Sunday, 29 September 2013

ஆர்கானிக் காய்கறிகள்...

இயற்கையின் அருமை பெருமைகளை செயலில் காட்டும் தருணம் வந்துவிட்டது இப்போது. உடல் ஆரோக்கியத்துக்கு இயற்கை உரத்தினால் விளையும் காய் கறிகளை உட்கொள்வோர் தினம் தினம் அதிகரித்த வண்ணம்  இருக்கின்றனர். சீனர், மலாய்க்காரர்களோடு நம் சமூகத்தினரும் பல மடங்கு நன்மை தரும் ஆர்கானிக் காய் கறிகளை சமையலுக்கு பயன் படுத்தும் நடைமுறைக்கு மாறி வருகின்றனர்.

இயற்கை உரத்தினால் உட்பத்தி செய்யப்படும் காய் கறிகள் சாதாரண விலையிலிருந்து மூன்று அல்லது நான் கு மடங்கு அதிக விலையில் விற்கப்படுகின்றன தற்போது. ஆயினும் விலை என்பது இரண்டாம் பட்சமே. சந்தைகளுக்கு வரும் இதுபோன்ற இயற்கை வகைகள் உடனடியாக விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.

அன்மையில் கோலாலம்பூருக்கு அருகே உள்ள செலாயாங் பட்டனத்தில் போடப்படும் இரவுச் சந்தையில் இந்த நிலையினைக் கண்டேன். லாரியில் இருந்து இறக்கப்பட்ட அடுத்த பத்து நிமிடங்களிலேயே தருவிக்கப்பட்ட ஆர்கனிக் காய் கறிகள் விற்று முடிக்கப்பட்டு விட்டன.

உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனும் குறிப்போடு இவை விற்கப்படுவதால், பல குடும்ப மாதர்கள் இதனையே தங்களின் சமையலுக்கு தேர்வு செய்கின்றனர். இவை கிடைக்காத சூழ் நிலைகளிலேயே அவர்கள் சாதாரண காய்கறிகளை வாங்கிச் செல்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, பலரும் வழக்கமான காய்கறிகளின் நச்சுத்தன்மையினையும், அது உடலுக்கு இழைக்கும் தீங்கினைப்பற்றியும் பேசத்தொடங்கி விட்டனர். ரசாயனக் கலவையினால் உற்பத்தி செய்யப்படும் விளைச்சல்களில் உள்ள நஞ்சானது பல விதங்களில் நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. பலவித நோய்களுக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்துவிடுகிறது.

சுய நலப்போக்கோடு அதிக இலாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல் படும் ரசாயன உரங்களை விற்கும் நிறுவனங்கள் மக்களின் ஆரோக்கியத்தினை மதிப்பதில்லை. அவற்றினால் தோன்றும் ஆபத்துக்களை கண்களுக்குத் தெரியா சிறு சிறு எழுத்துக்களில் அச்சிடுகின்றனர். இது சட்டத்திலிருந்து அவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ளும் யுக்திதானே தவிர மக்களுக்கு நன்மை செய்வது போலில்லை.




நேர்மை...

"திருடாதே, பொய் சொல்லாதெ, நேர்மையாக இரு" என இளம் வயதில் சொல்லிக் கொடுக்கப்பட்டது போல் நாம் நடந்துவருகிறோம்.

சில நேரங்களில் நமக்கு முன்னர் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது நம் மனசாட்சி நம்மை எதிர்க்கத் துணிந்துவிடுகிறது.

தப்பும், தவறும், திருட்டும், பொய்யும், பித்தலாட்டமும் கொண்டவர்கள் நம் கண் முன்பே சொகுசாக, முன்னேற்றமடைந்த நிலையில் காணும் போது வேறு எப்படித்தான் எண்ண முடியும்??

இதுபோன்ற சிந்தனையில் மனதில் தோன்றும் ஆதங்கம் நமது திறமைகளையே சந்தேகிக்க வைத்துவிடுவதும் உண்டு. நமது கடின உழைப்பும், அதன்பால் வரும் எதிர்பார்ப்பும் எப்போது நமக்கு நல்ல நிலையை பெற்றுத்தரும் என நினைக்கும் போது, மற்றவர்களின் குறுக்கு வழி நமக்கும் சபலத்தை தோற்றுவிக்கும்.

 நேர்மைக்கும், ஞாயத்திற்கும் பலன் கிடைத்தால்தானே அதனைப் பற்றி உயர்வாக கருத.

ஆனால் முறையற்ற, அதர்ம வழிகளில் முன்னுக்கு வருவோர் அதனை பகிரங்கமாக சொல்லிக்கொள்ள முடியாது. அந்த குறுக்குவழிகளை பல பொய்களின் மறைக்க வேண்டி வரும்.

ஒரு திரைப்படத்தில் வில்லன் செய்யும் காரியங்களுக்குச் சமம் அவை.

இறுதியில் ஜெயிக்கப்போவது என்னமோ  ஹீ ரோதான், இல்லையா?

அதனால்தான் சொல்கிறோம்,
" எப்படியும் வாழலாம் என்பதல்ல வாழ்க்கை. இப்படித்தான் வாழவேண்டும் என்பதே வாழ்க்கை..."
என்று.

Saturday, 28 September 2013

Blast from the past...


என் தலய வச்சி ஒரு காமிடி பீஸ் ஆக்கிட்டார் நண்பர் ஒருத்தர்....
( சிங்கப்பூர் சைன்ஸ் சென்டரில் எடுத்த படம் இது )

sudoku 28.9.2013

solution for 27.9.2013's Sudoku puzzle :













புதுப்புது பின்னனிப் பாடகர்கள்...

பின்னனிப் பாடகர்களில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அதிகம் கேட்ட குரல்களாக பலரையும் சொல்லலாம். காலத்தால் மறக்க முடியாத பாடகர்களாக அவர்கள் இன்னும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அன்மையில் காலமான டி.எம்.எஸ், பி.பி.சீனிவாஸ் போன்றோரின் குரல்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அவர்களின் குரலை ரசித்த அதே நேரம் அவர்களுக்கு வழங்கப்பட்ட தரமான பாடல்களையும் நம் மனதில் இருந்து அவ்வளவு சுலபத்தில் அகற்றிட இயலாது.

ஆனால் இன்றைய நிலை அதுபோல் இல்லை. தொழில் நுட்பம் எவரையும், யாரையும் பாட வைத்துவிடுகிறது. அதே போல அதி புத்திசாலி பாடலாசிரியர்களும் மக்களைப்பற்றியோ, மொழியினைப்பற்றியோ அல்லது இசையைப் பற்றியோ கவலையின்றி பாடல்கள் எழுதுகின்றனர்.

