Wednesday, 1 January 2014

சமயப் பிரச்சினைகளும், சாந்தமான அணுகுமுறையும்...

மலேசிய இந்து சமய விவகாரங்களை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் தகுதியும் தரமும் முக்கிய மூன்று அமைப்புகளுக்கு நிச்சயம் உண்டு.
மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம் மற்றும் பத்துமலை தேவஸ்தானம் ஆகியவையே அவைகள். மக்கள் நலன் கருதும் மற்ற அமைப்புகள், இவர்களோடு கைகோர்த்து உதவலாம்.

வேதங்களை சொல்லித்தரும் குருமார்கள் கடவுள் போல் நடத்தப்படுவது இன்று நேற்றல்ல பல வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு அவல நிலை. தட்டிக்கேட்க யாரும் முன்வராத போது,  தான்தோன்றித்தனமாக  சமயச் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட பலவும் நடக்கக் கண்டோம்.

குருமார்களுக்கு பால்குடம் எடுப்பது, அவர்களின் பாதங்களை கழுவுவது போன்ற முறையற்றவையோடு, அதிக கட்டணம் வசூலிக்கும் செயல்களையும் முகநூலில் ஒரு சிலர் சுட்டிக்காட்ட, அதுவரை அமைதி காத்தோர், பொறுத்தது போதும் என பொங்கி எழத்தொடங்கி விட்டனர்.  பின், தமிழ் மலர் நாளேடு இதனை முதல் பக்கச் செய்தியாக்கியது.

தடம் மாறிப்போவோரை தடுக்க பல தனி நபர்களும், பொது அமைப்புக்களும் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டனர். " ஏன் ? " எனும் கேள்வி பிரதானமான ஒரு இடத்தை பிடித்துவிட்டது தற்போது. சம்பந்தப் பட்டோர் காரணம் சொல்லியே ஆக வேண்டிய ஒரு நிலையினை இன்று நம் கண் முன்னே பார்க்கிறோம்.

மடியில் கனம் இல்லையெனில் மனதில் பயம் எதற்கு...?
தங்கள் செயலை விளக்குவதில் பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லையே...

இதற்கிடையே, அதிகாரத்தில் இருப்போர் இதுபோன்ற செயல்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று முன் வராத நிலையில், தன்னார்வக் குழுவினர் இதை கையில் எடுத்து முன்மொழிந்திருப்பது பாராட்டத்தக்கது. ஆயினும், எவ்வித பாதிப்புமின்றி, உண்மையை மட்டுமே நிலை நாட்டவேண்டிய அவசியம் பற்றி பலரும் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

கண்டிப்பதோ, தண்டிப்பதோ எல்லையை மீறாது இருக்குமானால், நல்ல பலனைக் காணலாம். இதை விடுத்து, அதிக சினமுடன் செயல்படுவது சமயத் தொண்டாற்றுவோருக்கு அழகல்ல. உறுதியாக ஒன்றை சொல்லுமிடத்தில் கோப தாபங்கள் வேண்டாமே என பலரும் கருதுகின்றனர்.  தீர்வு காண முயலும் முக்கியஸ்தர்கள் இதனை சற்று சிந்தையில் கொள்வார்கள் என எதிர்பார்க்கிறார்கள் பொதுமக்கள். விழிப்பு நிலையை மக்கள் மத்தியில் பெருகச்செய்வதே குறிக்கோல் எனில் கடும் சொற்களும் சட்டத்திற்குப் புறம்பான வேறெந்தச் செயல்களும் தேவையில்லை என்பது பலரின் கருத்து.

அதே போல, சட்டத்தின் துணைகொண்டு, நேர்மையான வழியில் தங்களின் செயல்பாடுகளில் உள்ள நியாயங்களை விளக்கவேண்டிய கடப்பாடு சம்பந்தப்பட்ட எதிர்தரப்பினருக்கும்  உண்டு.

