Wednesday, 30 October 2013

படித்ததில் பிடித்தது... மஹாபாரதம் - 1

மஹாபாரதம் பற்றி அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக ஒரு இணையத்தளத்தை காணும் சந்தர்ப்பம் அன்மையில் எனக்குக் கிட்டியது. அருமையான கதைபோக்கில் அந்த வலைப்பதிவின் சொந்தக்காரர் இலக்கிய ரசம் சொட்டச் சொட்ட தந்திருந்தார்.

சொந்தமாக எதையாவது எழுதி மஹாபாரதத்தின் தரத்தை குறைப்பதைவிட, நான் ரசித்த அந்தப் பதிவினை இங்கே அப்படியே தந்தால், யாரிடம் இருந்தும் இலக்கியக்கொலைப்பழி என்மேல் விழாது எனும் நல்லெண்ணத்தில் அதனை இங்கே பதிவிடுகிறேன்.

தயவு செய்து வாசகர்கள் இங்கே தரப்பட்டுள்ள அந்த வலைப்பதிவுக்குச் சென்று மேலும் அங்குள்ள நல்ல பல கட்டுரைகளை வாசித்து பயனடையவும்.

மஹாபாரதம் கதை - சுருக்கமாகவும் - விரிவாகவும்


மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார். பெயர் தான் வில்லிப்புத்தூராரே தவிர, இவரது ஊர் விழுப்புரம் மாவட்டம் திரு முனைப்பாடி அருகிலுள்ள சனியூர் ஆகும். இவரது தந்தை பழுத்த வைணவர். அவர் பெரியாழ்வார் மீது கொண்ட பற்றினால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார். வில்லிப்புத்தூராரோ சிவனையும் ஆராதித்து வந்தார். வியாசர் எழுதிய 18 பருவங்களை 10பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களுடன் மகாபாரதத்தை எழுதி முடித்தார்.
குரு வம்சத்தின் பங்காளிகளுக்கு இடையே நிலத்துக்காக நடைபெற்ற மாபெரும் போர்தான் மகாபாரதப் போர். இதைக் களமாகக் கொண்டு ஆசிரியரான வியாசர் மாபெரும் காப்பியத்தைப் படைத்துள்ளார்.
மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளுவது கடினம். ஆனால், மகாபாரதம் பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடியது. சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியது. இந்த வேதத்தைப் படித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்
சந்தனு மஹாராஜாவுக்கு முதல் மனைவி கங்கை மூலம் தேவவிரதன் என்றொரு மகன் பிறக்கிறான். அதன் பின் மனைவி கங்கை மஹாராசா சந்தனுவை விட்டுப் பிரிந்து சென்றுவிடுகிறார். மஹாராசா சந்தனு பின்னர் சத்யவதி என்ற பெண்மீது ஆவல்கொண்டு அவளை மணக்க விரும்புகிறார். ஆனால் தன் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகள்தான் நாட்டை ஆள்வார்கள் என்று அரசர் வாக்குறுதி அளித்தால்தான் பெண்ணை மணமுடித்துத் தரமுடியும் என்று சத்யவதியின் தந்தை சொல்கிறார். மூத்த பையன் தேவவிரதன் இருக்கும்போது இவ்வாறு செய்வது சரியல்ல என்பதால் சந்தனு மறுத்துவிடுகிறார்.
இந்த உண்மை தெரியவந்ததும், தேவவிரதன் தான் இனி அரசனாகப் போவதில்லை என்றும் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்றும் சூளுரைக்கிறார். வானில் இருந்து தேவர்கள் அவர்மீது பூமாரி பொழிகிறார்கள். அவர் செயற்கரிய சபதம் செய்ததனால் அன்றிலிருந்து அவர் பீஷ்மர் என்று அழைக்கப்படுகிறார்.