மற்றவர்கள் தயாரிப்புக்களில் இல்லாவிடினும் தங்களின் சொந்தப் படங்களில் இதுபோன்ற கேள்விக்குறியாகும் பாடல்களை புகுத்திக்கொள்கின்றனர். லூசுப்பெண்ணே, எவன்டி உன்ன பெத்தான்... போன்றவை உதாரணத்திற்கு சில. இவற்றில் பளிச்சிடும் அவர்களின் மேதாவித்தனத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

 நவீன ஒலிப்பதிவுக் கருவிகளின் வரவால் மொழி தெரியாவிடினும் பரவாயில்லை எனும் நிலை இப்போது நிலவுகிறது.  வேற்று மொழியினர் தமிழிப்பாடல்களை பாடக்கூடாதென்பதல்ல இங்கு சொல்லவந்த கருத்து. பாடும் மொழியினை தெரிந்துகொண்டு, அதில் நல்ல பயிற்சி பெற்றபின் பாடலாமே... ஒரே மூச்சில் மொத்தப்பாடலையும் பாடிய காலம் போய், இரண்டு இரண்டு வரிகளாக பாடி இணைக்கும் சுலபமான வசதிகள் இப்போது ஆக்ரமித்துக்கொள்ள வந்துவிட்டன.

இன்றைய நாளில் நூற்றுக்கணக்கான  புதியவர்கள் பின்னனிப்பாடல்களை பாடுகின்றனர். சிலர் திறமைசாலிகள்தாம். ஆனால், மீதமுள்ளோர் பாடுவதைக் கேட்கும் போது அவர்கள் எதை உச்சரிக்கிறார்கள் என்றே தெரியாமல் போகின்றது. மருத்துவர்களின் கையெழுத்தை புரிந்துகொள்ள முடியாது என்பார்கள். அதுபோல இவ்வகை புதுப்பாடகர்கள் என்ன சொல்கிறார்கள் என்றும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அட தேவையா இந்த நிலை தமிழுக்கு என நம்மை நாமே கேட்டுக்கொள்வதைத் தவிர சாதாரண ரசிகன் வேறென்ன செய்திட முடியும்....

இது உண்மையில் பாடகர்கள் தவறா அல்லது அவர்களை தேர்வு செய்யும் இசையமைப்பாளர்கள் தவறா...? எங்கு தவறிருந்தாலும் அதன் குளறுபடிகளை அனுபவிப்பது என்னவோ ரசிகர்கள்தான்.

ஊடகங்களின் நேர்காணலின் போது சில புதுப்பாடகர்கள் தாங்கள் ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்குள் மொத்தப் பாடலையும் பாடித் தந்துவிட்டதாக சொல்லும் போதெல்லாஅம், அறிவியலின் முன்னேற்றத்தைத் தான் நான் பார்த்து பெருமைப் படுகிறேனே தவிர தற்பெருமையாக பேசிக்கொள்ளும் அவர்களை அல்ல. குரல்வளமில்லா, உச்சரிப்பு சரியாக இல்லா அவர்களின் வார்த்தைகளை கோர்வையாக கேட்கும் போது மனது சங்கடப் படுகிறது. பள்ளிப்பிள்ளைகளைப்போலவே பாடுகின்றனர், அதிலுள்ள நெளிவு சுளிவுகளை அறிந்துகொள்ளாமல்.

"வை திஸ் கொலவெறி கொலவெறி" பாடல் பல சாதனைகளைப் புரிந்தாலும், உலகமுழுவதுமாக பல்லாயிரம் பேர் அந்த பாடலை ரசித்தாலும், இசையும் குரலும் கூட நன்றாகவே இருந்தாலும், மொழி ஆர்வளர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். "அடிடா அவள, வெட்றா அவள.." எனும் பாடல் காட்சிக்கு சரியாக இருந்தாலும் கருத்துக்குக்கு சரியாக இல்லை.

சில இசையமைப்பாளர்கள் ஆங்கில வார்த்தைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் தருகின்றனர். அந்தத் திறமை அவர்களுக்கு இருந்தால், அப்பாடலை முழுவதுமாக ஆங்கிலப் பாடலாகவே தந்துவிடலாமே.... உலகம் எங்கும் கேட்கும் நாமும் பெருமைப் பட்டுக்கொள்ளலாம் நம்மாலும் ஆங்கில பாடல்களை எழுதி, இசையமைத்து ஆங்கிலேயரின் அளவிற்கு பிரமாதப் படுத்த முடியுமென்று.

நான் முன்பு சொன்னது போல, புதிய பாடகர்களில் ஒரு சிலரது குரலும், உச்சரிப்பும் அபாரமாக இருக்கிறது. இசையமைப்பாளர்கள் பலரை அறிமுகப்படுத்தும் ஆர்வத்தில் இதுபோன்ற நல்ல சில குரல்களையும் தவற விட்டுவிடுகின்றனர். நல்ல பயிற்சியும், சந்தர்ப்பமும் தந்தால் தரமான இளம் குரல்களை நெடுங்காலம் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாம் சொல்லுகின்ற கருத்துக்கு எதிர் மாறாக 'கண்ட பாடல்களும் வெற்றிபெருவதால்தான் மீண்டும் மீண்டும் அவ்வகைப் பாடல்களையும் பாடகர்களையும் தாங்கள் வாய்ப்பளித்து தக்கவைத்துக்கொள்வதாக' சில இசையமைப்பாளர்கள் நினைக்கிறார்கள்.

இதிலுள்ள உண்மை நிலை விவாத மேடைக்குத் தகுந்ததாக இருக்கலாம். உடனே சொல்லும் அளவிற்கு அதில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. முப்பது, நாற்பது .... ஏன் சிலர் ஐம்பது ஆண்டுகள்கூட தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கும் போது, தற்போது வரும்  பாடகர்கள் இரண்டொரு வருடங்களில் காணாமல் போய்விடுகின்றனர்.

Friday, 27 September 2013

Interlude...sudoku


கூட்டுக்குடும்பம்...

நாம் இழந்துவரும் பண்பாடுகளில் மிக முக்கியமானது கூட்டுக்குடும்பமாகும்.

பலதரப்பட்ட உறவுகளோடு அவ்வப்போது ஏற்படும் பிணக்குகளை பிரச்சினைகளாக்காது அனைவரின் நலன் கருதி விட்டுக்கொடுத்துப் போகும் தன்மையை கூட்டுக்குடும்பங்களில் அன்று கண்டோம்.

