Saturday, 18 July 2015

மாரான் மரத்தாண்டவர் ஆலயம்

மலேசியாவின் முக்கிய முருகனின் கோயில்களில், மாரான் மரத்தாண்டவர் கோயிலும் ஒன்று. வழக்கமாக பத்துமலை கோயிலுக்கு சென்று முருகனை தரிசித்து வந்த என் குடும்பத்தினரும் நானும், சில நாட்களுக்கு முன்னர், 'மாரான் மரத்தாண்டவர் கோயிலுக்குச் சென்று வந்தால் என்ன' எனும் சிந்தனையில் இந்த நோன்புப் பெருநாள் விடுமுறைக்கு அங்கு செல்வதென முடிவு செய்தோம்.
கடைசியாக சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் அங்கு சென்று வந்ததால், வலைத்தளத்தில் மரத்தாண்டாவர் ஆலயம் பற்றி விவரங்களை சேகரிக்க எண்ணினேன்.
ஆயினும் பாருங்கள், எதிர்பார்த்த அளவுக்கு இங்கு தகவல்கள் போதுமானதாக இல்லை. உதாரணத்துக்கு, அங்கு எப்படிச் செல்வது என்பதில் சரிவர விளக்கம் இல்லை. மற்றவர்களை ஒரளவுக்கு கேட்கலாம், அவர்கள் சொல்வதும் விளங்கவேண்டுமே.... இருந்தாலும், 'வேஸ்' எனும் வழிகாட்டும் கருவியுடன் நேற்று காலை 6 மணிக்கு பந்திங்கில் உள்ள எங்கள் வீட்டில் இருந்து கிளம்பினோம்.
சுமார் ஒரு மணி நேரத்தில், கோம்பாக் டோல் இடத்தை அடைந்துவிட்டோம். இரண்டு மணி நேர பயணத்துக்குப் பின், காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு சிறிது ஓய்வெடுக்க 'லஞ்சாங்' எனும் இடத்தில் 30 நிமிடங்கள் காரை நிறுத்தினோம்.நோன்புப் பெருநாளாகையால், பல கடைகள் மூடியே இருந்தன.
எங்களைப் போல மாரான் மரத்தாண்டவர் கோயிலுக்குச் செல்ல எண்ணம் கொண்ட பலர் சிறப்பு பஸ்களில் வந்து அங்கு ஓய்வெடுப்பதை பார்க்கும் போது, மனதுக்கு ஆறுதலாக இருந்தது... ஹிந்து மதம் நிலைத்து நிற்கும் என மனதில் தோன்றியது.
பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். சுமார் பத்து நிமிடங்களில், செனோர் / ஜெங்கா டோல் சாவடி வந்தது. அதில் கட்டணம் கட்டி வெளியேறி, ஒரு முச்சந்திக்கு வந்தோம். எங்களின் கைவசம் இருந்த 'வேஸ்', வலது பக்கம் திரும்புக என உத்தரவு போட்டது. அதே போல அங்கிருந்த அறிவிப்புப் பலகைகளை பார்வையிடும் போது, நமது மரத்தாண்டவர் ஆலயம் சுமார் 41கிமீ தொலைவில் என இருந்ததும் கண்ணில் பட்டது.
அட, சரியான பாதையில் தான் பயணிக்கிறோம் என தொடர்ந்தோம். சுமார் 24கிமீ தொலைவில், மாரான் பட்டனதுக்கான அறிவிப்புப் பலகை இருந்தது. அங்கு வலது பக்கம் திரும்பினோம். எங்களைப் போலவே அக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களை ஏற்றிவந்த சில பஸ்களும் முன்னே சென்றுகொண்டிருந்தன.
இன்னும் 17 கிமீ தூரத்தில் மரத்தாண்டவர் கோயில் எனத் தெரிந்த அடையாள பலகையின் துணைகொண்டு, இருபது நிமிடங்களில் அகில மலேசிய புகழ் பெற்ற மாரான் மரத்தாண்டவர் கோயிலை வந்தடைந்தோம்.
கோலாலம்பூரிலிருந்து 2 1/2 மணி நேரங்கள், இருந்தாலும், அதிக களைப்பில்லாத பயணம்தான். ஜெங்கா பெல்டா நிலத்திட்டத்திற்கு நடுவே பயணிக்கும் போது, வழிநெடுக இரு பக்கங்களிலும் ஈச்சமரங்க்களும், ரப்பர் மரங்களுமாய் கண்களுக்கு பச்சைபசேல் என குளுமையை தந்தது.
