Friday, 11 May 2012

200 and counting. . .

It's amazing to note that I have surpassed the 200th blog mark this week. I had no idea how or what it was going to be when I started off this blogspot. It was just a photo blog in the beginning.  I used this space to upload my "dual role" photos, a new concept of taking pictures and was happy about it. Praises poured in seeing the unique photos.

It took a twist and turn after a few months and now it has become a favourite place for me to spend time everytime I get bored. When something comes to my mind, I write it here and satisfy my inner ego.
Somehow this has become more of a diary to me, only that there is no secret and it is open to anyone who wants to read. And I understand that over the months those who are visiting this blog has increased so much, though I have never linked it with whatever search engines.

I receive emails and at times some of my friends and relatives ask me how to take awesome photos like mine. They feel just by clicking the camera button some nice and lovely scenarios with a difference are captured. No, it is not done that way. You need to learn a lot and practice daily.

And I certainly do not consider my photos as awesome either. They are just different, that's all. I think those who are bored watching the usual stuffs like to see these dual roles for they at times reflect their alter ego.

முகத்தினில் எதுவும் தெரிவதில்லை...

ஒருவரின் முகத்தை பார்த்து அவர் நல்லவரா இல்லையா என்பதை சொல்லிவிடும் சாத்தியம் இப்போது இல்லை. . .  வன்மத்தை மனமாகவும் நேயத்தை முகமாகவும் கொண்டுள்ளோர் பரவலாக நடமாட தொடங்கி விட்ட தற்போது அரவே இல்லை.

தங்களுக்கு லாபகரமான ஒரு காரியத்தை சாதிக்க சிலர் பல நாட்கள்,   பல வாரங்கள், பல மாதங்கள், ஏன் பல வருடக்கள் கூட நல்லவர்கள் போல் நம் அருகிலேயே இருக்கிறார்கள். காத்திருந்து கிடைத்துவிட்ட பின் அவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள்... நாம் வருந்தத் தொடங்கி விடுகிறோம். பொதுவாக கடன் கொடுத்தவர்களுக்கே இப்படி பல இடங்களில் நடந்தாலும், மற்ற எல்லா  விசயங்களிலும் கூட இந்த நடிகர் திலகங்கள் ஏராளமானோர் மின்னுகின்றனர்.

சில நேரங்களில் எப்படித்தான் முயன்றாலும் நம்மால் இவர்களிடம் இருந்து தப்ப முடிவதில்லை.  இப்படிப்பட்டோர் நண்பர்கள் வட்டாரத்திலும், உறவினர் மத்தியிலும் இலை மறைக் காயாக இருக்கிறார்கள்.

பழகும் விதத்திலும், சொல் அலங்காரத்திலும் 916 தங்கம் போல நடந்து கொள்வர். நம்மை  நாமே ஊடுருவிப் பார்த்தால் என்ன தெரியுமோ அந்த அனைத்து உன்னதமான குணங்களும் அவர்களிடம் தெரியும். அதே நேரம், நம்மிடம் இல்லாத ஒன்றும் அவர்களிடத்தே தெரியும்... அது, " என்றாவது ஒரு நாள் உன்னை வஞ்சிப்பேன்" எனும் சுடர் விடும் தீ. அதுமட்டும் நம் கண்களுக்குத் தெரியவே தெரியாது.

நானும் இது போன்ற ஏமாற்று வித்தைக்கு விலக்கல்ல. ஆனால் என்னை சில ஆயிரம் வெள்ளிகள் ஏமாற்ற அவனுக்கு சுமார் இருபத்தைந்து  ஆண்டுகள் பிடித்தது.  இப்போது  கண்ணில் படாமல் மறைந்து வாழத் தொடங்கி விட்டான் அவன்.  ஜெகத்தை காக்கும் அந்த ஜெகனுக்குத் தெரியும், என்ன செய்வதென்று.

இதுபோன்ற அனுபவங்கள் பலருக்கும் இருக்கலாம். " வெளியே சொன்னா, வெக்கக்கேடு...." என்பது போல பலரும் மனதுக்குள்ளேயே போட்டு துயர் படுவது உண்டு.

தர்மம், நியாயம், சூடு சொரணை என்பதெல்லாம் தமிழில் அவர்களுக்கு தெரியாத சில வார்த்தைகள்.