பெரிய குடும்பமாக இருந்தாலும் குடும்ப வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் எவ்வித பங்கமும் வந்திடாது பார்த்துக்கொண்டனர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்.

ஆனால் இன்றோ, திருமணத்திற்கு முன்னர் தனிக்குடித்தனம் பற்றி பேசி முடிவெடுத்து விடுகின்றனர் இன்றைய நவ நாகரிக இளம் தலைமுறையினர்.

தெரியாத ஒன்றினைப் பற்றி புரியாமல் பேசுவதில் ஆச்சரியமில்லைதான். இருப்பினும் அவர்களின் குடும்பத்தினர் கூட்டுக்குடும்பத்தின் ஏற்றமிகு சிறப்புக்களை சொல்லித்தராது போவதும் ஒரு முக்கிய காரணமாகிறது பலர் தனிக்குடித்தனம் போக.

நடைமுறையில் நன்மைகளே அதிகம் என பரவலாக ஒரு கருத்து நிலவிவந்தாலும் திருமணமான ஒரு சில மாதங்களிலேயே தனிக்குடித்தனம் போகும் முடிவுக்கு வந்துவிடுகின்றனர். அதுவே அவர்களின் இலக்காககிவிடுகிறது.

இதனால் ஏற்படும் பல பாதிப்புக்களுக்கு நடுவே ஒன்றே ஒன்றை மட்டும் சொல்வதானால், வயோதிகர்களை தனியே விட்டு தன் சுகம் மட்டுமே பெரிதென தனியே போய்விடுவோரைச் சொல்லலாம்.
அதன்படியே ஒரு முக்கிய நன்மை எனும்போது, மற்றவரின் தலையீடின்றி தங்களின் எண்ணம்போல் சுகமாய் வாழலாம் என்பதுமாகும்.

ஒரு குடும்பத்தை திறம்பட கட்டிக்காக்கும் நிர்வாகவியலை குடும்பத்தலைவிகள் அன்று பல்கலைக்கழகம் போகாமலே கற்றுத்தேர்ந்திருந்தனர்.  சிரமங்கள் இருந்திருந்தாலும் சிக்கல்களில் மாட்டியது அன்றில்லை.

இன்றைய நிலை வேறு. ஒரு சிலரே இருந்தாலும்  வருவாய்க்கு மேல் கடனை சுமக்கும் பெண்களை நாம் இப்போது பார்க்கிறோம். கடன் அட்டைகள் அதிகம் இருக்கும் அளவிற்கு சிலருக்கு சேமிப்பு இல்லாத நிலை.  ஆரோக்கியமான அறிவுரை சொல்லி அனைத்துச் செல்ல பெரியோர் இல்லாத சூழல், தடுக்க யாரும் இல்லை எனும் நினைப்பில் அடுத்தவர் மெச்சும்படியான ஆடம்பர வாழ்வு என தேவைக்கும் மேல் செலவீனங்கள் அதிகரித்து சில குடும்பங்களை குட்டிச் சுவராக்கிவிடுகின்றன.

பெண்களின் மத்தியில் கல்வி கற்றோர் அதிகரித்திருந்தாலும் அன்பு, பண்பு, பாசம், பரிவு, சாந்தம், அமைதி எனும் குணநலன்களை அவர்கள் அதிகம் பெரிது படுத்துவதாகத் தெரியவில்லை.

கல்வி என்பது அழியாச் செல்வம் என்கிறோம். பொருளீட்டுவதற்கு மட்டுமே கல்வியை ஒரு ஆயுதமாக பலரும் பார்க்கிறர்களே தவிர, அதற்கும் அப்பாற்பட்ட உண்மைச் செல்வத்தை பலரும் உணரத்தவறிவிடுகின்றனர். கல்வியை கற்றது போல் நடந்து கொள்வோர் இளம் தலைமுறையினரிடையே பெருகவேண்டும் என்பதே பலரும் ஆதங்கப் படும் ஒன்றாக இருக்கிறது இப்போது.

Thursday, 26 September 2013

மரணம்...


மரணம் வரும். எப்படியும் ஒரு நாள் நாம் அதனை அனுபவித்தே ஆகவேண்டும். பிறந்தது முதல் போகும் வரை அது நம்மை பின் தொடருகிறது.

அதனை சில காலம் ஏமாற்றுவோரும் உண்டு, பல காலம் ஏமாற்றுவோரும் உண்டு. ஆயினும் எல்லாக் காலமும் ஏமாற்றியவர், ஏமாற்றுபவர் அல்லது ஏமாற்றக் கூடியவர் என எவரும் இலர்.

இந்த மாபெரும் உண்மை நமக்கு எப்போதோ தெரியத்தொடங்கி விடுகிறது. மூளையின் ஒரு பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கும் இதற்கு நாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை. வரும் நேரத்தில் வரட்டும் என்கிறோம்.

இப்போதல்ல, எப்போதோ வரப்போகும் மரணத்துக்கு ஏன் பயம் என்கின்றனர் சிலர். அவர்களுக்கு ஞாயமானதாக தோன்றுகிறது அவர்களின் இக்கூற்று. உண்மைதான்... மரணத்தை பார்த்து பயம் கொள்வோர் யாரும் இருப்பதாகக் காணோம் இன்று.

இல்லை... இன்னும் ஒரு பகுதியினர் மரணம் என்றும் வரலாம் என நம்புகின்றனர். மரணம் சம்பவிக்கும் போது நான் தயாராக இருப்பேன் என அவர்கள் சொல்வது கேட்கின்றது. சற்று மேலே போய், இவ்வுடல் தற்காலிகமே என அவர்கள் சொல்கின்றனர். பலமுறை செத்து பிறந்திருக்கிறோம், பிறந்து செத்திருக்கிறோம் என அவர்களின் வேதாந்தம் அமைகிறது.

ஆனால், பலருக்கு நோயில் விழும் நேரம்தான்  மரண பயம் முன்னுக்கு வந்து நிற்கிறது. தேவாரம், திருப்புகழ் என இறை நம்பிக்கைக்குத் தேவையான அனைத்தையும் உடனே கற்று தேர்ந்துவிட நினைக்கின்றனர். 'இவ்வுலகு நமக்கில்லை இனி' என எண்ணும் நேரம், அவ்வுலகுக்கு தேவை அருள் ஒன்றே என அவர்கள் நினைப்பதில் தவறில்லைதான்.

