Showing posts with label anne philips. Show all posts
Showing posts with label anne philips. Show all posts

Wednesday, 10 August 2011

எம்ஜிஆர் பற்றி கண்ணதாசன்.... 3

எம்.ஜி.ஆர். படங்கள்!
 கண்ணதாசன் பாடல்கள்!

 எம்.ஜி.ஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல் சக்கரவர்த்இதயாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்க வீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக, புவி போற்றிடும் புரட்சித் தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார்.

 இத்தகைய உயர்வுகளைக் காண அவருக்கு உதவியன இரண்டே! ஒன்று, அவரது உயர்ந்த கருணை உள்ளம்! மற்றொன்று அவர் நடித்த திரைப்படங்கள்!

 எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களோ 135. இவற்றுள்ளும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தாலோ 115 படங்கள்தான்.

 115 படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்த எம்.ஜி.ஆரால் எப்படி மக்கள் இதயங்களைக் கவர முடிந்தது? மக்கள் எங்ஙனம் அவரை ஆளும் அரியாசனத்தில் ஏற்றி வைத்தார்கள்? என்றேல்லாம் வினாக்கள் எழும்!

 வினாக்களுக்கான விடைகள்!

 கண்டறியப்பட வேண்டும்!

 எம்.ஜி.ஆர் காலத்திலும், அவரது காலத்திற்குப் பின்னும் திரையுலகில் புகுந்து ஏராளமான படங்களில் நடித்த மாபெரும் நடிப்புலக மேதை சிவாஜிகணேசனும்; காதல் மன்னன் ஜெமினி கணேசனும், இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனும் பெறமுடியாத, ட்ட முடியாத மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆர் எட்டிப்பிடிக்கக் காரணங்கள் என்ன?

 இடைப்பட்ட காலத்தில் திரையுலகையே திக்குமுக்காடச் செய்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், வெள்ளிவிழாக் கதாநாயகன் ரவிச்சந்திரன், நவரசத்திலகம் முத்துராமன், ஏவி.எம்.ராஜன் போன்றோர் காணமுடியாத மக்கள் ஆதரவை எம்.ஜி.ஆர். கண்டது எப்படி?

 கால மாற்றங்களில், தங்களது கலை நுட்பங்களை, அனுபவங்களைத் தெளிவாகப் பதிவு செய்துகொண்ட நடிப்புலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கண்டிட முடியாத மக்கள் சக்தியை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் கைப்பற்றியது எங்ஙனம்?

 இவற்றையெல்லாம் சிந்திக்கும் வேளையில்தான், எம்.ஜி.ஆர் என்ற மாமேதையின் மகத்தான மகத்துவம் நமக்குப் புரியும்.

 இப்போது எம்.ஜி.ஆர் நடித்த படப்பாடல்களில், கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போமாக.

 எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த 115 படங்களில் ஐம்பது படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம்பெற்றுள்ளன.

 இவை தவிர, எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்றுபோன பவானி, ஊமையன் கோட்டை, மாடிவீட்டு ஏழை, சமூமே நான் உனக்கே சொந்தம், போன்ற பல படங்களுக்கும் கண்ணதாசனே பாடல்கள் எழுதியுள்ளார்.

 எவ்வாறு ஆய்வு செய்தாலும், எம்.ஜி.ஆர். நடித்த அதிகமான படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையையும், எம்.ஜி.ஆர். படங்களுக்கென அதிக எண்ணிக்கையில் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையினையும் கண்ணதாசனே பெறுகிறார்.

 1951 – ஆம் ஆண்டு ஜூபிடர் பிலிம்ஸாரின், கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த எம்.ஜி.ஆர். நடித்தமர்மயோகிபடத்திற்குப் பாடல்கள் எழுதத் தொடங்கிய கண்ணதாசன், 1974 – ஆம் ஆண்டு, அமல்ராஜ் பிலிம்ஸ், . நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்தநேற்று, இன்று, நாளைபடத்திற்கும்; இதே ஆண்டில், சித்ரயுகா வெளியீடாக ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளியான மிகப்பெரும் வெற்றிப்படமானஉரிமைக்குரல்படத்திற்கும்; 1975 – ஆம் ஆண்டில் வெளியான ஓரியண்டல் பிக்சர்ஸ் தயாரித்து, எம்.ஜி.ஆர். நடித்தநினைத்ததை முடிப்பவன்படத்திற்கும் கண்ணதாசன் பாடல்கள் எழுதியுள்ளார் என்பதனை, இன்றைய இளைஞர் சமுதாயத்தில் எத்தனை இதயங்கள் அறியக்கூடும்?