மலேசிய மக்கள் தொகையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நாம், நம் சமய கோட்பாடுகளை பாதுகாப்பதுடன், அதில் எழும் பேதங்களையும், பிரச்சினைகளையும் சுமூகமான முறைகளில் தீர்வு காண்டு, சமைதியாக செயல்படுத்துவது மற்ற சமூகங்களினரிடையே நமக்கிருக்கும் நல்ல பெயரை தற்காத்துக்கொள்வதாகும்.

சமயம் ஒருபோதும் அரசியல் போல் நடத்தப்படக்கூடாது.
நிறை குறைகள் அனுக்கமான வழிகளில் பேசித் தீர்க்கப்படவேண்டும். அப்போதுதான் எதிர் வரும் தைப்பூசத் திருவிழா சிறக்கும், நடு நிலை வகிப்போர் மனம் மாறி நல்வழித் திரும்புவர்.

சமயம் அனைவரையும் ஒன்றுபடுத்தத்தான்.
இந்த உயர்ந்த கருத்தை  நாம் அனைவரும் மனதில் நிறுத்துவது மிகவும் அவசியம்.


விநாயகரை வழிபட்டு புத்தாண்டை தொடங்குவோம்...


ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை 
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை 
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை 
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

ஸ்ரீராமர் தான் வழிபட்ட ரங்க நாதர் விக்ரகத்தை விபீஷணனுக்குக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்டு இலங்கை நோக்கி வந்த விபீஷணன் ஸ்ரீரங்கம் பகுதியை அடைந்த போது மாலை நேரமாகி விட்டது. மாலைச்சந்தி கர்மங்களைச் செய்ய வேண்டுமே என விபீஷணன் யோசித்தபோது, விநாயகர் ஒரு சிறுவன் வடிவில் எதிரே வந்தார். அந்தச் சிறுவனிடம் சற்று நேரம் விக்ரகத்தைக் கையில் வைத்திருக்குமாறு கொடுத்த விபீஷணன் ஆற்றங்கரை நோக்கிச் சென்றான். 

அவன் திரும்பிவந்து பெற்றுக் கொள்வதற்குள் அதைத் தரையில் வைத்துவிட்டார் விநாயகர். அது அங்கேயே நிலை கொண்டு விட்டது. விக்ரகத்தைப் பெயர்த் தெடுக்க எவ்வளவோ முயன்றான் விபீஷ்ணன். ஆனால் இயல வில்லை. அந்த ஆத்திரத்தில் சிறுவனின் தலையில் ஓடிப்போய் குட்டினான். பின்னர் உண்மை யறிந்து வணங்கிச் சென்றான்.
அவ்வாறு கோயில் கொண்டவரே ஸ்ரீரங்கநாதர். 

திருச்சி மலைமீதிருக்கும் உச்சிப்பிள்ளையாரே இந்தத் திருவிளையாடல் புரிந்தவர். அவர் தலையில் குட்டுப்பட்ட தழும்பு இருப்பதைக் காணலாம்.
( இணையத்தில் படித்தது... தொடர்ந்து படிக்க http://vidhai2virutcham.com/ )

Tuesday, 31 December 2013

வலைப்பூவும் முகநூலும்...


புத்தாண்டுக் களிப்பில் குடும்பத்தினரோடு ஜோலியாக நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கிறோம் நாம்.

இம்மகிழ்ச்சி ஒவ்வொரு நாளும் தொடர்ந்துவர இறைவனை வேண்டுவோம்.

விளையாட்டாக ஒரு  வலைப்பூவினைத் தொடங்கி இன்று 796வது பதிவினை   இப்போது உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

நான் இங்கு பதிவுலகில் நுழைவதற்கு பெரிதாக ஒரு காரணமும் இல்லை. எதையும் சாதிக்கவோ, மற்றவர்களுக்கு கருத்துச் சொல்லவோ வலைத்தளத்திற்கு வரவில்லை.

கற்ற தமிழ் மறந்திடக்கூடாதே என்னும் எண்ணத்திலும், என்னுடைய சில நண்பர்களின் வற்புறுத்தலினாலுமே  புகைப்பட ஆல்பமாக இருந்த இந்த வலைப்பூவில் சிறிது சிறிதாக எழுதத் தொடங்கி இன்று 800வது பதிவினை
தொடும் நிலைக்கு வந்துள்ளேன்.