இத்தருணத்தில்தான் முன்பு அவர்கள் செய்த எல்லா பாவ புண்ணியங்களும் கண் முன்னே வந்து போகின்றன. அதில் எத்தகையவற்றில் அவர்களின் பங்கு அதிகம் என எண்ணிப்பார்க்கின்றனர்.

" ம்ம்ம்.... இதையெல்லாம் தவிர்த்திருக்களாமே..." என சிலவற்றைப் பற்றியக்கருத்து மனதுக்குள் வந்து போகிறது. காலம் கடந்து விட்ட நிலையில் அது எந்தவித நன்மைகளைத் தந்துவிடப்போகிறது...?

ஞானிகளும், மேதைகளும் முன்பு சொல்லிய அறவழியில் நடக்கத் தவறியதன் விளைவாக தங்களைத் தாங்களே நொந்துகொள்கின்றனர்.

இதற்கு நேர்மாறாக, " மன மகிழ்வுடன் " மரணத்தை எதிர் பார்த்திருப்போரும் உண்டு. நல்லதை எண்ணினேன், நல்லதே நடந்தது என வாழ்வில்  திருப்தியடைந்தோர் பலர் நம்மிடையே உண்டு.

மரணத்தைப் பார்த்து அவர்கள் பயம் கொள்வதில்லை.  'அது எப்போது வேண்டுமானாலும் வரட்டும்' என மன நிறைவுடன் வாழ்ந்து கொண்டிருப்போரே அவர்கள்.

Monday, 23 September 2013

இன்றையவற்றை இன்றே செய்வோம்...


பலவும் நமக்குத் தெரிந்தவைதான்... ஆனால், அவ்வளவாக அவற்றை நினைவில் கொள்வதில்லை. நம்முடைய பலவீனமே தேவையானவற்றை நினைவில் கொள்ளாததே. எத்தனை எத்தனையோ நம் அறிவை எட்டிய உடனே நிற்காமல் மறைந்து போகிறது. இது ஞாபக மரதி அல்ல. அதற்கான முக்கியத்துவத்தை நாம் தராததே அதற்குக் காரணம்.உதாரணத்துக்கு இங்கே சிலவற்றை எண்ணிப்பார்ப்போம். 

சில வினாடிகள் சேர்ந்தே ஒரு நிமிடமாகிறது...
சில மணிகள் சேர்ந்தே ஒரு நாளாகிறது...
சில நாட்கள் சேர்ந்தே ஒரு வாரமாகிறது...
அதே போல, சில வாரங்கள் மாதமாகவும், சில மாதங்கள் வருடமாகவும், பின்னர் வருடங்களே வாழ்க்கையாகவும் ஆகிறது.
 
ஒரு சின்ன வினாடியில் தொடங்கி நம் வாழ்க்கையே ஓடி முடிகிறது. 

முதலாம் வகுப்புக்கு போகாமல் நாம் பல்கலைகழகத்துக்கு போகவியலாது. தற்சமயம் பாலர் பள்ளிகள் வேறு பலவும் தொற்றுவிக்கப்பட்டு விட்டன. 'அட பாலர் வகுப்புதானே'  என அவற்றை அலட்சியப் படுத்த முடியாத சூழ்நிலை வந்துவிட்டது. பாலர் வகுப்புக்களும் முக்கியமானவைகளே. சிறந்த வகுப்புக்கு நுழைவுத் தேர்வாக அதன் பரிசோதனைகளின் தேர்ச்சியும் அமைந்துவிடுகிறது. 

ஆக, சிறிதென்று எதனையும் ஒதுக்கித் தள்ள முடியாத, ஏமாந்து விடாத தன்மையே நம் வாழ்வினை நிர்ணயிக்கின்றது.

நமது மனப்போக்கின்படியே ஒவ்வொன்றும் சின்னதாகவோ பெரியதாகவோ தெரிகிறது என்கிறார்கள் பெரியோர்.. எதுவாயிருந்தாலும், நமக்கு தொல்லைகள் வராதவரையில் அவை சாதாரணமானவைகளே. பிரச்சினையென ஆகும் போது, " அடடா இதை அன்றே செய்திருக்கலாமே..." என மனம் உறுத்தத் தொடங்கிவிடும்.

செய்யவேண்டிய எதுவாயினும் அதனை இன்றே செய்வது நல்லது. 'நாளை என்பது நமக்குத் தெரியாத பலவற்றுக்கு' எனக் கொள்ளுதலே வெற்றியின் படி.
கடினமானவைகள் கூட தொடங்கிடும் பின்னர் ஒவ்வொன்றாக சுலபத்தில் முடிந்திடும் என்பது அனுபவசாலிகள் நமக்கு சொல்லித்தரும் உண்மை.

அது போன்றே நம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களும்.  அற்பமென நினைக்கும் ஒரு சின்ன விசயம் நம் வாழ்க்கையையே மாற்றிப்போடும் வல்லமை கொண்டதாக அமைந்து விடுவதும் உண்டு.

" அட அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் " என தள்ளிப்போடும் சிலவற்றை நாம் முடிக்க முடியாமலே போகக்கூடும். அதைபற்றிய ஒரு நெருடல் இருந்துகொண்டே இருப்பதை விட, " ஒருவழியாக செய்ய நினைத்ததை செய்து முடித்துவிட்டேன்..." என திருப்திப் படுவது சிறந்ததல்லவா?

செய்யவேண்டிய பணிகள் எதுவாயினும் அவற்றை இன்றே செய்து முடிப்போம். 



Saturday, 21 September 2013

படித்ததில் பிடித்தது....புரட்டாசி முதல்வார மகத்துவம் என்ன?

ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி, ராசி கரத்தின் தென்மேற்கிலுள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது.மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அதாவது நாளை மறுநாளில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர்.

இதையே, "மகாளய பட்சம்` என்பர்; "பட்சம்` என்றால், "15 நாட்கள்' எனப் பொருள். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இந்த பட்சத்தில் வரும் பரணி, "மகாபரணி' என்றும், அஷ்டமியை, "மத்யாஷ்டமி' என்றும், திரயோ தசியை "கஜச்சாயை' என்றும் சொல்வர்.இந்த மூன்று நாட்களுமே, பிதுர் வழிபாட்டுக்கு உகந்தவை. இம்மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை (இவ்வாண்டில் அக்-4) மற்ற அமாவாசைகளைக் காட்டிலும் அதிக பலன் தரும். மஹாலய விதிப்படி அந்தப் பதினாறு நாள்களும் பித்ருக் களுக்காக அன்ன சிராத்தம் செய்ய வேண்டும், இயன்றவர்கள் பொன் முதலிய பொருள்களைத் தகுந்தவர்களுக்குத் தானமாக வழங்கலாம்.

