Sunday, 14 July 2013

Saturday, 13 July 2013

அஸ்ட்ரோவில் மழை...


அஸ்ட்ரோ மழையின் போது சரிவர வேலை செய்யாது. அதற்கான அதிகப் படியான கட்டனமாக அவர்கள் பெற்றுக்கொண்டாலும் மழை நேரங்களில்  நிகழ்சிகள் கிடைக்காது நாம் கஷ்டப்படுவது அவர்களுக்கு தெரிந்ததாக தெரியவில்லை. எனவே சிலர் இப்படியும் யோசித்து முயற்சி செய்கிறார்கள்.

நகைச்சுவைக்காக போடப்பட்டதே இப்படம். உண்மையில் தேவையற்ற செலவுகளில் ஆஸ்ட்ரோவும் ஒன்று. இதை மீண்டும் ஒருமுறை சொல்ல இப்படத்தை இங்கே பதிவு செய்கிறேன். அவ்வளவுதான்.

சற்று சிந்தித்தோமானால், குறைந்த கட்டனம் எனச்சொல்லி நாம் பார்க்காத அலைவரிசைகளையும் நம்மேல் சுமத்துவதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள் இந்த தனியார் தொலைக்காட்சியின் ஏஜென்ட்டுகள்.

மாதம் ரிம.145 மட்டுமே என்பார்கள். அதில் பாதிக்கும் மேற்பட்ட அலைவரிசைகளை நாம் ஒருமுறைகூட திறந்திருக்க மாட்டோம். இதில், சேவைக்கட்டனம் வேறு நம்மிடம் இருந்து பலவந்தமாக பிடுங்கப்பட்டிருக்கும்.

ஆக, மீண்டும் ஒருமுறை யோசியுங்கள். நீங்கள் மாதா மாதம் கட்டும் தொகை நீங்கள் பார்த்துப்பயனடையும் அலைவரிசைகளுக்கா அல்லது வேண்டாதவற்றுக்கும் சேர்த்துத்தானா என மனதில் எண்ணிப்பாருங்கள்.

ஆஸ்ட்ரோவிற்காக மாதா மாதம் செலவிடப் படும் தொகை ஞாயமானதா, அல்லது இன்னும் சற்று குறைக்கப்பட்டிருக்கலாமா?

தண்ணீரை மிச்சப்படுத்துவதைப்போல, மின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது போல தேவையற்ற ஆஸ்ட்ரோ சானல்களையும் நிறுத்திவிடலாமே...

'எண்ணங்கள் ஆயிரம்' இதுவரை...

இணையம் என்பது ஒரு சமுத்திரம். எல்லோருக்கும் எல்லாமும் மலைபோல புதைந்து கிடக்கின்றது இங்கு.  ஆனால், எந்த அளவு நண்மைகள் உண்டோ, அதேயளவு தீமைகளும் எங்கும் பரந்து கிடக்கின்றது  என்பதனை மனதில் நிறுத்தி, சுய கட்டுப்பாட்டுடனும் கட்டொழுங்குடனும் நடந்து கொண்டால், இணையத்தில் நமது பயணம் இனிமையானதாக இருக்கும்.

வாசிக்கும் பழக்கமுள்ளோருக்கு ஒரு வரப்பிரசாதம் போல் இணையத்தில் அறிவுசார்ந்த விசயங்கள் அவ்வளவு உண்டு. தரமான அரிய பலவும் நமக்குப் பயன்படும் வண்ணம் கோப்பில் கிடக்கக் காணலாம்.  'புரோஜெக்ட் மதுரை' போன்ற வலைத்தளங்கள் கற்றலுக்கும், கற்பித்தலுக்கும்,  வளமான வாழ்விற்கும் உகந்ததாக பலராலும் முன்மொழியப்படுகின்றது.

அதே நேரம் சுய நலமற்ற சமூகப்பார்வையெனச் சொல்லிக்கொண்டு தங்களின் தனிப்பட்டக் கருத்துக்களை  திணிக்க முயல்வோரும் இங்கு எண்ணிக்கையில் அதிகம்.  நிஜம் எது போலிகள் எது எனப் பிரித்துப்பார்க்கும் மனப்பாங்கு நம்மை காத்து நிற்கும்.இல்லையேல் பார்க்கும் அனைத்தும், படிக்கும் அனைத்தும் நம்மை சலனப்படுத்தும்.