மலேசிய இந்தியர்கள்  நல்ல தமிழில் பேசுபவர்கள். முடிந்தளவு ஆங்கிலம் கலக்காத தமிழில் தான் உரையாடுவோம். அந்த நல்லதொரு முறையை எழுத்திலும் தொடராலாம் என என்னைப்போல் சில நண்பர்கள் எண்ணியதின் தொடர்ச்சியே இப்படி சில வலைப்பூக்கள்.

இருப்பினும், ஆங்காங்க ஒரு சில இடங்களில் வல்லின, மெல்லின, இடையின தவறுகள் இருக்கலாம். அதற்கு ஒரு காரணம், இங்கு தங்கிலிஷ் முறையில் தமிழ் பயன்படுத்தப்படுவதால் தான். சில எனது கண்களில் இருந்து தவறிவிடபிழைகள் நேர்ந்து விடுகிறது.

மனதில் எழும் எண்ணங்களை பலருடனும் கலந்துகொண்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.  அறிவுரை என்றில்லாமல், நான் என்ன நினைக்கிறேன் என்பதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அவ்வளவுதான். யாரையும் திருத்தும் நோக்கம் எனக்கில்லை.

" ஐயா சாமி, நான் அதற்கு எழுத வரவில்லை... தமிழில் எது செய்தாலும் இனிமை என்பார்களே அது போல ஏதோ எனக்கு தெரிந்த ஒரு சில விசயங்களை எழுதுவதில் ஒரு மகிழ்ச்சி. சிலர் படித்தாலும் அதில் ஓரிருவர் ரசிக்கும் படி இருக்கிறதென்று சொன்னாலும் போதும். அவ்வளவுதான்".
'பெரிய பெரிய மகான்கள் சொல்லியே கேட்காத போது, நாம சொல்லியா கேட்க போறாங்க...?  அதெல்லாம் இல்ல... '

ஐயா சுகிசிவம், "பொழுது போக்கிற்காக எழுதாதே " என்பதையும் மீறி, இங்கு நான் எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெட்டியாக வேறெதுவும் இல்லாத நிலையில்  பொழுதை போக்கத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். (ஐயா மன்னிப்பாராக...).

ஆயிரம் எண்ணங்கள்  என்பது நமது பதிவுலகத் தலைப்பு. ஆயினும், இங்கு ஆரம்ப காலத்தில் இரட்டைவேடம் கொண்ட புகைப்படங்களே  அதிகம் இடம் பெற்றன. இன்னும் அப்படிச் சில படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இடையிடயே சில கட்டுரைகளையும் பதிவிடுகிறேன். இவ்வலைப்பதிவினை பார்வையிட்டோர் எண்ணிக்கை பதினேழாயிரமாக தற்போது உள்ளது மன மகிழ்ச்சியைத் தருகிறது.

கடந்த மாதம் முழுவதுமாக முகநூலில் நாட்டம் அதிகரித்துவிட, வலைப்பூவில் பதிவுகள் சற்று குறைந்துவிட்டன.

பலரும் சுட்டிக்காட்டினர் இதை.

அதனால், முகநூல் பதிவிலும் நமது வலைப்பதிவு முகவரியை தொடர்ந்து கொடுத்து வருகிறேன். இங்கில்லாவிடில் அங்கிருப்பேன் என்று இங்கே வருபவர்களுக்கு கோடிட்டு காட்டவே அப்படி ஒரு யுக்தி. இது எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறதோ தெரியவில்லை.

மனதில் எழும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் இந்த வலைப்பதிவே சிறந்தது என்பது ஒரு உண்மையாகும்.  சூசகமாக தெரிவிப்பதில் முகநூலும், தெளிவாக விளக்கிட வலைப்பதிவும் முன்னுதாரணங்களாக திகழ்கின்றன.