 நினைத்துப் பாருங்கள்!
சிந்தனைக்குச் சில துளிகள்!

 கவியரசர் கண்ணதாசன் 1961 – ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், ஒன்பதாம் தேதி, தி.மு.கழகத்தை விட்டு, விலகிச் சென்றுவிட்டார்.

 கழகத்தை விட்டு, விலகிச் சென்ற கவியரசர்; கழகத் தலைவர்கள் பற்றியும், அவர்கள் அடைய விரும்பிய திராவிட நாடு கொள்கை பற்றியும், திராவிட நாடு கொள்கையை அவர்கள் கைவிட்டது பற்றியும்; நாட்டையாளும் நிலையில் நாற்காலிகளில் அவர்கள் அமர்ந்தால் நேரக்கூடிய அவலங்கள் பற்றியும் ஏராளமாக எழுதினார், மேடை முழக்கங்களும் செய்தார்.

 இவற்றையெல்லாம் தனது இதயத்தின் ஒரு பகுதியில் இருத்திக் கொண்ட மக்கள் திலகம்; தனது படங்களில் கண்ணதாசன் பாடல்கள் எழுதக்கூடாது என்று, எந்தத் தயாரிப்பாளரிடமும் கட்டளை பிறப்பித்ததில்லை.

 இதனால்தான் தேவர் பிலிம்ஸ் தயாரித்த, எம்.ஜி.ஆர். நடித்த அனைத்துப் படங்களுக்கும் (ஒன்றிரண்டு தவிர) கண்ணதாசனே பாடல்களை எழுதிக் குவித்தார்.

 பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர். பந்துலு தயாரித்த, எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கும்; ஆர்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் டி.ஆர். ராமண்ணா தயாரித்த எம்.ஜி.ஆர் நடித்த படங்களுக்கும் கண்ணதாசனே பெரும்பாலும் பாடல்களை எழுதினார்.

 இதற்கெல்லாம் காரணம், எம்.ஜி.ஆர் என்ற கலைஞானி, கண்ணதாசன் என்ற கவிஞரிடம் இருந்த கவித்துவத்தின் மீது செலுத்திய கவிப்பற்றும், கலைப்பற்றுமே எனலாம்.

 திராவிட இயக்கத்தில் இருந்தபோது கண்ணதாசன் எழுதிய

அச்சம் என்பது மடமையடா!

 அஞ்சாமை திராவிடர் உடமையடா!’

என்ற பாடலை, தான் பயணம் செய்யும் வண்டியிலேயே எப்பொழுதும் கேட்கும் வண்ணம், கைவசம் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார் என்பதனை, அவரே சொல்லக் கேட்டிருக்கின்றோம்.

 இந்த அளவிற்குக் கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் மீது, தனது எண்ண அலைகளின் தாகத்தைத் தக்கவைத்துக் கொண்டவரே எம்.ஜி.ஆர். என்பதனை நாடு நன்கறியும்!

 எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் மட்டுமல்லர். அவர் அனைத்துக் கலைநுட்பங்களையும் நுணுக்கமாக அறிந்த கலைவித்தகர். நாட்டு மக்களின் இரசனைகளை நாடிபிடித்து அறிந்தவர். எனவேதான், அவரது படங்களில் வரும் பாடல்களை ஒலிப்பதிவு அறைகளில் அமர்ந்து, சொல்லுக்குச் சொல் கேட்டே, பதிவு செய்திட அனுமதிப்பார். அதேபோல், படங்களில் இடம்பெறும் வசனங்களையும் வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ந்தே இடம்பெறச் செய்வார். இவையே அவரது வெற்றியின் மூல இரகசியமாகும்.

 நாட்டு மக்களுக்குச் சொல்லவேண்டிய, செய்யவேண்டிய நல்ல கருத்துகளையும், செயல்களையுமே தனது படங்களின் பாடல்கள், வசனங்களில் எம்.ஜி.ஆர் இடம்பெறச் செய்தார். அவ்வாறு செய்த காரணத்தால்தான், எம்.ஜி.ஆர். என்ற மந்திர சக்தி இன்றளவும் மக்களின் இதயங்களில் மாமகுடம் தாங்கி வீற்றிருக்கிறது.

 இனி, எம்.ஜி.ஆர் படங்களில் கண்ணதாசனின் கவித்துவம் வாக்குப் பலிதமாய் வாகை சூடிய விதங்களை விபரமாய்க் காண்போம்.
ஆரம்பகாலப் பாடல்கள்…. சில!

 ‘மர்மயோகிபடம் வெளியான ஆண்டு 1951.

