Friday, 8 March 2013

படித்ததில் பிடித்தது - சரித்திர குறிப்புகள் 2

'மாலை மலர்' வலைத்தளத்தில் இருந்து உங்களுக்காக இங்கே:

நேதாஜி ஹிட்லரை சந்தித்தார்

இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். வங்காளத்தில் புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த ஜானகி நாத்போஸ் - பிரபாவதி தேவி தம்பதிகளின் 9-வது குழந்தையாக 23-1-1897-ல் பிறந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். (நேருவைவிட எட்டு வயது இளையவர்).

லண்டனுக்குச் சென்று ஐ.சி.எஸ் (தற்போதைய ஐ.ஏ.எஸ்) படிப்பு படித்தார். முதல் வகுப்பில் தேறினார். ஆனால் வெள்ளையர் ஆட்சியில் கலெக்டராக வேலை பார்க்கப்பிடிக்காமல், "ஐ.சி.எஸ்" பட்டத்தை வாங்காமலேயே இந்தியா திரும்பினார். காந்தியை சந்தித்தார். காங்கிரசில் சேர்ந்தார். சுபாஷ் சந்திரபோசும், நேருவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

சுத்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நேதாஜி, பர்மாவில் மாண்டலே என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை அடைந்த பின், 1938-ம் ஆண்டு ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். "சட்டமன்றங்களைக் கைப்பற்றினால் மட்டும் போதாது. வெள்ளையர்களை வெளியேற்ற தீவிரமாகப் போராட வேண்டும்" என்று வீர உரை நிகழ்த்தினார்.

அவர் புகழ் நாடெங்கும் பரவியது. அவரை "நேதாஜி" (தலைவர்) என்று மக்கள் அழைத்தனர். நேதாஜியின் தீவிரவாதப்போக்கு காங்கிரஸ் தலைவர்களுக்கு -குறிப்பாக மகாத்மா காந்திக்குப் பிடிக்கவில்லை. 1939-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக நேதாஜி அறிவித்தார்.

அவரை எதிர்த்து, பட்டாபி சீத்தாராமையாவை காந்தி நிறுத்தினார். கடும் போட்டியில், நேதாஜி வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, "பட்டாபியின் தோல்வி, என் தோல்வி" என்று கூறினார். இதனால் மனம் புண்பட்ட நேதாஜி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆயினும், காங்கிரசுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட "பார்வர்டு பிளாக்" என்ற அமைப்பை உருவாக்கினார்.

இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரிட்டிஷ் அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக 1940 ஜுலையில் நேதாஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது.

உலகப்போரின் ஆரம்பத்தில், பிரிட்டிஷ் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார்.

1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரிய பிரளயமே ஏற்படும் என்பதைப் பிரிட்டிஷ் அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று.

நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது. ஆனால் அவர் வீட்டைச்சுற்றி ரகசிய போலீசார் சாதாரண உடையில் 24 மணி நேரமும் வட்டமிட்டபடி இருந்தனர். எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார்.

வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர். 1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் நேதாஜி ஒரு முஸ்லிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார். ஒரு காரில், கல்கத்தாவிலிருந்து 40 மைல் தூரத்தில் உள்ள ஒரு சிறிய ரெயில் நிலையத்துக்குச் சென்றார்.

"சயாதீன்" என்ற பெயரில், ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். 17-ந்தேதி பெஷாவர் நகரை (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) அடைந்தார். அங்கே அவருடைய நண்பர்கள் காத்திருந்தனர். அவர்கள் நேதாஜியை ஒரு காரில் அழைத்துச் சென்றார்கள். மூன்று நாள் கழித்து பட்டாணியர் போல் மாறுவேடம் அணிந்து, நேதாஜி ஒரு காரில் பயணமானார்.

ரகமத்கான் என்ற நண்பர் உடன் சென்றார். கார் நெடுந்தூரம் சென்றது. கார் செல்ல முடியாத பாதையில் இருவரும் நடந்து சென்றார்கள். மறுநாள் மாலை இந்தியாவின் எல்லையைக் கடந்து ஒரு கிராமத்தை அடைந்தார்கள். அன்று இரவு ஒரு மசூதியில் தங்கினார்கள். மறுநாள் காலை எழுந்ததும், மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். காட்டிலும், கரடுமுரடான மலைப்பாதைகளிலும் நடந்து, ஒரு ரோட்டை அடைந்தார்கள்.

அங்கு ஒரு லாரியில் ஏறி, ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் போய்ச் சேர்ந்தார்கள். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டார். தான் யார் என்பதையும், இத்தாலிக்கு செல்ல விரும்புவதையும் தெரிவித்தார். அவர்கள் இது பற்றி இத்தாலி அரசுக்கு தகவல் அனுப்பினார்கள். பதில் வர தாமதமாயிற்று. எனினும் நேதாஜி பொறுமையுடன் பல நாட்கள் காத்திருந்தார்.

