Thursday, 24 October 2013

“பிலிட்ஸ் செஸ்”...

செஸ் என்பது இருவர் மட்டுமே ஆடக்கூடிய விளையாட்டு. இதனால், இதற்கு மற்ற விளையாட்டுக்களைப் போல விளையாட்டு அரங்கில்  பார்வையாளர்கள் அதிகம் இருப்பதில்லை.  அருகில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய அறிவிப்புப் பலகையில் இருவரின் ஆட்ட நகர்த்துதல்களும் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். இதனைக் கண்டே தூரத்தில் இருந்தவாறு விளையாட்டளர்களின் முடிவுகளை பார்வையாளர்கள் தெரிந்துகொள்கின்றனர்.

அதுமட்டுமல்லாது இவ்விளையாட்டுக்கு அதிக அமைதியும், நிசப்தமும் தேவைப்படுவதால், பார்வையாளர்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு தூரத்திலேயே அமர்த்தப்படுகின்றனர்.

அரங்கில் மட்டுமே பார்வையாளர்கள் குறைவாக இருப்பார்கள் என்றேனே தவிர, நேரடியான ஒளிபரப்புக்கள் மூலமாக கவனித்துக் கொண்டிருப்போர் எண்ணிக்கை உண்மையில் மிக அதிகம் என்றால் அது பொய்யாகாது.

முன்னேறிய நாடுகள் மட்டுமல்லாது  மூலை முடுக்கெல்லாம் செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருப்போர்  இருக்கின்றனர். இது ஒரு அறிவுக்கு அங்கீகாரம் தரும் போட்டி என்பதால், பலரும் செஸ் விளையாடுவதை பெரிய போட்டிகளில் கலந்து கொள்ளும்  அளவுக்கு இல்லாவிட்டாலும், சுமாராக விளையாட தெரிந்து வைத்துள்ளனர்.

ஒவ்வொரு விளையாட்டாளருக்கும் தரப்படும் வழக்கமான  ஆட்ட நேரம், 60 முதல் 180 நிமிடங்களாகும். இதனால்,  பார்வையாளர்கள் சிலருக்கு இது 'போர்' அடிக்கவும் கூடும். பார்ப்போர் சற்று அசௌகரியப்படலாம்.

இந்த பிரச்சினையினைக் கலைவதற்கு  அனைத்துலக செஸ் சம்மேளனமான, எஃப்.ஐ.டி.ஈ (ஃபைட்), 1987ம் ஆண்டு வழக்கமான போட்டி விளையாட்டுகளினைத் தவிர்த்து மற்றும் ஒரு “பிலிட்ஸ் செஸ்” அதாவது 'ஸ்பீட் செஸ்' எனும் ஐந்து நிமிட போட்டி, 'லைட்னிங் செஸ்' எனும் இரண்டு நிமிட போட்டி மற்றும் 'புல்லெட் செஸ்' என்றழைக்கப்படும்  ஒரு நிமிட போட்டி என்னும் விருவிருப்பான ஆட்டமுறைகளினை  அறிமுகம் செய்து வைத்தது. ( ஆனாலும் 1950களிலேயே விறுவிறு ஆட்டமென இருந்த தகவல்களும் உண்டு. அவை அதிகாரப்பூர்வ நிலையை எட்டவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது).

இப்படி அறிமுகப்படுத்தப்பட்ட புது முறைகைளின்படி,  விளையாட்டாளர்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக தங்களின் நகர்த்துதல்களை செய்ய வேண்டும். இதனால், பார்வையாளர்களுக்கு  போரடிக்காது. இந்த அறிமுகத்துக்குப் பின்னால் அதிக ஆர்வம் தரும் போட்டியாக செஸ் விளையாட்டு உருமாற்றம் கண்டது.  பல நாடுகளிலும் இதற்கு பெருமளவு வரவேற்பும் கிடைத்தது.
  
