Saturday, 31 December 2011

புத்தாண்டு மலர்கின்றது...

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் .................அடிபேணிக் (கைத்தல)

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை ...............கடிதேகும் (கற்றிடும்)

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள் புய ............மதயானை (மத்தமும்)

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...........பணிவேனே(மத்தள)

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...............முதல்வோனே(முத்தமிழ்)

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த ..........அதிதீரா(முப்புரம்)

அத்துய ரதுகொடு சுப்பிரமணிபடும்
அப்புன மதனிடை........... இபமாகி (அத்துய)

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் .............பெருமாளே. (அக்குற)
-----0----------0----------0-------------0-----------0-----------0---------


கைத்தலம் நிறைகனி அப்ப மொடு அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி ... கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம், அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின் திருவடிகளை விரும்பி,

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும் ... அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில் நீங்காது வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே, என்று உன்னைத் துதி செய்தால் வினைகள் யாவும் விரைவில் ஓடிப் போய்விடும்.

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை ... ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும் சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களையுடையவனும், மத யானையை ஒத்தவனும்,

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர்கொ (ண்) டு பணிவேனே ... மத்தளம் போன்ற பெருவயிறு உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத் தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன்.

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே ... இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல் முதலில் எழுதிய முதன்மையானவனே,

முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடிசெய்த அதிதீரா ... (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்த அந்தச் சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத் தூளாக்கிய மிகுந்த தீரனே*,

அத்துயர் அது கொ (ண்) டு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி ... (வள்ளி மீது கொண்ட காதலாகிய) அந்தத் துயரத்தோடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணியன் நடந்த அந்தத் தினைப் புனத்திடையில் யானையாகத் தோன்றி,

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே. ... அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் அந்தச் சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம் புரியுமாறு திருவருள் பாலித்த பெருமாளே.

No comments:

Post a Comment