எங்கேயும் எப்போதும் என்னும் ஒரு நல்ல அருமையான திரைப்படம் இப்போது அஸ்ட்ரோ அலைவரிசையில் இடம்பெற்று வருகிறது.
சாலை விதிகளை மீறுவதனால் நிகழும் கோர விபத்துகளையும் அதனால் பல குடும்பங்களில் ஏற்படும் சோகங்களையும் நம் மனக்கண் முன்னே கொண்டுவருகிறது இப்படம்.
வெறும் ஒரு விபத்தை மட்டுமே சித்தரிக்கும் சோகமான செய்திப்படம் போல இல்லாமல் முக்கியமான இரு இளம் ஜோடிகளை வித்தியசமான முறையில் காதல் வயப்பட வைத்து நகைச்சுவையோடு காட்ச்சிகளை படமாக்கி இருக்கின்றனர்.
ஒரு சில வினாடிகளின் அவசரம்தான் பல விபத்துக்களுக்கு மூல காரணம் என்று சொல்கிறார்கள். நாம் நிதானமாக எவ்வித டென்ஷனும் இன்றி பயணத்தை தொடங்கி, எல்லா சாலை விதிகளையும் மதித்து பின்பற்றி நடந்தோமானால் இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கலாம் என்கிறார்கள்.
திருச்சியிலிருந்தும் சென்னையிலிருந்தும் கிளம்பும் இரு பஸ்கள் நேருக்கு நேரே மோதிக்கொள்கின்றன. அதில் பயணம் செய்வோரில் யார் யார் இறக்கின்றனர், யார் யார் பிழைக்கின்றனர், அவர்களின் குடும்பத்தார் படும் வேதனைகள் ... இவற்றை இப்படம் விளக்குகிறது.
விபத்துக்கு முன்னர் பயணிப்பவர்கள் எவ்வாறு ஒருவருக்கொருவர் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பனை இடை இடையே வரும் காட்ச்சியமைப்புகள் காட்டுகின்றன.
அஞ்சலி ஒரு தைரியமான பெண். ஜெய் ஒரு பெண்ணைப்போல் கூச்சப்படும் ஒரு ஆண். இவர்களுக்குள் ஒரு காதல்.
திருச்சியிலிருந்து சென்னைக்கு வரும் கிராமத்துப் பெண் அனன்யா. இவருக்கு உதவி செய்ய வருகிறார் சர்வா. இவர்களுக்கும் காதல், ஆனால் கடைசி நேரம்தான் சொல்லிக்கொள்கிறார்கள்.
"இங்கே வா ... அங்கே வா" என ஜெய்யை அலைய வைக்கும் அஞ்சலி நன்றாக செய்திருக்கிறார் அவர் பாத்திரத்தை. அதேபோல, ஜெய்யும் ஒரு அப்பாவியான கேரக்டரில் டொப் மார்க்ஸ் வாங்கியிருக்கிறார். சிரிப்புக்கு பஞ்சமில்லாத காதல். முடிவு தெரியும் வரை ரசிக்கிறோம். பின்பு மனம் கணக்கிறது...
சென்னையில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சர்வா, திருச்சி பெண் அனன்யாவிற்கு உதவும் சூழ்நிலையில் அனன்யாவின் வெகுளித்தனமான, யாரையும் உடனே நம்பிவிடாத குணம் கண்டு மனதுக்குள் விரும்புகிறார். இருவரும் பிரிந்து மீண்டும் 6 மாததிற்குப்பின் கூடும் போது நிகழும் விபத்தே இப்படத்தின் கிளைமாக்ஸ்.
இதற்கிடையே,
புது மனைவியை விட்டுப்பிரிய மனமில்லாத ஒரு கணவன்,
பஸ்ஸில் முதன்முறை சந்திக்கும் ஒரு காலேஜ் பையனும் பெண்ணும், டுபாயில் வேலை செய்துவிட்டு இனி குடும்பத்தோடு இனிதே வாழலாம் என்று வரும் ஒருவருக்கு அவரின் சிறு குழந்தை "வாங்கப்பா" என ஏங்கித்தவிக்கும் செல்பொன் அழைப்புக்கள்,
இறங்கும் இடம் வந்தும் அஞசலியையும் ஜெய்யையும் இறங்கவிடாமல், "என் மகன் கார் கொண்டுவந்திருகிறான். அடுத்த பஸ் நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம் தம்பி" என உதவிக்கரம் நீட்டும் பெரியவர்....
இப்படி காட்சிகள் படத்தை சுறுசுறுப்பாக நகர்த்திச்செல்கின்றன.
இடம்பெறும் பாடல்களும் காட்ச்சிகளோடு பார்க்கும் போது மிகப் பொருத்தமாக பிரமாதமாக இருக்கின்றன. மொத்தம் 5 பாடல்கள்...அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித் தன்மையோடு இடம் பெற்றிருக்கின்றன.
எனக்கு மிகவும் பிடித்தவை இரண்டு.
ஒன்று, "கோவிந்தா கோவிந்தா, சென்னையில புதுப்பொண்ணு"
மற்றது, "அவன் பேரே தெரியாது.."
சாலை விபத்துக்களில் திடீரென உயிரிழக்கும் சொந்தங்களை எண்ணி கதறும் நாம், வாழ்வில் மரணம் எவ்வளவு நிச்சயமானது என்பதை உணருவதே இல்லை.
"நேற்றிருந்தோர் இன்றில்லை, இன்றிருப்போர் நாளை இல்லை"...என்பது பழைய வாக்கியம்.
"சற்று முன் இருந்தோர் இப்போதில்லை, இப்போதிருக்கும் நாம் இன்னும் சிறிது நேரத்திற்குப் பின் இருப்போம் என்பது நிச்சையமில்லை"
...என்பதே புதுமொழியாக இருக்க வேண்டும்.
இப்படம் அதைத்தான் உணர்த்துகிறது.
நோயால் போவோர் பாதியும் விபத்தால் போவோர் மீதியுமாகவே காலச்சக்கரம் சுழன்றுகொண்டிருக்கிறது.
இதற்கிடையே நமக்குள்தான் எவ்வளவு பேதங்கள், பாகுபாடுகள்.
"இன்றே உனது கடைசி நாள் என வாழ்..."
என்று சான்றோர் சொல்லிச்சென்றதன் உண்மை இதுதானோ???