இறுதியில் அவரை அழைத்துச்செல்ல ரோமில் இருந்து இரண்டு தூதர்களை இத்தாலி அரசு அனுப்பி வைத்தது. மார்ச் 18-ந்தேதி காலை, நேதாஜி, அந்த இருவருடன் காரில் புறப்பட்டார். காபூல் வரை துணைக்கு வந்த அவர் நண்பர் ரகமத்கான், இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றார். நேதாஜிக்கு, பிரயாண அனுமதிச்சீட்டை இத்தாலி அனுப்பியிருந்தது.

அதன் உதவியால், ரஷிய எல்லைக்குள் நேதாஜியும், மற்ற இருவரும் நுழைந்தனர். ரஷியா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெர்மனிக்கு வருமாறு ஹிட்லரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, ரெயில் மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார்.

அவர் ஜெர்மனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்டன. அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விஷயமே பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிந்தது! ஜெர்மனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வாதிகாரி ஹிட்லரை நேதாஜி சந்தித்துப்பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார். 

 நன்றி : மாலை மலர் வலைத்தளம்

படித்ததில் பிடித்தது - சரித்திர குறிப்புகள் 1

சரித்திரத்தை தெரிந்து கொள்ள நமக்கு பழைய நாளிதழ்களும் அறிஞர் பெருமக்களின் கட்டுரைகளுமே கை கொடுக்கின்றன.
அன்மையில் சரித்திர கால புதையலாக ஒரு வலைத்தளத்தில் ( மாலை மலர் ) நமது அடுத்த தலைமுறைக்கு தேவையான முக்கிய குறிப்புகளைக் கண்டேன். படித்ததில் பிடித்தது என தலைப்பிட்டு அவற்றை இங்கே படிக்கக் கொடுத்திருக்கிறேன்.

நேதாஜியின் வீர சாகசம்

இந்தியாவைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நேதாஜி ஒப்பந்தம் செய்து கொண்டார். ஜெர்மனியில் இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். 4 ஆயிரம் வீரர்கள் கொண்ட படை அது. அவர்கள் பிரான்சு நாட்டுக்கு சென்று, பிரிட்டிஷ் படைகளை எதிர்த்துப்போரிட்டனர்.

1941 டிசம்பர் 7-ந்தேதி, போரில் ஜெர்மனிக்கு ஆதரவாக ஜப்பான் குதித்தது. வெகு எளிதாக சிங்கப்பூரைக் கைப்பற்றியது. 1942 பிப்ரவரியில், சிங்கப்பூரிலிருந்த பிரிட்டிஷ் ராணுவம் ஜப்பானிடம் சரண் அடைந்தது. தாய்லாந்து, மலேயா, அந்தமான் ஆகிய நாடுகளையும் ஜப்பானிய படைகள் கைப்பற்றிக்கொண்டு, மேலும் முன்னேறின.

பிரிட்டிஷ் வசம் இருந்த ரங்கூனும், ஜப்பானியர் வசம் ஆகியது. ஜப்பானிடம் சரண் அடைந்த பிரிட்டிஷ் படைகளில் இந்திய ராணுவத்தினர் இருந்தார்கள். அவர்களைக்கொண்டு, "இந்திய தேசிய ராணுவம்" அமைக்கப்பட்டது. போரில் ஜப்பானின் கை ஓங்கிக்கொண்டிருந்தது. ஜப்பான் உதவியுடன் இந்தியாவை விடுவிக்க முடியும் என்று நேதாஜி கருதினார். ஜப்பானுக்குச் செல்ல முடிவு செய்தார்.

ஜப்பானுக்கு எப்படிச் செல்வது? கடலில் அமெரிக்க, பிரிட்டிஷ் கப்பல்களும், நீர்மூழ்கிகளும் சுற்றிக்கொண்டிருந்தன. விமானத்தில் செல்வதும், தரை வழியில் செல்வதும் அதிக ஆபத்தானவை. எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்த நேதாஜி, நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல முடிவு செய்தார். "இது ஆபத்தானது" என்று ஜெர்மன் அதிகாரிகள் எச்சரித்தனர்.

ஆனால் நேதாஜி துணிவுடன் 1943 பிப்ரவரி 8-ந்தேதி ஜெர்மனியில் உள்ள நீல் என்ற துறைமுகத்திலிருந்து நீர்மூழ்கிக் கப்பலில் பயணமானார். அவருடைய செயலாளர் கர்னல் ஹசன், ராணுவ அதிகாரி குலாம் ஹைதர், ஒரு ஜப்பான் அதிகாரி, ஒரு ஜெர்மன் அதிகாரி ஆகியோரும் உடன் புறப்பட்டனர்.

எதிரிகளின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் பார்வையில் சிக்காமலும், விமானக் குண்டுவீச்சில் அகப்பட்டுக்கொள்ளாமலும் நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல், ஆப்பிரிக்கா கண்டத்தைச் சுற்றிக்கொண்டு, இந்துமகா சமுத்திரத்தில் பிரவேசித்தது. மடகாஸ்கர் தீவுக்கு 400 மைல் தூரத்தில் ஜப்பான் அனுப்பி வைத்த நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, நேதாஜியின் நீர்மூழ்கியை எதிர்கொண்டு வரவேற்றது.

ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பலுக்கு ஏப்ரல் 28-ந்தேதி மாறினார் நேதாஜி. நீர்மூழ்கிக்கப்பல் பயணம் தொடர்ந்தது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த சுமத்ரா தீவை, மே 6-ந்தேதியன்று நேதாஜி அடைந்தார். அதாவது, நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல் பயணம் 3 மாதம் நீடித்தது. சுமத்திராவில் ஒரு வாரம் தங்கியபின் விமானம் மூலம் ஜப்பான் தலைநகருக்குப் பயணமானார்.

மே 16-ந்தேதி டோக்கியோ போய்ச்சேர்ந்தார். அங்கு ஜப்பானிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். இந்தியா சுதந்திரம் அடைய ஜப்பான் எல்லா உதவிகளையும் செய்யும் என்று அவர்கள் உறுதியளித்தனர். ஜப்பானிலிருந்து புறப்பட்டு, ஜுலை 2-ந்தேதி சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் மக்கள் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.

இந்தியர்கள் மட்டுமின்றி, மலேசியர், சீனர், ஜப்பானியர் ஆகியோரும் வரவேற்பில் கலந்து கொண்டனர். சிங்கப்பூரில் உள்ள இந்திய தேசிய ராணுவ அதிகாரிகளை அழைத்துப் பேசினார். போரில் புதிய விžகங்களை வகுத்தார். நேதாஜி மாணவராக இருந்தபோதே, "தேசிய மாணவர் படை"யில் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெற்றிருந்தார். எனவே, ராணுவத்தின் செயல்பாடுகளை நன்கு அறிந்திருந்தார்.

அவருடைய போர்த்திறன், ராணுவ அதிகாரிகளையே திகைக்க வைத்தது. அதன்பின் நேதாஜி என்ற பெயர் உலகமெங்கும் பரவியது. 1943 அக்டோபர் மாதம், "சுதந்திர இந்திய அரசாங்க"த்தை சிங்கப்பூரில் அமைத்தார். பிரதமர் பதவியையும், பிரதம ராணுவத் தளபதி பொறுப்பையும் அவர் ஏற்றார். பெண்கள் படையின் தளபதியாக தமிழ்ப்பெண்ணான மேஜர் லட்சுமி சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார்.

சுதந்திர அரசாங்கம் அமைக்கப்பட்ட 2 நாட்களில், பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான போர்ப்பிரகடனத்தை நேதாஜி வெளியிட்டார். அரசாங்கத்தையும், ராணுவத்தையும் குறுகிய காலத்தில் பலப்படுத்தினார் நேதாஜி. தேசிய அரசாங்கம் போரை நடத்தியதுடன் நில்லாது, பல பள்ளிக்கூடங்களைத் திறந்தது;

புதிய நாணயங்களை வெளியிட்டது. பத்திரிகைகளையும் நடத்தியது. சுதந்திர அரசாங்கத்தின் தலைமையகம், முதலில் சிங்கப்பூரில் இருந்தது. பிறகு ரங்கூனுக்கு மாறியது. இந்த அரசாங்கத்தின் கிளை அலுவலகங்கள், பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமைக்கப்பட்டன. நேதாஜியின் சுதந்திர அரசுக்கு ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து முதலிய நாடுகள் அங்கீகாரம் அளித்தன.

சுதந்திர அரசுக்கென தனியாக "பாங்கி" தொடங்கவேண்டும் என்றார், நேதாஜி. "இதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?" என்று ஒரு முஸ்லிம் கோடீஸ்வரர் கேட்டார். "ஐம்பது லட்சம் ரூபாய் வேண்டும்" என்று நேதாஜி கூறியதும், "இப்போது முப்பது லட்சம் தருகிறேன். ஒரு வாரத்தில் மீதி இருபது லட்சம் தருகிறேன்" என்று கூறிய அந்தப் பிரமுகர், சொன்னபடியே ஐம்பது லட்சம் ரூபாய் கொடுத்தார்.

இரண்டே வாரங்களில் "ஆசாத் ஹிந்த் பாங்க்" தொடங்கப்பட்டது. இந்திய தேசிய ராணுவத்துக்கும், சுதந்திர அரசுக்கும் நிறையப் பணம் தேவைப்பட்டது. மக்கள் ஏராளமாக நன்கொடை அளித்தனர். நேதாஜிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு ஏலம் போயின. ஒருமுறை, ஒரே மாலை 12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயிற்று!

நகைகள், ரொக்கம், நிலமாக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஒரு பிரமுகர் கொடுத்தார். பெண்கள் ஒன்று சேர்ந்து, நேதாஜியின் எடைக்கு எடை தங்க நகைகளை வழங்கினர். பர்மாவில் மட்டும் ரூ.8 கோடி வசூலாயிற்று. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து குவிந்த நன்கொடை மூலம் ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் வாங்கினார்நேதாஜி.