ஒரு நாளின் பல மணி நேரத்தினை வீணடிக்கும் முக நூலும் இங்குண்டு, இவ்வுலகுக்கு மட்டுமல்ல, அவ்வுலகுக்கு தேவையான இறையான்மையும் இங்குண்டு. கழிசடைகளும் இங்குண்டு, கற்பக விருட்சங்களும் இங்குண்டு.

வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளுக்கு உகந்தவற்றை மட்டுமே மனதில் நிறுத்தினால் இணையம் நமக்கு சேவை செய்யும் ஒரு சிறப்பு மையமாகும். நமது உத்தரவுகளின்படி ஆடும், பாடும், ஓடும், நமக்கென இருக்கும் ஒரு தகவல் களஞ்சியமாகவே மாறிவிடும்.

கணினியில் பல இடங்களுக்கு உலா போவதும், அதிலுள்ளவற்றை படிப்பதுமாக இருப்போரில் இருந்து மாறுபட்டு வலைப்பூவினை அமைத்து இந்த இரண்டாண்டுகள் மனதில் பட்டதை எழுதி வரும் இந்நேரத்தில், எனது பதிவுகளைப்படித்து கருத்துக்களைச் சொன்ன, சொல்லிவரும் முகம் தெரியா அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளை இங்கு சொல்லிக்கொள்கிறேன்.
குறைகள் பல இருந்திருக்கலாம் அவற்றை குற்றமெனக் கருதி என்னை தண்டனைக்குட்படுத்தாத வாசகர்களுக்கும் இந்த நன்றிகள்.

தொடங்கும்போது இது ஒரு சாதாரண புகைப்பட ஆல்பம் போலத்தான் இருந்தது. அதிகம் எழுதும் எண்ணம் அப்போது இல்லை. சற்று வித்தியாசமான இரட்டைவேட புகைப்படங்களை நண்பர்களும், உறவினர்களும் பார்த்து ரசிக்கவே இங்கு அதிகம் முக்கியத்துவம் தரப்பட்டது.  பின்பு, ஒரு சில குடும்ப நிகழ்வுகளும் இடம்பெறத்தொடங்கின.

தொடர்ந்து சில நண்பர்களின் ஆதரவான பேச்சால், என்னைச் சுற்றி நான் காணுகின்றவற்றை விமர்சிக்கத் தொடங்கினேன். அதுவே இப்போது 650 பதிவுகளை தொடும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டது. அதிலும் ஆச்சரியம், பார்க்கும் இடமெங்கும் தமிழில் வலைப்பூக்கள் வாசனையுடன் வலம் வரத்தொடங்கிவிட்டதே. தமிழ்ச் செயலிகள் வரவு நம் மொழிக்கு கிடைத்த வெற்றி என்று துணிந்து சொல்லலாம்.

நான் இங்கெழுதுவதில் ஒரு திருப்தியும் உண்டு. என்னைச்சுற்றி நடக்கும் பலவற்றையே நான் இங்கு பிரதிபலிக்கிறேன். குடும்ப நிகழ்வுகளையும் உள்ளூர் சிறப்புகளையும்,  புகைப்படங்களாக ஒரு ஆல்பம் போல வெளி நாட்டில் இருக்கும் தூரத்து உறவினர்களுக்கு காண்பித்து மகிழும் அதே நேரம், இங்கு நடக்கும் அசௌகரியங்களையும் மற்றவர் மனம் நோகாது சொல்லி வருகிறேன்.

இழிவான எதுவும் இங்கு இடம்பெற்றதில்லை. சொல்லக் கூச்சப்படும் எதையும் நான் எழுதத் துணிந்ததில்லை. அரசியலையும், மற்றவர் மதத்தினையும் நான் ஆழமாக தோண்டிப்பார்க்க எண்ணியதில்லை.  ஆனாலும் ஒரு சில நேரங்களில், மூட நம்பிக்கைகளை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதனை சொல்லியே வந்திருக்கிறேன்.

இரட்டைவேட படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள தொடங்கப்பட்ட இவ்வலைத்தளம், இன்று பலரின் ஆதரவில் புதுப்பரிமாணத்துடன் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது. எனது மனசாட்சிக்கும், விருப்பத்துக்கும் ஏற்றது போல இனியும் தொடரும். 

