மலேசியாவின் புகழ்பெற்ற அடையாளச் சின்னமாக விளங்குவது நமது இரட்டைக் கோபுரம். இந்த இரட்டைக் கோபுரத்தை இணைக்கும் பாலத்திற்குச் சென்ற அனுபவம் உங்களுக்கு உண்டா...?
அந்தக் குறையை தீர்க்க, அதில் என்னதான் இருக்கிறது...? அங்கு செல்ல ஏன் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் எனும் எனது சந்தேகத்தை போக்கிக்கொள்ள அங்கு எனது குடும்பத்தாருடனும் உறவினர் சிலருடனும் சென்று வந்தேன்.
தங்களது முறை வரும் வரை வெளியே காத்திருப்போரில் சிலர்.
தினமும் மேலே அந்த இணைப்புப் பாலத்திற்குச் செல்ல ஒரு குறிப்பிட்ட அளவிலானவர்களே அனுமதிக்கப் படுகின்றனர். அதுவும் நுழைவுச் சீட்டு கொடுக்கத் துவங்கும் ஒரு சில நிமிடங்களிலே அனைத்தும் விற்று முடிந்துவிடுவது ஆச்சரியத்தை தந்தது. நமக்கு நண்பர் ஒருவர் முதல் நாள் இரவே இடம் பிடித்து நின்று நுழவுச் சீட்டெடுக்க உதவினார்.
மலேசியாவின் இரட்டைக்கோபுரத்தை இணைக்கும் அந்த பாலம் இது...
இரட்டைக்கோபுரத்தை இணைக்கும் பாலம்
பாலத்தினைப் பற்றிய சில விளக்கங்கள் அங்கே நாம் படிக்க வைக்கப்பட்டிருக்கின்றது.
மொத்தம் 88 மாடிகளைக்கொண்டு 451.9 மீட்டர் உயரத்தில் 1998 முதல் 2004 வரை ஆறு ஆண்டுகள் உலகத்தின் அதிக உயரமான கட்டிடமாக திகழ்ந்தது இந்த இரட்டைக் கோபுரம். அதன் பின் தைபெய் நாட்டின் கட்டிடம் அந்த பெயரைத் தட்டிச் சென்றது.
உள்ளே வந்த பின் நமக்கு இரு பக்கமும் காணக்கிடைக்கும் காட்சிகள்...
ஆகஸ்டு 1ல், 1999ம் ஆண்டு அதிகாரப் பூர்வமாக அன்றைய மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹமட் அவர்களால் திறந்து வைக்கப் பட்டது. 41ம் 42ம் மாடிகளில் இரண்டு கோபுரங்களையும் இணைக்கும் பாலமான இது இரண்டு கோபுரங்களும் காற்றழுத்தத்தால் அசையும் போது சில அடிகள் உள்ளேயும் வெளியேயும் விரிந்து சுறுங்கும் வகையில் இரண்டு கோபுரங்களுக்கும் பலமளிக்கக் கூடியதாக இது திட்டமிடப்பட்டு கட்டப்பட்டது.
சுமார் ஆயிரம் பேர் மட்டுமே தினமும் இப்பாலத்தினைக் காண அனுமதிக்கப்படுகிறார்கள். இப்படி குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையிலானவர் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுவதால், இன்றளவும் இந்த 41/42ம் மாடியில் இருக்கும் இந்த பாலத்திற்கு ஏகப்பட்ட மவுசு இருக்கிறது. முக்கால் பகுதி அனுமதிச் சீட்டுக்களை ஏஜன்ட் துணை கொண்டு வெளி நாட்டினரே பெற்று விடுகின்றனர். எனவே, நம் மலேசியர்களில் கூட இதை சென்று காணாதோர் பெரும்பாலோர் உள்ளனர் என்று அறிகிறேன்.
கோலாலம்பூர் வாசிகளுக்கு சுற்று வட்டார காட்சிகள் பழகிப்போயிருந்தாலும், வெளி நாட்டு சுற்றுப் பிரயாணிகள் இந்த இணைப்புப் பாலத்தில் இருந்தபடி மா நகரை ரசித்து மகிழ அவர்களுக்கு கிடைக்கும் ஒரு சந்தர்ப்பமாகும். பொதுவாக மேலிருந்து கண்ணில் தெரிகின்ற தொலை தூர காட்சிகளை காணுகின்றதென்பது, உண்மையில் கண்களுக்கும் மனதுக்கும் ரம்மியமான ஒரு காட்சியாகும். பார்த்தாலே பரவசம் என்பது இதுதானோ?