விளையாட்டாளர்களின் நேரத்தை 'கண்ட்ரோல்' செய்யும் கடிகாரங்கள் விளையாட்டின் சட்ட திட்டங்களுக்கேற்ப சரி செய்யப்பட்டன.  இதனால், ஒவ்வொரு விளையாட்டளரும் கொடுக்கப்பட்டுள்ள 5, 2, 1 அல்லது சில நேரங்களில் 10 நிமிடங்களுக்குள் தங்களின்  நகர்த்துதல்களை முடித்துக்கொள்ள வேண்டும். மார்ச் 2013ல், இவ்வித விறுவிறு ஆட்டங்களுக்கான  தரவரிசையும் உறுவாக்கப்பட்டது.

இதுபோன்ற ஆட்டங்களின் மாறுதல்கள் பார்வையாளர்களின் ஆர்வத்தினை அதிகம் வளர்த்தது. பலரும் இதுபோன்ற ஒரு நாள் விளையாட்டுக்களில் கலந்து கொண்டு இவ்விளையாட்டினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றனர், அதிகாரப்பூர்வமான அனைத்துலக போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலமாக.

இதற்கிடையே மூகிய விளையாட்டாளர்கள் சிலரின் எதிர்மறை கருத்துக்கள் உலக கவத்தை ஈர்க்கவே செய்தது:-  
   -லாடிமிர் கிரம்னிக், "இதுப்போன்ற குறைந்த நேர விளையாட்டுக்கள், முழுக்கவனத்தையும் செலுத்தி ஆடும் ஒருவரின் ஆற்றலைக் கட்டுப்படுத்துகிறது" என்றார்.
   -   "நாய்கள் ஒன்றை ஒன்று சந்திக்கும் வேளையில் முகர்ந்து பார்த்துவிட்டு நகர்வது போல இம்மாதிரியான ஸ்பீட் செஸ் போட்டிகள் அமைவதாக" ரஷிய வீரர் அனடொலி கர்பொவ் கூறினார்.
    -   "ஆமாம் , நானும் இதுபோன்றதொரு அதிவிரைவு போட்டியினை விளையாடி இருக்கிறேன், 1929ல் ஒரு ரயில் பயணத்தின் போது" என்றார்  மிக்கையில் போட்வின்னிக்.
   -   "பிலிட்ஸ் உங்களின் ஐடியாக்களை கொன்றுவிடுகிறது" என போப்பி ஃfபிஷெர் கருத்துரைத்தார்.

இப்படி கருத்து சொல்வோர் மத்தியில் பலரும் பங்கு கொள்ளும் விதம் இந்த பிலிட்ஸ் செஸ் வளர்ந்துகொண்டிருக்கிறது.




Wednesday, 23 October 2013

எங்கிருந்தோ வந்தான், ரங்கன்.... ரங்கன்....


சதுரங்கத்தில் உலக நாயகன்... ஆனந்த்


உலகம் தயாராகி வருகிறது. சென்னையில் நடக்கவிருக்கும் அனைத்துலக செஸ் விளையாட்டினைக் காண அனைவரும் ஆசையோடு காத்திருக்கும் தருணம் இது....

அந்த அறிவுக்கும், திறனுக்கும், யுக்திகளுக்கும் இடையே நடக்கும் அந்த போரில் நாம் விடுபட்டுவிடாமல் இருக்க செஸ் எனும் சதுரங்கம் பற்றிய நமது உணர்வை தட்டி எழுப்பி தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் நம் தமிழ் மகன் ஆனந்தின் அபாரமான சதுரங்க ஆற்றலை இன்னும் ரசிக்க ஏதுவாக இருக்கும்.

மற்றவர்கள்  நம்மிடம் வந்து, 'என்ன நடக்கிறது, ஆனந்தின் நிலை என்ன'   எனச்  சொல்வது  நமக்கு அழகல்ல. ஆட்டக்களத்தில் இருப்பது நமது ஆனந்த் எனும் உணர்வு மேலிட செஸ் பற்றிய பொது அறிவை வளர்த்துக்கொள்வோம்.