படித்ததில் பிடிக்காதது. . .

"கழுத்தில் தாயத்துக் கட்டிக்கிறது, நியூமரொலொஜி  பார்க்கிறது, கைகளில் மஞ்சள் அல்லது சிவப்பு கயிறு கட்டிக்கொள்வது...இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை".

ஆனால், மற்றவர்கள் மனதை நோகச் செய்யாமல் இருக்க மௌனம் காப்பது உண்டு.

 நான் நம்பவில்லை எனபதற்காக மற்றவர்களும் என்னைப் பின் பற்ற வேண்டும் என எண்ணியதில்லை. தனி நபர்களின் நம்பிக்கைகளில் நான் நுழைந்து அதிலுள்ள நன்மை தீமைகளை விவாதித்து தீமைகளை சுட்டிக் காட்டியதில்லை.

நானும் சின்ன வயதில் பல நம்பிக்கைகளில் மூழ்கி மேலெழுந்து வந்தவன் தான்.

"பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்திடும்" என்கிற பயத்தால் உண்மையை மட்டுமே சொல்லி பலமுறை வம்பில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்.

சில நேரங்களில் "பொய்யும் பொய்யான புகழ்ச்சியும் நல்லது செய்யும்" என போகப் போகத்தான் புரிந்து கொண்டேன்.

அதனால்தான் பக்தியை வளர்க்கும் மத நம்பிக்கைகளில் பொய்யெனத் தெரிந்தாலும் சற்று விட்டுக் கொடுத்துப் போயிருக்கிறேன்.

என்னைப் போல பலர் இருக்கலாம். 'ஏன் வீண் வம்பு' என ஒதுங்கி இருப்போர் நிறைய பேர் இருக்கலாம். ஆனால், இனியும் அப்படி நமக்கென்ன என மௌனமாக இருப்பது சரியா எனப்படுகிறது.

தவறெனப் படுவதை சொல்லத்தொடங்கும் நேரம் வந்து விட்டதோ. இது எக்ஸ்போனென்ஷல் குரோத்தில் அதாவது ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு ஆயிரமாகி.... மற்றவர்களிடம் சென்று சேர்க்க நேர்ந்தால் நல்லதுதானே...


கடந்த 20 ஆண்டுகளில் ஆயிரமாயிரம் ஆடுகளை பலி கொடுப்பதிலிருந்து காப்பாற்றி இருக்கிறோம். இனி, சாமியாடுவதில் உள்ள உண்மைக்குப் புறம்பானவற்றை சொல்லத் தொடங்குவோம்.

கடந்த மாதம் நடந்த ஒரு சோகம், சாமி ஆடும் மூட நம்பிக்கையால் மூவர் உயிரைக் குடித்திருக்கிறது.  தனிப்பட்ட ஒருவன் மேல் வைத்த அளவற்ற நம்பிக்கை, ஒரு குடும்பத்தையே அழித்துவிட்டது. மந்திரத்தால் மாங்காயை விழவைத்து, தந்திரத்தால் மூன்று உயிர்களை கொன்று குவித்துவிட்டான்.

இங்கே மதத்தைக் குறை சொல்லக்கூடாது.  நமக்கு விளங்கிக் கொள்ளும் தன்மை இல்லையேல் மதம் என்ன செய்யும்...?

 நமது மதம் அறிவுப்பூர்வமானது. கற்றரிந்து தேர்ச்சிபெற்றோரிடம் விளக்கங்களைப் பெற்ற பின் எதிலும் நம்பிக்கை வைக்கவேண்டும்.

ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. " இன் டவுட், டோன்ட்" என்பார்கள். 'சந்தேகம் இருந்தால், செய்யாதே... 'என்று தமிழில் சொல்லலாம்.

அப்படி எதிலாவது சந்தேகம் தோன்றின், அல்லது சரிவர விளங்காவிடில் நாம் அதை செய்யாமல் விட்டு விடுவதே சிறப்பு.

அப்படி மீறிச்செய்யவதனால் இதுபோல உயிர்ச்சேதம்தான் மிஞ்சும்.

நன்றி : மக்கள் ஓசை, ஞாயிறு பதிப்பு

Thursday, 10 May 2012

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். . .

வெப் உலகத்திற்கு இப்போதுதான் வந்தது போலிருக்கிறது, அதற்குள் என்னுடைய 200 வது பதிவை இங்கு பார்க்கிறேன்.
 