இந்திய தேசிய ராணுவத்தில் 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். 1,500 ராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் இவர்கள் செயல்பட்டனர். மேஜர் லட்சுமி தலைமையில் இருந்த பெண்கள் ராணுவம், "ஜான்சிராணிப்படை" என்ற பெயரில் இயங்கியது. இதில் 1,200 பெண்கள் இருந்தனர். "தற்கொலைப்படை" ஒன்றும் இயங்கியது.

இவர்கள், முதுகில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, எதிரிப்படைகளின் டாங்கிகள் அணிவகுத்து வரும்போது, பாய்ந்து சென்று குறுக்கே படுத்துக்கொள்வார்கள். டாங்கிகளால் அவர்கள் நசுக்கப்படும் அதே நேரத்தில், குண்டுகள் வெடித்து டாங்கிகள் சின்னாபின்னமாகச் சிதறும்! இந்த தற்கொலைப்படையில், இளைஞர்கள் ஏராளமாகச் சேர்ந்தனர்.

"டெல்லி சலோ!" என்று நேதாஜி கட்டளையிட்டதும், இந்திய தேசிய ராணுவத்தினர் இந்தியாவுக்குள் புகுந்தனர். பல இடங்களில் பிரிட்டிஷ் படைகள், தேசிய ராணுவத்திடம் தோற்றுப் பின்வாங்கியது. "ஜான்சிராணிப்படை" பல மைல்கள் முன்னேறியது.

அவர்களிடம் வெள்ளையர் ராணுவம் சரண் அடைந்தது. மணிப்புரி சமஸ்தானத்தின் பல பகுதிகளை தேசிய ராணுவம் கைப்பற்றியது. "விரைவில் இந்தியாவை விட்டுப் பிரிட்டிஷ் படைகள் விரட்டியடிக்கப்படும். டெல்லியில் சுதந்திரக்கொடியை நேதாஜி பறக்க விடுவார்" என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். 

Tuesday, 5 March 2013

சொதப்பல்கள் பலவிதம்..

 'காதலில்    சொதப்புவது    எப்படி?'       திரையில்    ஒரு    காட்சி....

வளரும் காலத்தில் கல்வியில் தொடங்கி, பருவ காலத்தில் காதலிலும், மத்திம  காலத்தில் வாழ்கையிலும் சொதப்பல் திலகங்களின் சொதப்பல்கள் தொடர்கின்றன. 

காதலர்கள் தனித் தனியேயும், கணவன் மனவி ஒன்றாகவும் இருப்பதென்பதே வாழ்வின் சாராம்சம், நாகரீகத்தின் அடையாளம்.
இன்றைய நிலையோ தலைகீழ் பாடமாக இருக்கிறது.  காதலர்கள் சேர்ந்து வாழ்வதும், மணமானவர்கள் தனியே வாழ விழைவதும்  நகைப்புக்கு உரிய ஒன்றாகி விட்டது தற்போது.  இயற்கைக்கு எதிராக இவர்கள் விடும் சவால்கள் இவை. அதற்கு இவர்கள் அடுக்கும் காரணங்கள் சொல்லில் அடங்கா.

இவ்விரண்டு செயல்களுமே  தவறுகளையும்,  பாவங்களையும் அதிகரிக்கும் சிந்தனை மாற்றத்தின் எதிர்மறையானவையாகும்.

 

மென்செஸ்டர் யுனைட்டெட் Vs ரியல் மாட்ரிட்



மென்செஸ்டர் யுனைட்டெட் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர்...
மோகன் பாலா.

 நாளை அதிகாலையில் இடம் பெறவிருக்கும் விளையாட்டில் ரியல் மாட்ரிட் குழுவை, மென்செஸ்டர் குழு தோற்கடிக்குமா?

முடியாது என்கிறேன் நான்.

இன்னும் சில மணி நேரத்தில் விடை தெரிந்து விடும்.



நம் குழந்தைகளும் அறிஞர்களாகலாம்

ஒவ்வொரு குழந்தையும் ஒரு மேதை, அதன்படி அவர்களை வளர்க்கிறோமா என்பதே கேள்வி எனச் சொன்னார் மேலை நாட்டின் புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோ.

குழந்தைகள் பிறக்கும் போது எல்லாவித அறிவுடனும் ஆற்றலுடனுமே பிறக்கிறார்கள். அவர்களை வளர்க்கும் பொருப்புக்களில் நாம் சரியாக இருக்கிறோமா?

சிலர் அதிக செல்லம் கொடுத்து தங்கள் குழந்தைகளை வளர்க்கிறார்கள். சிலர் அதிக கண்டிப்புடன் வளர்க்கிறார்கள். இந்த 'அதிக" எனும் சொல் இங்கு சரிதானா அல்லது இவ்வார்த்தை இங்கு மிகை படுத்தப்பட்ட வார்த்தையா என்பது சரியாக அளவிடப்பட வேண்டும்.