சந்தனு சத்யவதியை மணம் செய்துகொள்கிறார். அவர்களுக்கு சித்ராங்கதன், விசித்ரவீர்யன் என்று இரு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. மஹாராசா சந்தனுவுக்குப் பின்பு சித்ராங்கதன் சில காலம் அரசாண்டு, மணம் செய்துகொள்ளாமலேயே இறந்துபோகிறான். விசித்ரவீர்யன் அடுத்து அரசனாகிறான். அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று அரச குமாரிகளுக்குச் சுயம்வரம் நடக்கும் இடத்திலிருந்து அவர்களை பீஷ்மர் தூக்கிக்கொண்டு வந்து விசித்ரவீர்யனுக்கு மணம் முடிக்க முற்படுகிறார்.
அம்பா விசித்ரவீர்யனை மணக்க விரும்பாமல் நெருப்பில் மூழ்கி இறந்துபோகிறாள். அம்பிகாவையும் அம்பாலிகாவையும்விசித்ரவீர்யன் மணந்துகொண்டாலும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரேயே விசித்ரவீர்யன் இறந்துபோகிறான்.
இப்போது நாட்டை ஆள யாரும் இல்லை. பீஷ்மர் தான் செய்துகொடுத்த சத்தியத்தின் காரணமாக நாட்டை ஆள மறுக்கிறார். சத்யவதி வியாசரை வேண்டிக்கொள்ள, அவரது அருளால், ராணிகள் இருவருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. இவர்கள்தான்திருதராஷ்டிரனும் பாண்டுவும். கூடவே அருகில் இருக்கும் வேலைக்காரிக்கும் விதுரன் என்ற குழந்தை பிறக்கிறது.
திருதராஷ்டிரனுக்குக் கண் பார்வை கிடையாது. பாண்டுவுக்கு தோலில் நோய். திருதராஷ்டிரனுக்கு காந்தாரியையும்;பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என்ற இருவரையும் மணம் செய்துவைக்கிறார் பீஷ்மர். 
திருதராஷ்டிரன்-காந்தாரி தம்பதிக்கு 100 குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களின் முதலாமவன் துரியோதனன். இவர்கள் 100 பேரும் கௌரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். குந்திக்கு மூன்று பையன்கள்: யுதிஷ்டிரன்(தருமர்), பீமன், அர்ஜுனன். மாத்ரிக்கு இரு பையன்கள்: நகுலன், சகாதேவன். இந்த ஐவரும் சேர்ந்து பஞ்ச "பாண்டவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.
குந்திக்கு ஒரு முனிவர் சில மந்திரங்களைக் கற்றுத் தந்திருக்கிறார். அந்த மந்திரங்களை உச்சரித்தால் தேவர்கள் அருளால் அவளுக்குக் குழந்தை பிறக்கும். ஆனால் தனக்குத் திருமணம் ஆகும் முன்னரே அவள் இந்த மந்திரங்களை முயற்சித்துப் பார்க்கிறாள். அப்போது ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. பயந்துபோன குந்தி அந்தக் குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விட்டுவிடுகிறாள். அந்தக் குழந்தையை ஒரு தேரோட்டி எடுத்து வளர்க்கிறார். அந்தக் குழந்தைதான் கர்ணன்.குந்தியின் மகனாகப் பிறந்தாலும் கர்ணனுக்கு நெருங்கிய நண்பனாக இருப்பது துரியோதனன்தான்.
கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே சண்டை. சிறுவர்களாக இருக்கும்போதே போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு துரோணர் என்ற குரு கலைகளைக் கற்றுக்கொடுக்கிறார்.
திருதராஷ்டிரன் கண் பார்வைக் குறைபாடு உள்ளவர் என்பதால் பாண்டுவே நாட்டை ஆள்கிறார். ஆனால் காட்டில் இருக்கும்போது பாண்டுவுக்கு மரணம் ஏற்படுகிறது. பாண்டுவுடன் கூடவே மனைவி மாத்ரி உடன்கட்டை ஏறி இறக்கிறார். 
