Saturday, 30 March 2013

கார்ட்டூன்ஸ்...


பொம்மைப் படங்கள் என அழைக்கப்படும் கார்ட்டூன்கள் சிறு குழந்தைகளுக்கானவை மட்டுமா?

Wednesday, 27 March 2013

வாழ்ந்தாலும் ஏசும்....


உலகம் பொல்லாதது... நீங்கள் எப்படித்தான் வாழ்ந்தாலும் இந்த உலகம் பொல்லாதது.
மு.வ அவர்களின் கல்லோ காவியமோ...எனும் நாவலின் துவக்க வரிகள் இவை. எப்படி பிரமாதமாக பொருந்துகிறது நாம் வாழ்வினில் இன்று.  நல்லவனாக வாழும்போது பொறாமைப் படுகிறார்கள். வாழும் நிலை தவறி கீழே விழும் போது தூற்றுகிறார்கள்.

ஆக எப்படிப் பார்த்தாலும் நாம் எந்த நிலையில் இருந்தாலும் ஒரு சாரார் குறை சொல்வதை தங்களது கொள்கையாகவே கொண்டிருக்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.

அதை தெரிந்து உணர்ந்து அதனை ஒரு பொருட்டாக மதியாமல் நம் வாழ்வு நம் கையில் எனப் போவதே நாம் வாழ்வின் வெற்றிக்கு நாம் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று.

Pancha's double...

டுசுன் டுரியான் தோட்ட நாடகங்கள்...


(  டிரெக்டர் ஓட்டுனராக  நெடுங்காலம் பணியாற்றி அன்மையில் ஓய்வுபெற்ற திரு ராமசாமி குப்புசாமி அவர்கள்  தனது நாடக அனுபவங்களை  இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். )

மகாபாரதம் ஒரு இதிகாசமென குறிப்பிடுகின்றனர். இதை சமஸ்கிருதத்தில் இயற்றியவர் வியாசர். ஆனால் அதை நம் தமிழுக்கு  மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார்.  இரு பங்காளிகளுக்கு இடையே நடைபெற்ற மாபெரும் போர்தான் மகாபாரதப் போர். சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியதும் இதே...

டுசுன் டுரியான் தோட்டத்தில் அன்றைய மகாபாரத நாடகத்தை ஏற்று நடத்தியவர் மரியாதைக்குரிய காலம்சென்ற திரு பொன்னையா அவர்கள்.  அறுபதுகளில் அவரின் மேற்பார்வையில்தான் தோட்டத்தில் பணியாற்றிய, ஆர்வமுள்ள பலர் நடிப்பிலக்கியம் பற்றி தெரிந்து கொண்டனர். பல அரிய திறமைகளை ஒருங்கே கொண்டிருந்தவர்   திரு.பொன்னையா அவர்கள். 

அவர் தலமையில் நடந்தேறிய நாடகங்களில் திரு.சாமிரெட்டி அர்ஜுணனாகவும், திரு சேகரின் தம்பி வேலு பீமனாகவும், டிரெக்டர் கிருஷ்ணன் கிருஷ்ணனாகவும் சிறப்பாக நடித்து எல்லோரையும் அசத்தினர்.

திரு பொன்னையா அவர்கள் பொதுவாக தனது நடிகர்களுக்கு அவர்களின் கதாபாத்திரத்திற்கேற்ப அவர்கள் பேச வேண்டிய வசனத்தை தனித் தனியே எழுதித் தந்துவிடுவார்.  நாடக மாந்தர்கள் அவ்வசனங்களை மனப்பாடம் செய்து ஒத்திகையின் போது ஒப்பிப்பார்கள்.  இந்த ஒத்திகை கள்ளுக்கடை மூடப்பட்ட பின் இரவில் அங்கு நடைபெறும்.  இவ்விடத்தை ஒத்திகைக்கு நாடக ஆசிரியர் தேர்ந்தெடுத்ததிற்கு ஒரு சிறப்பு காரணமும் உண்டு. 

இத்தோட்ட கள்ளுக்கடை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். அதனை ஒரு பக்கம் கௌரவர்களுக்காகவும் மறுபக்கம் பாண்டவர்களுக்காகவும் திரு பொன்னையா அவர்கள் ஒதுக்கித் தந்திருந்தார்.  இரு பிரிவினரும் ஒத்திகையின் போது வசனத்திற்கேற்ப மோதிக்கொள்வர். இந்த ஒத்திகையினை காணவே பலரும் அங்கு வந்து குழுமி இருந்தனர் அக்காலத்தில். அவ்வளவு சுறுசுறுப்புடனும் விறுவிறுப்புடனும் நாடக ஒத்திகைகளே இருந்திருந்தன.