பிறக்கும் போது சகல திறமைகளோடு குழந்தைகள் பிறக்கிறார்கள் என்றால் இடைப்பட்ட காலத்தில் என்ன ஆகிறது?  ஏன் ஒரு சிறு பகுதியினரே அறிஞர்களாகவும், மேதைகளாகவும், கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் ஆகிறார்கள்..? ஏன் எல்லாக் குழந்தைகளும் அப்படி ஆவதில்லை....?

குழந்தைகளை உற்று கவனிப்போருக்கு ஒன்று நன்கு விளங்கும்.  நமக்குத் தோன்றாத பல விசயங்களை நம் குழந்தைகள் எளிதாக செய்துவிட்டு வெகு இயல்பாக மற்ற வேலைகளைப் பார்க்க போய்விடுகிறார்கள். 
 நாம் சித்தித்தாலும் தோன்றாத விதங்களில் குழந்தைகள் செயல்பாடு இருப்பது,  நன்கு பராமரித்து முறைப்படி வளர்த்தால், சாதனையாளர்களாக அவர்கள் வரவிருப்பதையே குறிக்கிறது.

அந்தத் திறனை ஊக்குவிப்பதும், சாதகமாக பயன் படுத்திக் கொள்வதுமே நல்ல வழிகாட்டுதலின் அங்கங்கள் ஆகும். அவர்களின் ஆர்வத்தையும், வேகத்தையும், யுக்திகளையும் நாம் இரு மடங்காக்கப் பழக வேண்டும்.
"அவர்கள் மழலைகள், இது அவர்களுக்கு அதிகமான ஒன்று" என ஒருபோதும் அவர்களை  குறைத்து மதிப்பிடக் கூடாது.  அவர்களின் வீர தீரச் செயல்களை அறிவுப்பூர்வமாகவும், ஆக்ககரமாகவும் நாம் கொண்டு செல்ல வேண்டும்.

 நிபுணர்களின் ஆய்வின் படி, சுலபான சில செயல்பாடுகள் மூலம் பெற்றோர்கள் குழந்தைகளோடு ஒன்றித்துப் போனால், குழந்தைகள் மேதைகள் ஆகும் திறன் பளிச்சிடும் என்கின்றனர்.

குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு முதல் படியாக அமைவது, அவர்களின் கிறுக்கல்களும் அதற்கு அவர்கள் பூசும் வர்ணங்களும். முறையாக எப்படி வரைவது, எப்படி வர்ணம் தீட்டுவது எனச் சொல்லிக் கொடுக்கும் நேரம், குழந்தைகளின் வேலைகளை, " அது அப்படியல்ல, தவறு" என எதிர்மறை கருத்துக்களை சொல்லி பெரிது படுத்தாதீர்கள். சிறுகச் சிறுக வர்ணங்களின் நிலைத்தன்மையை உணர்த்துங்கள்.

'புல் பச்சை நிறம், வானம் நீல நிறம்' என இயற்கை நிறங்களை சொல்லித் தருவதும், பிறகு வர்ணங்களை வைத்தே பூகோளத்தில்  மற்ற நாடுகளை அடையாளம் காணச் செய்வதும்  குழந்தைகளின் அறிவுக்கு மிகவும் பயனான செயல்களாம்.

அடுத்தது குழந்தைகளோடு கேள்வி பதில் அங்கம். குழந்தைகளுக்கு கேள்வி கேட்க ரொம்பவும் பிடிக்கும். அதிலும் மழலைகளுக்கு சொல்லித்தரவே வேண்டாம்.

" ஏன் அதற்கு மீனுன்னு பேரு?
ஏன் அது தண்ணியிலேயே இருக்கு?
ஏன் நாம் தண்ணியிலே இல்லை, வெளியே இருக்கிறோம்?"

என கேள்விகளை தொடுப்பார்கள். பல கேள்விகளுக்கு பதில் கூட இல்லாமல் போகலாம். ஆனால் அவற்றுக்கு பொறுமையாக பதில் சொல்லுங்கள்.

பொதுவாக மழலைகளின் கேள்விகளுக்கு எல்லா பெற்றோரும் பதில் சொல்லிவிடலாம்.  வளரும் குழந்தைகளின் கேள்விகள் நிஜ பதிலை எதிர் பார்ப்பவைகளாகும். ஆகவே, பதில் தெரியாத போது, சாமர்த்தியமாக புத்தகத்தில் உள்ள பதில்களை படித்துக் காட்டுங்கள். அல்லது, பதில் தெரிந்த மற்றவர்களிடம் கேட்டு தகுந்த நேரத்தில் அவர்களின் கேள்விகளை விளக்குங்கள். அவர்களின் கேள்விகளை ஒருபோதும் அலட்சியப்படுத்தாதீர்கள்.

