Monday, 27 August 2012

இன்றைய பெண்கள். . .

அலையெனப் பொங்கும் மனதை கஷ்ட்டப்பட்டு அடக்கி கொள்வது பெண்களுக்கே உரிய சிறப்பு. அன்றைய பெண்களுக்கு இது   நிறைய  இருந்தது. குடும்ப நன்மைக்காகவும், ஒற்றுமைக்காகவும் பெண்கள் கோபச் சூழ்நிலைகளிலும் சாந்தமாக இருந்து சாதித்தனர். வீட்டின் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திட அவர்கள் தங்களின் உண்மையான எண்ணங்களை வெளிக்காட்டியதில்லை.  குடும்ப முன்னேற்றமே அவர்களின் இலக்கு.

 நமது அம்மா, சின்னம்மா, பெரியம்மா, சித்தி, அத்தை, அக்கா, பாட்டி போன்றவர்களோடு நமது தோழிகளும் அடக்கி வாசித்த காலம் அது. இருந்தும் அவர்கள் மேல் நமக்கு மதிப்பும் மரியாதையும் பெருகியதேயன்றி ஒருபோதும் குறைந்ததில்லை.

இப்போது நிலைமை மாறிவிட்டது போன்ற தோற்றம் எங்கு பார்க்கினும். பெண்கள்  எதையும் எல்லாவற்றையும் எதிர்கேள்வியுடனேயே பார்க்கிறார்கள். இது தன்னம்பிக்கையின் தாக்கமா அல்லது சுழலும் காலச்சக்கரத்தின் கட்டாய புரட்சியா?

இதனால் அவர்களுக்கு ஏற்படுவது நல்லதே என்றால் யாரும் எதையும் கேட்கப் போவதில்லை. ஆனால், தங்களின் அவசர குணத்தாலும் வெளிப்படையாக பேசி பிறரின் மதிப்பை இழக்கும் போது நமக்கு சற்று வருத்தம் தோன்றவே செய்கிறது. அவர்கள் யார் வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் நமக்கு தோன்றுவது ஒருவகை ஏமாற்றமே. "அடடா, சொல்லும் அதே கருத்தை கொஞ்சம் அமைதியாக பேசி எல்லோருடைய நன்மதிப்புக்கு பாத்திரமாகி இருக்கலாமே.." என எண்ணத்தோன்றுகிறது.  இது அவர்களுக்குத் தெரியாதா என்ன...? இருந்தும் அவர்களின் இந்த முரட்டு சுபாவம் அவர்களின் வாழ்வை மட்டுமல்ல குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் மனதையும் பாதிக்கத்தொடங்கிவிடுகிறது. அங்கும் இங்கும் என பரவலாக நாம் காணுகின்ற சம்பவங்கள் இதைத்தானே உணர்த்துகின்றன. விட்டுக்கொடுத்துப் போவதென்பது பெண்களிடத்தில் இப்போது அரிதாய் காணும் ஒன்றாகிவிட்டது.

அன்மையில் தொலைக்காட்சியில் இடம்பெற்ற மேலவைத்தகவல் ஒன்று என்னை ஆச்சரியப்படவைத்தது. 2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நம் நாட்டில் 11,597 பேர் தனித்து வாழும் இந்திய தாய்மார்களாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றனர். இது வெறும் தனித்து வாழும் தாய்மார்களின் புள்ளி விவரம் தான். மணம் புரிந்த சில காலங்களிலே கணவனைப் பிரிந்து வாழும் மனைவிகள் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை.

ஒவ்வொரு வருடமும் நாம் கலந்து கொள்ளும் திருமண வைபவங்கள் பல. அவற்றில் நண்பர்கள், உறவினர்கள், ஒன்றாக வேளை செய்பவர்கள் மற்றும் நமக்குத் தெரிந்த அவர்களின் நண்பர்களும் உறவினர்களும் என பலரின் திருமணங்களுக்கு நமக்கு அழைப்பு வருகிறது. இன்று போல் என்றும் இனிதே வாழ்க என மணமக்களை வாழ்த்துவதோடு நம்மால் முடிந்த அன்பளிப்பையும் கொடுத்துவிட்டு பரிமாறப்படும் உணவினையும் ஒரு பிடி பிடித்துவிட்டு வருகிறோம். ஆனால், நடக்கும் அனைத்து திருமணங்களும் வெற்றிபெறுவதில்லை. சில சிக்கள்களில் மாட்டி சிதறுண்டு போகின்றன.

பிரிவுக்கு சொல்லப்படுகின்ற காரணங்கள் ஆயிரமாயிரமாக இருந்தாலும், பாதிக்கப்படுகின்றவர்கள் ஏனோ பொதுவாக பெண்களாகவே இருக்கின்றனர்.

