புகழ்பெற்ற எழுத்தாளர் ரா கி ரங்கராஜன்
அவர்களின் இறப்புச்செய்தி இன்றைய மலேசிய நண்பன் நாளிதழில் இடம்பெற்றிருந்தது. சில நாட்களாக உடல் நலக் குறைவில் சிரமப் பட்ட அவர் 18ம் தேதி சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 85.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு எழுத்தாளர் அவர்.
எழுபதாம் ஆண்டுகளில் இருந்து அவரது படைப்புக்களை படித்து வருபவன் நான். அவர் மறைவு எழுத்துலகிற்கு ஒரு பேரிழப்பாகும்.
கடந்த ஆண்டு தமிழ் நாட்டுக்கு சென்றிருந்த போது அவரின் 'பட்டாம்பூச்சி' புத்தகத்தை தேடிச்சென்று வாங்கி பத்திரப் படுத்தி வந்தேன்.
அப்புத்தகம் படித்தவர் மனதை மிகவும் கவர்ந்த ஒன்றாக இது பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ஒரு மொழி மாற்றுப் புத்தமான இதற்கு கிடைத்த வரவேற்பு அவரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பப்பிலான் என்னும் ஹென்றி ஷாரியரின் மூலக் கதையை ஐயா
ரா.கி.ர
அவர்கள் மொழிபெயர்த்த விதம் தமிழ் படித்த அனைவராலும் பெரிதாக பேசப்பட்டது.
இவருடைய ஏனைய மொழிமாற்று நவீனங்கள்: சிட்னி ஷெல்டன் எழுதிய 'இஃப் டுமோரொ கம்ஸ்' என்னும் நாவல் 'தாரகை' என்றும், 'தி ஸ்டார்ஸ் ஷைன் டவுன்', 'லாரா' என்றும், ''ரேஜ் ஒஃப் ஏஞ்சல்ஸ்', 'ஜென்னிபர்' என்றும் மொழி மாற்றத்துடன் வந்து சாதனைகள் புரிந்தன. இன்னும் பல தொடர்கள் இவரின் கைவண்ணத்தில் வெளிவந்து வெற்றிபெற்றன.
அவர் எழுதிய 'படகு வீடு"ம் படிக்க சுவாரசியம் குன்றாத ஒன்றே.
1947 முதல் 'குமுதம்' ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்த இவருக்கு குமுதத்தின் நிறுவனர் எஸ் ஏ பி அவர்கள் "அரசு" பதில்கள் பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் எழுதும் முக்கிய பொறுப்பினைத் தந்தார். அந்த 'அரசு "வில் உள்ள 'ர' இவர்தான். அதில் 'அ', அண்ணாமலை எனும் 'எஸ் ஏ பி' யையும், 'சு' , ஜ. ரா. சுந்தரேசனையும் குறிக்கும்.
42 ஆண்டுகளுக்குப் பின் குமுதத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னும் இடைவிடாமல் தொடர்ந்து பத்திரிகைகளுக்கு எழுதிக் கொண்டே இருந்தார். வாரா வாரம் வெளிவந்த 'எகஎ' ( எப்படி கதை எழுதுவது ) என்னும் தொடரின் மூலம் பல புதிய எழுதாளர்களை உறுவாக்கியவர் இவர்.சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, வினோத் என்பன போன்ற புனைப் பெயர்களிலும் கிருஷ்ணகுமார் என்ற பெயரில் 'கோஸ்ட்' மற்றும் 'எனக்குள் ஒரு ஆவி' எனும் கதைகளும், டி.துரைசாமி என்ற பெயரில் குற்றங்கள் தொடர்பான கதைகளும் எழுதினார். அதிக காலம் முன்னனி எழுத்தாளராக இருந்த போதும் முகம் காட்டாது தனது புனைப்பெயர்களிலே சிறப்புப் பெற்றார். இன்னமும் வாசகர்கள் பலருக்கு அந்த புனைப்பெயர்களில் எழுதியது பற்றி சந்தேகம் இருக்கலாம். எல்லோரும் விரும்பிப் படித்த 'லைட்ஸ் ஒன்' சினிமா செய்திகளை சுவைபடச் சொன்னதும் இவரே. 'வினோத்' என்னும் பெயரில் இப்பகுதிக்கு இவர் எழுதினார்.
பல சிறுகதைகளை எழுதியிருக்கும் இவர் கடித வடிவக் கதைகள் எழுதுவதில் வல்லவர். இவற்றோடு குமுதத்தில் ஒரு பக்கக் கதைகளை அறிமுகப்படுத்தியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.
அன்னார் மறைந்தாலும், அவரின் இலக்கியச்சேவை தமிழ் உள்ளளவும் இருந்துகொண்டு இருக்கும்.
அவரின் எழுத்தைப் படித்து வளர்ந்தோரில் நானும் ஒருவன். இன்று அவரின் ஆன்மா இறைவனடி சேர வேண்டிக்கொள்ளும் பல்லாயிரம் பேரில் ஒருவனாகிறேன்.
பன்முக எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனின் இரு கட்டுரைகள் இங்கே:
ReplyDeletehttp://s-pasupathy.blogspot.ca/2012/08/1_19.html
http://s-pasupathy.blogspot.ca/2012/08/2_3701.html
நன்றி ஐயா. . .
ReplyDelete