அழகான பெண்மானைப் பார்!
 அலைபாயும் கண்வீச்சைப் பார்!”

என்று தொடங்கும் இப்படப் பாடலில்,

வாடாத ரோஜாஉன்
 மடிமீதில் ராஜா!
 மனமே தடை ஏனையா! – நிதம்

 பொன்னாகும் காலம்
 வீணாக லாமோ!
 துணையோடு உலகாளவா!

என்ற அருமைமிகு கவித்துவமே துள்ளித் ததும்புகின்றன.

 ‘உலகாளவா!’ என்ற அழைப்பு கவியரசரின் பாடலில், எம்.ஜி.ஆருக்கு எழுதும் முதல் படப்பாடலிலேயே எழுப்பும் விதம் விந்தையல்லவா!

கண்ணின் கருமணியே கலாவதிஇசைசேர்
 காவியம் நீயே!
 கவிஞனும் நானே!”

என்று ஆரம்பம் ஆகும் பாடலில், அடுத்து,

எண்ணம் நிறை வதனாஎழில்சேர்
 ஓவியம் நீர் மதனா!”

 “அன்பு மிகுந்திடும் பேரரசே!
 ஆசை அமுதே என் மதனா!”

என வரும் தொடர்கள் எம்.ஜி.ஆரின் எழிலார்ந்த வனப்பையும், அன்புள்ளத்தையும், பேரரசாளும் பெருமையினையும் எடுத்துரைக்கும்.

 1956 – ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றிபெற்றமதுரைவீரன்படத்தில் இடம்பெற்ற,

நாடகமெல்லாம் கண்டேன் உந்தன்
 ஆடும் விழியிலே
 ஆடும் விழியிலே! – கீதம்
 பாடும் மொழியிலே!…”

இவ்வாறு தொடங்கும், இப்பாடலை இன்றைய இளைஞர்களும் மெய்மறந்து இன்றும் இரச்த்துக் கேட்கக் காண்கிறோம்.

 இப்பாடலில்,.

தேடிய இன்பம் கண்டேன்! இன்று
 கண்ணா வாழ்விலேஉங்கள்
 அன்பால் நேரிலே!…”

 “ஸ்வாமி!
 உன் அழகைப் பார்த்திருக்கும்
 எந்நாளும் திருநாளே!
 அலைபாயும் தென்றலாலே
 சிலை மேனி கொஞ்சுதே!”

என்று, காதல் வயப்பட்டு படத்தில் பத்மினியின் எழிலார்ந்த நடிப்பிற்கு ஏற்பஜிக்கிபாடும் போதும்; அதற்கேற்ப அன்றைய பேரழகுத் தோற்றத்துடன் எம்.ஜி.ஆர். நடிக்க, அவருக்கு ஏற்பக் குரல் எடுத்து, டி. எம். சௌந்தரராஜன் பாடும் பாடல் காட்சியை யார்தான் இன்றும் இரசிக்காமல் இருக்க முடியும்?

 எம்.ஜி.ஆரின் அழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளாம்? அவர், அலைபாயும் சுகம் தரும் தென்றலாம்!’ இப்படியும் பாடலில் பதமான வார்த்தைகள் போட்டு, எம்.ஜி.ஆரை அன்றே வர்ணித்த கவிராஜன் வார்த்தைகள், காலத்தை வென்ற வார்த்தைகள்தானே!

 1957 – ஆம் ஆண்டில், கவியரசரின் கருத்தாழமிக்க திரைக்கதை வசனத்தோடு வெளிவந்தமகாதேவிதிரைப்படத்திலும், கவிஞரின் பொன்னான பாடல்கள் முத்திரை பதிக்கத் தவறவில்லை.

கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே!
 கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே!”

 “சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
 சங்கீத வீணையும் எதுக்கம்மா!”

இந்த இளமை, இனிமை ததும்பும் இவ்விரு பாடல்களோடு,

மகாபாரதப் போரில் அபிமன்யூ மாள, மகன பிரிவால் தாய் சுபத்திரை துடிதுடிப்பதைப் படம்பிடித்துக் காட்டும்,

மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு
 வாழ்வது நமது சமுதாயம்!
 மரண பயங்கரம் சூழ்ந்து வந்தாலும்
 மாறிவிடாது ஒரு நாளும்!”

என்ற பல்லவியுடன், படத்திற்கே முத்தாய்ப்பாய் அமைந்த பாடலும்;

காமுகர் நெஞ்சில் நீதியில்லைஅவர்க்குத்
 தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை!”

என்ற தத்துவ சமூகநீதிப் பாடலும்; எம்.ஜி.ஆர் படத்திற்குப் புகழ் சேர்ந்த பாடல்களே!

