Monday, 23 September 2013

இன்றையவற்றை இன்றே செய்வோம்...


பலவும் நமக்குத் தெரிந்தவைதான்... ஆனால், அவ்வளவாக அவற்றை நினைவில் கொள்வதில்லை. நம்முடைய பலவீனமே தேவையானவற்றை நினைவில் கொள்ளாததே. எத்தனை எத்தனையோ நம் அறிவை எட்டிய உடனே நிற்காமல் மறைந்து போகிறது. இது ஞாபக மரதி அல்ல. அதற்கான முக்கியத்துவத்தை நாம் தராததே அதற்குக் காரணம்.உதாரணத்துக்கு இங்கே சிலவற்றை எண்ணிப்பார்ப்போம். 

சில வினாடிகள் சேர்ந்தே ஒரு நிமிடமாகிறது...
சில மணிகள் சேர்ந்தே ஒரு நாளாகிறது...
சில நாட்கள் சேர்ந்தே ஒரு வாரமாகிறது...
அதே போல, சில வாரங்கள் மாதமாகவும், சில மாதங்கள் வருடமாகவும், பின்னர் வருடங்களே வாழ்க்கையாகவும் ஆகிறது.
 
ஒரு சின்ன வினாடியில் தொடங்கி நம் வாழ்க்கையே ஓடி முடிகிறது. 

முதலாம் வகுப்புக்கு போகாமல் நாம் பல்கலைகழகத்துக்கு போகவியலாது. தற்சமயம் பாலர் பள்ளிகள் வேறு பலவும் தொற்றுவிக்கப்பட்டு விட்டன. 'அட பாலர் வகுப்புதானே'  என அவற்றை அலட்சியப் படுத்த முடியாத சூழ்நிலை வந்துவிட்டது. பாலர் வகுப்புக்களும் முக்கியமானவைகளே. சிறந்த வகுப்புக்கு நுழைவுத் தேர்வாக அதன் பரிசோதனைகளின் தேர்ச்சியும் அமைந்துவிடுகிறது. 

ஆக, சிறிதென்று எதனையும் ஒதுக்கித் தள்ள முடியாத, ஏமாந்து விடாத தன்மையே நம் வாழ்வினை நிர்ணயிக்கின்றது.

நமது மனப்போக்கின்படியே ஒவ்வொன்றும் சின்னதாகவோ பெரியதாகவோ தெரிகிறது என்கிறார்கள் பெரியோர்.. எதுவாயிருந்தாலும், நமக்கு தொல்லைகள் வராதவரையில் அவை சாதாரணமானவைகளே. பிரச்சினையென ஆகும் போது, " அடடா இதை அன்றே செய்திருக்கலாமே..." என மனம் உறுத்தத் தொடங்கிவிடும்.

செய்யவேண்டிய எதுவாயினும் அதனை இன்றே செய்வது நல்லது. 'நாளை என்பது நமக்குத் தெரியாத பலவற்றுக்கு' எனக் கொள்ளுதலே வெற்றியின் படி.
கடினமானவைகள் கூட தொடங்கிடும் பின்னர் ஒவ்வொன்றாக சுலபத்தில் முடிந்திடும் என்பது அனுபவசாலிகள் நமக்கு சொல்லித்தரும் உண்மை.

அது போன்றே நம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களும்.  அற்பமென நினைக்கும் ஒரு சின்ன விசயம் நம் வாழ்க்கையையே மாற்றிப்போடும் வல்லமை கொண்டதாக அமைந்து விடுவதும் உண்டு.

" அட அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் " என தள்ளிப்போடும் சிலவற்றை நாம் முடிக்க முடியாமலே போகக்கூடும். அதைபற்றிய ஒரு நெருடல் இருந்துகொண்டே இருப்பதை விட, " ஒருவழியாக செய்ய நினைத்ததை செய்து முடித்துவிட்டேன்..." என திருப்திப் படுவது சிறந்ததல்லவா?

செய்யவேண்டிய பணிகள் எதுவாயினும் அவற்றை இன்றே செய்து முடிப்போம். 



No comments:

Post a Comment