Saturday, 25 May 2013

டி எம் சௌந்தரராஜன் காலமானார்...



சுமார் 60 ஆண்டுகளாக தமிழ்ச் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த பிரபல மற்றும் பிரமாண்டமான பாடகர் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் தனது 91வயதில் இறைவனடி சேர்ந்தார்.

எம்.எஸ்.சுப்பையா நாயிடுவால் அன்றைய சுப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதருக்கு முதன் முதலில் குரல் கொடுத்தார். பிறகு எம்ஜிஆரின் " எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" எனும் மலைகள்ளன் பாடலின் மூலம் புகழ் பெறத் தொடங்கினார். தொடர்ந்து அவர் எம்ஜிஆருக்கென குரல் கொடுக்கும் முக்கிய பாடகராக அறிமுகமானார். கிடைத்த பல வாய்ப்புக்களை அவர் தன் குரல் வலிமையால் நிரூபித்து தனக்கு நிகர் யாருமில்லை எனச் சொல்லும் அளவுக்கு பேரும் புகழும் பெற்றார்.

யாருக்காகப் பாடுகிறாரோ அவர்களைப் போல குரலை மாற்றிப் பாடுவது இவரின் பாணி. ஐம்பதாம் அறுபதாம் ஆண்டுகளின் தமிழ்த்திரை உலகின் முக்கிய நடிகர்களாகிய எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்றோருக்கு இவரின் குரல் அப்படியே பொருந்தியது.
 எனவே அவர்களின் பல படங்களுக்கு குரல் கொடுத்ததன் வழி அவர்களோடு இவரும், இவரோடு அவர்களும் புகழ்பெற்றனர்.

சுமார் பத்தாயிரம் பாடல்கள் பாடி இருக்கும் இவர், முருகன் பக்திப் பாடல்கள் என வெளியிட்ட ஒலி நாடா மற்றும் சீடிக்கள் மிகவும் பிரபலமானவை.



Friday, 24 May 2013

வைகாசி விசாகம்...



கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து:

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இது. விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.

 நம்மூர் ஆலயங்களில் தற்போது  வெகு விமரிசையாக இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

சின்ன சின்ன நடை நடந்து...

'சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
அம்மா என்று நீ அழைத்தால்
அமுத கானம்
பொழியுமடா
அமுத கானம் பொழியுமடா...'

அன்னையர் தினம், தந்தையர் தினம், ஆசிரியர் தினம் மற்றும் தாதியர் தினம் போன்ற  சிறப்பு தினங்களை ஏன் கொண்டாடுகிறோம்....?

அவர்களின் சேவைகளுக்கு மதிப்புக் கொடுத்து, அந்த தியாகத்தை போற்றி, அவரகளின் தொண்டுள்ளத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலே தான் நாம் அது போன்ற சிறப்பு நாட்களை நினைவுகூர்கிறோம். அவை அந்த ஒரு நாட்களுக்கு மட்டுமல்ல, தொடர்ந்து வரும் எல்லா நாட்களிலும் அவர்களின் அர்ப்பணிப்பு பூஜிக்கப் படவேண்டும்.

இந்த தூய எண்ணம் நம் மனதில் என்றென்றும் இருப்பது அவசியம்.

சின்ன சின்ன நடை நடந்து

செம்பவள வாய் திறந்து
சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து

அம்மாவென்று நீ அழைத்தால்
அமுத கானம் பொழியுமடா
அமுத கானம் பொழியுமடா

ஆடி வரும் தென்றல் என்பார்
பாடி வரும் அருவி என்பார்
ஆடி வரும் தென்றல் என்பார்
பாடி வரும் அருவி என்பார்

தேடி வரும் செல்வம் உன் போல்
தெய்வம் வேறு இல்லையடா
தேடி வரும் செல்வம் உன் போல்
தெய்வம் வேறு இல்லையடா

கொஞ்சும் அழகை கேட்கையிலே
குழலும் யாழும் பொய்யன்றோ
கொஞ்சும் அழகை கேட்கையிலே
குழலும் யாழும் பொய்யன்றோ

மேவும் தமிழே உன்னையன்றி
வேறு சொந்தம் இல்லையடா
மேவும் தமிழே உன்னையன்றி
வேறு சொந்தம் இல்லையடா

சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து

அம்மாவென்று நீ அழைத்தால்
அமுத கானம் பொழியுமடா
அமுத கானம் பொழியுமடா!!


