Tuesday, 9 April 2013

கைபேசியில் தமிழ்...

எனது பதிவுகளில் நான் அதிகம் வலியுறுத்தி சொல்லி வருவது வாசிப்பின் அவசியத்தையே. இது என்னோடு ஆரம்பம் முதல் இணைந்திருக்கும் வாசகர்களுக்கு தெரிந்திருக்கும். 

கணினியில் கோடான கோடி இலவச நூல்கள் இருந்தாலும், ஒரு புத்தகத்தினை கையில் வைத்து படிப்பதென்பது சுகமான அனுபவம் என்றே சொல்லி வந்திருக்கிறேன். அதனோடு இன்னொன்றையும் இனி சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.  கணினியில் மட்டுமல்லாது கையடக்க என்ட்ரோய்ட் கைபேசியிலும் இப்போது நூல்களை  வாசிக்கும் இலகுவான வழிகள் தோன்றிவிட்டதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.

தமிழ் இப்போது கைபேசியில் வரத்தொடங்கிவிட்டது.  அப்ளிகேஷன் மென்பொருள் ( சொப்ட்வெர் ) இதனைச் சுலபமாக்கிவிட்டது இப்போது.
என்னற்ற தேவைகளுக்கு நாம் கைபேசிகளின் பயன்பாட்டை பற்றிக்கொள்ள பழகி வருகிறோம். அந்த வகையில் அப்ளிகேஷன் மென்பொருள் சேவையினால் அதில் தமிழில் படித்து மகிழ நல்ல வாய்ப்புக்கள் பல இனி உண்டு என நம்பலாம். ஆங்கில மொழி ஆதிக்கம் உள்ள கைபேசியில் தமிழ்மொழி வெளிவரத் தொடங்கி நமக்கு பெரும் உற்சாகத்தை தந்த வண்ணம் இருக்கிறது.

இதற்குக் காரணமானவர்களை எப்படி புகழ்ந்தாலும் தகும்.

ஒரு பயணத்தின் போதோ அல்லது மற்ற வேலைகளுக்கிடையிலோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் நேரத்தை வீணடிக்காது படித்து செய்திகளை அறிந்து கொள்ள தமிழ் செயலியில் தமிழ் செய்தித்தாழ்கள் இருக்கின்றன. உண்மையான ஒரு நாளிதழின் பதிப்பைப் போலவே கைபேசியில் நம்மால் படிக்க முடிகிறது.

மலேசிய பத்திரிக்கைகள் தங்களின் செய்திகளுக்கு கட்டனம் வசூலிக்கும் அதே  நேரம், தமிழ் நாட்டு நாளிதழ்கள் இனாமாக நமக்கு கிடைக்கின்றன கைபேசியில். இதே செய்திகள்தாம் அடுத்த நாளில் மலேசிய நாளிதழ்களில் நான்கு பக்கங்களுக்கு இடம் பெறுகின்றன என்பது இரண்டையும் படிப்போருக்கு உடனே தெரிந்து விடும். 

இதைத் தவிர,  வாசிக்கும் பழக்கம் உள்ளோருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைவது, புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நூல்களும், கட்டுரைகளும் ஸ்மார்ட் போன், ஐ போன், அன்ட்ரோய்ட் போன்ற கைபேசிகளில் அவர்களுக்குப் படிக்கக் கிடைப்பதே.

பெரிய, தடிமனான பல புத்தகங்களை கையில் ஏந்திச் சென்று படிக்கும் காலம் போய், கைக்கு அடக்கமாக அவற்றை கைபேசியில் படிப்பதென்பது பலருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று எனச் சொன்னால் அது நூறு சதவீதம் நிஜமாகும்.

ஒரு சில புத்தகங்கள் ஒரு கட்டனம் கட்டியே பின்பே நாம் படிக்க கிடைக்கின்றன. ஆனாலும் உரிமையாளர்கள் வசூலிக்கும் தொகை அவ்வளவு அதிகம் இல்லை என்றே எனக்குப் படுகிறது. இனாமாக கிடைக்கும் புத்தகங்களும் அதிக அளவில் இணையத்தளத்தினைப் போல  வந்துவிட்டன இப்போது.

இதனால் வாசிக்கும் பழக்கம், அதுவும் தமிழில் வாசிக்கும் பழக்கம் அதிகரித்து விட்டதை நம்மால் உணர முடிகிறது.  தமிழ்ப் பற்றுள்ளோருக்கு இது ஆறுதல் தரும் ஒன்றாகும். தமிழ் இனி மெல்லச் சாகும் என நினைப்போர் மீண்டும் ஒருமுறை தங்கள் கருத்தை திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் தருகிறது இந்த தமிழ்ச் செயலி.