இவற்றுள்,

 ‘மானம் ஒன்றே!’ என்று தொடங்கும் பாடலின் முழு விளக்கத்தையும்கண்ணதாசன் கவிதைகளில் கடவுள் நெறிஎன்ற எனது முந்தைய நூலில் எழுதியுள்ளேன்.
காலத்தை வென்ற பாடல்கள்!
அச்சம் என்பது மடமையடா!’

 1960 – ஆம் ஆண்டு கண்ணதாசனின் கதை, வசனம், பாடல்களோடு வெளிவந்து, உன்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வெற்றிப்படமாய்த் திகழ்வதே நடேஷ் ஆர்ட் பிக்சர்சாரின்மன்னாதி மன்னன்!’

 இப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞரின் அனைத்துப் பாடல்களும் கருத்துச்சுவை நிரம்பிய பாடல்களே. இருப்பினும் தமிழக வரலாற்றிலேயே, எத்தனையோ சோடனைகளுக்கு நடுவிலும், தொடர்ந்து மூன்றுமுறை வீரத்திற்கும், புகழுக்கும் கட்டியங்கூறும் பாடலாக அமைந்த,

அச்சம் என்பது மடமையடா!
 அஞ்சாமை திராவிடர் உடமையடா!
 ஆறிலும் சாவு, நூறிலும் சாவு!
 தாயகம் காப்பது கடமையடா!”

என்று ஆரம்பமாகி, அனைவரது நாடி நரம்புகளிலும் வீரத்தையும், நெஞ்சங்களில் விவேகத்தையும் உண்டாக்கும் பாடலே உயர்ந்த இடத்தைப் பற்றிக் கொள்ளும் பாடலாகும்!

 உண்மைதானே!

 அச்சம் என்பது மூடர்களின் மூலதனமல்லவா! ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்களே ஒன்றுகூடி 1972 – ஆம் ஆண்டு தன்னை வெளியேற்றியபோது, தனது இரசிகப் பெரும் பட்டாளத்தோடும், தாய்க்குலத்தின் தனிப்பெரும் ஆதரவோடும், துணிவையே துணையாகக் கொண்டு, தன்னைக் கட்சியில் இருந்து வெளியெற்றியவர்களையே ஆட்சியில் இருந்து அகற்றிய அஞ்சாத, அச்சமில்லாத சிங்கமல்லவா எம்.ஜி.ஆர்.

 அவர்தானே,

 ‘அஞ்சாமை திராவிடர் உடமையடா!’ என்று கூறத்தகுந்தவர்.

 நோயைக் கண்டு எம்.ஜி.ஆர். என்றேனும் அஞ்சினாரா? 1959 – ஆம் ஆண்டு சீர்காழியில் நடைபெற்ற நாடகத்தின்போது கால் எலும்பு முறிந்து! இனி அவ்வளவுதான்! எம்.ஜி.ஆரால் நடக்க முடியாது! நடிக்க முடியாது என்றார்கள். தனது மன உறுதியால், கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, ‘திருடாதேதிரைப்படத்தில் நடித்துப் படவுலகில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தினார்.

 (திருடாதேஎம்.ஜி.ஆர். சரோஜாதேவியோடு இணைந்து நடித்த சமூகப்படம். .எல். சீனிவாசன் தயாரித்த இப்படத்தின் வசனத்தை கண்ணதாசன் எழுத, . நீலகண்டன் இயக்கினார். ராஜாராணி கதைகளிலேயே நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு இப்படத்தின் வெற்றி பெரும் திருப்புமுனையாகவே அமைந்தது எனலாம்)

 1967 – ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். மருத்துவமனையில் மரணப்படுக்கையில் அவர் இருந்தபோதும், உறுதிகொண்ட உள்ளத்துணிவோடு போராடி மறுபிறவி பெற்றார்.

 (அவரது மருத்துவமனை நாடிக்கட்டு புகைப்படந்தான் தமிழ்நாடெங்கிலும் காங்கிரசு பேரியக்கத்தை, சரிவுக்குத் தள்ளி, தி.மு.கழகத்தை அதிசயமாய் விரைவில் ஆட்சிபீடத்தில் ஏற்றிவைத்தது எனில் மிகையாகா).