இசையமைப்பாளர் டி ஜி லிங்கப்பா

பழைய இசையமைபாளர்களில் டி ஜி லிங்கப்பாவும் ஒருவர். சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் இசைத்துறையில் சேர்ந்து பல நல்ல பாடல்களை  நாம் ரசிக்கும்படி இசையமைத்துத் தந்த அவரை இன்று நாம் நினைத்துப்பார்க்கிறோம்.

"அமுதைப் பொழியும் நிலவே - நீ
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ..."

'தங்கமலை ரகசியம்' என்னும் திரையில் ஒலியேறிய பாடல் இது. பி.சுசிலாவின் தேனிசைக் குரலில் படத்தில் இருமுறை ஒலியேறும். சந்தோசத்திலும் சோகத்திலும்  சுசிலா அசத்தி இருப்பார். பல வருடங்கள் ஆனாலும் இன்னும் நம் மலேசிய நாட்டில் அப்பாடலின் புகழ் மங்கவே இல்லை. வயதானோர் முதல் இளம் உள்ளங்கள் வரை இப்பாடல் அவர்களின் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.  ராகங்கள் பற்றி நமக்கு அவ்வளவாக தெரியாது போனாலும் கவிஞர்கள் சொல்வது போல நம் மனதைக் கவர்ந்த மோகன ராகமோ இது?? கேட்க எவ்வளவு இனிமையாக இருக்கிறது.

'தங்கமலை ரகசியம்' நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்.
"இகலோகமே, இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே"
என்றொரு பாடலும் இதில் இருந்தது. மொழி தெரியாது காட்டில் வளரும் சிவாஜி, இந்தப் பாடலில் தொடங்கி முடியும்போது தமிழ் நன்றாகப் பேசத் தெரிந்தவராக காட்டியிருப்பார்கள். இது ஒருவகையில் ரசிக்கும்படியாகவே இருந்தது. இரு குரலிசையான இதற்கு பி.லீலா மற்றும் டி எம் எஸ் இருவரும் குரல் கொடுத்திருந்தனர்.

அமுதைப் பொழியும் நிலவே' பாடலைப்போலவே, டி ஜி லிங்கப்பா இசையமைத்த இன்னொரு பாடலும் திரையில் இருமுறை இடம்பெறும்.
அது,
"சித்திரம் பேசுதடி - என்
சிந்தை மயங்குதடி
சித்திரம் பேசுதடி...."
என்ற பாடலாகும்.

மிக அருமையான இசையமைப்பில் உருவான பாடல் இது என்றே நான் சொல்லுவேன். ஆண் குரலில் மகிழ்ச்சியாக முதல் பாதியிலும் பெண் குரலில் சற்றே ஏக்கத்துடன் மறுபாதியிலும் இடம்பெற்று புகழைச்சேர்த்துக்கொண்ட பாடல் இது. திரையில் கதா நாயகிக்கு சூலமங்கலம் ராஜலக்ஷ்மியும் நாயகன் சிவாஜிக்கு டி எம் எஸ்ஸும் பாடி இருந்தனர். படம் : சபாஷ் மீனா

"ராதா மாதவ வினோத ராஜா
எந்தன் மனதின் ப்ரேம விலாசா" என்றும்,

"சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு
சும்மா சும்மா கூவுது
சோளக்கதிரு தாளம் போடுது.. தன்னாலே" என்றும,
 'எங்கள் குடும்பம் பெரிசு' படத்துக்கு இசையமைத்து டி ஜி லிங்கப்பா பேரும் புகழும் சேர்த்துக்கொண்டிருந்தார் அப்போது.

தொடர்ந்து  அவர் இசையமைப்பில் வந்த பாடல்களில் அவரின் மகத்துவம் பலருக்கும் தெரியத் தொடங்கியது.

இதோ சில பாடல்கள்..

"என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே"

"கோட்டையிலே ஒரு ஆலமரம் - அதில்
கூடு கட்டும் ஒரு மாடப்புறா"

"செவ்வந்திப்பூ செண்டு போல கோழிக்குஞ்சு - தன்
சிறகுக்குள்ளே குடியிருக்கும் கோழிக்குஞ்சு"

"கல்யாண ஊர்வளம் பாரு
மாப்பிள்ளை பெண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னுது பாரு
காரணம் நீயே சொல்லு..."

"பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளம் இல்லை - நல்ல
உள்ளம் இல்லை - என்றும்
பெண்ணாசை கொண்டோர்க்கு கண்ணும் இல்லை - இரு
கண்ணும் இல்லை"

"தங்க மலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே
அந்தி பகலாய் எந்தன் மனதில்
அருள் விளங்கும் தெய்வமே"

" ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகிப் பிரிவது துயரம் "

"அமைதி அமைதி
உலகமெங்கும் ஒரே அமைதி"

இவை மட்டுமா, 'வாழ்விலே ஒரு நாள்' படத்தில் இடம்பெற்ற,

"தென்றலே வாராயோ
இன்ப சுகம் தாராயோ
தேன் மலர்ச் சோலையிலே
சிங்கார வேளையிலே..."

என்னும் பாடல் டி எம் எஸ், யு ஆர் ஜீவரத்தினம் குரலில் இனிமையாய் ஒலித்ததை என்னைப்போன்ற பழைய பாடல் விரும்பிகள் பலர் இன்னும் நினைவில் வைத்திருப்பர். காலத்தால் அழிக்கமுடியாத அமுத கானங்களில் இதுவும் ஒன்று. அன்றைய மிகவும் மதிக்கப்பட்ட பெண்பாடகிகளுள் ஒருவரான யு ஆர் ஜீவரத்தினம் பாடிய இப்பாடலை ஒரு பொக்கிஷமாகவே பலரும் குறிப்பிடுகின்றனர்.

அவர் குரலுக்காக மட்டுமல்ல, அப்போதுதான் பின்னனி இசையில் பாடத்தொடங்கி குரல் கொடுத்துக்கொண்டிருந்த டி எம் எஸ்சின் இளைமைக்கால குரலை கேட்டு ரசிக்கவும் இப்பாடலை பல முறை கேட்கலாம்.

அற்புதமான இதுபோன்ற பல பாடல்களைத்தந்த இசையமைப்பாளர் டி ஜி லிங்கப்பா என்றென்றும் நம்மோடு நிலைத்து நிற்பார் அவரின் பாடல்கள் மூலம்.

Saturday, 25 August 2012

மொழிபெயர்ப்பின் 3 ரகசியங்கள் - ரா.கி.ரங்கராஜன்

புகழ்பெற்ற எழுத்தாளர்   ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மறைவினையொட்டி 1990களின் போது அவர் எழுதி குமுதத்தில் வெளிவந்த அவரது மொழிபெயர்ப்பு பற்றிய கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருக்கிறேன். படித்து ரசிக்கவும். . .


கொஞ்சம் சரியாய் யோசித்துப் பார்த்தால் மொழி பெயர்ப்பு எழுத்தாளனாகத்தான் நான் வாழ்க்கையை ஆரம்பித்தேன் என்று புரிகிறது. அப்படியேதான் என் வாழ்க்கை முடியவும் போகிறது என்று தோன்றுகிறது. மொழி பெயர்ப்பு விஷயத்தில் ஒரு பெரிய வசதி என்னவென்றால், எவனோ ஒருத்தன் கஷ்ட்டப்பட்டு மண்டையை உடைத்துக் கொண்டு எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறான். அதற்குப் போய் 'பிரமாதம்' என்ற பாராட்டு நமக்குச் சுலபமாய்க் கிடைக்கும்.

என் அப்பா மகாமகோபாத்யாய ஆர். கிருஷ்ணமாச்சாரியார். அவர் சமஸ்கிருத பண்டிதர். அதனால் தமிழில் மொழிபெயர்ப்பார். என் அப்பா மொழிபெயர்ப்பாளராய் இருந்ததால் அது என் ரத்தத்தில் ஊறி எனக்கும் கொஞ்சம் வந்திருக்கும் என்ரு நினைக்கிறேன். அவர் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தார். நான் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு .

ஐந்தாம் ஃபாரம், ஆறாம் ஃபாரம் படித்துவிட்டுக் கொஞ்ச நாட்கல் சும்மா இருந்தபோது கும்ப கோணத்தில் பிரபலமாய் இருந்த சாது சேஷ்ய்யா லைப்ரரி என்ற நூலகத்துக்கு அடிக்கடி போவேன். பழைய லைப்ரரி. பழைய புத்தகங்கள். அங்கே போய் டிக்கன்ஸ் போன்ற எழுதாளர்களின் படைப்பை எல்லாம் படிப்பேன். ஷேக்ஸ்பியர், மில்டன் போன்றவர்களின் கவிதகளையெல்லாம் படிக்க மாட்டேன். விக்டர் ஹ்யூகோ, டூமாஸ் போன்றவர்களின் ஆக்ஷன் நிறைந்த கதகளைச் சுவாரஸ்யத்துடன் படிப்பேன்.