பாண்டவர்களும் கௌரவர்களும் அரசாளும் வயதை அடையும்போது, பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து தருமருக்கே(யுதிஷ்டிரனுக்கே) முடி சூட்டுகின்றனர். இது கௌரவர்களுக்குக் கடும் கோபத்தை வரவழைக்கிறது. துரியோதனன் அரக்கால் ஆன மாளிகை ஒன்றைக் கட்டி, பாண்டவர்களை விருந்துக்கு அழைத்து, அவர்களை அங்கு தங்கவைக்கிறான். இரவில் மாளிகையை எரித்துவிடுகிறான். ஆனால் துரியோதனைன் சதித் திட்டத்தை பாண்டவர்கள் (இதனை முன்னமேயே) ஊகித்து, தப்பி, காட்டுக்குள் சென்றுவிடுகின்றனர். காட்டில் இருக்கும்போது ஒரு சுயம்வரத்தில் அர்ஜுனன் திரௌபதியைவெல்கிறான். தாய் குந்தியின் ஆணைப்படி பாண்டவர்கள் ஐந்து திரௌபதியை மணக்கின்றனர்.
பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்து தங்களுக்கான நிலத்தைப் பங்குபோடுமாறு கேட்கின்றனர். அவர்களுக்குக் கிடைத்தகாண்டவ வனம் என்ற பகுதியை அழித்து இந்திரப்பிரஸ்தம் என்ற நாடாக மாற்றுகின்றனர். அவர்களது அழகான நாட்டைப் பார்த்து ஆசைப்படும் துரியோதனனுக்கு அவன் மாமா சகுனி உதவி செய்ய வருகிறார்.
சூதாட்ட விருந்து ஒன்றை துரியோதனன் ஏற்படுத்தி, (தருமரை)யுதிஷ்டிரனை அதில் கலந்துகொள்ள அழைக்கிறான். சூதாட்டத்தில் யுதிஷ்டிரன் (தருமர்) வரிசையாகத் தோற்று தன் நாடு, சொத்து அனைத்தையும் இழக்கிறான். அத்துடன் நில்லாமல், தன் தம்பிகள், தான், தன் மனைவி திரௌபதி என அனைத்தையும் இழக்கிறான். முடிவில் பெரியவர்கள் தலைப்பட்டு அடிமை நிலையை மாற்றி, பாண்டவர்கள் 12 ஆண்டுகள் காட்டிலும், ஓராண்டு யாராலும் கண்டுபிடிக்கமுடியாமலும் நாட்டிலும் இருக்கவேண்டும் என்று சொல்கின்றனர். 
இந்தக் காலம் முடிவுற்றதும் பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிவந்து; தங்கள் சொத்துகளைத் திரும்பக் கேட்கின்றனர். கிருஷ்ணர் பாண்டவர்கள் தரப்பில் தூது செல்கிறார். ஆனால் துரியோதனன் ஊசி முனை அளவு நிலம் கூடத் தரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறான். இதன் விளைவாக மகாபாரதப் போர் குருட்சேத்திரத்தில் நடைபெறுகிறது.
போரில் பாண்டவர்கள் வெல்கின்றனர். ஆனால் பேரழிவு ஏற்படுகிறது. இரு தரப்பிலும் கடுமையான உயிர்ச் சேதம். பீஷ்மர், துரோணர் முதற்கொண்டு அனைவரும் கொல்லப்படுகின்றனர். கௌரவர்கள் 100 பேரும் கொல்லப்படுகின்றனர். கர்ணனும்கொல்லப்படுகிறான். பாண்டவர்கள் ஐவரும் பிழைத்திருந்தாலும் அவர்களுடைய பிள்ளைகள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். இறுதியில் கிருஷ்ணன் அருளால் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் மனைவி உத்தரையின்வயிற்றில் இருக்கும் கரு ஒன்று மட்டும் உயிர் பிழைக்கிறது. அந்தக் குழந்தைதான் பரீட்சித்து.
பரீட்சித்து வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனுக்குப் பட்டம் கட்டிவிட்டு, பாண்டவர்கள் அனைவரும் இமய மலைக்குச் சென்று உயிர் நீர்த்தனர்.