இது என்னுடைய 200வது பதிவு. காலம் எவ்வளவு வேகமாக போகிறது.... 

இந்த நல்ல நாளில், ஒரு நல்ல மனிதராம் எம்ஜிஆர் அவர்களின் நினைவில் அவரின் தனித்தன்மையில் உள்ள    சிறப்பு பெற்ற சில புகைப்படங்கள பதிவிடுகிறேன். மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ இங்கே வாருங்கள்....



சிறு வயதிலிருந்தே நான் எம்ஜிஆர் ரசிகன். இது என்னத்தெரிந்த எல்லோருக்கும் தெரியும். ஆனால் என்னுடன் விவாதிக்க வேண்டும் என்பதற்காகவே சிலர் மக்கள் திலகத்தைப் பற்றி ஏதாவது குறையாக கூறுவார்கள். அது உண்மையோ பொய்யோ, காதில் அது விழுந்தவுடன் கோபம் தலைக்கேறும். "எங்கள் எம்ஜிஆர் இதையெல்லாம் செய்திருக்கிறார்...இன்னும் செய்து கொண்டிருக்கிறார்... இதுபோல செய்தவர் வேறு யாரும் உண்டா...? " என எனக்குத் தெரிந்த ஒரு பட்டியல்...பொதுவாக நீண்ட பட்டியலாகவே இருக்கும்... ஒன்றைத் தருவேன்.

இவர் போல யாரென மற்றவர் சிந்திப்பதை நிறையவே பார்த்திருக்கிறேன். பதில் சொன்னவர்களைக் காணோம். இளம் வயதில் இப்படி பல அனுபவங்கள் எனக்கு. ஆனால் வளர வளர எம்ஜிஆரின் சினிமா முகம் மட்டுமல்ல, அவரின் நிஜ முகமும் தெரியத்தொடங்கி விட்டது. முதியோரிடமும் சாதுக்களிடமும் அவருக்கு இருந்த மரியாதையை படிக்க நேர்ந்த போது, மற்றவர்களுடன் ஏற்பட்ட வீண் விவாதங்களை எண்ணி சிரித்துக்கொள்வேன்.

எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது, ஒருவர் என்னிடம் வந்து "   நீதிக்குப் பின் பாசம்" பார்த்தாயா?" என்றார். "பார்த்தேன்" என்றேன். தலையை ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கம் அசைத்து " பாதிக்குப் பின் மோசம்.." என்றார். அவரின் தமிழ் ஆற்றலை எண்ணிச் சிரித்தேன். ரங்கராவ், ராஜம்மா, அசோகன் என பலரும் திறம்பட நடித்து வெற்றி ஓட்டம் கண்ட பல இனிமையான பாடல்களைக் கொண்ட படம் அது.

சிலருக்கு எம்ஜிஆர் அவர்களை அவர்களின் சொந்த காரணங்களுக்காக பிடிக்காமல் இருந்திருக்கலாம். அதில் தவறொன்றுமில்லை. காந்தியை பிடிக்காதோரும் சிலர் இருந்திருக்கின்றனரே.... ஆனாலும் புரட்சித் தலைவரைப் போல வேரொருவர் இல்லை என்பதே என் வாதம், இன்றுவரை.

மக்களுக்கு சில நன்மைகளைச் செய்த அரசியல் தலைவர்களை சிலர் அவ்வப்போது எம்ஜிஆருடன் ஒப்பிடுவார்கள். ஆனால் அவர்கள் அரசியலோடு  சரி. அதற்கப்புறமும் எம்ஜிஆர் தொடர்கிறாரே... அவருடன் ஒப்பிட்டு பேசிய அரசியல்வாதிகள் மற்ற துறைகளில் எம்ஜிஆருடன் நிகராக  வரக் காணோம். அதே போன்றே அவர் நடிப்பும். எனக்குப் பிடித்த பாணியில் அவர் நடிக்கும் போது எனக்கு அவர் சிறந்த நடிகராகவே தோன்றுகிறார். அவரை விட நல்ல நடிகர்கள் இருக்கலாம். அனால், அந்த நடிப்பிற்கு அப்புறமும் பேசக்கூடியவை அவர்களிடம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. எம்ஜிஆரிடம் உத்தமமான பல நல்ல குணங்கள் உண்டு. எல்லா லட்சணங்களும் கொண்டது அவரின் முகம். அவர் காலமாகும் வரை அதில் பிரகாசம் இருந்தது. அதே போலவா மற்றவர்கள்...?