பொதுவில் துரியோதணனுக்கும் கிருஷ்ணனுக்குமே அதிக வசனங்கள் இருக்கும். காரணம் இவர் நடத்திச் சென்ற நாடக பார்வை அப்படி இருந்ததும், அந்த பாத்திரங்களில் நடித்திருந்தோரின் அசாத்திய திறமைகளும் இரு பெரும் காரணங்களாகும்.

இவர்களை தவிர்த்து இவர்களுக்கு துணையாகவும், பலர் பின்னனியில் உதவி இருக்கின்றனர். அவர்களில் முக்கியமானோர் நடிகர்கள் வசனத்தை மறந்துவிடாமல் இருக்க அவ்வப்போது நடிகர்களின் பகுதிகளை கதவோரம் நின்று எடுத்துக்கொடுக்கும் உதவியாளர்களாகும்.

மைக் எனப்படும் ஒலிவாங்கி மேடையின் நடுவில் இருக்க, வசனத்தை மறந்து விடும் நடிகர்கள் ராஜ நடை நடந்து உதவியாளர்களிடம் வந்து வசனத்தை கேட்டு ஒலிவாங்கியின் முன் வந்து ஒப்பித்த முறையும் மேடை நாடக யுக்தியாக அன்றிருந்திருக்கிறது.  

இப்போது இதை படிக்க சற்று நகைச்சுவையாக பட்டாலும் ஒரு நாடகம் வெற்றிகரமாக நடந்தேற அன்றைய சூழ் நிலையில் இந்தச் சிறு சிறு பங்களிப்பினை கேள்விப்படும்போது நமக்கு பெரும் ஆச்சரியம் மேலிடுகிறது.




ஆயிரக்கணக்கானோர் இரவு முழுவதும் மேடை முன் அமர்ந்து  இதுபோன்ற நாடகங்களை பொறுமையாக ரசித்த காலம் அது.

திரு.பொன்னையாவின் பொறுப்புக்களை அடுத்து எடுத்துக் கொண்டவர் திரு நடராஜா அவர்கள். கிளனாங் பாரு, ஓ.பி.ஆர்.எஸ் பகுதியைச் சேர்ந்தவர் இவர்.

 நான் பீமனாக நடிக்க வந்தபோது இவரின் மேற்பார்வையில் 1974ம் மற்றும் 1975ம் ஆண்டுகளில் மகாபாரதம் திருவிழாக் கால மேடை நாடகமாக அரங்கேறியது. அப்போது, திரு.முருகேசு ( ஓபிஆர் எஸ்) அர்ஜுணனாகவும், திரு. தேவேந்திரன் ( கில்கீ எஸ்டேட்) துரியோதணனாகவும், திரு. ஜோசெப் (ஓபிஆர் எஸ் )தருமனாகவும் நடித்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றனர்.

ஆனால் திரு நடராஜா வேறிடத்திற்கு மாற்றலாகி சென்றதும் புதிய நாடக ஆசிரியர் திரு. கேசவன் தலமையில் 1976ம் ஆண்டு முதல் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு அரங்கேற்றப் பட்டது. இக்கால கட்டத்தில் பீமனாக என்னோடு, போர்மென் சண்முகம் அர்ஜுணனாகவும், எனது தம்பி ராஜு கர்ணனாகவும், திரு.ரெங்கசாமி துரியோதணாகவும், நாடகத்தின் ஆசிரியர் திரு கேசவனே தருமனாகவும் நடித்திருந்தனர்.

அன்றைய காலத்தில் வானொலி தொலைக்காட்சி முழு வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. இது போன்ற நாடங்கள் மக்களின் மத்தியில் பெரும் ஆதரவு பெற்று புகழ் பெற அதுவும் ஒரு காரணம். வயது வேறுபாடின்றி அனைவரும் விரும்பி ரசித்து நமது பாரம்பரிய கலைகளில் ஒன்றான நாடகக் கலைக்கு தங்களின் ஒருமித்த ஆதரவை வழங்கினர்.

