Friday, 31 May 2013

பொறுமை...

பலர் எல்லாவற்றிலும் அவசரமாகவே உள்ளனர். எதிலும், எதற்கெடுத்தாலும் அவசரம். காலையிலிருந்து மாலை வரை அவர்கள் செய்யும் அனைத்திலும் ஒருவித அவசரத்தையே கடைபிடிக்கிறார்கள்.

ஏன்... உண்ணும் உணவைக்கூட அவசர அவசரமாக உண்ணுவோர் நம்மிடையே இருக்கவே செய்கிறார்கள்.

நமது எல்லா அலுவல்களையும் தலகீழ் மாற்றும் சக்தி பெற்றது பொறுமை இல்லாத அவசரமாகும்.

இது நமக்கு தெரியாதா?

தெரியும், ஆனால் இந்த அவசர உலகில், நாம் இந்த அவசர சூழ் நிலைகளுக்கு ஈடு கொடுத்து அவசர அவசரமாகவே வாழ்கிறோம். பொறுமையே முறையான வாழ்வுக்கு அஸ்திவாரம் என்பது எப்படி நம் நினைவினில் நிற்கத் தவறுகிறது.

ஒவ்வொரு செயலுக்கும் நேர்மறையானதும் எதிர் மறையானதுமாக விளைவுகள் உண்டு என நாம் படித்திருப்போம். அவசரம் என்பது ஒரு சில செயல்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற நேரங்களில் அவசரம் என்பது ஒருவரின் பலவீனம் என்றே பெரியோர் சொல்லிச் சென்றனர். மாறாக பொறுமை என்பதனையே போற்றிப் புகழத்தக்கதாக அவர்கள் வலியுறுத்தினர்.

இயற்கையும் அந்த பொறுமையையே நமக்கு கற்பிக்கிறது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு  இடத்துக்கு பயணம் போவோர் அவசரமாக  செல்லும் போது, தனக்கும் தன்னோடு பயணிப்போருக்கும், எதிரில் வருவோருக்குமாக  ஆபத்தான சூழ் நிலைகளை உருவாக்குகிறார். பல நேரங்களில் அவசரம் ஆபத்தில் போய் முடிகிறது.

ஆனால், அவர் பொறுமையாய் வாகனத்தை செலுத்தும் போது அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படுகின்றன, போய்ச் சேர வேண்டிய இடத்திற்கும் பத்திரமாக, நிம்மதியாக சென்றடைய முடிகிறது.

இங்கே பொறுமையான பயணத்திற்கு பலனுண்டு என தெரிந்து கொள்கிறோம். விபத்துக்களுக்கான முக்கிய ஒன்றாக சாலைகளில் பொறுமை இல்லாது பயணிப்போர் குற்றம் சாட்டப்படுகின்றனர்.

சில செயல்களில் பொறுமை என்பது பல மடங்கு நன்மையை நமக்குப் பெற்றுத் தருகின்றது.  வீடு, நிலம், ஷேர் மார்க்கெட் போன்ற வாங்கி விற்கும் வியாபார முதலீடுகள் சில காலம் பொறுமையோடு காத்திருத்தலுக்கான நன்மையினை நமக்குத் தருகின்றது.  வங்கிகளில் போடப்படும் சேமிப்புக்களுக்கும் இதை சொல்லலாம். இவற்றில் பொறுமையாக காத்திருப்பது வியாபாரத் தன்மையை பொறுத்து அமைகின்றது. சரியான நேரத்தில் இலாபம் அடையும் திறனைச் சார்ந்ததாக இருக்கின்றது.

வெற்றியாளர்களின் பின்னனியை கூர்ந்து பார்த்தால், " கடினமாக உழைத்தேன் ...காத்திருந்தேன்...சரியான நேரத்தில் பலன் கிட்டியது" என்று அவர்கள் சொல்வது நமக்கு புலப்படும்.

 தேர்வுக்கு அமரும் மாணவன் தன் தேர்ச்சியனை தெரிந்து கொள்ளவும் கர்பினித் தாய்மார்கள் தங்கள் குழந்தையினை பெற்றெடுக்கவும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டியதிருக்கிறது.  இதுபோல சில நம் சக்திக்கு அப்பாற்பட்டவைகளாக இருக்கின்றன. நம்மையும் மீறியச் சில செயல்கள் நமக்கு பொறுமையை கட்டாயமாகச் சொல்லித் தருகின்றன.

செயல் வேகத்தினை முடக்குவதோ, குறைப்பதோ அல்ல பொறுமை என்பது. தடைகள் பல கடந்து செல்லும் சக்தியையும் நிதானத்தையும் தரவல்லது அது. முயற்சி, திறமை, நுண்ணறிவோடு பொறுமையும் சேரும் போது சாதனையாளர்கள் தோன்றுகிறார்கள்.

ஒற்றைக்காலில் நிற்கும் கொக்கின் தத்துவமே பொறுமைக்கான உதாரணமாக பெரியோர் நமக்கு காலங்காலமாக சொல்லிவரும் மிகப் பெரிய தத்துவமாகும். பின்பற்றுவோம், பயனடைவோம்....


No comments:

Post a Comment