நானும் எனது புகைப்படக் கருவியின் துணைகொண்டு அங்கிருந்து பார்க்கக் கிடைக்கும் காட்சிகளை படமெடுக்க தவறவில்லை.
கோபுரங்களின் அடித்தளத்தில், சூரியா கே எல் சீ சீ எனும் வணிக வளாகம் ஒன்றும் உண்டு. வரும் விருந்தினர்களைக் கவரும் வண்ணம் தன்னகத்தே பலவற்றையும் கொண்டுள்ளது இந்த கே எல் சீ சீ. சினிமா அரங்குகள், உணவகங்கள், எல்லா பொருட்களும் ஒருங்கே கிடைக்கும் கடைகள், பெரிய அளவிலான சந்திப்புக்கள ஏற்று நடத்தக்கூடிய அரங்கங்கள், அவ்வப்போது நடக்கின்ற சந்தைகள், அரசியலின் மேல் மட்ட கூட்டங்கங்கள் மற்றும் மலேசியாவைப் பற்றிய நினைவுச்சின்னங்கள் விற்பனை மையங்கள் என பலருக்கும் உபயோகமான இடமாகவும், பலரும் கவனம் செலுத்தக்கூடிய முக்கியமானதாகவும் இந்த சூரியா கே எல் சீ சீ அமைகின்றது.
என்னருகே எனது மனைவி...
என் மனைவியின் பல நாள் கனவு இது. இங்கு எப்படியாவது சென்று என்னதான் சிறப்பு இங்கே என யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் கையில் 'ஸ்கைபிரிட்ஜ் நுழைவுச் சீட்டை" கொடுத்ததும் மிகவும் சந்தோசப்பட்டார். வாழ்வில் சில சாதாரண விசயங்கள் தாய்க்குலத்துக்கு மட்டற்ற மகிழ்ச்சியினைத் தருகின்றன. ஆயினும் சாதாரணம் என நாம் எண்ணும் பலவும் அவர்களுக்கு பெரிய விசயமாகின்றது. காரணம் அன்று முழுவதும் மகிழ்ச்சியின் அலைகளை அவரிடம் காண முடிந்தது. எனக்கும் அந்த மகிழ்ச்சியின் பாதிப்பு இருந்தது.
" உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.."
என சோக கீதம் பாடும் கணவர்கள் மத்தியில் இது போன்ற சின்னதாக செய்து நல்ல பெயர் வாங்கும் யுக்தியினை தெரிந்து கொண்டதினால் என்று சொல்லவும் வேண்டுமா?
உண்மையில் இங்கிலாந்தின் லண்டனுக்கோ, அமெரிக்காவின் நியு யோர்க் நகருக்கோ சென்றிருந்தால் அவருக்கு இப்படி ஒரு மகிழ்ச்சி கிடத்திருக்குமா எனபதும் கேள்விக்குறியே...
சில விசயங்களை நாம் அனுபவத்தின் மூலம் தான் தெரிந்துகொள்கிறோம்.
நமக்கு கொடுக்கப்படும் 20 நிமிடங்களுக்குள் பார்க்கவேண்டியதைப் பார்த்து, படமெடுக்கவேண்டியவற்றை படம் எடுத்த பின், அடுத்தவர்களுக்கு வழிவிட நேரமும் வந்துவிட்டது...
அந்தப் பாலத்தில் தெரியக் கூடியவை இனந்நேரம் உங்களுக்கு விளங்கி இருக்கும். மேலிருந்து கீழே பார்க்கும் காட்சிதான் என்றாலும், அந்த போய்ப் பார்க்கும் பந்தா அவ்விடத்தில் அளவுக்கதிகமாகவே காணப்படுகிறது. போய் வருபவர்கள் முகத்தில் ஒரு புன்னகையும் ( அட இவ்வளவுதானா...? என சிலர் கேட்கலாம். ஆனால், அந்த அருமையான காட்சியினை கண்டு வருவதென்பது நிச்சயமாக மனதுக்கு இதமானதுவே...), அட ஒரு வழியாக அங்கு சென்று வந்துவிட்டோம் எனுமொரு திருப்தியும் அரும்புவதைக் காணலாம்.
No comments:
Post a Comment