  நன்றி : http://www.panippulam.com

Sunday, 27 October 2013

நகைச்சுவை படங்களில் தீமைகள் இல்லை...


சீரியசான நாடகங்களையும், திரைப்படங்களையும் விட நகைச்சுவை படங்களே மக்களுக்கு நன்மைகளைச் செய்கின்றன. வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதற்கிணங்க நல்ல நகைச்சுவை நமது நோய்களை நிறுத்தி வைக்கும் தன்மை வாய்ந்தது.

அந்த வகையில் வடிவேலுவின் நகைச்சுவையை ரசிக்கும் அதே நேரம் அவரைப்போல மற்றவர்களும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து சினிமா எடுக்க முன்வருவார்கள் என எதிர்பார்ப்போம்.


( அடிதடி, வெட்டு, குத்து படங்களை விட, நகைச்சுவை எனும் தலைப்பில் மட்டமாக வரும் படங்கள் எவ்வித தீமையையும் செய்து விடாது.. )

இளைஞர்களிடையே கலாச்சார மாற்றங்கள் விபரீத நிலையை எட்டுவதற்குள் சில அதிரடி நடவடிக்கைகளை நம் சமூக நன்மையைக்கருதி சினிமா தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது.

வன்முறையைத் தூண்டும் படங்கள் இளையோரைக் கெடுப்பதாக இருப்பதால், நகைச்சுவை படங்களை இன்னும் சற்று புதிய முறைகளில் எடுத்து நல்லவிதம் தொழில் செய்யலாம். எவ்வித பழி பாவங்களுக்கும் அவர்கள் பதில் சொல்லத்தேவை இல்லை....இங்கும் சரி, அங்கும் ( ? )சரி.

ஒழுங்கும் பொறுப்பும் எல்லோரிடமும் இருக்க வேண்டும். அதிலும் இளைஞர்களிடையே இல்லையேல் நாடே குட்டிச்சுவராகி விடும். அந்த நற்பண்புகளை இளையோர் மத்தியில் வளர்த்துவிட சினிமாவால் நிச்சயம் முடியும். ஹீரோக்கள் கத்தி, கம்பு, கடப்பாறையினைக்  கீழே போடும் அதே நேரம், ஹீரோயின்கள் தங்களது தாவணியினைக் கையிலெடுக்க சினிமாதான்  வழிகாட்ட வேண்டும் முடியும்.

அத்துறையில்  சம்பந்தப்படும் ஒவ்வொருவரும் ஒழுங்காகவும், பொறுப்பு மிக்கவர்களாகவும் நடந்து கொண்டால் சரி.


சுசன் பொல்கார்...

ஹங்கேரி நாட்டவரான சுசன் பொல்கார் ஆப்ரல் 19, 1969ல் பிறந்தவர்.


சுசன் பொல்கார்... 

செஸ் எழுத்தாளரும், பெண்கள் பிரிவில் செஸ் சாம்பியனும், சுசன் பொல்கார் இன்ஸ்டிடுடெ ஃபோர் செஸ் எக்ஸலென்ட் என்கிற பிரிவின் தலைமை நிர்வாகியாக  டெக்ஸஸ் யூனிவர்சிட்டியில் பணிபுரியும் இவர் தனது 15வது வயதில் 1984ல் இருந்து சுமார் 23 ஆண்டுகள் உலக தரத்தில் முதல் மூன்று நிலைகளில் இருந்து சாதனை படைத்தவர்.

1996 முதல் 1999 வரைக்குமான பெண்கள் பிரிவின் உலக சாம்பியனான சுசன் பொல்கார், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனும் ஆவார். தனது 4வது வயதில் புடாபெஸ்ட் நகரில் நடந்த 11வயதுக்கும் குறைந்தவர்களுக்கான போட்டியில் கலந்து கொண்டு வென்றவர் இவர் என்பது மற்றுமொரு ஆச்சரியமான தகவல்.

ஃபைட் சம்மேளனத்தின் பெண்கள் பிரிவிற்கான பொறுப்புக்களுடன் நீண்ட காலம் செஸ் பற்றிய விழிப்புணர்வை பெண் குழந்தைகளுக்கு அமெரிக்காவில் தனது அமைப்பொன்றின் வழி சேவையாற்றி வருகிறார்.

 போரிஸ் ஸ்பாஸ்கியுடன்...

  ஆனந்துடன்...

