Wednesday, 1 January 2014

சமயப் பிரச்சினைகளும், சாந்தமான அணுகுமுறையும்...

மலேசிய இந்து சமய விவகாரங்களை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் தகுதியும் தரமும் முக்கிய மூன்று அமைப்புகளுக்கு நிச்சயம் உண்டு.
மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம் மற்றும் பத்துமலை தேவஸ்தானம் ஆகியவையே அவைகள். மக்கள் நலன் கருதும் மற்ற அமைப்புகள், இவர்களோடு கைகோர்த்து உதவலாம்.

வேதங்களை சொல்லித்தரும் குருமார்கள் கடவுள் போல் நடத்தப்படுவது இன்று நேற்றல்ல பல வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு அவல நிலை. தட்டிக்கேட்க யாரும் முன்வராத போது,  தான்தோன்றித்தனமாக  சமயச் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட பலவும் நடக்கக் கண்டோம்.

குருமார்களுக்கு பால்குடம் எடுப்பது, அவர்களின் பாதங்களை கழுவுவது போன்ற முறையற்றவையோடு, அதிக கட்டணம் வசூலிக்கும் செயல்களையும் முகநூலில் ஒரு சிலர் சுட்டிக்காட்ட, அதுவரை அமைதி காத்தோர், பொறுத்தது போதும் என பொங்கி எழத்தொடங்கி விட்டனர்.  பின், தமிழ் மலர் நாளேடு இதனை முதல் பக்கச் செய்தியாக்கியது.

தடம் மாறிப்போவோரை தடுக்க பல தனி நபர்களும், பொது அமைப்புக்களும் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டனர். " ஏன் ? " எனும் கேள்வி பிரதானமான ஒரு இடத்தை பிடித்துவிட்டது தற்போது. சம்பந்தப் பட்டோர் காரணம் சொல்லியே ஆக வேண்டிய ஒரு நிலையினை இன்று நம் கண் முன்னே பார்க்கிறோம்.

மடியில் கனம் இல்லையெனில் மனதில் பயம் எதற்கு...?
தங்கள் செயலை விளக்குவதில் பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லையே...

இதற்கிடையே, அதிகாரத்தில் இருப்போர் இதுபோன்ற செயல்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று முன் வராத நிலையில், தன்னார்வக் குழுவினர் இதை கையில் எடுத்து முன்மொழிந்திருப்பது பாராட்டத்தக்கது. ஆயினும், எவ்வித பாதிப்புமின்றி, உண்மையை மட்டுமே நிலை நாட்டவேண்டிய அவசியம் பற்றி பலரும் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

கண்டிப்பதோ, தண்டிப்பதோ எல்லையை மீறாது இருக்குமானால், நல்ல பலனைக் காணலாம். இதை விடுத்து, அதிக சினமுடன் செயல்படுவது சமயத் தொண்டாற்றுவோருக்கு அழகல்ல. உறுதியாக ஒன்றை சொல்லுமிடத்தில் கோப தாபங்கள் வேண்டாமே என பலரும் கருதுகின்றனர்.  தீர்வு காண முயலும் முக்கியஸ்தர்கள் இதனை சற்று சிந்தையில் கொள்வார்கள் என எதிர்பார்க்கிறார்கள் பொதுமக்கள். விழிப்பு நிலையை மக்கள் மத்தியில் பெருகச்செய்வதே குறிக்கோல் எனில் கடும் சொற்களும் சட்டத்திற்குப் புறம்பான வேறெந்தச் செயல்களும் தேவையில்லை என்பது பலரின் கருத்து.

அதே போல, சட்டத்தின் துணைகொண்டு, நேர்மையான வழியில் தங்களின் செயல்பாடுகளில் உள்ள நியாயங்களை விளக்கவேண்டிய கடப்பாடு சம்பந்தப்பட்ட எதிர்தரப்பினருக்கும்  உண்டு.

மலேசிய மக்கள் தொகையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நாம், நம் சமய கோட்பாடுகளை பாதுகாப்பதுடன், அதில் எழும் பேதங்களையும், பிரச்சினைகளையும் சுமூகமான முறைகளில் தீர்வு காண்டு, சமைதியாக செயல்படுத்துவது மற்ற சமூகங்களினரிடையே நமக்கிருக்கும் நல்ல பெயரை தற்காத்துக்கொள்வதாகும்.

சமயம் ஒருபோதும் அரசியல் போல் நடத்தப்படக்கூடாது.
நிறை குறைகள் அனுக்கமான வழிகளில் பேசித் தீர்க்கப்படவேண்டும். அப்போதுதான் எதிர் வரும் தைப்பூசத் திருவிழா சிறக்கும், நடு நிலை வகிப்போர் மனம் மாறி நல்வழித் திரும்புவர்.

சமயம் அனைவரையும் ஒன்றுபடுத்தத்தான்.
இந்த உயர்ந்த கருத்தை  நாம் அனைவரும் மனதில் நிறுத்துவது மிகவும் அவசியம்.


No comments:

Post a Comment