'காவேரியின் கணவன்' படத்தில்  பி.சுசீலாவின் குரலில் இந்த பாடல் தாயுள்ளத்துக்கு ஒரு உதாரணம். பழைய பாடல் விரும்பிகளுக்கு இன்றும் இனிமை சேர்க்கும் அற்புதமான ஒன்று இது.

'வாங்க... போங்க' என குழந்தைகளை அழைப்பது...

மற்றவர்களை மரியாதையுடன் நடத்துவது காலங்காலமாக நம் சமூகத்தில் உள்ள ஒரு உன்னத பண்பு.  மேலை நாட்டு கலாச்சார சீர்கேடுகள் இறக்குமதியாகும் இப்போதும் மரியாதை என்பது தொடர்ந்து நாம் கட்டிக் காப்பாற்றி வரும் ஒன்றாகும்.

தாய், தந்தை எனும் வித்தியாசமின்றி சினிமாவில் புகுத்தப்படும் கேவலமான உரையாடல்களைத் தவிர்த்து நம் நாட்டில் எல்லா வீடுகளிலும் குறை சொல்ல முடியா அளவுக்கு மரியாதைக்கு எவ்வித பங்கமுமில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆயினும், மரியாதை என்பது சிறுவர்களுக்கு வித்தியாசமாக கற்பிக்கப் படுகிறது இப்போது.  பாலர் பருவத்திலேயே "வாங்க ...போங்க..." என்கிற மரியாதைச் சொற்களுடன் மழலைகள் அழைக்கப்படுகிறார்கள். அதன்படியே, அதனைச் சார்ந்தவாறே அனைவரும் குழந்தைகளை அழைக்கவேண்டிய கட்டாயம் இப்போது யாவருக்கும் திணிக்கப் படுகிறது. இதில் தவறில்லைதான். இதனால் குழந்தைகள் மரியாதையைக் கற்றுக்கொள்கிறார்கள் என்றால் அது நல்லது தானே...

ஆனல், பல குடும்பங்களில் உண்மை நிலை இதுவா?

 நாம் சிறுவர்களாக இருந்தபோது இந்த " வாங்க...போங்க..." எனும் பண்பான வார்த்தைகளை நம் பெற்றோரும், சுற்றத்தாரும் எப்படிச் சொல்லித் தந்தனர் என்பதை இங்கு நினைவு கூறும் போது, அன்றைக்கும் இன்றைக்குமான நடைமுறை வித்தியாசங்கள் பல  தெரிகின்றன.

வயதில் மூத்த யாவரையும் நாம் மரியாதைக் குறைவுடன் அழைத்ததே இல்லை.  ஆனாலும் நம் வீட்டுப் பெரியோர் நம்மை இப்போதைய "ஸ்டைலில்" வாங்க ... போங்க... என அழைத்ததில்லை.

காலச் சூழலில், வா...போ... நீ எனும் ஒற்றைசொல்லின் பயன்பாட்டை குறைப்பதற்காக இவ்வாறு குழந்தைகள் அழைக்கப் படுகிறார்கள் என்று வாதிடுவோர் கூறினாலும் இப்படியான குடும்பங்களில் இவர்கள் சொல்வதுபோல் "ங்க...." எனும் மரியாதை நிலை நிறுத்தப் படுகிறதா என்றால் பல வீடுகளில் இல்லை என்ற பதில் தெளிவாகத் தெரிகிறது.
பெற்றோர் பிள்ளைகளை "ஐயா வாங்க...அம்மா வாங்க.." என அழைக்கிறார்கள். ஆனால் குழைதைகளோ..."அம்மா, தண்ணி கொண்டு வா..சோறு ஊட்டு..." என ஒருமையில் பதில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அப்படியானால் சொல்லித்தரப்படும் இந்த " ங்க..." அவ்வளவுதானா?  வெறும் பந்தாவுக்குத்தான் மற்றவர் முன் குழந்தைகளை 'வாங்க போங்க' என அழைக்கிறார்களோ..?

