்படுத்தியது.

( மேலுள்ள படங்கள் : சில இணையத்தளங்களிலிருந்து எடுக்கப்பட்டவை )

ஜேம்ஸ்பாண்ட் 007 . . .

பாண்ட்... “
எனச் சொல்லி கண்களை உயர்த்தி, தலையை லாவகமாக அசைத்து,
 " ஜேம்ஸ் பாண்ட்..."
என முடிப்பது இந்த திரைக்கதாநாயகனின் தனிச் சிறப்பு.
அப்டியே ஒரு புன்னகை...அதுவும் உதட்டில் ஒரு சிகரெட் என படு ஸ்டைலாக தன்னை அறிமுகப்படுத்தும் காட்சிகள் மற்ற படங்களில் இல்லாதவை.  ஜேம்ஸ்பாண்டின் தனி அடையாளம் இது.



"பாண்ட்....ஜேம்ஸ்பாண்ட் ... " இதோ வந்துவிட்டார், தனது 23வது வீர தீர சாகசங்களோடு.

உலகத்திலேயே மிகப் பிரசித்தி பெற்றது இந்த கதாபாத்திரம். உலக மக்கள் அனைவரும் எவ்வித பாகுபாடுமின்றி பார்த்து ரசிக்கும் படம் இந்த ஜேம்ஸ்பாண்ட் 007 தொடராகும். இந்த வருடத்தோடு ஜேம்ஸ்பாண்ட் படங்கள் திரையிடப்பட்டு 50 வருடங்கள் பூர்த்தியாவதால், இதன் கொண்டாட்டங்கள் உலக நாடுகள் பலவற்றில் அமர்க்களப்படுகின்றது.



முன்பு  எம்ஜிஆர் படங்களுக்கும், பின்னர் ரஜினி படங்களுக்கும் தமிழ் நாட்டில் இருக்கும் ஆரவாரங்களும் ஆர்ப்பாட்டங்களும் இந்த ஜேம்ஸ்பாண்ட் நடிகருக்கு உலகெங்கிலும் உண்டு.

இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்குதான்
கொண்டாட்டங்களின் உச்சமே தவிர அதில் கதாநாயகனாக நடிப்பவர் என தனியாக இல்லை. அந்த ஜேம்ஸ்பான்ட் நாயக பாத்திரத்தில் இதுவரை   ஏழுபேர் நடித்துவிட்டனர். ஒவ்வொருவரும் அந்த பாகத்தை ஏற்று நடிக்கும் போது புகழின் எல்லைக்கு சென்றிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆயினும் புதியவராக ஒருவர் வரும்போது அந்த மதிப்பும் மரியாதையும் புதியவருக்கே போய்ச் சேருகிறது.  



"ஸ்கைஃபால் " என்னும் இவ்வருட புதிய படம் அந்த வகையில் ஜேம்ஸ்பாண்டாக 'டேனியல் கிரெக்' நடிப்பில் அவருக்கு புகழ் சேர்க்கும்  மூன்றாவதாக  வரும் படம்.  வழக்கம்போல அவரின் நடிப்பாற்றலை ரசிக்கும் அதே நேரம் பிரமாண்டமான அப்படக்காட்சிகளை பார்க்க உலகளவில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

மலேசியத் திரையரங்குகளில் நாளை வெளியீடு காணவிருக்கும்து  007 ஜேம்ஸ்பாண்ட் வரிசையில் வெளிவரும் 23வது படமாகும். அமெரிக்காவில் கடந்த 26ம் தேதி திரையிடப்பட்டு  வெற்றிகரமாக  ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், ஐரோப்பிய நாடுகளில் வரும் நவம்பர் 9ல் தான் திரையிடப்பட இருக்கின்றது.


 (மேலுள்ள படங்கள் : சில இணையத்தளங்களிலிருந்து எடுக்கப்பட்டவை )

Friday, 26 October 2012

பந்திங் நகரில் ஜயன் ஹைப்பெர் மார்க்கெட் . . .

' ஜயன் ஹப்பர் மார்க்கெட் ' இப்போது பந்திங் நகரிலும் ஒரு கிளையை திறந்திருக்கிறது. கடந்த 23.10.12ல் திறப்புவிழா கண்ட அது சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைவரின் கவனத்தையும்  ஈட்டியிருப்பதுடன் அரங்கம் கொள்ளா காட்சிகளைப் போல நிரம்பி வழிகிறது.
என்னவோ காணாதைக் கண்டுவிட்டாற் போல் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது தினமும்.