சில நாட்கள் சென்றபின், அவர்களின் அறிவுப்பூர்வமான கேள்விகளை அவர்களிடமே மீண்டும் கேட்டு பரிசோதித்துப் பார்க்கலாம், அவர்களின் ஞாபக சக்தியை.

கூச்சம் போக்கவும், வார்த்தைகளை வளப்படுத்தவும் குழந்தைகளுக்கு குழந்தைப் பாடல்களும், உடல் பயிற்ச்சிக்காக ஆடலும் அவசியம்.

" நிலவே நிலவே ஓடிவா
 நீ என்னுடனே ஆடவா
மலராம் அரும்பின் எழில் மேவும்
மரகத மணியுடன் ஆட வா..."

என சிறு வயதில் நாம் பாடியதும் ஆடியதும் சிலருக்கு நினைவில் இருக்கலாம். இன்று மற்ற மொழிகளில் உள்ள 'ரைம்ஸ்களும்" முக்கிய இடம் பிடிக்கின்றன குழந்தைகளின் வாழ்வில்.

"பா பா பிளக் ஷிப் ஹெவ் யு எனி வுல்...
யெஸ் ஸார் யெஸ் ஸார் த்ரீ பெக்ஸ் ஃபுல்...."

"ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டல் ஸ்டார்
ஹவ் ஐ வொன்டர் வாட் யூ ஆர்.."

"லண்டன் பிரிட்ஜ் இஸ் ஃபாளிங் டவுன் ஃபாளிங் டவுன்"

போன்ற வரிசையில் உள்ள பாடல்களை நாமே சொல்லித்தருவது நல்லது.

வெட்டி ஒட்டும் போட்டிகளிலிருந்து 'டம், செஸ்' என அறிவுக்குகந்த விளையாட்டுகளாக வாங்கித் தரலாம்.  அவர்களோடு சேர்ந்து  விளையாடுவதும் சில சமயங்களில் அவர்களை வெற்றி பெற விடுவதும் அவர்களுக்கு தன்னம்பிக்கை வளர உதவும். நாளடைவில், நீங்கள் முயன்றாலும் அவர்களை தோற்கடிக்க முடியாது.

 நேரம் கிடைக்கும்போது பூந்தோட்டங்களுக்கும், குழந்தைகளுக்கான விளையாட்டு மையங்களுக்கும் அழைத்துச் செல்லலாம். பருவ வயதிற்கேற்ப மேலுள்ள அனைத்தையும் மாற்றிக்கொள்ளுங்கள்.  ஐந்து வயதில் சொன்ன கதைகளை பத்து வயதில் மெருகேற்றி தரத்தினை உயர்த்திக் கொள்ளுங்கள்.

வானத்தில் விமானம் எப்படி பறக்கிறது என நமக்குத் தெரியாவிட்டாலும், குறைந்தது சைக்கிள் வண்டி எப்படி ஓட்டுவது என்றாவது சொல்லிக் கொடுங்கள். அடுத்து அவர்களாகவே மற்றவற்றை தெரிந்து கொள்ளும் காலம் வந்துவிடும்.

ஆக, சரியான வழிகாட்டுதல் இருந்தால் நம் மழலைகளும் கற்றறிந்தவர் பட்டியலில் இடம் பெற எவ்வித தடங்களும் இருக்கப் போவதில்லை.

ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கலாமா?

ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கலாமா என்பது இன்று நேற்றல்ல சுமார் இருபது வருடங்களுக்கு முன்பே துவங்கிவிட்ட ஒரு விவாதம்.

" நாங்களும் அடி வாங்கி இருக்கிறோம். அதன்படித்தான் படித்து முன்னுக்கு வந்திருக்கிறோம்" எனச் சொல்வோர் மத்தியில்,
"அடிப்பது காட்டுமிராண்டித்தனம். பயத்தினால் படிப்பை வரவழைக்க முடியாது. வார்த்தைகளினால் கட்டுப்படாத மாணவனை  அடிப்பதனால் அவன் அடங்கிப் பொய் படிப்பான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" எனச் சொல்வோரும் இருக்கவே செய்கிறார்கள்.

பெற்றோருக்கு அடுத்து கல்வி கற்றுத்தரும் ஆசிரியப் பெருமக்களுக்கு ஒரு உயர்ந்த இடம் நம் இந்திய சமூகத்தில் தொன்று தொட்டே இருந்து வந்திருக்கிறது.  இதில் பாலர் பள்ளி ஆசிரியர்கள் முதல் பல்கலைகழக விரிவுரையாளர்கள் வரை அடங்குவர்.

மாணவர்களின் வயதுக்கு ஏற்றவாறு அவர்களின் ஒழுக்கத்தை நிலை நாட்டவும், குற்றம் குறைகளை களையவும் அந்தந்த கால கட்டங்களில் ஆசிரியர்கள் தங்களின் சிறந்த ஆளுமையின் மூலம் கண்டித்தலையும் ஒரு அங்கமாகவே கல்வி பாடத்திட்டத்தில் வகுத்து வைதிருந்திருக்கின்றனர்.