 நம்மைச் சுற்றி உள்ள சிலரின் உரையாடல்கள் சுவாரஸ்யமாக இருக்கும்...

மகள்      : அம்மா வா வீட்டுக்கு போகலாம்...
அம்மா : கொஞ்சம் பொறுங்கம்மா, ஆண்டியோட அஞ்சு நிமிஷம் பேசிய  பிறகு உங்கள வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்...

---------
அப்பா  : ராயன், கணக்கில் உங்க மார்க் நல்லா இல்லையே...அங்கிள் கிட்ட காட்டுங்க...
மகன்  : நீதான் எனக்கு டியூசனுக்கு ஏற்பாடு பண்ணலயே..அத மொதல்ல அங்கிள் கிட்ட  சொல்லு...

--------
இப்படி பல நடப்புக்கள் நம்மைச் சுற்றி மரியாதைக்கான உதாரணங்களாக நாம் பார்க்கலாம்.

உண்மையில் மரியாதை என்பது வார்த்தயில் அல்ல.  அது மனதில் இருப்பது. பெற்றோர் பிள்ளைகளுக்கு மரியாதை என்பதன் பொருளை சிறுகச் சிறுக விளக்கிவர குழந்தைகள் உணரத்தொடங்கி விடுவார்களேயன்றி, இந்த "ங்க.." நடைமுறை, பல குடும்பங்களில் காமெடி விசயமாகவே இன்றிருக்கிறது.

 நம்ம வீட்டுல எப்படி?

வாகன நெரிசல்...

நம் நாட்டில் பல பிரமாதமான மாநகர்கள் இருந்தாலும் போக்கு வரத்து வசதி என பார்க்கும்போது நமக்கு தலையை சுற்றுகிறது.  நம்முடைய இன்றியமையாத தேவை தற்போது அதிகம் சிறமமில்லாத போக்குவரத்து  வசதிதான். இது வாகனம் செலுத்துவோர் மட்டுமல்ல, பொதுமக்களும் எழுப்பும் முக்கிய கேள்வியாகும்.

 நமக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் எதிர்பார்ப்பது சுலபமாக நகரின் கடைத் தெருக்களுக்குச் செல்வதுதான். ருசிமிகும் உணவுக்கும், தங்களின் தேவைக்கான இதர துணிமணிகளுக்கும் நிம்மதியாக கடைகளுக்கு சென்று வருவதையே இங்கு வரும் பெரும்பாலானோர் பெரிதும் விரும்புவார்கள்.

கோலாலம்பூர், கிள்ளான், பினாங்கு, ஜோகூர் மற்றும் பல நகர்களிலும் சாலைகளில் குவியும் வாகனங்களைக் காணுகின்ற போது சுற்றுலாப் பயணிகள் பல கசப்பான அனுபவங்களுக்கு தங்களைத் தயார் படுத்திக்கொண்டுதான் இங்கு வரவேண்டி உள்ளது.

 நினைத்த நேரத்தில் ஒரு இடத்துக்குச் சென்று சேர முடியாத நிலை இன்னும் தொடர்வது  ஆச்சரியமான ஒன்றுதான். காரணம் உலகின் பல நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்வது நமது சாலைகளும் அதன் தரமும் என்றால் அது பொய்யில்லை.

வாகன நெரிசலை தீர்க்க என்னவெல்லாமோ அரசாங்க அதிகாரிகள் முயற்சிக்கிறார்கள். ஆயினும் சரியான தீர்வை அவர்கள் தொட்டதற்கான அறிகுறிகளைக் காணோம். பல இடங்களில் தொடங்கப் பட்ட சாலையை சீர் செய்யும் வேலைகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கின்றன.
மானியத் தொகை போதாததால் குத்தகைக் காரர்கள் தொடர்ந்து சீரமைப்புப் பணிகளை செய்ய முடியாததாகிறது.

அழகாக தூர நோக்கு சிந்தனையில் தொடங்கப் பட்ட பல போக்குவரத்து பணிகள் பல வருடங்களாக  முடங்கிக் கிடப்பதை நாம் பார்க்க முடிகிறது. அரசாங்கம் இவற்றில் தீவிரம் காட்டாத வரையில், நெரிசல்கள் குறையும் சாத்தியம் நிச்சயம் இல்லை.