ராமாயணமும் மகாபாரதமும் வெறும் கற்பனையாக மக்கள் பார்த்திராத காலம் அது. இன்று பலர் சொல்லிக்கொள்வது போல் அவை பிரமாண்டமாக சொல்லப்பட்ட பொய்கள் அல்ல. நமது நல்வாழ்வுக்காக சான்றோர்களால் வகுக்கப்பட்ட நற்பண்புகளின் குறிப்பேடு அவை.  மகாபாரதம் இல்லையேல் கீதை இல்லை. கீதை இல்லையேல் கிருஷ்ணன் இல்லை. ஆக கிருஷ்ணன் இல்லையேல் நமது மதமே இல்லையெனும் நிலையில் பக்திப் பார்வையில் படைக்கப்பட்டு பார்ப்போரின் மனதில் நல்லெண்ணங்களை விதைத்தன இது போன்ற நாடகங்கள்.

அதன் பின் வந்த மேலை நாட்டு கலாச்சார மாற்றங்களினால், மேடை நாடகங்களின் புகழ் மங்கத் தொடங்கி விட்டது. வண்ணத் தொலைக்காட்சி, வீடியோ என அறிவியல் வளர்சியில் மேடை நாடகங்களை பார்ப்போரின் கவனம் திசை திருப்பி விடப்பட்டுவிட்டது.

மலேசிய வானொலியின் புகழ் பெற்ற கலைஞரான திரு.எஸ்.வைரக்கண்ணு 1974/5ம் ஆண்டு வாக்கில் இந்தத் தோட்டத்தில் அவரின் தமக்கையின் வீட்டில் தங்கி இருக்கும்போதுதான் அவரின் முதல் தொடர் நாடகம் சிங்கை வானொலியில் ஒலியேறியது என ஒரு கொசுறுத் தகவலும் உண்டு.

- திரு. கே. ராமசாமி சொல்லக்கேட்டு எழுதியவர் ராஜ்பாவ்

Friday, 22 March 2013

திருவிழா கால நாடகங்கள்...

1975ல் டுசுன் டுரியான் தோட்ட துரோபதை அம்மன் ( தொங்கா மோரிப் )  ஆலய  தீமிதி உற்சவத்துக்கு முந்திய நாள் நடைபெற்ற மஹாபாரத நாடகத்தில் துரியோதனாக தேவேந்திரன் ( இடம் ), பீமனாக திரு ராமசாமி ( வலம் ) மற்றும் நடுவில் அர்ஜுனனாக திரு முருகேஸ் ( ஓ. பி. ஆர். எஸ் )ஆகியோர்  தோன்றி நடித்த ஒரு காட்சி.


சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். அதன்படி மலேசியாவில் ஆங்காங்கே நடத்தப்பட்ட தோட்டப்புற நாடகங்கள் நமது   கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்தது நாம் கண்ட உண்மை...

ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வந்த தீமிதி திருவிழா, அதற்கு முதல் நாள் இடம்பெற்ற நாடகம் போன்றவை காலத்தாலும்  மறக்கவியலா பசுமை நினைவுகளை கொண்டவைகளாகும்.

 நாடக கலை என்பது இப்படி திருவிழாக் காலங்களில் இடம்பெற்றே வளர்ச்சியடைந்திருக்கிறது. 

1974ம் ஆண்டு முதல் பீமன் வேடத்தில் நடித்து புகழ் பெற்ற திரு ராமசாமி அவர்களை சந்தித்து உரையாடினேன்....

என்றும் இனியவை என அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட தகவல்களை இனி அடுத்தடுத்த பதிவுகளில் இடம்பெறும்...


Tuesday, 19 March 2013

Putrajaya...

"பெட் சோர்" எனப்படும் படுக்கைப்புண் ...

 இது பற்றி பலருக்கு தெரிந்திருக்காது.   எழுந்து அமர முடியாத, எந்த நேரமும் படுக்கையிலேயே இருக்கும் நோயாளிகள் யாரேனும் தங்கள் குடும்பத்தில் இருந்தால், அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் இந்த படுக்கைப்புண் பற்றி.

நோயாளியின் முதுகுத்தண்டின் கீழ், பெல்விக் பகுதியில் இருந்தே இந்த புண் ஆரம்பிக்கிறது என்கிறார்கள்.  ஆயினும், பெல்விக் எலும்புப் பகுதியில் மட்டுமல்லாது, முதுகின் பின்புறத்தோளிலும், மற்ற இடங்களிலும்  இந்த புண் ஏற்படலாம்.

இந்நோய்க்கான காரணங்கள் பல இருந்தாலும், முக்கியமானவை இவை:

    -    வயதானவர்களுக்கு கட்டப்படும் நெப்கின் துண்டில் உள்ள சிறுநீர், மலம் போன்றவற்றை  அப்புறப் படுத்துவதில் ஏற்படும் கால தாமதத்தினால் இந்த புண் வரலாம்.