முடியாதவர் ஒரு நாள் மஹாலயம் செய்து மற்ற நாள்களில் தர்ப்பணம் (எள்ளுத் தண்ணீர் விடுதல்) செய்யலாம். ஆவணியில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிய நாம், புரட்டாசியிலும் விநாயகர் பூஜையைத் தொடர்வது சிறப்பான பலனைத் தரும். ஏனெனில், புரட்டாசி கன்னி மாதமாக இருக்கிறது.தென்மேற்கு திசையை, "கன்னி மூலை' என்பர். இதனால் தான், கோவில்களில் இந்த திசையில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார். ஏதாவது வேண்டுதல் வைத்து, இந்த புரட்டாசி மாதம் முழுவதும் கணபதிக்கு அருகம்புல் மாலை அணிவித்தால், எண்ணியது ஈடேறும். நடராஜருக்கு ஆண்டில் ஆறு நாட்கள் அபிஷேகம் செய்யப்படும்.

அதில், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியும் ஒருநாள். (இவ்வாண்டில் அக்-3). அன்று மாலை சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படும். இம்மாதத்து சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இவ்வாண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் (செப்.21, 28, அக்.6, 13) பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும்.ஜாதக ரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் (அக் டோபர் முதல்வாரம்) கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை (இவ்வாண்டு அக்.5, 13) இம்மாதத்தில் நடக்கிறது. அம்பாளை, முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறோம்.தைரியம், செல்வம், கல்வி ஆகியவற்றை அம்பாளிடம் வேண்டிப் பெற இந்த பூஜை நடத்தப்படுகிறது.

 நன்றி : தீபம் தொலைக்காட்சி

 

Friday, 20 September 2013

இறை நம்பிக்கை...

கண்மூடித்தனமான நம்பிக்கை, அர்த்தமற்ற சடங்குகள் மற்றும் தனிநபர் மத போதனை எனும் அங்கலாய்ப்புக்களில் நம் சமூகத்தவர் அதிகம் ஈடுபடுவது போல் தோற்றம் ஒன்று இருக்கிறது. அவற்றில் மூர்க்கத்தனமான மரபுகளை வலியுருத்தும் மனித தன்மையற்ற செயல்களும் அடங்கும்.

மாயம், மந்திரம், நடு நிசிப் பூஜை, மலர்க்குளியல், காய்ப்புக்காய்ச்சுதல், சாமியாடுதல், கோழி ஆடு பலிகொடுத்தல் போன்றவை காலம் கடந்தும் நாம் தொடர்ந்து கொண்டிருக்கும் அவசியமற்ற செயல்கள்.

ஒரு புயலின் நடுவே ஆடாது அசையாது அதுதான் புவியீர்ப்பு விதி என நாம் நிற்க முடியுமா? நமது கிரஹித்தலில் எங்கோ தவறென்றல்லவா அதற்குப் பொருள்.

அறிவியல் முன்னேற்றம் எத்தனையோ சதவீதம் உயர்ந்து விட்டாலும், எதிர் மறைப் பேச்சில் கிணற்றுத் தவளைகளாக  இருப்பதறியாது ஜம்பம் பேசும் பலவான்கள் நம்மைச்சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள்.

கல்வியறிவு இவ்வித முன்னேற்றத் தடைகளை உடைத்தெறிகிறது. மெய்ஞானத்துடன் விஞ்ஞானம் சேரும்போது அங்கே உண்மையான மதம் தோன்றுகிறது. நம் மதம்  தோன்றியதும் அவ்விதமே.



இறந்தோருக்கு நினைவுச்சின்னம் வைக்கலாம், கோயில் கட்டலாமா?

கறையான் புற்றுக்கு பாலூற்றி, குங்குமமிட்டு பூஜிப்பது ஞாயமா?

அடர்ந்த பெரும் மரத்துக்கு சேலை கட்டி அதை அம்மனாக நினைத்து வழிபடலாமா?

நாம் வகை தெரியாது வம்புகளில் மாட்டிக்கொள்ளும் நேரம், அடுத்த வீட்டுக்காரர் பில்லி சூனியம் வைத்துவிட்டார் என்பது இன்னும் நடைமுறைக்கு ஒத்துவருமா?

அதை எதிர்க்க பெரிய தாயத்தாக கட்டிக்கொண்டால் எல்லாம் சரியாகி விடுமா?

இவற்றைப்போல இன்னும் எவ்வளவோ சந்தேகங்கள்…. பலருக்கு சரியான விடை கிடைப்பதில்லை. விடை தேடி யாரும் முயற்சிப்பதில்லை. விடை தங்களை வந்தடைய காத்திருக்கும் நேரம் இவ்வித தவறுகளில் மூழ்கிவிடுகிறார்கள்.

“ நான் படிக்காதவன் ஐயா, வேறு என்னதான் செய்ய முடியும்…?” என யாரும் கேட்டால் நல்ல கேள்வி என்பேன் நான். காரணம் கேள்விகள் தான் சிறந்த பதில்களை தருவிக்கின்றன
பேரறிஞர்களின், பேராசிரியர்களின், மகான்களின், சித்தர்களின் பேருரைகளை கேட்பது முதல் படியாகும்.  ஆகம முறைப்படி கட்டப்பட்ட பெரிய கோயில்களுக்கு சென்று வணங்கி அங்குள்ள பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்வது இரண்டாம் படி.

இதில் தேறி வருவோர்க்கு மற்றவை சரிவரத் தெரியத் தொடங்கிவிடும்.

கதை கதையாம் காரணமாம்..

மனிதர்கள் பொதுவாக கதைகளும் காரணங்களும் சொல்வதில் வல்லவர்கள். சுற்றி வலைத்து ஒரு விசயத்தை சொல்வதற்கு   பல வழிமுறைகளை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

"சுருங்கச் சொனால் சுவாரஸ்யம் இல்லை சார். சுற்றி வலைத்துச் சொன்னால் தான் கேட்பவரும் ஆனந்தப் படுவார், சொல்பவருக்கும் மகிழ்ச்சி ..." என என்னிடம் சொன்னவர்களும் உண்டு. சின்ன ஒரு விசயம் நீளும் போது, அதற்கு கை காலோடு இறகும் முலைக்கிறது. தேவையற்ற பொய்கள் சேருகின்றன.