உள்ளூர்வாசிகள் அத்தியாவசிய தேவையின்றி நகரின் வீதிகளுக்குச் செல்ல அஞ்சும் அளவுக்கு இந்த வாகன நெரிசல்  இருக்கின்றது தினமும்.  மணிக் கணக்கில் வாகனங்களில் மெல்ல ஊர்வது நம்மில் பலருக்கும் பொறுமையை சோதிக்கும் அனுபவமாகும்.

பொதுப் போக்குவரத்தில் போவது பல இடங்களில் உச்சிதமில்லாத ஒன்றாக இருக்கும் நிலை இப்போது. பொது போக்குவரத்து வாகனங்களுக்கென தனிப் பாதை இல்லாததால், வழக்கமான நெரிசலில் சிக்கியே நகர்கின்றன. 

முன்பு வேலை தொடங்கும் போதும் முடியும் போதும் இருந்த வாகன நெரிசல் இப்போது மற்ற நேரங்களிலும் தொடர்வது சம்பந்தப் பட்ட அமைச்சும் அதன் அதிகாரிகளும் சரியான திட்டமிடல் வழி, தேவைக்கேற்ப போக்குவரத்து விதிகளில்  மாற்றங்களை அமல் படுத்தவேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

Wednesday, 22 May 2013

கடன் பட்டார் நெஞ்சமா...அப்படின்னா???

" நாம் கேட்பதை நிறுத்தும்வரை மற்றவர்கள் நமக்கு அல்வா கொடுத்துக்கொண்டேதான் இருப்பார்கள். அதற்காக கேட்பதை நிறுத்திவிட முடியுமா என்ன? கிடைக்கும் வரை கேட்டுதான் ஆகவேண்டி இருக்கு...."
மெல்ல என் காதுகளில் கிசு கிசுத்தார் பக்கத்திலிருந்த என் நண்பர்.

"என்ன சொல்றீங்க..விளங்கலையே..." என்று அவரைப் பார்த்தேன்.

"அவசரம்னு ஆயிரம் வெள்ளி கேட்டார், கொடுத்தேன். இப்ப என்னப் பார்த்ததும் வேறு பக்கமா என் கண்ணில் படாதமாதிரி போறார்..." என்றார்.

" அடடா...என்ன தவறு பண்ணிட்டீங்க..கடன் கொடுக்கலாமா...? கடன் அன்பை முறிக்கும்னு படிச்சதில்லையா....?"

"கொடுக்கக் கூடாதுன்னுதான் நினைச்சேன்...சோகமா கதை சொன்னார். நிச்சயம் ஓரிரண்டு மாசத்துலே கொடுத்திடுறேன்'னார். ஒரு வருசத்துக்கும் மேலாச்சு...ஹ்ம்ம்ம்..."

 நண்பருக்கு பணம் திரும்ப வராவிட்டாலும் சாக்கு போக்கு சொல்லி தம்மை ஏமாற்றி ஒளிந்து கொண்டிருக்கும்  கடன் வாங்கியவரின்  செயல் சினமூட்டியது.

ஒரு ஆபத்து அவசரத்துக்கு 'கைமாத்தாக' வாங்குவது இயற்கை. ஆனால் நாணயம் தவறலாமா? நாக்கில் சுத்தம் அவசியமன்றோ... வாங்கியதை திருப்பிக்   கொடுக்கும்போது இப்படிச் செய்தால் பின்பு உண்மையான காரணங்களோடு  உதவி கேட்டு வருவோருக்கு மற்றவர்கள் எப்படி உதவி செய்வார்கள்...?

அதுமட்டுமல்ல, உதவும் மனப்பான்மை உள்ளோரிடம் சுமூகமாக பழகவேண்டாமா...? அதுவரை நன்றாக பழகியவர்கள், கடனை பெற்றபின்பு பழகுவதை குறைத்துக்கொள்வதும், பார்த்தும் பார்க்காதது போல போவதும் அந்த நட்பையும் உறவையும் கொச்சைப்படுத்துவதாகாதா???