தமிழ் நாட்டில்  பல தனியார் நிறுவனங்கள் தற்போது தமிழில் தரமான நூல்களை கைபேசிச் செயலியில் நாம் வாசிக்க வழங்கி வருகின்றனர்.

பிப்ரவரி மாதம் முதற்கொண்டு நான் சாம்சுங் அன்ட்ரோய்ட் கைபேசியினை பயன் படுத்தி வருகிறேன். கல்கி மற்றும் ஜெயகாந்தன் நூல்கள்,  திருக்குறள்,  தமிழில் குறுஞ்செய்திகள்,  தமிழில் பல நாடுகளின் உலகச் செய்திகள் என தற்போது கைபேசிச் செயலியில் இருக்கக் காண்கிறேன்.

எல்லையில்லா ஒரு பெரிய நூலகமாகவே எனது கைபேசி என்னை ஆனந்தத்தில் அசத்துகிறது தினமும்.

Blast from the past.... MGR samaadhi






பணம் முக்கியம்தான், ஆனால்...

 நம்மில் பலருக்கு நம் குடும்பம்தான் பெரிய சொத்து.

 நவீன உலகத்தில் வாழும், ஆனால் குடும்பத்தை மனைவியும் பணம் சம்பாதிப்பதை கணவனும் என இன்னமும்  எற்றுக்கொண்டு வாழும் குடும்பச் சூழ்நிலையில் இந்தக் கருத்து சரியானதா என எண்ணத் தோன்றுகிறது.  வெளி ஊர்களில் வேலை செய்யும் ஆண்களில் பலர் தங்களின் கடின உழைப்புக்கு அதையே காரணம் சொல்லிக் கொள்கின்றனர். குடும்ப நலனுக்காக தாங்கள் பாடாய் படுவதாக சொல்லும் ஆண்களில் பலரை நாம் பல இடங்களில் பல நேரங்களில் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம்.

வெளி நாடுகளுக்குச் சென்று பணம் சேர்க்கும் கணவன்மார்கள் இரவு பகல் பாராமல் உழைத்துச் சேமித்து அந்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்புகிறார்கள். குடும்பத் தலைவனின் உண்மையான தியாகத்தை வீட்டில் இருக்கும் மனைவியும் மக்களும் உணர்ந்து அதன்படி நடக்கிறார்களா?   பத்திரிக்கை தகவல்களின் அடிப்படையில் அதற்கு பதில் "இல்லை" என்றே தெரிகிறது.

சில மனைவிகள் தங்கள் கணவர்கள் தங்களுக்கு உழைத்துப்போடவே பிறந்தவர்கள் எனும் எண்ணத்தில் நடந்து கொள்வதை அறியும் போது ஆச்சரியம் மேலிடுகிறது.  ஆடம்பர செலவுகளிலும், கேளிக்கை நிகழ்வுகளிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர், கணவர் அருகில் இல்லை என்னும் துணிச்சலில்.

அயல் நாடுகளில் இருந்து இங்கே வேலைக்கு வந்திருக்கும் நண்பர்கள் சிலர் இப்படி பல சோகக்கதைகளின் நாயகர்களாக இருக்கிறார்கள். உண்மையில் இது யார் குற்றம் என்பது அவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது. ஆயினும் ஏனோ கண்டும் காணாதது போல இருக்கவேண்டியதிருக்கிறது என்கின்றனர்.

பணம் அவசியம் தான், அதைவிட அவசியம் அதை சம்பாதிக்கும் விதங்களில் குடும்ப கௌரவத்தை இழந்துவிடாமல் பார்த்துக் கொள்வதுமாகும்.

"சில ஆண்கள் குடும்பத்துக்காக உழைத்தே சாகிறார்கள். "  என என்  நண்பர் அடிக்கடி சொல்வார். இதில் தான் எத்தனை எத்தனை அழுத்தமான உண்மைகள் பொதிந்திருக்கின்றன.

குடும்பத்தை மேல் நிலைக்கு கொண்டுசெல்லும் கடப்பாடு அவர்களுக்குடையது. இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் குடும்பத்தில் உள்ள மனைவியும் குழந்தைகளும் அந்த தியாகத்தை  உணர்ந்து போற்றாவிடில் எங்கோ தவறு இருக்கிறது என்றே பொருளாகிறது.

கணவர்கள் இதை உணரவேண்டும். இதை உணரத்தவறும் போது, அவர்கள் கடும் உழைப்பில் சேமிக்கப்படும் பணம் குடும்பத்தினரின் வீண் செலவுகளில் அழிகிறது. இதற்கு கணவர் வெளினாடு சென்று வேலை பார்க்கத் தேவை இல்லையே.

