Wednesday, 22 May 2013

ராசிகளின் பலன்களும் அப்பாவி மக்களும்...

எனக்கு ஜாதகம், ஜோசியம், கிரக நிலைப் பலன்கள் போன்றவற்றில் அவ்வளவு நம்பிக்கையோ ஆர்வமோ இல்லை.

தொலைகாட்சியில் "இந்த நாள் உங்களுக்கு எப்படி?" என்றவாறு  ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமான நன்மை தீமைகளை அலசுவதாக கூறிக்கொண்டு தினமும் ஒரே விசயத்தை திரும்பத்திரும்ப ஒப்புவிக்கும் ஜோதிட குறிப்புக்கள் எனக்கு அதிக வெறுப்பைத் தருவன வாகும்.

அதிலும் "உங்களுடன் இருக்கும் நண்பர்களால் உங்களுக்கு இன்று பாதிப்புகள் வரலாம்" என தினமும் இடம்பெருகின்றது. இது முறையில்லாத ஒழுக்கமில்லாத குறிப்பு.

உடன் இருக்கும் நண்பர்களினால் மட்டுமா பாதிப்பு?  உறவினர்களினாலும் உடன் பிறந்தோராலும் பாதிப்புகள் இல்லையா?  தினமும் நண்பர்களை பலிகடா ஆக்குவது சரியாகப் படவில்லை. அறிவுக்குப் பொதுந்துவதாகவும் இல்லை. பின்பு உண்மை நட்பின் மேல் எப்படி நம்பிக்கை வளரும்?
இதுபோன்ற தினப் பலன்களைக் கேட்போர் அனைவரும் அறிவாளிகள் அல்ல. அனுபவம் குறைந்த சிலர் இதைக் கேட்கும் போது, தங்களின் உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடலாம்....இவற்றை நம்பி.

ஒரு உதாரணம் சொல்வேன். எனக்கு பழக்கமான குடும்பத்தில் மகனுக்கு திருமணம் செய்து வைத்தனர். மறு நாள் மகனின் தந்தையார் நோயில் வீழ்ந்தார். மருத்துவரைப் பார்ப்பதை விடுத்து ஜோசியம் பார்பவரிடம் போயினர். புதிதாக வீட்டுக்கு வந்த ஒருவரால்தான் வீட்டுப் பெரியவர் நோயுற்றார் என அந்த ஆசாமி உளறி வைக்க, அதை நம்பிய அந்த அறிவுக் கொழுந்துகள், பாவம் அந்த அப்பாவி இளம் மனைவியை தனிமைப் படுத்தி சில நாட்களில் அவரின் தாய் வீட்டுக்கே அனுப்பி வைத்துவிட்டனர்.

திகைத்துப்போய்,  நம்ப முடியாமல், ஆச்சரியத்தில் கண்கள் அகல விரித்தபடி அக்கம் பக்கத்து வீட்டார் பார்த்துக் கொண்டிருக்கத்தான்  முடிந்ததே தவிர வேறு எதுவும் செய்ய இயலவில்லை.

வாழ்க்கையின் முக்கியத்துவம் புரியாமல் என்னமோ ஏதோ என வாழ்பவர்கள் இவர்கள். திருமணம் எவ்வளவு முக்கியமான விசயம். அதில் சொல்லப்படுகின்ற மந்திரங்கள் காதில் இருந்து மறைவதற்குள் இந்த மணப் பெண்ணை கேள்விக்குறியாக்கி விட்ட இவர்களை என்னவென்பது. விரும்பி நடந்ததா அல்லது திணிக்கப்பட்டதா..?  திருமணத்திற்கு முன்னால் யோசிக்கவேண்டிய பலவற்றை பலரும் திருமணம் முடிந்த பின்பே யோசிக்கிரார்கள்.

காலையில் தொலைகாட்சியில் ராசிபலனில் சொன்னதும், மாலையில் ஜோசியம் பார்க்கும் இடத்தில் சொன்னதும் ஒரே மாதிரியாக சரியாக உள்ளதாம்....வீட்டுக்கு வந்த புது உறவு சரியில்லை என்று. அடப் பாவிகளா.... திருமண ஜாதகம் பார்க்கும் போது இவை எல்லாம் மறைக்கப் பட்டு விட்டதா என்ன?
மிகச் சாதாரணமாக கையாள வேண்டிய ராசி பலன்கள் வாழ்வை சிதைக்கும் ஒன்றாக உருமாறி வருகின்றன.  அதை வழங்குவோர் மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுமளவுக்கு, நடைமுறைக்கு ஏற்ற வகையில்  சொல்வதை விடுத்து மற்றவர்கள் பாதிப்புக்கு உள்ளாவது போல் செய்வதை மாற்றிக் கொள்ளவேண்டும்.

உண்மையென எண்ணி கற்பனக் கதைகளையோ, நடைமுறைக்கு ஒவ்வாத தகவல்களையோ ராசி பலன் எனச் சொல்லும் போது பாதிப்புக்கு உள்ளாவோரையும் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
கல்வியறிவில் சம பலத்துடன் இல்லாதோர், காதில் விழும் அனைத்தையும் நம்புகின்றவர்களாகவே இருக்கினறனர் இன்னமும். 

ஜோதிடத்தில் நேர்மையானவர்கள் மிகவும் குறைவு. 'வாய்ப்பேச்சில் வீரர்கள்' என்பது இவர்களுக்கும் பொருந்தும். இல்லையேல் இவர்கள் பிழைப்பிற்கு என்ன செய்வார்கள்...? ஆயினும் ஒன்றைச் சொல்வேன். உங்கள் ராசி பலன் சொல்லும் திறன் அவர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பிற்கு நீங்களும் ஒரு உபகாரணம் ஆகிறீர்கள். அதன் விகிதப்படி பாவமும் தண்டனையும் உங்களுக்கே...

 நடப்பவை நடந்தே தீரும்... அதை யாராலும் மாற்றிட முடியாது. உதிக்கும்போது விதிக்கப்பட்ட எதனில் இருந்தும் நாம் ஓடி ஒளிந்திட முடியாது. நடக்கும் அனைத்தும் நன்மைக்கே என்பது பலரும் உணரத்தொடங்கி விட்ட ஒரு கருத்து.

"இதைச் செய்திருந்தால் அதைத் தடுத்திருக்கலாம், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிருக்கும் " என்று சொல்லப் படுகின்ற எதிலும் எனக்கு உடன்பாடில்லை. அவை நாம் நமக்கு ஆறுதலாக சொல்லிக்கொள்ளும் சில, அவ்வளவே.

ஒரு சிலர் பணம் பண்ணுவதற்காக நான் ஏமாறத் தயாராக இல்லை. அதற்காக என்னை யார் எப்படிச் சொன்னாலும் எனக்கு அதனைப் பற்றிய கவலையும் இல்லை.

பூ வாசத்திற்கும் குப்பைகளின் நெடிக்குமான வித்தியாசம் எனக்குத் தெரியும்.


 

No comments:

Post a Comment