இதுவரை அவரின் சாதனைகள் பற்றி அவ்வளவாக  தெரிந்திரா விட்டாலும், இனியாவது நம் சமூகத்திற்கு சேவை செய்யும்,   நம் சமூகத்தின் பிரதிநிதியாக அனைத்துலக அரங்கில் வீர நடை போடும் சதுரங்க உலக நாயகன், செஸ் சாம்பியன்  ஆனந்த் அவர்களை வரவேற்போம்...வாருங்கள்...





Tuesday, 22 October 2013

செஸ் சாம்பியன்கள் - 2


ஐந்து முறை உலக சாம்பியனான ஆனந்துக்கு பரிசுத்தொகையையும்,  பாராட்டுக்களையும் வழங்கினார்  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள்.


சதுரங்க விளையாட்டினை முதன் முதலாக  நான் கற்றுக்கொள்ளும் போது எனக்குள் அப்படியொரு ஆனந்தம். அதனை விளையாடும்போது மட்டுமல்ல, அதன் சரித்திரத்தை தெரிந்து கொள்ளும் போது எனக்குள் ஏற்பட்ட வியப்புக்கள் தாம் அந்த மகிழ்ச்சிக்குக் காரணம்.

எத்தனையெத்தனை பேர் இவ்விளையாட்டை உலகுக்குக்கு நவீனமாக்கித் தந்திருக்கின்றனர். இந்தியாவில் ஆரம்பித்ததென்றாலும் சரித்திரக் குறிப்புகள் வெளி நாட்டினர் பற்றியே அதிகம் இருப்பது சற்றுச் சோர்வடையச் செய்கிறது.

 இருப்பினும், அள்ள அள்ளக்  குறையாத ஊற்றினைப்போல் செஸ் பற்றிய தகவல்கள் பல மொழிகளிலும் கணினியின் வரவால் பரவலாகக் காணப்படுகின்றன.


 செஸ் சாம்பியன்கள் தொடர்ச்சி...

கெப்பபிளன்காவைப் போலில்லாது 1927 முதல் 1935 வரையிலும், பின்னர் 1937ல் இருந்து 1946ம் ஆண்டு வரையிலும் அலெக்ஸான்டர் அலெக்கைன் வெற்றியாளராக திகழ்ந்தார். கடினமான பயிற்சிகளும், விடா முயற்சியும்  இவரின் வெற்றிக்கு வழி வகுத்தன. எந்த முறையில் ஆடினாலும், முடிவில் எல்லா ஆட்டங்களிலும் இவர் வெற்றி பெற்று எதிர்த்து ஆடிய போட்டியாளர்களை மிரளச்செய்தார்.


கெப்பபிளன்கா

1935ல் தன்னுடைய குடி பழக்கத்தின் காரணமாக சாம்பியன் பட்டத்தை இழக்க நேர்ந்தது. எனினும், தன்னை தோற்கடித்த டாக்டர் மாக்ஸ் யூவி என்பவரை வென்று மீண்டும் சாம்பியனானார்.




யூவி ஒரு கணக்காய்வாளர். இவர் மட்டும்தான் தொழில் ரீதியாக அல்லாத அமச்சூர்  சாம்பியன் என்பது பலருக்கு தெரிந்திருக்காது.  அலெக்கைன் இறந்த பின் வெர்ல்ட் செஸ் ஃபெடெரேஷன் என்னும் அனைத்துலக செஸ் அமைப்பு இப்போட்டியில் சில மாறுதல்களைச் செய்தது.

பல சிறந்த விலையாட்டளர்களைக்கொண்டு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெருபவர் உலக சாம்பியனாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

1948ல் இப்போட்டி நடைபெற்றது. அதில் மிக்கைல் போட்வின்னிக் வென்றார். போட்வின்னிக் 1948 முதல் 1957 வரை,  1958 முதல் 1960 வரை ரஷியாவின் ஆதிக்கத்தை துவக்கி வைத்தார்.