கணவர் அருகில் இல்லை என்பதை சுதந்திர உணர்வோடு "மெர்டேகா" என கொண்டாடி மகிழும் மனைவிகளும் இருக்கிறார்கள்.  வெகுளியான தங்கள் கணவர்களை பயன்படுத்தி 'ஜாலியான'  வாழ்வில் திளைக்கிறார்கள் இவர்கள். சில மனைவிகளுக்கு நெருங்கிய ஆண் நண்பர்களும் ஆசை நண்பர்களும் கூட உண்டு.கலாச்சார சீர்கேடுகளும் குடும்ப கௌரவமும் பாழ்படுவது இவ்வாறே.

மற்ற சமூஙங்களை விட நாம் இதில் குறவாக இருப்பது போல தோன்றினாலும் மக்கள் தொகையின் அடிப்படையில் நாம் அவர்களுக்கு சரி நிகர் சமமாகவே இருக்கின்றோம்.

இதுபோன்ற சூழ்நிலைகளே 'கூட்டுக்குடும்பங்களின் நன்மைகள்' எவ்வளவு என்பதனை நமக்கு உணர்த்துகின்றன.

Saturday, 6 April 2013

என்ஸைட்டி...

என்ஸைட்டி. ....அது ஒரு வகை குறையுணர்வு...அது ஒரு வகை  மனக்குறை, ஒருவித ஏக்கம் கலந்த கவலை... துன்பப்படும் உணர்வு.
இதை ஆதங்கம் என்றும் சொல்வதுண்டு. ஆதங்கம்.... அதாவது 'என்ஸைட்டி'  நரம்புத்தளர்ச்சிக்கு ( நியோரோஸிஸ் ) கொண்டு சேர்க்கும் ஒன்றாக பல நேரங்களில் அமைந்துவிடுவதுண்டு. ஒருவரின் மனக்குமுறலை வெளிப்படுத்த வழி தெரியாத போது இப்படி நேர்கிறது. காக்காய் வலிப்பு என்பது இதனால் ஏற்படுவதுதான் பல நேரங்களில். பின்னரே இது உடல் ரீதியில் பல பின் விளைவுகளை உண்டு பண்ணுகிறது.

 நமக்குள் தோன்றும் சலிப்பு, எரிச்சல், பயம், அச்ச உணர்வு போன்றவற்றை வெளிக்காட்ட இயலாதபோது  மேற் சொன்ன நோயினால் பாதிக்கப் பட நேரிடும்.  நாம் நமக்குள்ளும் நம்மைச் சுற்றி உள்ளோரிடமும் காணும் அச்ச உணர்வே என்ஸைட்டி என்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அடுத்து என்ன நடக்குமோ எனும் சஸ்பென்ஸ் ஆபத்தாகிறது சில நேரங்களில். ஒரு சிலருக்கு தங்கள் குடும்பத்தினரின் அலட்சியமும், அவர்களால் ஒதுக்கப்படுவதும் காரணங்களாவதுண்டு.

இதற்கு அடுத்த நிலை?
மன நோய் தான் இதற்கு அடுத்த நிலை.

ஒருவரின் ஆதங்க நிலையை அருகில் இருப்போரால் தெரிந்து கொள்ள முடியும்.  பாதிக்கப்பட்டோரின் எதிரும் புதிருமான செய்கைகள் ( கொன்வெர்ஷன் ரியாக்க்ஷன் ) பல விதங்களில் வெளிப்படும். திடீரென பேச முடியாமல் போகும், காது கேட்காது, பேய் பிடித்தது போல நடந்து கொள்வது, தூக்கம் வராமல் தவிப்பது ...இப்படி பல அறிகுறிகள் தோன்றும்.  உண்மையில் இவை அர்த்தமில்லாதவை போல தோன்றினாலும் ஒரு நோய்க்கான அறிகுறிகளாகும்.

ஆக இவற்றிற்கு முக்கிய காரணமாக அமைவது, என்ஸைட்டி எனப்படும் ஆதங்க நிலையே.

இதனை முறையான வழிகள் மூலமும், ஆரோக்கியமான எண்ணங்களின் மூலமும் கலைந்திடலாம். சிறிது கவனம் செலுத்தி  தினமும் இவர்களோடு உரையாடினால் பலரை அவர்களின்  இந்த இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்றிட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

குறிப்பு : மன நோய் வராமல் தடுப்போம் எனும் விழிப்பு நிலை பிரச்சாரத்தின் போது காதில் விழுந்தவை...