சரியெனும்போது தங்களை முன்னிறுத்துவதும், மற்ற நேரங்களில், குறைகளை பிறர் மேல் தினிப்பதும் சர்வ சாதரணமாக   நடப்பதுதான்.

சிலர் சொல்லும்போது கதைக்குள் கதையும், அதற்குள் வேறொரு கதையும் என தொடர்கதைகளாக வரும். இது அவர்களின் கற்பனையின் அபார வளர்ச்சியாகும். மூளை வளர்ச்சிக்கு கதை சொல்வது நல்ல பயிற்சி என சிறு வயதில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அது கதை சொல்வதில்தான் என ஏற்றுக்கொள்ளும் அதே நேரம், 'கதை விடுவது' எவ்விதத்திலும் மூளைக்கு நல்ல பயிற்சியாக  இருக்காது என்பதை நாம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

பல நேரங்களில் பலரிடம் நாம் கதை சொல்கிறோம். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்றோரிடம் உண்மைக்கதை சொல்கிறோம்.  நண்பர்களிடமும் உறவினர்களிடமும் நாம் நன்றாக 'கதைக்கிறோம்'. வேண்டாதவர்களிடம் 'கதைவிடுகிறோம்'. இப்படியாக நமது கதைகள் இன்னும் பல ரூபங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

உள்ளதை உள்ளது போல் சொல்லத்தான் நாம் சிறு வயது முதல் பழக்கப்பட்டோம். நாம் பெற்ற கல்வியும், கடவுள் பக்தியும் நடந்ததை நடந்தவிதமாக பேசத்தான் நமக்கு வழங்கப்பட்டன. ஆனல் இன்று நடப்பது என்ன?

கவிஞர்கள் காணாதவற்றையும் கண்டதுபோல் கவிதைகளில் படைக்கிறர்கள், இது இலக்கியமாகிறது.
அரசியல் வாதிகள் செய்யாத சாதனைகளயும் தங்களுடையதெனப் பட்டியலிடுக்றர்கள், அவர்களுக்கு சாதனைத் தலைவர்கள் எனும் பட்டம் கிடைக்கிறது.
மருத்துவர்களோ நமக்கு வந்துள்ள நோயினை ஐம்பது மடங்காக்கி சிகிச்சையை இப்போதே செய்தால்தான் உண்டு என பணம் பிடுங்குகிறார்கள்..உயிர் காத்த கடவுளாக சித்தரிக்கப் படுகிறார்கள்.

இப்படியாக ஒருவர் மற்றவரிடம் கதை சொல்வதும் கதை விடுவதும் என சுய நலத்தை இலக்காகக் கொண்டே பலவும் நடந்து கொண்டிருக்கிறது.
 

தமிழில் பெயர் பஞ்சமா...?

தமிழர்களாகிய நமக்கு தமிழ்மொழி பற்றி அதிகம் சொல்லித் தர தேவையில்லை.  தமிழ்தான் நமது மூச்சு, பேச்சு எல்லாம். இருந்தும் சில காலமாக தங்கள் குழந்தைகளுக்கு  தமிழில் பெயர் சூட்ட பலரும் தயங்குவது நாம் கண்டு ஆச்சரியப் படும் ஒன்றாக மாறிவிட்டது.

தமிழ்ப் பெயர்கள் மிகவும் பழையனவாகத் தோன்றுவதால் தாங்கள் நவீன பெயர்களை தேர்வு செய்ததாக சில நாகரிகப் பெற்றோர் கூறுகின்றனர்.

தமிழ் மொழி பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததெனும் போது பெருமைப் படும் நாம், அந்தப் பெருமையின் பலனாக பழைய ஆனால் அர்த்தமுள்ள இனிமையான தமிழ்ப்பெயர்களை வைக்க நாணுகிறோம்.

ஆய்வொன்றில் கலந்துகொண்டோர் பல காரணங்களை இதற்காக சொல்லியிருந்தனர்..
    - தமிழை வெறும் மொழியென மட்டுமே சிலர் காணுகிறாகள். அதன் சிறப்புக்கள் பற்றி அவர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.

   - நவனாகரிகத் தமிழர்களாக தங்களைக் காட்டிக்கொள்ள நினைப்பதால் சில பெயர்களை மற்ற மொழிகளிலிருந்து கலவாடுகிறார்கள்.

   - சமயத்தில் ஒரு பிரிவினர் சமஸ்கிருதப் பெயரால் சமயத்தை வளர்ப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள்.

   - புரியாதப் பெயரை உச்சரிக்கக் கஷ்டமான பெயர் என்கிறார்கள் சிலர்.

   - பலருக்கு தமிழ்ப் பற்று என்பது கொஞ்சமும் இல்லை. ஆக தமிழில் பெயர் வைக்க மட்டும் எங்கிருந்து வரும் அக்கறை....

   - தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள், பாடல்கள் எனும் தாக்கத்தின் காரணமாக வேற்று மொழிப்பெயராயினும் அதையே பிள்ளைகளுக்குச் சூட்டி தங்களைத் தாங்களே திருப்திப் படுத்திக்கொள்கின்றனர்.

   - எண் ஜோசியம், எழுத்துக்களில் மாற்றம் என தேவையற்ற நம்பிக்கையினால் தம்ழ்ப் பெயர்களின் எழுத்துக்களை மாற்றி வேறு மதத்தின் பெயர்களைப் போல குழப்புகின்றனர்.

   - ஜோதிடர்களும், எண் கணித நிபுணர்களும், வஸ்து சாஸ்திரக் கலைஞர்க்ளும் தங்களின் பிழைப்பிற்காக தவறான வழி காட்டுதலால் மக்களை ஏமாற்றுகின்றனர்.

   - தமிழில் எழுதப் படிக்கத் தெரியாத பெற்றோர்களுக்கு மற்றவர் தரும் ஆலோசனைகள் இப்படி தமிழில்லா பெயர்களாக அமைந்துவிடுகின்றன..

   - சிலர் தமிழில் முன்னேற்றம் இல்லை, எதிர்காலம் இல்லை என நினைக்கிறார்கள்.

   - பலருக்கு நமது முன்னோர்கள், தமிழ்ப் பெரியோர்கள் பற்றி தெரிந்திராததால் அவர்களின் பெயர்களை வைப்பதில்லை.

   - "அட வெறும் பெயர்தானே, எதுவாயிருந்தால் என்ன...?" எனும் பெற்றோரின் அலட்சியம்.

   - பெரியோர் பெயரிட்டு வந்த வழக்கம் மாறி, இப்போது பெற்றோரும் பெற்றொரின் நண்பர்களும் பெயரிடும் காலமாகிவிட்டது.

