மரணம் வரும். எப்படியும் ஒரு நாள் நாம் அதனை அனுபவித்தே ஆகவேண்டும். பிறந்தது முதல் போகும் வரை அது நம்மை பின் தொடருகிறது.
அதனை சில காலம் ஏமாற்றுவோரும் உண்டு, பல காலம் ஏமாற்றுவோரும் உண்டு. ஆயினும் எல்லாக் காலமும் ஏமாற்றியவர், ஏமாற்றுபவர் அல்லது ஏமாற்றக் கூடியவர் என எவரும் இலர்.
இந்த மாபெரும் உண்மை நமக்கு எப்போதோ தெரியத்தொடங்கி விடுகிறது. மூளையின் ஒரு பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கும் இதற்கு நாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை. வரும் நேரத்தில் வரட்டும் என்கிறோம்.
இப்போதல்ல, எப்போதோ வரப்போகும் மரணத்துக்கு ஏன் பயம் என்கின்றனர் சிலர். அவர்களுக்கு ஞாயமானதாக தோன்றுகிறது அவர்களின் இக்கூற்று. உண்மைதான்... மரணத்தை பார்த்து பயம் கொள்வோர் யாரும் இருப்பதாகக் காணோம் இன்று.
இல்லை... இன்னும் ஒரு பகுதியினர் மரணம் என்றும் வரலாம் என நம்புகின்றனர். மரணம் சம்பவிக்கும் போது நான் தயாராக இருப்பேன் என அவர்கள் சொல்வது கேட்கின்றது. சற்று மேலே போய், இவ்வுடல் தற்காலிகமே என அவர்கள் சொல்கின்றனர். பலமுறை செத்து பிறந்திருக்கிறோம், பிறந்து செத்திருக்கிறோம் என அவர்களின் வேதாந்தம் அமைகிறது.
ஆனால், பலருக்கு நோயில் விழும் நேரம்தான் மரண பயம் முன்னுக்கு வந்து நிற்கிறது. தேவாரம், திருப்புகழ் என இறை நம்பிக்கைக்குத் தேவையான அனைத்தையும் உடனே கற்று தேர்ந்துவிட நினைக்கின்றனர். 'இவ்வுலகு நமக்கில்லை இனி' என எண்ணும் நேரம், அவ்வுலகுக்கு தேவை அருள் ஒன்றே என அவர்கள் நினைப்பதில் தவறில்லைதான்.
இத்தருணத்தில்தான் முன்பு அவர்கள் செய்த எல்லா பாவ புண்ணியங்களும் கண் முன்னே வந்து போகின்றன. அதில் எத்தகையவற்றில் அவர்களின் பங்கு அதிகம் என எண்ணிப்பார்க்கின்றனர்.
" ம்ம்ம்.... இதையெல்லாம் தவிர்த்திருக்களாமே..." என சிலவற்றைப் பற்றியக்கருத்து மனதுக்குள் வந்து போகிறது. காலம் கடந்து விட்ட நிலையில் அது எந்தவித நன்மைகளைத் தந்துவிடப்போகிறது...?
ஞானிகளும், மேதைகளும் முன்பு சொல்லிய அறவழியில் நடக்கத் தவறியதன் விளைவாக தங்களைத் தாங்களே நொந்துகொள்கின்றனர்.
இதற்கு நேர்மாறாக, " மன மகிழ்வுடன் " மரணத்தை எதிர் பார்த்திருப்போரும் உண்டு. நல்லதை எண்ணினேன், நல்லதே நடந்தது என வாழ்வில் திருப்தியடைந்தோர் பலர் நம்மிடையே உண்டு.
மரணத்தைப் பார்த்து அவர்கள் பயம் கொள்வதில்லை. 'அது எப்போது வேண்டுமானாலும் வரட்டும்' என மன நிறைவுடன் வாழ்ந்து கொண்டிருப்போரே அவர்கள்.
No comments:
Post a Comment