அன்பான சூழலே எனது இலக்கு. இங்கு வரும் அனைவரும் மனதை இலகுவாக வைத்திருக்க உதவுவதே எனது எண்ணம். வாழ்க்கை குறுகிய காலத்தில் முடிந்துவிடக்கூடியது. அதனை ஒவ்வொரு நிமிடமும் மகிழ்வுடன் அனுபவிக்கும் கருத்துப்பரிமாற்றமே இங்கு இனி அதிகம் வரும். சமூக சீர்திருத்தங்கள் என போர் அடிக்கும் விசயங்கள் இங்கு இயன்றவரை இருக்காது.

எந்த பதிவுலக பட்டியலிலும் நான் இதைச் சேர்க்காததால், இந்த வலைப்பூவிற்கு வருகை புரிவோரும் குறைவுதான்.  என்னைத்தெரிந்தோர் மட்டுமே வந்து போகும் தளமாக தற்சமயம் இது இயங்குகிறது.  இதுவரைக்குமான எல்லா பதிவுகளையும் மறு ஆய்வு செய்த பின் மற்ற வலைப்பூக்களின் பட்டியலைத் தாங்கி வரும் மையத் தளம் ஒன்றில் இணைக்க எண்ணம் உண்டு.

அதை பின்னர் பார்ப்போம்.

அன்புடன்,
ராஜ்பாவ்

" ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்..."



Friday, 12 July 2013

பாவ்ஸ் டபுள்ஸ்...


-   வேறெங்கும் பார்த்திடாத வித்தியாசமான புகைப்படங்கள்
-   மனதில் பட்டதை மறைக்காமல் எழுதும் தனித்துவமான கருத்துக்களம்
-   படித்ததில் பிடித்தவை
-   பழம்பாடல் நினைவலைகள்
-   மற்றும் பல....

பயனுள்ள விசயங்களை பகிர்ந்துகொள்ளவும் இனிமையாக நேரத்தை செலவிடவும் வந்து பார்க்கவேண்டிய இடம்....

எண்ணங்கள் ஆயிரம்...

Thursday, 11 July 2013

இரட்டைக்குழந்தைகள்...

குழந்தைகளில் இரட்டையர்கள் என வந்துவிட்டாலே மனம் அப்படி ஒரு அலாதியான துள்ளலில் பொங்கும். பெற்றோர் தங்களின் புதுவரவைக் கண்டு பூரித்துப் போவார்கள். இருக்காதா பின்னே...? மகிழ்ச்சி இரட்டிப்பாகும் போது முகத்தில் புன்னகை தானாகவே மலர்வது இயற்கைதானே?

முன்பு இரட்டைக்குழந்தைகள் பிறப்பதென்பது அதிசயமாகப் பேசப்பட்டது. ஆனால் இன்றோ, மிகச் சாதாரணமான ஒன்றாக பலருக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறக்கக் காண்கிறோம்.

ஒருவருக்கு பதிலாக இருவருக்கான செலவை ஒரே நேரத்தில் செய்யவேண்டிவரும்.  ஆனால் அது பெற்றோருக்கு ஒரு ஆனந்தச் சுமையே.

ஒரு சில நேரங்களில் ஒரே மாதிரியான உருவ அமைப்பில் இருக்கும் இருவரைப் பார்ப்பதில் சில குழப்பங்கள் தோன்றலாம். அச்சு அசலாக, அறிவிலும், நிறத்திலும், வளர்ச்சியிலும்  தோன்றும் இரட்டையர்களைப் பார்க்கும் போது இருவரில் யாருடன் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் எனும் சந்தேகம் நமக்கு எழுவதில் ஆச்சரியமில்லை.  ஆனால் மன நிலையில் அப்படி இல்லாமல் மற்ற  பிற பிள்ளைகளைப் போலவே பல வேறுபாடுகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

பிறந்த குழந்தைகள் வளரும்போது பெற்றோர் கையாளும்  வழிகள் அவ்விருவருக்குமான வித்தியாசங்களை கண்டு கொள்ள  உதவுகின்றன. ஒருவருக்கு பொட்டுவைப்பது, தனித்தனியே  அவர்களின் உடையில் வேறுபாட்டைக் காண்பிப்பது மற்றும் பெண் பிள்ளைகளாய் இருந்தால் ஒருவருக்கு நீண்ட முடியும் மற்றவருக்கு பாப் முடியுமாக வைப்பது என அமர்க்களமான வகைகளில் இந்தக் குழந்தைகள் வளர்கிறார்கள்.



அதே நேரம், இரட்டையர்களாகப் பிறந்தாலும், ஒருவருக்கொருவர் எவ்வித சாயலும் இல்லாமல் மற்றவர்களைப்போல இயல்பான தோற்றமளிக்கும் குழந்தைகளும் உண்டு.  அவர்களாகச் சொன்னால் தவிர நமக்கு அவர்கள் இரட்டையர்கள் என சற்றும் எண்ணத்தோன்றாது. 