இங்கொரு கால், அங்கொரு கால் என சிலர் கூறினாலும், முகநூல் நண்பர்களை இங்கிழுக்க இருவிடங்களிலும் தலைக்காட்டுவதுதான் நல்லதென எனக்குப்படுகிறது.

இன்னும் பல விசயங்கள் மனதில் தோன்றிக்கொண்டே இருப்பதால், வரும் வருடத்தில் இன்னும் பல பயனுள்ள  கருத்துக்களை மனந்திறந்து இங்கு பதிவிட உள்ளேன்.

அனைவரும் வருக....

புத்தாண்டு பிறக்கிறது...

எல்லாமும் மாறிக்கொண்டிருக்கிறது. எல்லோரும் மாறிக்கொண்டு இருக்கிறோம். நீங்களும், நானும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் மாறிக்கொண்டுதான் இருக்கிறோம். உள ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ  மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கிடையே, அன்றிருந்த சுற்றுப்புறச் சூழல் இன்றில்லை எனும் நிலையும் ஒவ்வொரு வருடமும் மாறிவருவதை நாம் பார்க்கிறோம்.

மாற்றம் ஒன்றே மாறாததென இதைத்தான் சொன்னார்களோ....


2013ம் ஆண்டும் மாறிவிடப்போகிறது... 2014குக்கு வழி கொடுத்து கடந்த வருடம் எனும் பட்டியலில் சேரவிருக்கிறது.  இவ்வருடத்தை மீண்டும் நினைத்துப் பார்க்கையில் மன மலர்ச்சியும் இருந்திருக்கலாம், மன அதிர்வுகளும் நிகழ்ந்திருக்கலாம்.

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. வேறுபாடான உணர்ச்சிகளோடு சென்றதை எண்ணிப்பார்க்கும் தருணம் இது. நடந்த அனைத்தும் நன்மைக்கே என ஏற்றுக்கொள்வதே நம் வாழ்வில் சிறக்க நாம் எடுக்கும் முடிவாகும். சென்றதை செலவெனக் கொண்டு, வருவதை வரவில் வைக்கும் துள்ளல் குணமே இன்று நமக்குத் தேவை.

புது வருட தொடக்கம் பலருக்கும் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்.

முடிந்த ஆண்டில் செயல் படுத்த முடியாதவைகளை இந்த ஆண்டு முடித்திட சபதம் கொள்வோறும், தேவையற்ற பழக்கங்களையும், பயனில்லாத கொள்கைகளையும் உதறித்தள்ளிட முடிவெடுத்திருப்போரும் மீண்டும் ஒருமுறை தங்களது பட்டியலைச் சரி பார்த்திடும் வேளை இது.

புது வருட தீர்மானங்கள் பலவும் படாத பாடு பட்டிருக்கொண்டிருக்கும் இப்போது.  நான் இதைச் செய்யப்போகிறேன், அதைவிடப்போகிறேன் என பலர் எண்ணம் கொண்டிருக்கலாம். நல்லதை செய்ய எண்ணும்போது மகிழ்ச்சியடைவது இயற்கை. இந்த மகிழ்ச்சி திட்டமிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியபின் பல மடங்கு பெருகும் என்பதில் சந்தேகமில்லை.

ஆயினும் ஆண்டுக்கொருமுறை ஆண்டின் இறுதியில் தீர்மானங்களை பட்டியலிடுவதென்பது, அதே கால அளவில் சத்து நிறைந்த உணவுகளை உண்பது போல எனலாம். ஒரு வருடத்தில் ஓரிருமுறை நல்ல உணவை சுவைத்துவிட்டால் மட்டும் போதுமா? வருடம் முழுவதும் தொடர்ந்து உட்கொள்ளவேண்டுமல்லவா... ஆக, தீர்மானங்களும் அப்படியே. புத்தாண்டின் போது  நாம் போடும் தீர்மானங்கள் அவ்வப்போது சரிபார்க்கப்படவேண்டும்.
தேவைப்படும்  மாற்றங்களை செய்து  ஆண்டு இறுதிக்குள் ஆண்டின் துவக்கத்தில் நாம் எழுச்சியுடன் செய்த தீர்மானங்களை  நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். அதுவே ஆக்கப்பூர்வமான தீர்மானமாகும்.

