புத்தாண்டுக் களிப்பில் குடும்பத்தினரோடு ஜோலியாக நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கிறோம் நாம்.
இம்மகிழ்ச்சி ஒவ்வொரு நாளும் தொடர்ந்துவர இறைவனை வேண்டுவோம்.
விளையாட்டாக ஒரு வலைப்பூவினைத் தொடங்கி இன்று 796வது பதிவினை இப்போது உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
நான் இங்கு பதிவுலகில் நுழைவதற்கு பெரிதாக ஒரு காரணமும் இல்லை. எதையும் சாதிக்கவோ, மற்றவர்களுக்கு கருத்துச் சொல்லவோ வலைத்தளத்திற்கு வரவில்லை.
கற்ற தமிழ் மறந்திடக்கூடாதே என்னும் எண்ணத்திலும், என்னுடைய சில நண்பர்களின் வற்புறுத்தலினாலுமே புகைப்பட ஆல்பமாக இருந்த இந்த வலைப்பூவில் சிறிது சிறிதாக எழுதத் தொடங்கி இன்று 800வது பதிவினை
தொடும் நிலைக்கு வந்துள்ளேன்.
மலேசிய இந்தியர்கள் நல்ல தமிழில் பேசுபவர்கள். முடிந்தளவு ஆங்கிலம் கலக்காத தமிழில் தான் உரையாடுவோம். அந்த நல்லதொரு முறையை எழுத்திலும் தொடராலாம் என என்னைப்போல் சில நண்பர்கள் எண்ணியதின் தொடர்ச்சியே இப்படி சில வலைப்பூக்கள்.
இருப்பினும், ஆங்காங்க ஒரு சில இடங்களில் வல்லின, மெல்லின, இடையின தவறுகள் இருக்கலாம். அதற்கு ஒரு காரணம், இங்கு தங்கிலிஷ் முறையில் தமிழ் பயன்படுத்தப்படுவதால் தான். சில எனது கண்களில் இருந்து தவறிவிடபிழைகள் நேர்ந்து விடுகிறது.
மனதில் எழும் எண்ணங்களை பலருடனும் கலந்துகொண்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. அறிவுரை என்றில்லாமல், நான் என்ன நினைக்கிறேன் என்பதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அவ்வளவுதான். யாரையும் திருத்தும் நோக்கம் எனக்கில்லை.
" ஐயா சாமி, நான் அதற்கு எழுத வரவில்லை... தமிழில் எது செய்தாலும் இனிமை என்பார்களே அது போல ஏதோ எனக்கு தெரிந்த ஒரு சில விசயங்களை எழுதுவதில் ஒரு மகிழ்ச்சி. சிலர் படித்தாலும் அதில் ஓரிருவர் ரசிக்கும் படி இருக்கிறதென்று சொன்னாலும் போதும். அவ்வளவுதான்".
'பெரிய பெரிய மகான்கள் சொல்லியே கேட்காத போது, நாம சொல்லியா கேட்க போறாங்க...? அதெல்லாம் இல்ல... '
ஐயா சுகிசிவம், "பொழுது போக்கிற்காக எழுதாதே " என்பதையும் மீறி, இங்கு நான் எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெட்டியாக வேறெதுவும் இல்லாத நிலையில் பொழுதை போக்கத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். (ஐயா மன்னிப்பாராக...).
ஆயிரம் எண்ணங்கள் என்பது நமது பதிவுலகத் தலைப்பு. ஆயினும், இங்கு ஆரம்ப காலத்தில் இரட்டைவேடம் கொண்ட புகைப்படங்களே அதிகம் இடம் பெற்றன. இன்னும் அப்படிச் சில படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இடையிடயே சில கட்டுரைகளையும் பதிவிடுகிறேன். இவ்வலைப்பதிவினை பார்வையிட்டோர் எண்ணிக்கை பதினேழாயிரமாக தற்போது உள்ளது மன மகிழ்ச்சியைத் தருகிறது.
கடந்த மாதம் முழுவதுமாக முகநூலில் நாட்டம் அதிகரித்துவிட, வலைப்பூவில் பதிவுகள் சற்று குறைந்துவிட்டன.
பலரும் சுட்டிக்காட்டினர் இதை.
அதனால், முகநூல் பதிவிலும் நமது வலைப்பதிவு முகவரியை தொடர்ந்து கொடுத்து வருகிறேன். இங்கில்லாவிடில் அங்கிருப்பேன் என்று இங்கே வருபவர்களுக்கு கோடிட்டு காட்டவே அப்படி ஒரு யுக்தி. இது எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறதோ தெரியவில்லை.
மனதில் எழும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் இந்த வலைப்பதிவே சிறந்தது என்பது ஒரு உண்மையாகும். சூசகமாக தெரிவிப்பதில் முகநூலும், தெளிவாக விளக்கிட வலைப்பதிவும் முன்னுதாரணங்களாக திகழ்கின்றன.
இங்கொரு கால், அங்கொரு கால் என சிலர் கூறினாலும், முகநூல் நண்பர்களை இங்கிழுக்க இருவிடங்களிலும் தலைக்காட்டுவதுதான் நல்லதென எனக்குப்படுகிறது.
இன்னும் பல விசயங்கள் மனதில் தோன்றிக்கொண்டே இருப்பதால், வரும் வருடத்தில் இன்னும் பல பயனுள்ள கருத்துக்களை மனந்திறந்து இங்கு பதிவிட உள்ளேன்.
அனைவரும் வருக....
No comments:
Post a Comment