எளிதில் மறந்துவிடக்கூடியதே மனித மனம்

பெற்ற உதவியை எளிதில் மறந்துவிடக்கூடியதே மனித மனம்.

இது வயதானோருக்கும், அனுபவப்பட்டோருக்கும் தெரிந்ததுதான்..

ஆனால் மற்றவர்கள் என்னவோ தங்களுக்கு நடக்கும் அனுபவங்களினாலேயே இந்த மெல்லிய ஆனாலும் மிக முக்கியமானதை தெரிந்து கொள்கிறார்கள்.

இங்கே நாம் குறிப்பிடுபவர்கள் அடுத்தவர்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என ஒரு பெரிய பட்டியலையே வைத்திருப்பார்கள்.  அயினும் நாம் அவர்களுக்குச் செய்த எதுவுமே அவர்கள் நினைவில் இருக்காது.

இவர்களுள் ஒரு சிலர் திருக்குரளைக் கூட தங்கள் சுயநலத்துக்கு எடுத்துக்கொள்வர்....அதன் உண்மை பொருள் அறியாமல்.

"மறவற்க, மாசு அற்றார் கேண்மை
துறவற்க, துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு ... "

இது குறள். ( நமக்கும் குறள் தெரியும்லெ... )

ஆயினும், எவ்வித மாசுமின்றி நம்மோடு பழகுவோரின் உறவை உயர்ந்து போற்றும் அதே நேரம், நமது துண்ப காலத்தில் நமக்கு உறுதுணையாய் இருக்க வேண்டியவர்கள் நம்மை விட்டு ஓடி ஒளியும் போது அவர்கள் புனிதமானவர்கள் என்றோ , அவர்களின் நட்பையும் போற்றுங்கள் எனவோ குறள் சொல்லவில்லை.

இவர்களை தள்ளி வைப்பது ஒருவகையில் நாம் முன் பிறவியில் செய்த நன்மை எனத்தான் கொள்ளவேண்டும். நம் உதவிகளை அனுபவித்துவிட்டு நமது தேவையின் போது முகத்திரை போட்டு ஓடிடும் இவர்கள், பல நேரங்களில் என்னவோ அள்ளித் தந்துவிட்டதைப் போல அலட்டிக்கொள்பவர்களே.

நன்றி என்பது இருவழிப்பாதை.
என்றென்றும் அது ஒருவழிப்பாதை ஆகாது....



உருளைக்கிழங்கு....

கேஸ்ட்ரிக் பிரச்சினை வந்துவிடுமோ என உருளைக்கிழங்கை பார்த்து பயப்படுவோர் நம்மிடையே பலர் உண்டு.

"அதிக வாய்வுத் தொல்லை ..அதனால் நான் அதை ஒதுக்கி வைக்கிறேன்" என நமது உறவினர்களில் சில நீதிமான்கள் சொல்வது நமக்கு தெரிந்தது தான்.

ஆனால் அதன் ருசிக்கு மயங்கி நம்மில் பலரும் உருளைக்கிழங்கு பிரியர்களாக இருக்கிறோம். உருளைக்கிழங்கில் நான்கு முக்கிய வைட்டமின்கள் இருக்கின்றன என்கிறார்கள்.

எளிதில் ஜீரணிக்கக் கூடியது இது. கொரியா, ஹாலன்ட், இட்டாலி, சீனா போன்ற நாடுகளில் இது முக்கிய ஒன்றாக பலவிதங்களில் உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

மேல் நாட்டு ஆய்வுகளில் உருளைக்கிழங்கை வேக வைத்துச் சாப்பிட்டால் உடல் இளைப்பதாக கண்டு பிடித்துள்ளனர். எனவே, பெண்கள் இனி உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் ஒன்று என உருளைக்கிழங்கை பார்த்து அச்சப்படத் தேவை இல்லை.

ஆயினும் எண்ணெயில் பொறித்துச் சாப்பிடும் உருளைக்கிழங்கில் அதிக அளவு கொழுப்புச் சத்து இருப்பதை நாம் உணரத்தான் வேண்டும். உருளைக்குழங்கை மட்டுமல்ல, மற்ற எந்த ஒன்றையும் எண்ணெயில் பொறித்து பரிமாரப்படும் போது அதில் வேண்டப்படாத கொழுப்பின் தன்மை இருப்பது நமக்குத் தெரிந்ததுதான். அதிக கொழுப்பு உடலுக்கு நல்லதல்ல...

எனவே சரியான விதத்தில் உருளைக்கிழங்கை சமைத்துச் சாப்பிடுவோம்,
 நாக்குக்கு சுவை சேர்க்கும் உருளைக்கிழங்கின் நற்பெயரைக் காப்போம்.