மிக்கைல் போட்வின்னிக்

இவருக்கு உதவியது வெறும் பயிற்சிகள் மட்டுமல்ல. அரிவியல் பூர்வமான நுணுக்கங்களைக் கொண்டு போட்டி விளையாட்டுக்களில் வெற்றி பெற்றார். செஸ் ஆட்டத்தின் எல்லா நுணுக்கங்களும் போட்வின்னிக்குக்கு அத்துப்படி. அதனால் இழந்த சாம்பியன் பட்டத்தை மீண்டும் இருமுறை வென்று காட்டினார்.


 வாசிலி மிஸ்லோவ்

முதலாவதாக வாசிலி மிஸ்லோவிடமிருந்தும் பின்னர் மிக்கைல் தால் என்பவரிடமிருந்தும் பட்டத்தை வென்றார். மிஸ்லோவ் 1957ல்  இருந்து 1958 வரை தனது புதுமையான துவக்க ஆட்டங்களினால் மக்களைக் கவர்தவராக இருந்தார்.

மிக்கைல் தால் 

மிக்கைல் தால்  1960லிருந்து 1961வரைக்குமான சாம்பியன். இவரின் ஆட்டங்களில் கற்பனை வளமும், காய்களை வெட்டுக்குத் தரும் பாணியும் இருந்தது. வெட்டப்படும் காய்களுக்குப் பின்னனியில் இருந்த ஆட்ட நிலையை பலரும் உணரத்தொடங்கினர். ஆயினும் இவரை வெற்றி கொள்ள சிரமப்பட்டனர்.


திக்ரன் பெட்ரோசியன்

திக்ரன் பெட்ரோசியன் 1961லிருந்து எட்டு ஆண்டுகள் உலகச் சாம்பியனாக ஆதிக்கம் செலுத்தினார். ஆபத்தை முன்கூட்டியே அறிந்து அவற்றைத் தவிர்த்துவிடும் தற்காப்புத் திறன் இவருக்கு பல வெற்றிகளைத் தேடித்தந்தது.  குறிப்பாக 1962ம் ஆண்டு, பெட்ரோசியன் ஆடிய விளையாட்டுக்கள் எதிலுமே அவர் தோல்வியடையவில்லை என்பது பலருக்கும் வியப்பளிக்கலாம்.  போரிஸ்  ஸ்பாஸ்கி எனும் விளையாட்டளரிடம் இவர் 1969ல் தனது   பட்டத்தை இழந்தார்.


போரிஸ் ஸ்பாஸ்கி

1972 வரைக்குமான கால கட்டத்தில் உலக செஸ் சாம்பியனாக இருந்து புகழை அடைந்தவர் போரிஸ் ஸ்பாஸ்கி. இவரும் பல வழிகளிலும், பல வித்தியாசமான ஆட்ட முறைகளையும் தன்னகத்தே கொண்டவர். 
1972ல் ஒரு அமெரிக்கர் இவரிடம் இருந்து பட்டத்தை வெற்றிகொண்டார். 


போப்பி ஃபிஷர்

போப்பி ஃபிஷர்... அது வரையில் ரஷ்யர்கள் ஆட்சி புரிந்து வந்த செஸ் உலகை ஆட்டிக் காட்டியவர் போப்பி ஃபிஷர் ஆவார். பந்தா பேர்வழி என சிலரால் சொல்லப்பட்டாலும், அமெரிக்கர்கள் பலர் செஸ் விளையாட இவரின் வெற்றியே துணை செய்தது. 

போப்பி ஃபிஷர், ஒரு சிறந்த, அதே நேரம் ஒரு ஆவேசமான விளையாட்டளர். 1972ல் இருந்து 1975 வரை இவர் ஆடிய ஆட்டங்களில் இவர் வெற்றியை இலக்காகக் கொண்டே விளையாடியது தெரிந்தது. போர் அடிக்கும் சம நிலை ஆட்டங்களில் நம்பிக்கை இல்லாதவர். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பார்களே அது போல வெற்றியோ தோல்வியோ, இரண்டில் ஒன்று இருக்க வேண்டும் என்றவர்.