இத்தனைக்கும், ஒரு' ஈக்கொன்சேவ்', ஒரு 'ஸ்டோர் ', ஒரு ' மெகா ' மற்றும் சில மாதங்கள் முன்பு வரை,' டெஸ்கோ ' என பல சூப்பர் மர்க்கெட்டுகளைக் கொண்ட  நகரமே பந்திங்.


" அட புதுசுன்னா ஒரு மோகம் இருக்கத்தானே செய்யும் ..." என்கிறார், சிம்பாங் மொரிப் வட்டாரத்தில் வசிக்கும் திரு சிவ சாமி.

அவர் தொடர்ந்து சொன்ன கருத்து இது:
"எது எப்படி இருந்தாலும், பல சில்லரைக் கடைகள் இதனால் பெருமளவில் பாதிக்கபடுவது என்னமோ உண்மைதான். பெயரே 'ஜயன்'. இவர்களோடு போட்டி இட வேண்டுமானால் அநியா விலைகளை தூக்கி வீசிவிட்டு ஞாயமான விலைகளை அறிமுகப் படுத்தினால் மட்டுமே இனி முடியும். அதிக விலை கொடுத்து வாங்கி மக்கள் கஷ்ட்டப்பட்ட நாட்கள் போய், வணிகர்கள் கவலைப்படும் நாளும் வந்துவிட்டது."

திறப்பு விழாவின் போது அப்படியொரு கூட்டம்.

சீனர்களின் ' நாக நடனத்துடன்' சரியாக காலை மணி எட்டுக்கு அதிகாரபூர்வமாக திறப்பு விழா கண்டது 'ஜயன்..."

வாங்குவதற்கு சில பொருட்களே இருந்தாலும்  ' முதல் நாள் அப்படி என்னதான் இருக்கிறது ' எனும் ஆர்வத்தில் உள்ளே வலம் வருகிறார்கள் இவர்கள். இவர்களின் பின்னால் 'என்ன நடக்கிறது அங்கே?" என எட்டிப் பார்க்கும் இந்தியப் பெண்மணி ஒருவர்.

அதிகமான ஆட்கள். கார் நிறுத்தக் கூட இடம் இல்லா நிலை. பாதிக்கும் மேற்பட்டோர் பிரதான சாலையின் இரு மடங்கிலும் தங்களது வாகனங்களை நிறுத்தியிருந்தனர். ஆனால், கடமையில் இருந்த காவல் துறை அதிகாரிகள், தங்களது கையெழுத்துப் பயிற்சியில்   'சம்மன் களை" எழுதித் தள்ளிவிட்டனர்.    

உலகமயமாக்கல் . . .

கலை, கலாச்சாரம், பொருளாதாரம், நவீன தொழில் நுட்பம் என செல்வாக்கு மிக்க அனைத்தையும் ஒன்று சேர்த்து அருகே அழைத்துவருவது உலகமயமாக்கல் எனும் செயல் முறையாகும். ஆங்கிலத்தில் 'குளோபலைஸேஷன்' என்னும் வார்த்தைக்கு இதுபோல் இன்னும் எவ்வளவோ பொருள்களைக் கூறலாம்.

உலகின் எந்தப் பகுதியில் யார் இருந்தாலும், அவர்களோடு அவர்களின் தேவைக்கேற்ப ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்பு ,  உலகச் சந்தையில் எல்லோரும் வெற்றியாளர்களே எனும் அதிசய சந்தர்ப்பத்தை பெற்றுத் தருகிறது தற்போது.

தனிப்பட்டவர்கள் மட்டுமன்றி, நாடுகளும் இந்த உலகமயமாக்கலில் இருந்து எட்டிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அரசாங்கங்களோடு தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் மிக இன்றியமையாததாக ஆகிவிட்டது. ஏழை நாடுகளுக்கும், முன்னேறி வரும் இதர நாடுகளுக்கும் இதனால் பெரும்  நன்மையே.

இதனால் அதிக வேலை வாய்ப்புக்கள் கிடைக்கின்றன,  மக்களின் வாழ்வாதாரம் உயிர் பெற்று நாட்டின் வளர்சிக்கு ஆற்றல் மிகு சக்தியாக மாறுகின்றது.
ஜன நாயக பண்புகளை அதிகம் கொண்டுள்ள நாடாக உலகமயமாக்கல் வழி மக்கள் நண்மையடைகின்றனர். நாடுகளுக்கிடையே பூளோகப்பாடத்தில் படித்ததைத் தவிர வேறு எல்லைகள் கிடையாது.