   - உலகமயமாக்கப்பட்டு விட்டதன் தற்கால சூழ்நிலையும் ஒரு காரணம்.

இப்படி இன்னும் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆயினும், இவற்றையெல்லாம் பார்க்கும் போது தமிழ்ப் பற்றில்லாத பெற்றோரே முழு முதற்காரணமாக நாம் எண்ணத்தோன்றுகிறது.

 

Thursday, 19 September 2013

நம் வாழ்வின் முடிவென்பது ரகசியமா?

வாழ்க்கையில் பல பிரபலங்களை நாம் சந்தித்திருக்கிறோம். சிலர் எட்டாத உயரத்தில் நட்சத்திரங்களாக மின்னுகிறார்கள். சிலர் மக்களின் மனங்களில் தெய்வத்திற்கு சமமாக  பூஜிக்கப்படுகிறார்கள்.

எல்லாத்துறைகளிலும் இப்படி சிகரம் தொட்ட சாதனையாளர்களை நாம் பார்க்கிறோம். மனதுக்கு மகிழ்ச்சியூட்டி நமக்கு தன்னம்பிக்கை தருவதாக அமைகிறது அவர்களின் பொது வாழ்வு.

ஆயினும், அவர்களின் தனிப்பட்ட வாழ்வினில் நடக்கும் எல்லாமும் பூத்துக்குலுங்கும் மலர்களைப் போல மணப்பதில்லை.  கண்முன்னே ஜொலித்தாலும், அந்த நட்சத்திர தாரகைகளின் உள்ளே கொதிக்கும் அக்கினிப் பிழம்பாக அவர்கள் நிஜவாழ்வு இருப்பது பலருக்கு தெரியாமலே போய்விடுகிறது.

அலைகளில்லாதா ஏரியில் சொகுசான படகில் பயணம் போவது போலத்தான் வாழ்க்கை. அலைகளில்லாதிருக்கலாம். ஆபத்திலையென அடித்துச் சொல்ல இயலுமா...? எங்கு தவறு நேர்ந்தாலும் படகு கவிழும் போது வாழ்க்கை என்பது கேளிவிக்குறியாகி விடுகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பது வேறு யாருக்கும் தெரிவதில்லை. அது காலத்தால் காக்கப்படும் ரகசியமாகிறது.

பொதுவில் ஒருவர் எவ்வளவுப் பெரிய பிரபலமாக இருந்தாலும், அவரின் தனிப்பட்ட வாழ்வு கணவன் ( மனைவி ), பிள்ளைகள், உடல் நலம், ஆயுள், பொருளாதாரம் போன்றவற்றின் அமைப்பை பின்பற்றியே இருக்கிறது.
காலத்தால் மிக மிக ரகசியமாக வைக்கப்படும் இவர்களின் முடிவு இது போன்ற அந்தரங்கமான விசயங்களை ஒட்டியே அமைகிறது.

Tuesday, 17 September 2013

சிரிப்போம் சிந்திக்க வைப்போம்...

நம்மை சிரிக்க வைப்பவர்களையும், நம்மோடு சிரிப்பவர்களையும் நாமும் சிரிக்க வைக்கவேண்டும் என்று நினைப்பது ஆரோக்கியமான எண்ணம். 

ஆனால், நம்மைப் பார்த்து சிரிப்பவர்களை நாம் சிந்திக்க வைப்பது அவசியம்.
அவர்களை கடுமையான சொற்களாலோ கோபத்தாலோ ஒன்றும் செய்துவிட முடியாது.

நமது சிறந்த செயலினால் மட்டுமே அவர்களை சிந்திக்க வைக்க முடியும்.

தண்ணீர் தண்ணீர், விவசாயிகளுக்கு...

மண்ணை பொன்னாக்கி உலகிலுள்ளோர் அனைவருக்கும் உணவு படைக்கும் விவசாயிகள் பற்றி நாளிதழ்களில் படிக்கும் போது மனது வருந்துகிறது.

அவர்கள் நலம் பேனப்படுவதில்லையா?

உலகம் தழைக்க உணவிடும் அவர்கள் பசி பட்டினியில் போராடுவதும் பல காரணங்களுக்காக அவர்களில் பலர் தற்கொலை செய்துகொள்வதும் படிக்க ஆச்சரியமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் இது வெகு சாதாரணமாக நடைபெரும் ஒன்றுதான் என்றாலும் கடல் கடந்து நம் பார்வைக்கு இதுபோன்ற தகவல்கள் வந்தடையும் போது மனது கணக்கிறது.

ஆறுகள் வெற்றிடங்களாக காணும் காட்சியை தினமும் தொலைக்காட்சியில் காண்கிறோம். அவர்களின் அண்டை மாநிலம் அவர்ளுக்கு சாக்கு போக்கு சொல்லி சாமர்த்தியமாக அணையை உயர்த்திக்கொள்வதும், மத்திய அரசு அதைக் கண்டும் காணாதது போல் மாற்றாந்தாய் மகவாக தமிழ்நாட்டை பார்ப்பதும் ஏற்றுக்கொள்ளகூடியதல்ல.

ஆனால் தமிழ் நாட்டிலும் மழைக்கு ஒரு குறையும் இல்லையே. தினமும் பெய்யும் மழை நீரை சேகரித்து, அது கடலில் மீண்டும் சென்றடைவதை தடுத்து, மறு பயனீட்டுக்கு வழிசெய்யும் சிந்தனைகள் ஏன் மேலெழுவதில்லை.

நமது தலைநகராம் கோலாலம்பூரில் அதிகமாக மழைபெய்யும் போது 'ஸ்மார்ட் டன்னல்' என்னும் தலைநகர் நோக்கி வரும் சாலையை பெரிய கால்வாயாக மாற்றி அங்கு ஏற்படும் வெள்ளத்தினை ஒதுக்குப்புறமான இடத்துக்கு திசை திருப்பும் யுக்தியை நாம் கொண்டிருக்கிறோம்.

இதைப்போல அல்லது இதைவிட இன்னும் சிறப்பாக ஏன் நமது தமிழ் நாட்டு அரசும் வீணாகும் மழை நீரை பயன் தரும் வழிகளில் உபயோகத்துக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது....

சந்திர மண்டலத்துக்கு விஞ்ஞானிகளை அனுப்பும் தமிழர்கள் இதற்கொரு வழியை கண்டுபிடித்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தில்  இருக்கிறார்கள் என்பதை உணர்ந்ததாகக் காணோம்.