தவறு செய்யும் மாணவர்களை திடலைச் சுற்றி ஓடச்செய்வதும், ஒருவர் காதை மற்றவர் பற்றிக்கொண்டு தோப்புக்கரணம் போடச் சொல்வதும், " இனி நான் தவறு செய்ய மாட்டேன்" என பத்து பக்கங்கள் எழுதச் சொல்வதும் அன்றைய நடைமுறையில் இருந்தச் சில கண்டிப்புகளாகும். இவற்றுக்குச் சிகரம் வைதாற்போன்றதுதான் 'பிரம்பால் அடித்து மாணவர்களை அச்சுறுத்தியது."

ஆனால், அவை தற்கால கல்வித்திட்டத்திற்கு ஏதேனும் பங்காற்றுகின்றதா எனும் கேள்விக்குத்தான் விடை தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறோம்.

'ஆமாம்' என்போர் ஒரு பக்கமும், 'இல்லை' என்போர் மறுபக்கமும் தங்களின் கூற்றினை தினம் தினமும் முன் மொழிந்தவாறு இருந்து கொண்டே இருக்கின்றனர். சரியென எடுத்துக்கொள்வதும் தவறென தவிர்த்து விடுவதும் கல்வி கற்பிப்போருக்கு மட்டுமல்லாமல், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவோருக்கும் ஒரு பெரிய தலைவலியாகவே இன்னும் இருக்கிறது.

கால நேர வித்தியாசமின்றி ஆசிரியர்கள் பள்ளியிலும் வெளியிலும் மாணவர்களின் வழிகாட்டிகளாக போற்றப்பட்டனர் அன்று. மனச் சோர்வு, ஸ்கூல் ஃபோபியா போன்றவை அன்றைய மாணவர்கள் கேட்டறியாத சில வார்த்தைகளாகும்.

அன்றைய குடும்பச் சூழலில் பள்ளிபிள்ளைகளின் எதிர்காளம் பெற்றோரை விட ஆசிரியர்களை சார்ந்ததாகவே இருந்தது.  பள்ளிப் படிப்பில் அறிவும், அனுபவமும் குறைந்திருந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்ல ஆசிரியர்களையே பெரிதும் நம்பி இருந்தனர். அதற்காக தங்கள் பிள்ளைகள் அடிவாங்கினாலும், அது அவர்களை நல்வழிப் படுத்தத் தான் என்றே அவர்களுக்குப் பட்டது. ஆசிரியர் அடித்தார் என வீட்டுக்கு வந்து சொன்னாலே இன்னும் அதிகம் அடி விழும் பெற்றோர்களிடமிருந்து.

இதற்கு பயந்து கொண்டே ஆசிரியர்களுக்கு பணிந்து அவர்களிடம் அடிவாங்காமல் அவர்கள் சொல் கேட்டு படித்து பட்டம் பெற்றனர். பட்டம் பெறாதோர் கூட நல்ல பண்பினை வளர்த்துக் கொண்டனர்.

இது அன்றைய நிலை. அடிப்பது மாணவர்களை நல்வழிப்படித்தி ஒழுக்கமாக கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவே என எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒன்று.

இன்றோ, காலச் சக்கர மாறுதல்களால், அதிலும் மேல் நாட்டு கலாச்சார ஊடுருவலால், தொடர்புத்துறை, தொலைக்காட்சி போன்றவற்றின் வளர்ச்சியினால், மக்களின் சிந்தனைகளில்  மாறுதல்கள் வரத் தொடங்கிவிட்டன. மனித நேயம் பேசுவோர் அதிகரித்து விட்டனர். அறிவில்லா மாணவர்களாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் அவர்களை அடக்கி ஆளக்கூடாது  என வசனம் பேசுவோர் பெருகிவிட்டனர்.

மாணவர்களின் ஒழுக்கத்தை சீர்படுத்த வேறு அனுகுமுறைகளை முயற்ச்சிக்கிறார்கள் இப்போது. இதையெல்லாம் கடந்து மாணவர்களுக்கு கல்விகற்றுத் தரும் நிர்பந்தம் ஆசிரியர்களுக்கு பெருகிவிட்டது. அடிக்கவும் கூடாது, அறிவும் புகட்டவேண்டும்...தேர்விலும் வெற்றி பெறச்செய்யவேண்டிய கடப்பாடு அவர்களுக்கு கூடிவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

இது இப்படி இருக்க, திறமையற்ற ஆசிரியர்கள், மாதா மாதம் வருமானம் வந்தால் போதும் என மாணவர்களை அலட்சியப் படுத்தும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினரின் தேவையற்ற கட்டுப்பாடுகள் போன்றவை அதிகம் தோன்றத் தொடங்கி விட்டன.

இந்தச் சாராருக்கு மாணவர் நிலை அப்படி ஒன்றும் பெரிதாகப் படுவதில்லை. ஒழுக்கத்தைப் பற்றி அவர்களுக்கே சரிவரத் தெரியாத போது மாணவர்களை எப்படி முறை படுத்துவர்?