அனட்டொலி கர்பொவ்

அனால், 1975ல் அனட்டொலி கர்பாவ் எனும் ரஷியரை எதிர்த்து தன் பட்டத்தை தற்காத்துக்கொள்ள விளையாடதால், இவரின் உலக சாம்பியன் பட்டம்
பறிக்கப்பட்டு அனடொலி கர்பாவ்விற்கு வழங்கப் பட்டது.

கர்பாவ், கெப்பபிளன்காவின் விசிறி. அவரின் ஆட்டச் சாயல் கர்பாவின் ஆட்டங்களில் காணப்படும். சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் 22 வயதான கேரி கஸ்பரோவிடம் பட்டத்தை விட்டுச்சென்றார்.


கேரி கஸ்பரோ

இதுவரைக்கும் செஸ் உலகம் பார்த்த விளையாட்டாளர்கள் போலில்லை இந்தப் புது சாம்பியன். மிக இளம் வயதுச் சாம்பியன் இவர்தான். ஆனால் அவர் சாதிக்கத்தொடங்கிய பல, ரஷிய அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்தது. 


இன்னும் வரும்...

செஸ் சாம்பியன்கள் - 1

உலக அரங்கில் செஸ் எனும் சதுரங்கத்திற்கு பெரிய அளவிலான மதிப்பும் மரியாதையும் இருந்து வருகிறது. மற்ற விளையாட்டுக்களைப்போல இல்லாமல், மூளையும் மூளையும் மோதிக்கொள்வதால் இதற்கான வரவேற்பு பெருமளவு உலக நாடுகளிடயே நிலவுகிறது. இது யாரும்  மறுக்க முடியாத உண்மை. உடலை வறுத்தி போட்டியிடுவோரிடம் இருந்து விலகி, புத்திக்கூர்மையினை பரிசோதித்துக்கொள்ளும்  தனி நபர்களின் விளையாட்டு  செஸ்.    கல்வியா, செல்வமா, வீரமா எனும் கேள்வியில் கல்வி எனும் பிரிவில் அறிவும் அறிவும் மோதிக்கொள்ளும்  நிகழ்வே இந்த சதுரங்கப் போட்டிகளாகும்.

வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்று தேனீர் தருவதைப் போல ரஷ்ய நாட்டில் இவ்விளையாட்டு ஒரு சம்பிரதாய நிகழ்வாக கருதப்படுகின்றது. இல்லங்களில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் அதிகமாக பலரும்  விளையாடுகின்றனர்.


இன்னும் பல நாடுகளில் இதனை சாதுரியத்தையும், தந்திரங்களையும் இளைஞர்களிடையே ஊக்குவிக்கும் ஒரு செயல் திட்டமாக பயன் படுத்துகின்றனர்.

இதற்கிடையே, இவ்வாண்டின் அனைத்துலக செஸ் ஆட்டங்கள் தமிழ் நாட்டில் வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற விருக்கின்றது. அடுத்த இரு வாரங்களும் உலகம் சென்னையை நோக்கி தன் கவனத்தை செலுத்தவிருக்கிறது. பல இடங்களிலும் செஸ் விளையாட்டுக்கள் அதி வேகமாக தீவிரமடைந்த வண்ணம் இருக்கின்றன. அனைத்துலக போட்டியினை எதிர்கொள்ள அவர்கள் தயாராகி வருகின்றனர் என்பதையே இது காட்டுகிறது..

அதனை நினைவில் கொண்டு, 1987ம் ஆண்டு சிலாங்கூர் டிரெட்ஜிங் செஸ் போட்டிகளின் போது நான் சமர்ப்பித்த ஒரு கட்டுரையின் சுருக்கத்தினை இங்கே பதிவிட விரும்புகிறேன்.


தற்போதைய  அனைத்துலக  செஸ் சாம்பியன் -  ஆனந்த்

முந்தைய சாம்பியன்கள்...