அனட்டொலி கர்பாவ்வுடன்...

ஆண்களுக்கு நிகராக அனைத்துலக அரங்கில் செஸ் ஏற்பாட்டாளராகவும், சம்மேளனத் தூதராகவும் பவனி வரும் சுசன் பொல்கார் தன்னால் இயன்றவரை,  செஸ் மக்களைச் சென்றடைய தொடர்ந்து அனைத்தும் செய்வதாக சொல்கிறார்.

ஆண்களின் ஆதிக்கத்தில் செஸ் அமைப்பில் இப்படி ஒரு பெண் இருப்பது படிக்க சுவாரஸ்யமான ஒன்றாக எனக்குப் பட்டது. செஸ் பிரியர்களுக்காக அதை இங்கே பதிவிடுகிறேன்.

 சுசன் பொல்கார், மேலும் சில படங்கள்...





இவரைப் போன்று,  சதுரங்கம் மற்றவர்களையும் சென்றடைய சேவையாற்றும் தமிழ்ப் பெண்கள்  பற்றிய தகவல் தெரிந்தால் தந்துதவலாமே...

மெக்னஸ் கார்ல்சன்...

 நவம்பர் மாத தொடக்கத்தில் இடம் பெறவிருக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் ஆனந்தை எதிர்த்து ஆட இருக்கின்ற கார்ல்சன் இவரே....





வெள்ளை  டீ- சட்டையில்மெக்னஸ் கார்ல்சன்... 

செஸ் நாவல்...

சதுரங்கம் விளையாட்டுக்களில் மட்டுமல்ல, பல மொழிகளின் இலக்கியத்திலும், கதை கவிதைகளில் கையாளப்பட்டிருக்கின்றது. பலரும் அதை சுவை குன்றாது கையாண்டிருக்கின்றனர்.

வால்ட்டெர் புளிட்ஸெர் என்பவர் இரு நாவல்களை தந்திருக்கின்றார், சதுரங்கத்தை மையப்பொருளாக.... அவரின்  இரண்டு நாவல்களில் ஒன்று, செஸ் ஹார்மொனீஸ், மற்றது தட் டுவல் எட் த சாட்டோ மர்சனெக்.


இரண்டாவது நாவல் எலினோர் மார்சனெக் என்னும் மங்கை ஒருத்தியை இரு வாலிபர்கள் விரும்புகின்றனர், பிளெக்ஸ் என்னும் சீமானும், பெர்டினன்ட் வோன்ஸ்டைன் எனும் மற்றொருவனும். இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவேண்டிய சூழ் நிலையில் ஒரு சதுரங்க ஆட்டத்தில் வெற்றி பெறுபவரே எலினோரை அடையத் தகுதி வாய்ந்தவர் என முடிவெடுக்கப்படுகிறது.


இரண்டாம் படத்தில் வோன்ஸ்டைனுக்கு எலினோர் காப்பி தருகிறார் ஆட்டத்தின் நடுவில்.



மூன்றாம் படம் முடிவைச் சொல்கிறது.

க்ளீவ்லெண்ட் பொது புத்தகச் சாலையில் இருந்து பெறப்பட்டு ஒரு வலைப்பதிவாளர் போட்டுக்கொள்ள, அங்கிருந்து நமது தமிழ் செஸ் பிரியர்களுக்காக நாமும் சுட்டு இங்கே பதிவிட்டுவிட்டோம்.
 ( அவருக்கும் அவர்களுக்கும் நமது நன்றிகள் ).

செஸ் சாம்பியன்கள் - 3

1995ம் ஆண்டு அன்றைய சாம்பியனான காஸ்பராவின் பட்டம் பறிக்கப்பட்டது.  அனைத்துலக செஸ் சம்மேளனத்திற்கு எதிராக ஷாட் எனும் விளையாட்டாளருடன் அங்கீகரிக்கப் படாத விளையாட்டொன்றில் கஸ்பராவ்  கலந்து கொண்டதால் அவர் தண்டிக்கப்பட்டார்.