எம்ஜிஆர் அவர்களின் குணப் பெருமைகளை பலரும் பேசக் கேட்கும் போதும், படிக்கும் போதும் ஆச்சரியம் எழுந்ததுண்டு. இப்படி ஒரு மாமனிதர் இந்தக் காலத்தில் உண்டா எனும் ஆச்சரியமே அது.

 கண் தெரியாத, காது கேளாத, பேச முடியாத பலரின் நல்வாழ்வுக்கு, எம்ஜிஆர் அவர்கள்  மறைந்தும் ஆற்றும் மாபெரும் தொண்டு அவர் மனித வடிவில் தெய்வம் என மற்றவர் சொல்வதை ஆமோதிக்க வைக்கிறது.

Monday, 7 May 2012

தவற்றினை திருத்தி வாழ்வதே வாழ்க்கை...

தெரியாமல் செய்யப்படுகின்ற பிழைகள் மன்னிக்கப் படுகின்றன, பிழை செய்தவர் மனம் வருந்தி திருந்தும் போது.

ஆனால், தவறெனத் தெரிந்தும் ஞாயப் படுத்த முனைவோர் பகைமையை வளர்க்கும் முதல் காரணவாதியாகின்றனர். வரட்டு கௌரவம் பார்ப்போரும், விதண்டா வாதம் புரிவோரும் இவர்களுள் அடங்குவர்.

"இன்னும் செய்வேன், என்ன பந்தயம்?" எனும் இவர்கள் குணம் இவர்களுக்கு நிரந்தர எதிரிகளையும், இவர்கள் மேல் வெறுப்படைபவர்களையும் அதிகரிக்க வைக்கிறது. அனுதாபம் காட்டுவோரையும் ஆத்திரப்படவைக்கும் குணமுடையோர் இவர்கள். 

தவறிழைத்து விட்டு அதையும் தற்காத்து பேசுவோரைப் பார்த்தால் பற்றிக்கொண்டு வருகிறது என பலரும் சொல்லக் கேட்டிருப்போம்.

திருந்தாத வரை இவர்கள் தனிமரமாக வாழவேண்டியது தான்.

Sunday, 6 May 2012

Spotlight on Subatherathevi . . .

பக்கத்து வீட்டுச் செல்லம் சுபத்திராதேவியின் படங்கள் இவை.











 








கனவுகள் கற்பனைகள்...

கனவு என்பது பழகிப் போன ஒன்று. அதிலும் சிலர் படுத்ததும் கனவுலகுக்கு சென்றுவிடுவதாகச் சொல்வார்கள்.

வாழ்வியல் வல்லுனர்கள் இதை ஆழ்மனதின் பிரதிபலிப்பு என்றாலும், பொதுவாக கனவுகள் அமைதியற்ற சூழ்நிலைகளின் போது வருபவை என்றே நம்பப்படுகிறது.

'நிழலும் நிஜமுமாக ஒரு பெரும் போராட்டமே கனவு' என்போரும் நம்மிடையே உண்டு. விடிந்ததும் மறைந்திடும் கனவுகளை தொடர மீண்டும் படுக்கையில் வீழ்வோரையும் பார்த்திருக்கிறேன். 'நான் தூக்கத்தை தியாகம் செய்ய இயலாது காரணம் எனக்காக கனவுகள் காத்திருக்கும் ' என இலக்கிய நடையில் பேசுவோரும் இருக்கின்றனர். 'கார்பரேட் கனவுகள், கனவுகள் விற்பனைக்கு, கனவுகள் கற்பனைகள், தாவணிக் கனவுகள், காத்திருந்த கனவுகள்' என பல தலைப்புகள் கொண்ட படைப்புகள் எழுத்துலகில் சகஜம்.

இது இப்படி இருக்க, கனவுகள் பலிக்குமா என்ற கேள்விக்கும் எவ்வித உறுதியான பதிலையும் காணோம். சிலர் அதிகாலை கனவுகள் பலிக்கும் என்கிறார்கள்.

கனவுகள் பற்றிய உங்கள் அனுபவம் எப்படி?