தனி ஒருவரின் ஆதிக்கமோ, ஒன்றை விட்டால் வேறு வழியில்லை எனும் சூழ்நிலைகளோ கிடையாது. இருக்கும் அனைத்து சட்டங்களும் பொதுவில் என வரும்போது, அனுகூலங்களும் அனைவருக்கும் சமமாக பிரித்து தரப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.

உலகமயமாக்கலில், கட்டாயம் என்று எதுவும் இல்லை, ஆங்கில மொழியைத் தவிர.   தொடர்பு மொழியாக ஆங்கிலம் இப்பொது எல்லா நாடுகளிலும் ஆட்சிபுரிகின்றது.  ஆங்கிலத்தை தவிர்த்து வந்த நாடுகளும் இப்போது 
அதன்  தேவையினையும், செல்வாக்கினையும் விளங்கிக் கொண்டு விட்டன.

நமது உள்உற்பத்திக்கு வெளி நாட்டுச்சந்தையினைத் தேடுவது இதனால் மிகச் சுலபமாகிவிட்டது. விதைகளில் இருந்து ஏற்றுமதி வரை விவசாயத்தில் நல்ல முன்னேற்றத்தை தருகின்றது.   தன்னியக்க ஆட்டோ இயந்திரங்களை தருவிப்பது இப்போது எளிதாகிவிட்டபடியால் பல விவசாயிகள் நன்மையடைந்து வருகின்றனர்.

போக்குவரத்துச் சேவைகள் பல மடங்கு தரத்தில் உயர்ந்துவிட்டன. கைபேசிகள், இன்டெர்னெட் இணைப்பு, செய்தி பரிமாற்றங்கள் போன்ற தொடர்புச்சாதனங்கள் நவீன மயமாக்கபட்டுவிட்டன.  மலிவு விலையில் அதிவேகமாக தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் இப்போது நமக்கு உண்டு. இதனால், திறந்த கல்வி பல்கலைக்கழகங்கள் பெருகி விட்டன. பட்டம் பெறும்  கல்விமான்கள் அதிகரித்து விட்டனர்.  நாட்டுக்கு நாடு கல்வி கற்போர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு போகிறது.

பங்குப்பரிவர்த்தனை ( ஷேர்மார்க்கெட் ), தொழில் முதலீடு ( இன்வெஸ்ட்மென்ட்  ) போன்றவற்றில் கால் வைக்கும் முன் அதனைப்பற்றிய எல்லா விபரங்களையும் திரட்டி, திட்டமிட்டு பணவிரையத்தை தவிர்த்து வெற்றி பெறும் வசதிகள் இப்போது நிறையவே உண்டு.  

பலவித  மருத்துவ ஆராய்ச்சிகளிலும் ஈடு பட உலகமயமாக்கல் வித்திடுகிறது. மேல் நாடுகளில் கண்டுபிடிக்கப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள் நம்மை வந்தடைய முன்பு பல வருடங்கள் ஆகும்.  அந்த நிலை இப்போது இல்லை.  விற்பனைக்கு தயார் நிலையில் இருக்கும் புதிய மருந்துகள்  மேல் நாடுகளின் சந்தைக்கு வரும் அதே நேரத்தில் இங்கே நம்மையும் வந்தடைந்துவிடுகிறது.

சர்வதேச சந்தையினை அறிந்துகொண்டதன் மூலம் பல நிறுவனங்கள் உடனுக்குடன் இதுபோன்றவற்றை தருவிப்பதன் அவசியத்தை  உணர்ந்துள்ளனர். முதலில் வருபவர்க்கே முதற் சலுகை எனும் நிலை இப்போது விறுவிறுப்பான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திறந்த கொள்கைகளை உலகமயமாக்கல் முன்னிறுத்துவதால், வர்த்தகம், மூலதனம், தொழில் நுட்பம், தகவல்துறை போன்றவற்றில் இன்னும் பல முன்னேற்றங்களை நாம் எதிர்ப்பார்க்கலாம். 

ஒன்றுக்கொன்று உதவிக்கொள்வதன் மூலம் நடைமுறைக்குச் சாத்தியமான பல திட்டங்களை உலக நாடுகள் இப்போது பகிர்ந்து கொண்டு அமுல்படுத்தத் தொடங்கிவிட்டன.





தமிழில் எழுத . . .