ஆயினும் 'த புரோஃfபெஷனல் செஸ் அஸ்சோசியேஷன்' எனும் காஸ்பராவின் தலைமையிலான அமைப்பு, அவரை எதிர்த்து விளையாடக்கூடிய தகுதி வாய்ந்த போட்டியாளர்களை அடையாளம் காணும் பணியில் தமிழ் நாட்டு விளையாட்டளரான ஆனந்து விஸ்வநாதனே காஸ்பராவை எதிர்கொள்ளும் தகுதியானவர் என அறிவித்தது. ஆனந்தின் அதிசயக்கத்தக்க வளர்ச்சியை உலகம் கவனித்து வந்ததும் இதற்கொரு காரணம்.

உலக வாணிப மையத்தின் 107வது மாடியில் இவர்களுக்கிடையேயான ஆட்டங்கள் நடைபெற்றன.  வழக்கமான 24 ஆட்டங்களாக இல்லாமல், 20 ஆட்டங்கள் மட்டுமே போதுமானதாக முடிவு செய்யப்பட்டது. முதல் 2 மணிகளில் 40 நகர்த்துதல்கள், அடுத்த ஒரு மணி நேரத்தில் 20 நகர்த்துதல்கள் மற்றும் தொடரும் 30 நிமிடங்களில் போட்டியினை முடித்திடும் சட்ட திட்டங்கள் உறுதிசெய்யப்பட்டன.

18 ஆட்டங்களுக்குப்பின் கஸ்பராவ் வெற்றிபெற்றார்.


இலியம்ஷீனொவ் தலைமைத்துவத்தின் கீழ், 1997ம் ஆண்டு, ஃபைட் வழக்கமான அனைத்துலக தேர்வுப் போட்டிகளை ஓரங்கட்டிவிட்டு, முற்றிலும் புதுமையான தேர்வாட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தியது.

100 விளையாட்டாளர்களைக் கொண்ட நொக் அவுட் முறையிலான போட்டியின் வழி, சமநிலையின் போது பிலிட்ஸ் எனும் விறு விறு ஆட்ட வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும் புதிய முறையில் தேர்வுப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இதில் வெற்றி பெறுபவர், மூன்று நாள் ஓய்வுக்குப்பின், ஃபைட் சாம்பியனான அனட்டொலி கர்பாவை எதிர்த்து ஆட முடிவு செய்யப்பட்டது.

1995ம் ஆண்டு பி.சி.எ அமைப்பின் கஸ்பராவை சந்தித்து தோல்விகண்ட ஆனந்த், நிக்கோலிக், கலிஃமன்,அல்மாசி, ஷிரோவ், கெல்பன் மற்றும் அடாம் ஆகியோரை தோற்கடித்து அனட்டொலி கர்பாவ்வை சந்தித்து ஃபைட் உலக சாம்பியன் பட்டத்துக்கு போட்டியிடும்  தகுதி பெற்றார்.

ஆனந்து விஸ்வநாதன் எனும் பெயர் உலகெங்கும் மேலும் வேகமாக பரவத்தொடங்கியது.

2770 புள்ளிகளில் சாம்பியன் கர்பாவ்வை விட 35 புள்ளிகள் அதிகம் பெற்று விறு விறு செஸ் உலகின் அசைக்க முடியாத விளையாட்டாளராக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

உலக சாம்பியன் பட்டதுக்கு வேண்டிய அனைத்து தகுதிகளையும் கொண்டவர் இவர் என பல இடங்களிலிருந்தும் புகழ் மாலைகள் வந்த வண்ணம் இருந்தன. இருப்பினும், பார்வையாளர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கவே செய்தது.

எந்தவித ஆட்டக்களைப்புமின்றி, ஃபிரெஷாக  ஆனந்தை எதிர் பார்த்திருக்கும் கர்பாவ் ஒரு புறமும், பல கடுமையான ஆட்டங்களையும், திறமையானவர்களையும் போட்டியிட்டு வெறும் மூன்று நாட்கள் இடைவெளியில்  உலக சாம்பியன் பட்டத்துக்கு போட்டியிடும்  ஆனந்த் மறுபுறமும் இருக்க, இறுதி ஆட்டங்களின் நிலை எப்படி இருக்குமோ என யூகிக்க சிரமம் ஏற்பட்டது. 1998ம் ஆண்டில், அனைத்துலக ஒலிம்பிக் கமிட்டி மியூசியம் அரங்கில் ரஷியாவின் அனட்டொலி கர்பாவ்வை எதிர்த்து இந்தியாவின் ஆனந்த் களம் இறங்கினார்.