உலக செஸ் போட்டிகள் முதன் முதலில் 1886ல் அமெரிக்காவின் நியூ யோர்க் நகரில் நடைபெற்றது.  கடந்த 1986ம் ஆண்டோடு நூறாண்டுகள் பூர்த்தியானதைத் தொடர்ந்து கோலாகலமான நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 

மே 12 முதல் 18 வரை அனைத்துலக செஸ் சாம்பியன்ஷிப் சென்டினியல் எனும் மையக் கருப்பொருளுடன் பல இடங்களிலும் செஸ் விளையாட்டுக்கள் திருவிழாக் கோலம் போல நடைபெற்று முடிந்தன. ஏற்பாட்டாளர்கள் அதிக பொருட்செலவில் இவ்விளையாட்டுக்கு தனியொரு அங்கீகாரத்தினை வழங்கி கௌரவமான ஓர் உயர்ந்த இடத்திற்கு சதுரங்கத்தினை கொண்டுசென்றுவிட்டனர் எனலாம்.

அமெரிக்காவின் ஆடம்பரச் செயல்களினால் செஸ் விளையாடுவோர் எண்ணிக்கை மேலும் ஐம்பது விழுக்காடு அதிகமாகிவிட்டதென பல பத்திரிக்கைகளும் புகழ்ந்தன. இதன் விளம்பரங்களினால் பலரும் இவ்விளையாட்டினை தேர்ந்தெடுத்து ஆடத்தொடங்குவர் எனவும் ஆரூடங்கள் சொல்லப்பட்டது. 

இங்கே நமது சிலாங்கூர் டிரெட்ஜிங்கில் இவ்விளையாட்டுப்போட்டிகள் தொடங்கியதும் இந்த செஸ் திருவிழாவினை தொலைக்காட்சியிலும், பத்திரிக்கைகளில் படித்ததினாலும் தான். அதன் ஆர்வமே  இங்கிருக்கும் பல விளையாட்டாளர்களின் வருகைக்கும் காரணம். லீக் முறையில் ஒரு மாத காலம் விளையாடி முடிக்கவிருக்கும் நமது செஸ் போட்டிகளுக்கு முன்னால் செஸ் விளையாட்டின் கடந்த நூறாண்டுகளாக இருந்த சாம்பியன்கள் பற்றியும் ஓரிரு வரிகள் தெரிந்துகொள்வோம்.


வில்ஹம் ஸ்டெய்னிட்ஸ் 

இதுவரையில் மொத்தம் 13 பேர் உலகச் சாம்பியன்களாக இருந்திருக்கின்றனர்.  1886 முதல் 1894 வரை வில்ஹம் ஸ்டெய்னிட்ஸ் அதிகாரபூர்வ செஸ் அமைப்பின் முதல் சாம்பியனானார். இவருடைய பிடிவாத குணத்தினால் இவர் மக்களால் மிகவும் வெறுக்கப்பட்ட சாம்பியனாக தமது ஐம்பத்தெட்டாவது வயதுவரை இருந்தார். மிக வயதான உலகச் சாம்பியன் இவர்தான்.

இவரைத்தோற்கடித்ததின் வழி இமானுவேல் லாஸ்கர் இரண்டாவது சாம்பியானாக 1894 முதல் 1921 வரை புகழ் பெற்றார். ஜெயிக்க முடியாத இறுக்கமான நிலைகளில் இருந்தும் போட்டிகளை வெல்வது இவரின் தனித்திறமையாக இருந்தது.


இமானுவேல் லாஸ்கர்

இமானுவேல் லாஸ்கரின் பல வெற்றிகளுக்கு அவர் கையாண்ட மனோத்தத்துவமும் ஒரு காரணமென கருதப்பட்டது அன்று. எதிர்பார்க்க முடியாத நிலைகளில் ஆடி, வென்று 25 ஆண்டுகள் சாம்பியனாக வீர நடை போட்டவரி இவர்.  வேறொருவரால் இவரின் நீண்ட கால சாதனையினை முறியடிக்க முடியுமா என்பது இப்போது ஒரு பெரிய கேள்விக்குறியாக மாறிவிட்டது.