"அவர் நல்ல நண்பர்தான். ரொம்ப நாள் பழக்கம். அதன் அடிப்படியில் தான் கொடுத்தேன். அவருக்கு அப்போ என்ன கஷ்ட்டமோ அது இந்நேரம் தீர்ந்திருக்கும். அதனால பணத்தை திருப்பிக்கேட்டேன். இப்ப, மனதை வருத்தப்படுறது மாதிரி நடந்துக்கிறார்."

நானும் கொடுத்துதவி இருக்கிறேன். ஆயினும், மனதினில் ஒரு நெருடல். அவரின் அனுபவம் நமக்கும் ஒரு பாடம்தான். தொகை எவ்வளவென்பது இங்கு கேள்வி அல்ல. நடந்துகொள்ளும் விதமே நம்மை நாம் எக்குல மக்கள் என எண்ண வைக்கிறது. வாக்குச் சுத்தத்தினைக் கடைபிடிப்போர் உயர்ந்தவரென்றும், பித்தலாட்ட மனமுடையோர் தாழ்ந்தவரென்றும் முன்னோர் சொன்னது பொருள் புதைந்த வாக்கியமன்றோ...

செத்தால்தான் சுடுகாட்டுக்கு பாதை தெரியவேண்டுமா, என்ன? நம்மை சுற்றி நடப்பவைகளை வைத்தே சுதாகரித்துச் செல்லும் சுபாவம் வேண்டும்.

கடன் வாங்குபவர் ஒரு நாள்தான் நம் வீட்டுக்கு நடக்கிறார். கொடுப்பவர்களோ ஆயிரம் முறை நடக்கவேண்டி இருக்கிறது கொடுத்த பணத்தை திரும்பப்பெற. இது கடன் பற்றி சொல்லப்படுகிற நகைச்சுவை. வெறும் நகைப்புக்கு மட்டுமன்று, பொதிந்திருக்கும் உட்கருத்து நமது கௌரவத்தின் தரத்தினை நிர்ணயிக்கிறது.

"இல்லாதபோது வாங்குறாங்க. இருக்கும்போது கொடுக்கலாமில்லையா...?"

 நாம் பிறரிடம் கடன் வாங்கும் போது எவ்வளவு சிரமப்படுகிறோமோ அந்தளவு பாதுகாப்பு அம்சங்களை கண்டறிய   வேண்டும் பணம் கை மாறும் முன். இல்லையேல், கொடுத்தப் பணம் ஒரு வழிப் பயணம் போன கதைதான்.

காலம் மாறுது...

இனி உலக அறிவு இல்லாமல், சென்றடைய வேண்டிய இலக்கு இல்லாமல் நாம் வாழ்வது நாளுக்கு நாள் சிரமமாகிக் கொண்டு  வருகிறது. அறிவு ஜீவிகளாக இருக்காவிடினும், நமக்குத்  தேவையான தெளிந்த அறிவை அடைந்தே ஆகவேண்டிய அவசியம் வந்துவிட்டது.

இந்த நிலையில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ளாவிடில், மற்றவர்கள் சொல்லுவதையே நாம் எப்போதும் கேட்டு தலை ஆட்டவேண்டி இருக்கும். எல்லா விசயத்திலும் அவர்கள் நம்மை விட ஒருபடி முன்னே நிற்பார்கள்.

ஆக, மற்றவர்களுக்கு இணையாக நாம் வாழ  பொது அறிவும், நுண்ணறிவும் நமக்குத் தேவை.

'இன்டர்நெட்' என்னும் 'கம்யூட்டர்' உலகம் நமக்கு அந்த வாய்ப்பினை வழங்குகிறது.

உலகம் என்பது இப்போது கையடக்க ஐபேட்டிலும், ஐபோட்டிலும், கைபேசிகளிலும்  வந்துவிட்டது.  எதைப்பற்றி நாம் தெரிந்து கொள்ள நினைத்தாலும் அவை அனைத்தும் ஒரு சில வினாடிகளில் நம் கண் முன்னே காட்டிவிடும் இது போன்ற கையடக்க கருவிகள்.

சர்வதேச நிகழ்வுகளைக்கூட நம் வீட்டில் நடக்கும் சர்வ சாதாரண ஒன்று போல நம் பார்வைக்கு கிடைக்கின்றன சில நேரடி இணையதளங்கள் மூலமாக.

"காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாறவேண்டும்
நம்மால் நாடும் மாறவேண்டும்"