போட்டி  கடுமையாக இருந்தது. முதல் மூன்று ஆட்டங்களில் 3-3 என இருவரும் சம் நிலையில் இருக்க தொடர்ந்து இரண்டு விறு விறு ஆட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் கர்பாவ் இரண்டிலும் வென்று ஃபைட் சம்மேளனத்தின் சாம்பியனானார்.

கஸ்பராவ், கர்பாவ் ஆகிய இருவருடனான போட்டிகளில் தோல்வி கண்டாலும் ஆனந்த் உலகச் சாம்பியனாகும்  காலமும் பின்பு வந்தது.


அனட்டொலி கர்பாவ் மற்றும் கஸ்பராவ்வுடன் சுசன் பொல்கார்...

2000ம் ஆண்டில், ஃபைட் சம்மேளனம் 1997ம் ஆண்டு போலவே அனைத்துலக சாம்பியன் போட்டிகளில் மீண்டும் ஒரு மாற்றத்தை புகுத்தியது.

அதில் வழக்கமான முறையில் தேர்வு பெற்று வருவோரை சந்திக்காமல், நடப்புச் சாம்பியனும் நொக் அவுட் முறையிலான  பூர்வாங்கப் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே அந்த புது மாற்றம்.

ஆனந்தை வீழ்த்தியதின் வழி சாம்பியனான அனட்டொலி கர்பாவ் இந்த புது விதிமுறையினை எதிர்த்து கோர்ட்டுக்குச் சென்றார்.

2000ம் ஆண்டுக்கான உலகச் சாம்பியனாக  தேர்ந்தெடுக்கும் போட்டிகள், நவம்பர் 26 முதல் டிசம்பர் 28 வரை  இந்தியாவிலும், இறுதி ஆட்டம் ஈரானிலும் நடைபெற்றது.

ஏற்கனவே போலோகன், லிப்பிடியன், மாசியா, சாலிஃப்மன், ஆடம்ஸ் போன்றோரை வெற்றி கண்டு இறுதி ஆட்டத்திற்கு இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் தகுதி பெற்றிருந்தார்.

அவரைப்போன்றே, அலெக்ஸி ஷிரோவ் தகுதி பெற்று இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார்.



இறுதிச் சுற்று டெஹ்ரான் நகரில் 2000ம் ஆண்டு நடைபெற்றது.  நான்கே ஆட்டங்களில், அசைக்க முடியா பெரும்பான்மையில் ஆனந்த் வெற்றியாளரானார்.

உலக விளையட்டரங்கில் இந்தியாவையும், தமிழ் நாட்டையும்...ஏன், நம் தமிழ்ச் சமூகத்தையும் பரவச் செய்ததில் ஆனந்துக்கு பெரும் பங்குண்டு.

1987ல் அனைத்துலக நிலையில் கால் பதித்து நடக்கத்தொடங்கிய ஆனந்த், 13 வருடங்களிலேயே உலகச் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். கர்பாவ், கஸ்பராவ் போலவே தனது தனித்துவமான வேகமிகு ஆட்டத்தில் உலகையே ஆச்சரியப் பட வைத்தார்.

வழக்கமான பாணியிலிருந்து புதுமைகளைப்புகுத்திய கஸ்பராவ் போலவே இவரும் வித்தியாசமான பாணியில் மற்றவர்களைவிட சற்று விறுவிறுவென வேகமாக ஆடும் கலையை வளர்த்துக்கொண்டார். எதிரிகளை அதிகம் தடுமாறச்செய்தது இவரின் பல ஆட்ட நகர்த்துதல்கள்.

செஸ் உலகின் மன்னனாக ஆனந்த் உலா வரத்தொடங்கினார்.