சுற்றிலும் பெரும்பான்மையாக மலாய்க்காரர்களே இருந்தாலும், இங்கு வீற்றிருக்கும் முருகப் பெருமானின் பெருமையை உணர்ந்தோர் வந்து பூஜிப்பதற்கு இடையூறாக இருந்ததில்லை.
இக்கோயிலின் வரலாறு 1870ம் ஆண்டுகளுக்குச் செல்கின்றது. இந்தியாவில் இருந்து மலேசியக் காடுகளை அழித்து நாட்டை வளப்படுத்த தருவிக்கப்பட்ட இந்தியர்கள் சாலை அமைக்க முயலும் போது, இங்கிருந்த மரத்தை அகற்ற முயன்றிருக்கின்றனர். அதில் இருந்து பிசின் போல ரத்த வண்ணத்தில் கசிய அதை மேலும் வெட்டாது விட்டிருக்கின்றனர். வெட்ட முயற்சித்த மற்றவர்களின் உடல் ஆரோக்கியமும் பாதித்த நிலையில், அதன் சக்தியைப் பற்றி பேசத் தொடங்கி இருக்கின்றனர். இதன் பிறகு, ஒரு முருக பக்தர் வேல் ஒன்றை அங்கே நிறுத்தி வழி பட்டு வர, பிறரும் அவ்வழக்கத்தை தொடர்ந்திருக்கின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறிட, இங்கு வீற்றிருக்கும் முருகனின் அருள் எட்டுத்திக்கும் எட்டத் தொடங்கிவிட்டது.
இரண்டு மரங்களுக்கு நடுவே முன்பிருந்த சாலையை பஹாங் மாநில அரசு, கோயிலைச் சுற்றி சீரமைக்க ஒப்புக்கொண்டதை குறிப்பிட வேண்டும். அதனால் இன்று, முக்கிய மரமிருந்த இடத்தில் கோயில் கருவறையும் அதனைச் சுற்றி அழகிய கோயிலும் அமைந்திருக்கிறது. இன்னுமொரு மகிழ்ச்சியான கருத்து என்னவென்றால், கோயிலைச் சுற்றி பக்தர்கள் நடந்துவர விஸ்தாரமான இடம் இருப்பது தான். விழாக்காலங்களில் இதன் சிறப்பை உணரமுடியும்.
கொடிமரத்துக்குக் கீழ் பலிபீடம், அதற்கு அருகில் பக்தர்களின் மனக்குறைகளை தாங்கி நிற்கும் மரம். மஞ்சள் துண்டுகளிலும், துணிகளிலும் ஐய்யன் முருகனுக்கு பக்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள். வெளிச்சம் உள்ளே வர, பலிபீடத்தின் மேல் கண்ணாடிகளினால் அமைந்த கூறை, எவ்வளவு செயல்களானாலும், நடவடிக்கைகளானாலும் கொஞ்சமும் தயக்கமின்றி அழகிய அந்த கட்டிடத்தின் ஊடே பறந்து திரியும் பறவைகள்..... இப்படி எல்லாமுமே வருவோர் மனத்தைக் கவர்தாகவே உள்ளது. அதிலும் அண்மையில் நடந்துமுடிந்த கும்பாபிஷேகத்துக்காக பூசப்பட்ட மஞ்சள் வர்ணக்கலவையும் அழகுக்கு அழகு சேர்க்கின்றது.
அதிகாலை நான்கு மணிக்கு விஷேச பூஜை, பிறகு காலை பத்து மணி வரை அர்ச்சனைகள், அதன் பின் முருகனுக்கான அபிஷேகமும் உபயக்காரர்களின் பூஜையும் மற்றும் மதியம் சிறப்புப் பூஜைக்குப் பின் தொடர்ந்து அர்ச்சனைகளும், அன்னதானமும் என களைகட்டியது முருக பக்தர்களின் மனங்கவர்ந்த மரத்தாண்டவர் கோயில்.
நிம்மதியான பூஜைக்கு வார நாட்களில் வருவதே சிறப்பு என அங்கு பல காலம் வந்துகொண்டிருப்போர் சிலர் கருத்துரைத்தனர். பொதுவிடுமுறைகளிலும், விஷேச தினக்களிலும் வருவோர் எண்ணிக்கை சற்று அதிகமிருக்கும் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது.
இவ்வளவு சிறப்புகளைக்கொண்ட இக்கோயில் நடைமுறைகளில் ஒரே ஒரு குறைதான். அன்னதானம் என இங்கு பரிமாறப்படும் உணவு தரம் இல்லாததாகவும், கோயில் நிர்வாகத்தினரின் அக்கரையற்ற, பொறுப்பில்லாத, வேண்டா வெறுப்பாக செயல்படுவதைப் போன்ற தோற்றம் இருப்பதாகவும் பட்டது. இதையே பலரும் தங்கள் கருத்துக்களாக நம்மோடு பகிர்ந்துகொண்டனர்.