ஜோசே ராவுல் கெப்பபிளான்கா என்பவர் 1921ம் ஆண்டு தனது அபாரத்திறமையினால் பலரையும் கவர்ந்த விளையாட்டாளர்.  அந்த  ஆண்டு இமானுவேல் லாஸ்கரை வீழ்த்தியதன் வழி உலக சாம்பியன் பட்டத்துடன் வலம் வந்தார். ஆயினும் இந்த இருவருடனான போட்டிகளில் ஒரு சில வித்தியாசங்கள் இருந்தன.


ஜோசே ராவுல் கெப்பபிளான்கா 

30 ஆட்டங்கள் ஆடியிருக்க வேண்டிய போட்டி, 14 ஆட்டங்களோடு முடிவடைந்தது. 4 ஆட்டங்களில் வென்று, 10 ஆட்டங்களில் சம நிலை காணும் போது இமானுவேல் நோய்வாய்ப்படவே அடுத்த சாம்பியனாக ஜோசே ராவுல் கெப்பபிளான்கா அறிவிக்கப்பட்டார்.

இந்த வகையில் இவர் சாம்பியானானதில் சிலர் சந்தேகப்பட்டாலும், கூடிய விரைவிலேயே இவர் மாபெரும் திறமைசாலி என உலகம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது. பல செஸ் விளையட்டுப் போட்டிகளில் எவ்விதச் சிரமுமின்றி  மிகச் சாதாரணமாக எதிர் ஆட்டக்காரர்களை வெற்றி கொண்டதனால், " செஸ் விளையாடுவது மிக எளிதான ஒன்றோ?" எனும் எண்ணத்தை  பார்ப்போர் மனதில் தோற்றுவித்தவர் இந்த ஜோசே ராவுல் கெப்பபிளான்கா ஆவார்.

ஒரு செஸ் விளையாட்டளருக்கான எல்லாத் திறமைகளும், தகுதிகளும்  இவரிடம் இருந்தது.  அதன் காரணமாக, ஏனைய விளையாட்டாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக பல வருடங்கள் இருந்தவர் இவராகும்.

இருப்பினும் தனது ஆட்டத்தினை காலத்திற்கேற்ற மாறுதல்களின்றி தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்ததால், அதிக காலம் இவரால் சாம்பியனாக உலா வர முடியாமல் போயிற்று.


அடுத்த பதிவில் தொடர்கிறது...

Monday, 21 October 2013

கனவுகள் கற்பனைகள் ...

விடியலை நோக்கி இன்றைய இளைஞர்கள் வாழ்ந்துகொண்டிருப்பது கற்பனை உலகில்தான்.  உயர்ந்த இலட்சியத்தைக்  கொண்டிருந்தாலும், நடைமுறைப்படுத்தாவிடில், இந்த கனவுல சஞ்சாரம் எந்தப் பலனையும் தரப்போவதில்லை.

இதை மனதில் நிறுத்தி, கனவுலகில் இருந்து விடுபட்டு எதிர்கால செயல் வடிவத்தினை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதே சிறப்பு.

தடைகளைத் தாண்டி எண்ணத்திற்கு உருகொடுக்கும் போதுதான் கனவுகள் கற்பனைகள் அல்ல, கற்பனைகள் கனவுகள் அல்ல எனும் உண்மை வெளிப்படத் தொடங்கும்.

இளையோரில் பலர் ஆரோக்கியமான திட்டங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளனர். ஆனால், தொடங்கினால் வரப்போகும் ஆயிரமாயிரம் இடையூறுகளை நினைத்து அஞ்சுகின்றனர்.

சிக்கல்களும் சவால்களுமின்றி வாழ்க்கையில் முன்னுக்கு வர வேறு வழி உண்டா, அப்படி யாரும் வந்திருக்கிறார்களா...?

உங்கள் திறமையின் உதவியோடு சாதுர்யத்தை துணையாகக்கொண்டு, எதிர்படும் தடைகளை ஒவ்வொன்றாக உடைத்தெரிந்து போக முயல்வதே வெற்றிக்கான முதல் படி.

உங்கள் கனவுகளும் கற்பனைகளும் நிஜமாக இதுவே சிறந்த வழியுமாகும்.