Wednesday, 13 June 2012

"ரெ. சண்முகம்" அவர்கள் . . .

"முகமது சந்திர பிம்பமோ
மதன ஸ்வரூபமோ..."


என்று  எம் கே தியாகராஜருக்காக  பாடல் ஒன்று எழுதப்பட்டது.

இசையமைப்பாளருக்கும் பிடித்துவிட, அதை பதிவு பண்ணும் முயற்சியின் சில நிமிடங்களுக்கு முன் அந்தப்பாடல் வரிகள்  மாற்றப்பட்டதாம்.

எதேச்சையாக அவ்விடம் வந்த 'லைட் பாய்', இதென்ன தமிழ்ப்படத்துக்கு பாடல் 'முகமது'ன்னு ஆரம்பிக்குது? என்று கேட்க, இவ்விசயம் இயக்குனர் வரை சென்று பின்பு சில மாற்றங்களுடன் பதிவு செய்தனராம் பாடலை.

சில வருடங்களுக்கு முன்பு வானொலியில் இந்தத் தகவலை பகிர்ந்து கொண்டவர் நமக்கெல்லாம் ரொம்பவும் பிடித்த "ரெச" அவர்கள்.

அவர் காலமாகி ஆண்டுகள் சில கடந்து விட்டாலும் வானொலியிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் அவர் ஆற்றிய தொண்டு இன்னும் நினைவில் நிற்கிறது.

"மனச்சுழல்  நாடக மேடை" என வானொலியில் அவர் எழுதிவந்ததை மறக்க முடியாது. 70ம் ஆண்டுகள் அவை. நாடகத்தை தொடங்கும் போதும் முடிக்கும் போதும் அவர் சொன்ன பஞ்ச் வரிகள் "...அதனால்தான் சொல்கிறோம், மனக்கடல் பொல்லாதது...." அதிலும் அந்த 'பொல்லாதது' என்னும் வார்த்தையை சற்று அழுத்தமாகச் சொல்லுவார்.

பல திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்தார் அவர்.

என்னுடைய இளமை காலத்தில் நான் வசித்துவந்த பெட்டாலிங் ஜெயா என்னும் பகுதிக்கு 'தமிழர் திரு நாள் மேடை நிகழ்ச்சிகளை நடத்த பலமுறை வந்திருக்கிறார். அப்போது அவரை அருகில் இருந்து பார்த்த அனுபவம் எனக்குண்டு. பின் வந்த காலங்களில் அவரின் பழைய பாடல் தொகுப்பு நிகழ்ச்சிகளை அவர் நடத்தும் இடங்களுக்கு தேடிச்சென்று கண்டு ரசித்திருக்கிறேன்.



No comments:

Post a Comment