    -    சில நேரங்களில் நோயாளியினை எழுந்து அமரச்செய்யும் செயலின் போது ஏற்படும் உராய்வுகளினாலும் இது ஏற்படலாம்.

    -   உடலில் சற்று புடைத்திருக்கும் பகுதிகள் படுக்கையில் அழுத்தமாக பதிவதால் இங்குள்ள தோளில் புண் தோன்றுகிறது.

    -   எந்நேரமும் படுத்தே இருப்பதனாலும், காற்றோட்டம் குறைவாக இருப்பதனால் ஏற்படும் வியர்வையினாலும்  இந்த படுக்கைப்புண்  சுலபமாக வந்துவிடும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

மிகச் சாதாரணம் போல தோன்றினாலும் இந்த படுக்கைப்புண்  ஒரு பயங்கர நோயாகும்.  அதிக வேதனை அளிக்கக்கூடையதுமாகும். இதனால் பாதிக்கப்படுவோர் ஒவ்வொரு நொடியும் முனகிக் கொண்டும், வலியின் தாக்கம் தாங்காமல்  ஓலமிட்டவாறும்  தவித்துப்போவர்.

ஆகவே, இந்நோயாளிகளை கவனிப்போர் என்றுமே அலட்சியமாக இருந்து விடக் கூடாது.  ஒரு நாள் கவனக் குறைவாக இருந்துவிட்டாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் உயிர் போகும் விளைவுகளை தோற்றுவித்துவிடும்.

இதை படிக்கும் ஒரு சில நண்பர்கள்  இது உண்மைதானா... படுக்கைப்புண்  உயிரை போக்கும் கொடிய நிலைக்கு இட்டுச் செல்லுமா... என எண்ணலாம். என் அனுபவத்தில் நான் கண்ட, கேள்விப்பட்டவற்றையே இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் அழுத்தப் பட்ட தோள் சிவக்கும்.

பின்பு அங்கு சிறிய புண் போல தோன்றும்.
"அட ஏதோ புண்ணாக இருக்கிறதே ..." என நினைத்தால்,  இந்த புண்ணை ஆற்றுவதற்கே பெரும்பாடாகிவிடும்.  இது ஆரம்பக் கட்டம் மட்டுமே. உடனடி நிவாரணம் தேவை இந்த நேரத்தில்.

 நாம் எல்லோரும் மருத்துவ மனையையே மிகவும் நம்பிக் கொண்டிருக்கிறோம். அவர்களிடம் கொண்டு காட்டிவிட்டால், அடுத்து நம் கடமை தீர்ந்துவிட்டது என்றே மனதில் படுகிறது. படுக்கைப்புண்  இந்த நினைப்புக்கு நேர் எதிரானது. மருத்துவரிடம் காட்டி வீட்டுக்கு அழைத்து வரப்பட்டாலும், நோயாளியின் நிலை புண் ஆற்றப் படும் வரை நம் கையில் தான் உள்ளது.

தோளில் தொடங்கிய புண், எலும்பினை அடைந்து வெகு ஆழமாக புறையோடிப்போகும். இந்த நேரத்தில், புண்ணை  கவனித்துப் பார்த்தால் அந்த ஆழத்தின் உள்ளே 'மெகட்ஸ்" எனப்படும் புழுக்களும் இருக்கும்.

இந்த நிலைக்கு வந்துவிட்டால், புண் தீவிரம் அடைந்து விட்டது என்று பொருள். அடுத்து நாம் ஏதும் செய்ய இயலாது. மருத்துவர்களின் அறுவை சிகிச்சையே  சிறந்த வழி.  ஆயினும், அதுவும் பலனின்றி உயிரழப்போர் ஏராளம் என்றே அறிகிறேன்.

பொதுவாக வயோதிகர்களையே இந்த படுக்கைப்புண்  வியாதி தாக்குகின்றது.

ஆகவே, நம் வீட்டில் பெரியவர்கள் யாரேனும் இது போன்ற படுக்கையிலேயே இருக்கவேண்டி நேர்ந்தால், ஆரோக்கிய முறைகளின் மூலம் படுக்கைப்புண்  வராமல் பார்த்துக்கொள்வோம். 

அவர்களை பராமரிக்கும் மருத்துவ வசதிகளை இரட்டிப்பாக்கி, காற்றோட்டமான... சுத்தமான... சுகாதாரமான  இடத்தில் படுக்கையிட்டு நம்முடைய நேரடி கண்பார்வையிலேயே அவர்களை வைத்திருப்போம்....