பாராட்டுப் புத்தகம் ஒன்று தயார் செய்யுங்கள். அது உங்கள் செல்வாக்கையும் ஆக்க சக்தியையும் பன்மடங்காகப் பெருக்க உதவும். நீங்களே ஆச்சரியப்பட்டுப்போவீர்கள். உரிய முறையில் மனோத்தத்துவம் பயன்படுத்தப்பட்டால் அது பல அதிசயங்கள நிகழ்த்திக் காட்டும் என்பதற்கு இது சான்று.
பாரட்டுப் புத்தகத்தை எப்படி தயார் செய்வது. எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கூறுகிறேன்.
1. ஒரு நோட்டுப் புத்தகம் தேவைப்படும். அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் பரவாயில்லை. நான் சொல்வதை படித்த பின்பு நோட்டும் புத்தகம் எப்படிப்பட்டதாக இருந்தால் நல்லது என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள். பாராட்டுப் புத்தகம் என்பது விலை மதிப்பிட முடியாதது. ஆகவே அதன் மதிப்பை உணரும் பொருட்டு உயர்ந்த தோலினால் பைண்டு செய்யப்பட்ட நோட்டுப் புத்தகங்களைச் சிலர் பயன் படுத்துகிறார்கள். ஆனால் பாராட்டுப்புத்தகம் இப்படி இருந்தாலும் பரவாயில்லை. அதன் உண்மையான மதிப்பு, அதிலுள்ள விஷயங்களப் பொறுத்து இருக்கிறது
2. உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை வைத்து ஆரம்பியுங்கள். ஒவ்வொரு தாளிலும் முதல் வரியாக ஏதாவது ஒரு பெயரை எழுதுங்கள்.
3. ஒரு தாளுக்கு ஒரு பெயராக உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேருடைய பெயர்களயும் எழுதிய பிற்பாடு, உங்கள் நண்பர்கள், தோழர்கள், தெரிந்தவர்கள், உங்கள் உலகத்தில் உள்ளவர்களில் யார் யாரையெல்லாம் சேர்க்க வேண்டுமோ அவற்றை எல்லாம் எழுதுங்கள். ஒரு தாளுக்கு ஒரு பெயர்.
4. இந்த அத்தியாயத் துவக்கத்தில் பாராட்டு என்றால் என்ன என்பது குறித்துச் சொல்லப்பட்டதையெல்லாம் மனதில் கொண்டு எந்தெந்தப் பெயரின் கீழே எந்தெந்த வகையில் எல்லாம் அவர் பாராட்டுக்குரியவர் என்பதை எழுதுங்கள். அடுத்து என்னென்ன வகைகளில் நீங்கள் உங்கள் பாராட்டைத் தெரிவிக்கக் கூடும் என்பதை விவரியுங்கள்.
5. அவற்றைப் பயன்படுத்துங்கள். உங்களுடைய பாராட்டுப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு மனிதருக்கும் உங்கள் பாராட்ட்டைத் தெரிவியுங்கள். வெளிப்படுத்தப்படாத பாராட்டும் வழங்கப்படாத பரிசும் ஒன்றே.
6. ஒரு மனிதரோடு நீங்கள் இருக்கும் ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு வகையில் பாராட்டை தெரிவிக்க வேண்டும். மற்ற வகைகளிலும் பாராட்டுங்கள். கடிதம் போடுங்கள். ஏதேனும் ஒரு சாக்கை வைத்து டெலிபோன் செய்து சந்தர்ப்பத்தை உண்டு பண்ணிக்கொள்ளுங்கள். மனப்பூர்வமான பாராட்டை வெளிப்படையாக, நேரடியாக, இயல்பாகத் தெரிவியுங்கள். இயல்பான, செயற்கை இல்லாத முறையில் முழுமனத்துடன் தெரிவியுங்கள்.
முக்கியம் :
இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களது பாராட்டும் நன்றியுரையும் உண்மையானவையாக, மனப்பூர்வமாகத் தெரிவிக்கப்படுமேயானால் ஓர் அடிப்படையான உள்மனத் தேவையைப் பூர்த்தி செய்தவர் ஆவீர்கள். பூர்த்தி செய்வதில் மிகை என்பதோ அளவு கடந்து செய்வது என்பதோ இருக்க முடியாது.
ஒவ்வொருவரிடத்திலும் உள்ள இந்தத் தேவை... இந்த ஏக்கம் ... பாராட்டுப் பெற வேண்டும் என்ற தவிப்பு எக்கச்சக்கமாக இருக்கிறது. எவ்வளவு பாராட்டினாலும் எவ்வளவு நன்றி சொன்னாலும் அளவுக்கு அதிகமாகச் செய்துவிட்ட குற்றத்துக்கே இடமில்லை. பாராட்டு மனப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பதே நிபந்தனை.
( நன்றி குமுதம்: நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி ? எனும் தமிழாக்க நூலிருந்து. )
No comments:
Post a Comment