Tuesday, 4 February 2014

படித்ததில் பிடித்தது.... புகை

தீபாவளிச் சலுகையில் வீட்டு உபயோகப் பொருட்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இருவீட்டார் எதிர்ப்புடன் காதல் திருமணம் செய்துகொண்ட லதா, மகேந்திரன் தம்பதிகளுக்கு இதுதான் தலை தீபாவளி.

"அந்தச் செருப்ப வாங்காமலே வந்துட்டீங்களே, ஏன்?" கேட்டாள் லதா.

"அது தரமான ரகமா தெரியலை. வேற நல்லதா வாங்கிக்கலாம்னு விட்டுட்டேன்"

"அதுபோகட்டும். அந்த அயர்ன் பாக்ஸையாவது வாங்கியிருக்கலாமே?"

"இதோ பார் லதா!  உனக்கு இதெல்லாம் புரியாது. பார்க்குறதுக்குத்தான் அது நல்லாயிருக்கு. கியாரண்டி கிடையாது. சீக்கிரமே பல்லிளிச்சிடும்!"

"மிக்ஸியும் அப்படித்தானா?"

" ஆமாம். விலை ரொம்ப சொல்ற மாதிரி இருக்கே!"

"ஆறுமாசம் உழைக்கப்போற செருப்புத் தரமானதா இருக்கணும்னு நெனக்கிறீங்க. நாலஞ்சு வருஷம் உபயோகப்படப்போற அயர்ன்பாக்ஸுக்கு கியாரண்டி இருக்கணும்னு சொல்றீங்க. அத்தியாவசியத் தேவையான மிக்ஸியை விலை அதிகம்னு சொல்றீங்க. எல்லோரையும் உதறித் தள்ளிட்டு, உங்களையே கதின்னு நம்பி வந்த எனக்கு உங்க உடம்புக்கு எதுவும் வந்திடக் கூடாதுங்கற எண்ணம் இருக்கக் கூடாதா...? வாழ் நாள்  பூராவும் நீங்க என்கூடவே இருக்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா? விலைமதிப்பில்லா உயிரை இப்படி சிகரெட் டைக் குடிச்சே சேதப்படுத்திக்கணுமா?" லதா வார்த்தைச் சாட்டையைச் சொடுக்கிய போது, ரொம்பவே வலித்திருக்க வேண்டும் மகேந்திரனுக்கு.

பற்றவைத்திருந்ததை உடனே கீழே போட்டுக்காலால் சிதைத்தான் மகேந்திரன். சிதைந்து புதைந்தது சிகரெட்டுடன் புகைபிடிக்கும் எண்ணமும் கூட....

( குமுதம் ஒரு பக்கக் கதைகள்....1999)

No comments:

Post a Comment