 மறுபிறவி பெற்ற எம்.ஜி.ஆரால், இனி பேச முடியாது. திரைப்பட வசனங்களைப் பேசமுடியாது என்று, எதிர்முகாமினர் எக்காளமிட்டனர். இவற்றையெல்லாம் மீறி, நோயில் இருந்து மீண்டு, மக்கள் மகிளும் வண்ணம் வெற்றிப்படங்களைத் தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்; சாவில் இருந்து மீண்டு, தனது தளராத பயிற்சியால் பேசத்தொடங்கி, ‘காவல்காரன்’, ‘ரகசிய போலீஸ் 115′, குடியிருந்த கோயில்’, ‘ஒளிவிளக்குபோன்ற வெற்றிப்படங்களில் நடித்து எதிரிகளின் வாய்ச் சவடால் வாயிலை அடைத்தார்.

 1983 – ஆம் ஆண்டு இறுதியில், சாதாரண நோய்க்காக சென்னை அப்போலோ மருந்துவமனைக்குச் சென்ற புரட்சித் தலைவர், கடுமையான நோய்க்கு உள்ளாகி, அமெரிக்காவில் உள்ள புருக்ளீன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

 எம்.ஜி.ஆர். உடல்நிலை பற்றிக் கொடூரமான வதந்திகள் பரப்பப்பட்டன. ‘அவர் திரும்பி வந்தால் அவரிடமே ஆட்சியை ஒப்படைக்கிறோம்! எனவே எங்களுக்கு வாங்களியுங்கள்!’ என்று எதிர்முகாமினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். மக்களின் ஏகோபித்த வழிபாடுகளால் அமெரிக்காவில் இருந்து, எம்.ஜி.ஆர். திரும்பி வருவதற்கு முன்பே 1984 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அவரது இயக்கம் 136 இடங்களைப் பெற்று பெரும் வெற்றியை ஈட்டியது. எம்.ஜி.ஆரும் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தவாறே ஆண்டிப்பட்டித் தொகுதியில் முப்பத்திரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார்.

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு!
 தாயகம் காப்பது கடமையடா!”

என்று கூறத்தகுந்த காலனை வென்ற, காலத்தை வென்று நிற்கும் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். தானே!

 தொடரும் பாடலில், வளரும் செய்திகளைப் பார்ப்போமா?

கனக விஜயரின் முடித்தலை நெறித்து
 கல்லனை வைத்தான் சேரமகன்!
 இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி,
 இசைபட வாழ்ந்தான் பாண்டியனே!”

தொடர்ந்த இப்பாடல் வரிகளில், தமிழ்ப்புவியை ஆண்ட பண்டைய மன்னர்களின் வீரம் பறைசாற்றப்பட்டது.

 அடுத்து……!

கருவினில் வளரும் மழலையின் உடலில்
 தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை!
 களங்கம் பிறந்தால் பெற்றவள மானம்
 காத்திட எழுவான் அவள் பிள்ளை!
 வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி!
 மக்களின் மனதில் நிற்பவர் யார்?
 மாபெரும் வீரர், மானம் காப்போர்,
 சரித்திரம் தனிலே நிற்கின்றார்!”

 கவியரசர் தீட்டிய இந்த வைர வரிகள், புவியரசர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில், வரலாறாய் நடந்து வந்த வரிகள் அல்லவா?

 சத்தியா எனும் தாய், கருவினிலே வளர்ந்தபோதே தனது அன்பு மழலையாம், எம்.ஜி.ஆர். என்ற மகனுக்குத் தைரியத்தை ஊட்டி வளர்த்த தாயல்லவா!

 பெற்ற தாயின்மீது பெறுதற்கரிய பாசத்தைச் செலுத்தியதோடு, நாட்டிலுள்ள தாய்மார்களின் மீதெல்லாம் அளவிடற்கரிய பாசத்தைச் செலுத்தி, அவர்களது மானம் காக்க, களங்கத்தைப் போக்கக் காலமெல்லாம் துணையாய் நின்ற காவல் தெய்வமல்லவா எம்.ஜி.ஆர்! அதனாலன்றோ இன்றும் தாய்க்குலத்தின் தணியாத செல்வாக்கோடு, மறைந்தும் இம்மண்ணில் மங்காத புகழோடு எம்.ஜி.ஆர் வாழ்கின்றார்.

 கோடி மக்கள் இம்மண்ணில் வாழ்ந்ததுண்டு. வாழ்ந்த சுவடுகள் தெரியாமல் மறைந்ததும் உண்டு. ஆனால் மக்களின் மனங்களில் நிலைத்து நிற்பவர் யாவர்?

 மாபெரும் வீரர்! மானத்தைக் காப்போர்!

 இவர்கள் மக்கள் மனங்களில் மட்டும் அல்ல…. வருங்காலச் சரித்திரத்திலும் சாய்ந்துவிடாது நிலைத்து நிற்பர்.


 உண்மைதானா? உண்மையே! உதாரணம்…. எம்.ஜி.ஆரே!