இப்படி பலவற்றுக்கும் நடுவே மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கலாமா என்னும் விவாதம் இன்னும் மக்களிடயே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.


ஒருவரை ஒருவர் சார்ந்தே நாம் வாழ்கிறோம்...

வேலைக்குச் சென்று சோர்வாக வீடு திரும்பும் கணவன் மனைவிக்கு தேவைப்படுவது உற்சாக மொழி.  ஆனால் அதிலும் கூட, ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பார்களேயானால், அனுசரித்து போகும் தன்மை நிறையவே தேவைப்படுகிறது. சூழ் நிலைக்கேற்ப பரஸ்பரமானதாக அது இருந்து விட்டால் அன்பு குடும்பத்தில் நிலைத்து நிற்கும். உணவும் உறக்கமும் அடுத்த நிலைதான்.

கணவன் மனைவியைச் சார்ந்திருக்கிறார்,
மனைவி கணவனைச் சார்ந்திருக்கிறார்,
பிள்ளைகள் பெற்றோரைச் சார்ந்திருக்கிறார்கள்,
வயதான பெற்றோர் பிள்ளைகளைச் சார்ந்திருக்கிறார்கள்......

இதன்படியே மற்றெல்லா உறவுகளும், ஒன்றைச் சார்ந்தே மற்றதும் அமைந்துவிடுகிறது. நம் சமூகத்தில் தெளிவாகத் தெரிகின்ற அதிகார வரிசையிலான நிலை இது.

இந்த தொடரில் ஏதாவதொரு பாதிப்பு ஏற்படும்போது பாதிக்கப் பட்டவர் நிலை குலைந்து போகிறார்.  இந்த சார்பு நிலையில் இருந்து பிரளும் போது ஏதோ பெரியதாக ஒரு பிரச்சினை தோன்றிவிட்டது போன்று மனச் சோர்வு ஏற்படுகிறது. சில நேரங்களில் இவர்கள் ஆதரவு காட்டும் வேறு சிலரோடு சேர்ந்து விடுவதும் உண்டு. தங்களிடம் உள்ள பொருள் பலத்தை பிள்ளைகளுக்கு விட்டுக்கொடுத்துவிடும் பெற்றோர் நிலையினை இதற்கு உதாரணமாக கொள்ளலாம். ஏமாற்றமடைவோர் முதியோர் இல்லங்களில் சேர்ந்து விடுகின்றனர் அல்லது பலவந்தமாக தங்களின் சொந்த பிள்ளைகளினாலேயே சேர்த்துவிடப்படுகின்றனர். பரவலாக நாம் காணும் ஒன்றே இது.

மனம் நோகும் இது போன்ற செயல்களுக்கு காரணங்களையும் அடிப்படைகளையும் ஆராயத் தொடங்குவுமேயானால், 'அத்திப் பழத்தை பிய்த்துப் பார்த்தால் அத்தனையும் சொத்தை' என்பார்களே அதுபோல சம்பந்தப் பட்ட அனைவருமே குற்றவாளிகளாக தெரிவார்கள்.  சில சமயங்களில் நம் வீட்டுக்கு வரும் மறுமகனும், மறுமகளும் ...ஏன், அவர்களின் உறவினர்களும்கூட காரணவாதிகளாக தெரியலாம். 100 விழுக்காடு ஒருவரைச் சார்ந்து இருப்பதால் தோன்றக்கூடிய பாதகமான செயல் இது.

இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளுக்கு தகுந்த தற்காப்பு, சிறுகச் சிறுக நாம் பிறரைச் சார்ந்திருக்கும் தன்மையினை குறைத்துக் கொள்வதே ஆகும். அன்பும், ஆதரவும், அரவணைப்பும்  எப்போதும் பாதிக்கப்படாமல் இருக்கும் அதே நேரம், நமது தன்னம்பிக்கையும் வளர்ந்து நாமே சுயமாக செய்து முடிக்கவேண்டிய கடமையினையும் பொறுப்பினையும் உணர்ந்து நடப்பதும் அவசியம்.

என்னதான் நாம் பிறரைச் சார்ந்து இருந்தாலும், நம் சக்திக்கும், வசதிக்கும் ஏற்றாற்போல் நம் காலில் நிற்கும் வல்லமையும் நாம் கொண்டிருப்பது நல்லது. இதனால், மனம் வேதனையில் துவண்டு விடாமல், வாழ்க்கை வாழ்வதற்கே என முன்னேறிப்போகும் நம் பயணம் தடை படாது.

சொற்களால் சொல்லப்படாத, எழுத்தால் எழுதப்படாத,  தினசரி வாழ்வில் நமக்கென வரையறுக்கப்படும் ஞாயமான எதிபார்ப்பினை செயல் படுத்தும் திறனைக் கொண்டிருப்போமானால், இந்தச் சார்பு நிலையில் உள்ள சாதகப் பலன் களை நாம் வாழ் நாள் முழுவதும் பெற்று பெரு வாழ்வு வாழலாம்.