"ஐயா சாமி ..."  என கையேந்துவதைவிட மழை நீரை உபயோகத்துக்கு திசை திருப்பும் கண்டுபிடிப்பு நமது வெற்றிக்கு அஸ்திவாரம் போடும்

சோம்பலால் சோம்பி நின்றால்...

சோம்பல் என்பது மனிதனின் முன்னேற்றத்திற்கு ஏற்படும் தடைகளில் முக்கியமான ஒன்றாகும்...  எந்தவிதத்திலும் நமக்கு நன்மை பயக்காத சோம்பலினால் நமது பதிவுகளும் சில காலம் தடைபட்டு விட்டது வழக்கமாக இங்கு வருகை தருவோருக்குத் அது   தெரிந்திருக்கும்.

மற்ற பணிகளின் குறுக்கீடுகளும் சற்று மந்தமாக இந்த பதிவுகள் வரக்காரணமாகும்.

இதோ மீண்டும் விறுவிறுப்பான புதிய பதிவுகள் இங்கே தொடருகின்றன.

ஆதரவு தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என்னுடை அன்பு நன்றிகள். இங்கு பல வேறுபாடான கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறோமே தவிர உபதேசமாகவோ, அறிவுறையாகவோ அல்ல என்பதனை இங்கே மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

நல்லதாய் இருப்பின் ஏற்றுக்கொள்ளலாம்... வேண்டாமெனில் ஒதுக்கித் தள்ளிவிடலாம்.

கண்முன்னே நடப்பவைகளை இங்கே பதிவிடுகிறேன். நல்லன தொடரவும் மற்றவை காணாமல் போகவும் இறைவனை வேண்டுவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது. படிப்பதனால் மட்டுமே தீயவை அழிந்துவிடுமானால் நம்மில் பலர் மயங்கி விழும் காட்சிகள் அதிகமாகிவிடும்.

என்னமோ சொல்றோம்....என்ன நடக்குதுன்னு பார்ப்போமே....

தமிழ் நாட்டினைப் போலில்லாமல் இங்கு நம் மலைநாட்டில் பதிவுலகில் நேரத்தைச் செலவிடுவோர் மிகவும் குறைவு. அங்கிருக்கும் பதிவுலக அமைப்பு போல இங்கு ஒன்றுகூடும் நிகழ்வுகள் நடப்பதில்லை. இருப்பினும் என்னுடைய நண்பர்களின் கட்டாயத்தில் தொடங்கிய இந்த " எண்ணங்கள் ஆயிரம்" வலைப்பூ, இப்போது 700வது பதிவினை நோக்கி நகர்வது மகிழ்வளிக்கிறது.




அபூர்வ சகோதரிகளாக ஒரு இரட்டைவேட படம்...
 

Friday, 13 September 2013

சுயநலம் பெரிதா....

மேல் நாட்டில் சுயநலமும் ஒரு சிறப்பே என்கின்றனர்.

அடுத்தவருக்கு உதவுவது அவர்களை முன்னுக்கு வராமல் முடங்கச் செய்யும் செயல் எனும் பொருள்பட பேசுகின்றனர்.

பொதுவாக மேல் நாடுகளில் நண்பர்களுடன் கடைத்தெருவிற்கு சென்றாலோ, உணவகங்களுக்குச் சென்றாலோ தங்களுடைய பங்குக்கான பணத்தினை  மட்டும் செலுத்திவிடுவர் எனுமொரு நடமுறை வழக்கம் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதே போல, அங்குள்ள குடும்பங்களிலும் பதின்ம வயதைக் கடந்தோர் சில வருடங்களிலேயே தனித்து வாழப் பழகி விடுகின்றனர். சுய நலம் என்பது அங்கே குறையாகப் படுவதில்லை.

ஆன் ராண்ட் எனும் எழுத்தாளர் " தெ வெர்ச்சு ஒஃப் ஷெல்ஃபிஷ்னஸ் " எனும் தனது புத்தகத்தில் இன்னும் பலவற்றை எழுதியிருக்கிறார்.  அடுத்தவருக்கு ஓடோடிச் சென்று உதவுவது அவர்களுக்கு " நீங்கள் செய்யும் பாவம்" என்கிறார்.

அடடா...எப்படியெல்லாம் எழுதி சம்பாதிக்கிறார்கள்.

ஆனால் ஒன்று, இப்புத்தகத்தைப் படிக்காமலே, நம்மில் பலர் மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மையின்றி வாழ்கின்றனர்.

மேலை நாட்டு ஜீன் இவர்கள் உடலிலும் ஓடுகிறதோ.

Rajan Selvam's pre-wedding ceremony photos...

 நம் சமூக திருமணங்களின் முன்பு திருமண நலுங்கு எனப்படும் சம்பிரதாய முறையிலான சடங்குகள் நடபெறுவது இயல்பு. இன்றும் அதுபோல, இயற்கை எய்திய நண்பர் செல்வம் அவர்களின் மகன், ராஜன் செல்வத்துக்கு தாய் முறையிலுள்ளோர்  சிறப்பாக நலுங்கு செய்தனர்.
 
அப்போது எடுக்கப்பட்ட சில படங்களை இங்கே பார்க்கலாம்.
 





















Sunday, 8 September 2013

என்றோ பார்த்தவை - ஊட்டி வரை உறவு

என்றோ பார்த்தவையாக இருந்தாலும் இன்றும் பார்க்கும் போது மனதில் குதூகலத்தை ஏற்படுத்தும் படமாக அமைவது சிவாஜி, கே ஆர் விஜயா, முத்துராமன், எல் விஜயலெட்சுமி, பாலையா, வீ கே ராமசாமி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த  ஊட்டி வரை உறவு திரைப்படமாகும்.

மனதைக் கவரும் கட்சியமைப்புக்களுடன் இனிமையான பல பாடல்களைக் கொண்ட நல்லதொரு படம் "ஊட்டி வரை உறவு...."













retro - old tamil movie - ooty varai uravu

Saturday, 7 September 2013

குமுதம் அட்டைப்படங்கள் -ஆகஸ்ட் 2013

இங்கே இடம்பெறும் குமுதம் அட்டைப்படங்கள் எந்தவித விளம்பரத்திற்காகவும் தரப்படவில்லை.  ஒரு சராசரி மனிதனுக்குத் தேவையான தமிழறிவு அனைத்தும் குமுதத்தில் ஒருங்கே கிடைப்பதை பாராட்டும் விதமாக எனது நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன், 41 வருட குமுதம் வாசகன் என்பதனால்.

வாங்கிப் படியுங்கள்...விவரம் தெரியும்.