நம்முடைய தனிப்பட்ட  தீர்மானங்களோடு இந்த சிலவும் சேர்ந்தால் பலருக்கும் நன்மையாய் அமையும்:-

  -   அனாவசிய அதிரடி செலவீனங்களைக் கட்டுப்படுத்தி, சேமிப்பை உயர்த்துவோம்.
  -   சாலைகளில் பொறுமை  கடைபிடிப்போம்.
  -   பெரியோர்களை மதிப்போம்.
  -   ஏழை எளியவருக்கு உதவுவோம்.
  -   மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை கவனிப்போம்.
  -   இயற்கையை எதிர்த்து எதுவும் செய்யாமல் இயற்கையோடு ஒன்றிப்போவோம்.

மலேசிய நாட்டில் நாமும் நம் சமூகமும் முன்னேற நிறையவே சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அவற்றை அடைவது பற்றி திட்டமிடலாம,  நம் மொழி வளர தொடர்ந்து நாம் செய்யவேண்டியதையும் நினைவில் கொள்ளலாம்,  நாம் முன்னேறும் ஆதே நேரம், நம்மோடு வழிதெரியா  மற்றவர்களையும்  தோள் கொடுத்து கூட்டிச் செல்லலாம்.

எங்கு பார்க்கினும் கோயில்கள் எனும் நிலை வரத்தொடங்கிவிட்ட இன்று, நம்முடைய சமய அறிவை பெருக்கிக் கொள்ளும் அதே நேரம்,  தவறான சிந்தனைகளில், மூடப்பழக்கங்களில் மூழ்கிக் கிடப்போரை நல்வழி படுத்தும் அமைப்புக்களில் சேர்ந்து அவர்களுக்கும் ஒரு கை கொடுக்கலாம்.

வழக்கமான  சுய நலப்போக்கில்லேயே சிந்திப்பதை விடுத்து, இப்படி எத்தனை எத்தனையோ புது வருட திட்டங்களாக பட்டியலிட்டு அதன் படி நடக்க முயலலாம். பொது நலமும் நமது தேடல்களில் ஒன்றாக இருப்பது அவசியம். இதுவே நாம் தன்னிறைவு பெற்றவராய் திகழ உத்தமமான வழி.


குடும்பத்தில் அன்பு நிலைக்க பணிவை கடைபிடிப்போம்... 
வீட்டிலுள்ள பெரியோர்களை வணங்கி, அவர்களின் ஆசிகளைப் பெற்று இனிமையாக இந்த புது வருடத்தினை தொடங்குவோம்...

வயது பேதம் பார்க்காது, புத்தாண்டினை வரவேற்க காத்திருக்கும் இவ்வேளையில், நமது  பாதுகாப்புக்கும், நம்மைச் சுற்றி உள்ளோர் பாதுகாப்புக்கும் உரியனவற்றைச் செய்து, எல்லோரும் மன மகிழ்வுடன் வாழ்வில் சிறக்க, 2014ம் ஆண்டிற்கான நல்வாழ்த்துக்களை  அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.

" இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பானாக...."

Sunday, 29 December 2013

Friday, 27 December 2013

2013ல் WWE ரெஸ்லிங் ...

மல்யுத்தம், குஸ்தி என பெயர்கள் இருந்தாலும், WWE ரெஸ்லிங் என வரும்போது அதன் சுறு சுறுப்பே தனி. இரத்தம் சொட்டச் சொட்ட ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு ஒரு வித பீதியை அரங்கினுள் ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் கலை தெரிந்தவர்களால் நடத்தப்படும் இ ந் நிகழ்ச்சி பலரின் வரவேற்பையும் பெற்ற ஒன்று...

2013ம் ஆண்டில் இடம்பெற்ற சில சுவாரஸ்யமான காட்சிகள்...


















Tuesday, 24 December 2013

கிரிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...


கிரிஸ்துமஸ்  கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய கிரிஸ்துமஸ்  வாழ்த்துக்கள்...