மனமில்லாத சாம்பார், கசக்கும் பொடலங்காய் கூட்டு, அப்பளம், பரங்கிக்காய் எப்படி சிலவற்றை வந்திருந்தோருக்கு படைத்துவிட்டு, அன்னதான கட்டிடத்தின் பல இடங்களில் பெரிய பெரிய அளவிலான உண்டியல்பெட்டிகள் வைத்திருந்தது மனதை என்னவோ செய்தது. பசி ருசியறியாது என்பது போல உண்டவர்களையே நான் அங்கு நேற்று பார்த்தேன்.
ஒவ்வொரு ஆலய நிர்வாகத்தினராலும், வந்திருப்போருக்கு மதியநேர மகேஸ்வர பூஜைக்கு பின் வழங்கப்படும் அன்னதானத்தினை பெருமைப்படும் வண்ணம் வழங்கி பக்தர்தர்கள் அருள் பசியை மட்டுமல்லாது, வயிற்றுப்பசியையும் போக்கிட எடுக்கும் முயற்சிகளை பாராட்டுவது இன்றியமையாத நற்குணம்தான். அதே நேரம், இவ் அன்னதானப் பணிக்குத் தங்களால் இயன்றளவு நிதியுதவியும் பொருளுதவியும் பக்தர்கள் செய்தே வருகின்றனர். இங்கு மட்டுமல்ல, எல்லாக் கோயில்களிலும். ஆலய நிர்வாகத்தினருக்கு உறுதுணையாகவே நாம் இருக்கிறோம்.
இருந்தும் ஒரு சில கோயில்களில், வருமானத்தை பெரிதெனக் கருதி இப்படி பக்தர்களுக்கு அரைகுறையாக அன்னதானம் என ஏனோ தானோ என செய்வதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதிலும், மாரான் மரத்தாண்டவர் கோயிலில் இப்படி நடப்பது என்பது ஆச்சரியப் படவைக்கிறது.
நாம் சாப்பாட்டுப்பிரியர்களாயிருந்தாலும், கோயிலில் பொதுவாக அடக்க ஒடுக்கமாகவே இதுநாள் வரையில் இருந்துவருகிறோம். அப்படி இருக்க, ஏதோ மக்களுக்கு உணவைப்படைத்தால் சரி... எனும் நிர்வாகத்தினரின் 'அலட்சியப் போக்கு கவலையூட்டுகிறது' என பலரும் பேசிக்கொள்வது என் காதுகளில் விழுந்தது. அங்கு உணவருந்திய அனைவரும் கணிசமான தொகையை உண்டியல்களில் இட்டதை நானும் கவனிக்கத் தவறவில்லை.
அதுமட்டுமல்ல, திரும்பிவரும்போது,'லஞ்சாங்' எனும் நகருக்கு காருக்கு பெட்ரோல் இட செல்லும்படி இருந்தது. அங்கிருந்த பெரியவர் எனது உடையை பார்த்து தெரிந்துகொண்டு,
" மரத்தாண்டவர் கோயிலில் இருந்து வரீங்களா....?
பூஜைகள் சிறப்பா இருந்துச்சா...
இடம் உங்களை கவர்ந்திருக்குமே....
உம், சாப்பாடுதான் சொதப்பி இருக்கும்..."
என்றார் பாருங்கள்....
ஆச்சரியப்பட்ட்டோம்.
நாங்கள் காரில் பேசிக்கொண்டது இந்த பெரியவருக்கேப்படி தெரிந்தது என்று. ஒருவேளை இதுதான் முன்னேற்றம் ஏதுமின்றி தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் ஒன்றா....?
நம்மில் பலர் கோயில் பூஜைகளுக்கு போவது அங்கு படைக்கப்படும் உணவுக்காகவும்தான். இறைவனின் அருள் பெற்ற அந்த உணவு நமக்கு கிடைத்தால் அது பெரும் பாக்கியம் என நம்மில் பலரும் நம்புகிறோம். அப்புனிதமான உணவை அதே புனிதத்துடன் படைத்து, வரும் மெய்யன்பர்களுக்கு வழங்குவது, கோயில் நிர்வாகத்தினரின் தார்மீகக் கடமையாகும். இதை அவர்கள் உணரும் காலம் கூடிய சீக்கிரம் வரும் என எதிர்பார்ப்போம்.




செனோர் / ஜெங்கா டோல் சாவடி 


மரத்தாண்டவர் ஆலயம் சுமார் 41கிமீ தொலைவில்









No comments:

Post a Comment