வலைத்தளத்தில் மல்டி டாஸ்கிங் முறையில் தமிழில் எழுதலாம்.
மல்டி டாஸ்கிங் எனப்படுவது  ஒருவர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்வதாகும். பொதுவாக இது கணினி பயன்படுத்துவோர் அதிகம் உபயோகிக்கும் வார்த்தை.

வலைத்தளத்தில் இப்படி செய்வது நமது நேரத்தைக் குறைக்கிறது. ஆனாலும் எல்லாவற்றுக்கும் இதுவே சரியான தீர்வு ஆகிவிட முடியாது. நமது கணினியின் சக்தியைப் பொருத்தே முல்டி டாஸ்கிங் நமக்கு உதவியானதா இல்லையா என இருக்கும். நவீன கணினிகள் இதுபோன்ற பல வேலைகளை செய்யும் திரன் கொண்டவைகளாக இருப்பதால் அவை நமக்கு பெரும் உதவிதான் செய்கின்றன. அனால், நம்மில் பலர் இன்னும்  பழைய கணினிகளை உபயோகப்படுத்துவதால், அவர்களுக்கு 'சிங்கள் டாஸ்கிங்", ஒரு நேரத்தில் ஒரு வேலைதான் சரியானதாக அமையும். இல்லையேல் நமது சில உத்தரவுகளை கணினி அதன் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்குள் 'போதும் போதும்' என்றாகிவிடும் நமக்கு.

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகும் ஒன்று இப்படி மல்டி டாஸ்கிங் மூலம் வலைத்தளத்தில் இருக்கும் மென்பொருளால் தமிழில் எப்படி எழுதுவது என்பதுதான். தமிழில் எழுத பல வழிகள் இருக்கலாம். அதிக தொகை கொடுத்து தமிழ் மென்பொருளை வாங்க இயலாதவர்களுக்கு இது ஒரு சுலபமான  வழியாகும்.

தொடங்கு முன் ஒரு வார்த்தை.  இங்கே விளக்கபட உள்ளது  குறில், நெடில், வல்லினம் , மெல்லினம்,  இடையினம் எனும் தமிழ் இலக்கன விதிகளைத்தெரிந்திருப்போருக்கு மட்டுமே. மற்றவர்கள் எதையோ பிடிக்க எதுவோ ஆகிவிட்ட கதையாக, தமிழ் வல்லுநர்களால்  தமிழைக் கொலை செய்த குற்றவாளிகளாக்கப்படுவீர்கள், கவனம்.

முதலில்,   மைக்ரோசொப்ட் வேர்டை திறந்து வைத்துக்கொளுங்கள்.
அடுத்து,   www.tamilkudumbam.com/tamil_help.html  எனும் வலைத்தளத்திற்குச் செல்லுங்கள். இங்கே, இரண்டு கட்டங்கள் உங்களுக்கு தெரியும். மேலே ஆங்கிலத்தில் டைப் செய்தால், கீழ்க்கட்டத்தில் தமிழில் அது தெரியும்.

உதாரணத்திற்கு,   ammaa   என்று டைப் செய்தால், கீழே அம்மா என்று தோன்றும்.

இப்படி தமிழில் எழுதுவதற்கு, தங்கிலீஸ் என்று பெயர். கணினிக்கு  நம் மொழியையும் தெரியவைப்பதற்கு இந்த 'யூனிகோட்' முறை தேவைப்படுகிறது. இரண்டு கட்டங்களுக்கும் மேலே உள்ள இளம் நீலத்திலும் கரும் நீலத்திலும் உள்ள எழுத்துக்களை துணையாய்க்கொண்டு நீங்கள் நினைப்பதை இப்போது தமிழிலேயே எழுதலாம்.  

"anbu enbathu uNmaiyaanathu, anbu enbathu theyvamaanathu"
என்று டைப் செய்ய அது இப்படி தோன்றுகிறது கீழ் கட்டத்தில்:
அன்பு என்பது உண்மையானது, அன்பு என்பது தெய்வமானது.

கீழே தோன்றுவதை வெட்டி நீங்கள் திறந்து வைத்துள்ள மைக்ரோசொப்ட் வெர்டில் ஒட்ட உங்களின்  முதல் தமிழ் வாக்கியம் பூர்த்தியாகி விட்டதை உணர்வீர்கள்.

இனி இதுபோல் தொடர்ந்து அடுத்தடுத்த வாக்கியங்களை மேலே ஆங்கிலத்தில் டைப் செய்து இரண்டாவது கட்டத்தில் தமிழில் வருவதை வெட்டி முன்பு சேமித்து வைத்த வாக்கியத்துடன் இணைத்துக்கொள்ளவும்.