திரையிலும் தொலைக்காட்சியிலும் இரட்டையர்கள் பற்றிய பல படங்களை நாம் பார்த்து ரசித்திருக்கிறோம். ஆரம்பத்தில் இருந்த ஆச்சரியம் இப்போது இல்லையென்றாலும், இரட்டையர்கள் என வரும்போது அவர்கள் தோன்றும் காட்சிகள் நம் கவனத்தை இன்னமும் கவருகின்றன.

அந்த சுவாரஸ்ய உணர்வை மனதில் வைத்து துவங்கப்பட்டதே இந்த 'பாவ்ஸ்டபுள்ஸ்' எனும் " ஆயிரம் எண்ணங்கள் " வலைத்தளம்.

ஆரம்பம் முதல் இப்பதிவு வரை மலர்களை போல வருடம் முழுவதும் தூவப்பட்டிருக்கும் இரட்டை வேட புகைப்படங்கள் இந்த வலைத்தளத்தில் நூற்றுக்கணக்கில் இருப்பதை கவனித்திருப்பீர்கள்.  அவற்றை ரசித்துவரும் வருகையாளர்களுக்கு இனியும் அவற்றைப்போல தொடர்ந்து இங்கு இடம்பெறும் எனக் கூறிக்கொள்கிறேன்.

ஆனால் ஒன்று, படங்களில் மட்டுமே இரட்டைவேடங்கள்... நிஜத்தில் அல்ல. 


Wednesday, 10 July 2013

12வது உலகத் தமிழ் இணைய மாநாடு...

மலாயாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பிரிவு ஏற்று நடத்தும் ஒரு பெரிய நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் 18 வரை நடைபெறவிருக்கும் 12வது உலகத் தமிழ் இணைய மாநாடு.

அன்மையத் தகவல்களின் படி இந்நிகழ்வில் சுமார் 30 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் கலந்து கொள்வர் என ஏற்பாட்டாளர்கள் எதிர்ப்பார்ப்பதாக தெரிகிறது. உண்மையில் 12 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் இங்கு நம் நாட்டில் இடம்பெறும் இம்மாநாட்டினை பலரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இது  தித்தியான் டிஜிட்டல் ஆதரவில் நடைபெறுகிறது. 

கருத்தரங்கு, கண்காட்சி, மக்கள் கூடம் எனும் மும்முனைகளில் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்வானது அனைவருக்கும் பயனுள்ள ஒன்றாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

'கையடக்கக் கணினிகளில் தமிழ் கணிமை" என்பது மையக்கருப்பொருளாக இவ்வாண்டு திகழ்வதால், இதச் சார்ந்த பல சுவாரஸ்யமான ஆய்வுக்கட்டுரைகளை ஆய்வாளர்கள் சமர்ப்பிப்பர் என நம்பலாம்.

ஐபேட், ஐபோட் எனப்படும் பலகைக்கணினிகளில் தற்போது தமிழ் தலை நிமிர்ந்தபடி உலா வரத்தொடங்கிவிட்டது. இதன்வழி ஆயிரக்கணக்கில் தமிழில் மின் நூல்கள் நாம் படித்து மகிழக் கிடைக்கின்றன. தரவிறக்கம் செய்து நமது வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் படித்துக் கொள்ள தமிழ்ச்செயலிகள் இப்போது கைபேசியிலும், பலகைக் கணினிகளிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

பல தரமான மின் நூல்களுக்கு ஒரு சிறு தொகை கட்டனமாக கேட்கப்படுவது அப்படியொன்றும் பெரிய பாதகமான செயலாகப் படவில்லை. இனாமாகவும் பல இருக்கின்றன வாசித்து மகிழ.

தொழில் நுட்பம் வளர்ந்துவரும் இவ்வேளையில் கணினிகளில் தமிழ்ப் பற்றிய பல ஆய்வுகளின் நிலவரங்கள் இந்த மாநாட்டில் நமக்குத் தெரிய வரும். இதுவும் ஆரோக்கியமான ஒரு எதிர்ப்பார்ப்பாகும்.

ஆயினும் இன்னும் ஒரு மாதமே இடையில் இருக்கும் இந்தச் சூழலில்  அதனைப்பற்றிய விளம்பரங்கள் எதுவும் பரவலாக கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டக் காணோம்.