அன்பு என்பது உண்மையானது, அன்பு என்பது தெய்வமானது.

அன்பு என்பது உயிரினங்களை நெருக்கமாக கொண்டுவரும் ஒரு பிணைப்பு.

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு..."

என அழகாகச் சொன்னார் வள்ளுவர்.

இப்படியாக உங்கள் பதிவினை தமிழில் தொடரவும்...

-  நன்றி : தமிழ்குடும்பம்காம்

Tuesday, 23 October 2012

"ஸ்ரீராமராஜியம்". . .


தமிழ்த் திரை உலகம் பக்திப் படங்களை இப்போது அவ்வளவாக எடுப்பதில்லை என்றாலும், மொழிமாற்றுப் படங்களாக ஒரு சிலவற்றை நாம் தமிழில் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். அப்படி அன்மையில் ஆஸ்ட்ரோ அலைவரிசையில் இடம்பெற்ற படம் "ஸ்ரீராமராஜியம்".

இதிகாசமானாலும் நிஜமானாலும் நாம் அனைவரும் ராமாயணம் படித்திருப்போம். சீதையை வஞ்சகமாக கவர்ந்து சென்ற ராவணனை அனுமாரின் துணைகொண்டு வென்று மீட்டு வருவது என்பது பொதுவாக எல்லா ராமாயண புத்தகங்களிலும் இருக்கின்ற அடிப்படை கரு. ஆனால், பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து அயோத்திக்கு சென்று அரண்மனை ஏற்பது என்பதோடு பல ராமாயண புத்தகங்கள் நிறைவு பெற்றுவிடுகின்றன. அதைத்தொடர்ந்தும் ஒரு மாபெரும் அத்தியாயம் இருக்கின்றது. அதைச் சொல்வதுதான் இந்த கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ் இ்மேஜஸ் மூலம் கண்ணைக்கவரும் வண்ணக்கலவைகளோடு எடுக்கப்பட்ட சாதனைப் படம்.

ராமரின் பட்டாபிஷேகத்தின் போது நடந்த குழப்பங்களோ, அதற்கு முன்னர் நடந்த சூழ்ச்சிகளோ அல்லது அவரின் வனவாசமோ போன்ற வழக்கமான ஒன்றாக இல்லாது,   ஸ்ரீராமபிராணும் அன்னை சீதா தேவியும் தம்பதியராக திரும்பி வந்ததில் ஆரம்பிக்கிறது இந்த பாலகிருஷ்ணனும் நயந்தராவும் இணைந்து நடித்த "ஸ்ரீராமராஜியம்" திரைப்படம்.

யாரெனத் தெரியாது சிற்றப்பா லக்ஷ்மணனிடமும் தந்தை ஸ்ரீராமரிடமும் சண்டையிடும் லவ - குசா காட்சிகள் மனதைக் கவரும் வண்ணம் அமைந்திருந்தன.

வழக்கமாக எல்லோரும் சொல்வதைப் போலவே இல்லாமல் சற்று மாறுபட்டு படத்தை எடுத்து பெயர் வாங்கிக்கொள்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

ராமரைப் பிரிந்து வனத்தில் வாழும் சீதையாக நயந்தரா நன்றாகவே செய்திருந்தார். ஆச்சரியம் என்னவெனில் இத்திரையில் அவர் சீதையின் இலக்கனத்திற்கான அத்தனை குண நலன்களையும் மிக இயற்கையாக செய்திருந்தார் . பொதுவாழ்வின் கிசு கிசுக்களின் பாதிப்புகள் துளிகூட இல்லாது ஒரு அசத்தலான நடிப்பில் அனைவரையும் கவர்ந்து விட்டார்.

தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணனும் அன்றைய என் டி ஆர் அவர்களின் நடிப்பினைப் போன்று ஸ்ரீராமபிரானாக அற்புதமான் நடிப்பை வழங்கி இருந்தார். காட்டில் விட்டுவிட லக்ஷ்மணனைப் பணித்துவிட்டு, துயில் கொண்டிருக்கும் சீதையின் காலருகே முகம் பதித்து விடை கொடுக்கும் காட்சியில் மனதுக்கு இதமான ஒரு வலியினைக் கொடுத்தார். இது போல பல காட்சிகள் அவரின் சிறந்த நடிப்பை சொல்ல.