டிட் பிட்ச் பத்திரிகை அப்போதே வந்து கொண்டிருந்தது. அதில் ஒரு ஜோக் வெளிவந்திருந்தது. " நான் பாடிக்கொண்டே இருந்தேன். என் செவிட்டு அத்தை திடீரென்று மயக்கம் போட்டு விழுந்து விட்டாள்" என்பார் ஒருவர். "ஓஹோ...திடீரென்று அவளுக்கு காது கேட்க ஆரம்பித்துவிட்டதா...?" என்பார் இன்னொருவர். இதைக் கல்கிக்கு மொழி


பெயர்ப்புச் செய்து அனுப்பினேன். பத்து ரூபாய்ப் பரிசு கிடைத்தது.

மௌளபரீஸ் ரோட்டில் சக்தி என்னும் பத்திரிகை ஆபீஸ் இருந்தது. வை.கோ தான் முதலாளி. சுப. நாராயணன், தி.ஜ.ர. ஆகியோர் இருந்தார்கள். அங்கே எனக்கு வேலை கிடைத்தது. முதலில் ஐபது ரூபாய் தருவதாகச் சொன்னார். என் அண்ணா சொன்னதன் பேரில் எழுபத்தைந்து ரூபாய் தர ஒப்புக்கொண்டார்.

அந்தக் காலத்திலேயே வை. கோ ஹிக்கின்பாதம்சூக்குப் போய் முன்னூறு நானூறு ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு டாக்ஸியில் எடுத்துவருவார். அதையெல்லாம் மொழிபெயர்ப்புச் செய்யச் சொல்லுவார். எல்லாமே கம்யூனிஸ்ட் இலக்கியங்கள். ஆங்கிலத்தில் வந்த ரஷ்யப் புத்தகங்களை மொழிபெயர்ப்பேன். அவற்றைப் பிரசுரம் செய்வார். அனேகமாகச் சிறுகதைகள்தான்.

இப்படிக் காலம் போய்க்கொண்டிருந்தபோது கோயமுத்தூரில் பெரியசாமித் தூரன் அவர்கள் ஒரு பத்திரிகையை காலச் சக்கரம் என்ற பெயரில் ஆரம்பிக்கப் போவதாகவும் அதில் வேலை செய்ய உதவி ஆசிரியர் தேவை என்றும் தினசரியில் விளம்பரம் கொடுத்திருந்தார். அவருக்கு எழுதிப் போட்டேன். சென்னை சாந்தோமில் ஒரு விலாசம் கொடுத்து அங்கு வரப் போவதாகவும், தன்னை வந்து சந்திக்கும்படியும் எழுதி இருந்தார். போய்ப் பார்த்தேன். மிகமிகப் பிரியமாய்ப் பேசினார். என்னை வேலைக்குச் சேர்த்துக் கொள்வதாகய்ச் சொன்னார்.

 நான் ஏற்கனவே வேலை செய்துகொண்டிருந்த சக்தி பத்திரிகையில் முதலாளி வை.கோ. அவர்களிடம் மெல்லப் போய், நான் வேறு வேலையில் சேரவிருப்பதைத் தயங்கி தயங்கிச் சொன்னேன். அவர் சிரித்தபடி "தாராளமாய்ப் போய் விட்டு வா. நீ நன்றாய் ஓஹோவென்று வரப் போகிறாய். எங்கள் நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு வெளியே போய் வேறு வேலையில் சேர்ந்தவர்கள் எல்லோரும் இன்றைக்கு மிகவும் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். நீயும் அதுப்போல் நன்றாய் இருப்பாய்." என்று வாய் நிறைய ஆசிர்வாதம் செய்து அனுப்பினார்.

நான் நேராய்க் கும்பகோணம் போனேன். அங்கேயிருந்து கோயமுத்தூர் போய்விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அங்கே போனதும் என் அண்ணா விஷயத்தைக் கேள்விப்பட்டு என்னை பார்த்துக் கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்துவிட்டார்."எழுத்து மூலம் உனக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் எதாவது வந்ததா?" என்று கேட்டார். நான் இல்லையென்றேன்.

"பின்னே எந்தத் தைரியத்தில் ஏற்கனவே இருந்த வேலையை விட்டாய்?" என்று என்னைக் கோபித்துக் கொண்டார். எழுத்து மூலம் ஆர்டர் இல்லாமல் நான் போய்ச் சேரக்கூடாது என்றார். நான் பெ. தூரனுக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டு, "எப்போது வந்து சேரட்டும்?" என்று கேட்டதற்கு அவர், " நாங்கள் எப்போது பத்திரிகை ஆரம்



பிப்பது என்றே இன்னும் முடிவு செய்யவில்லை. ஆரம்பித்தவுடனேயே உங்களை வரவழைத்துக் கொள்கிறேன்." என்று எனக்கு எழுதிப் போட்டுவிட்டார். அவ்வளவுதான். என் அண்ணா பார்த்தசாரதிக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. கன்னா பின்னாவென்று கோபமாய் ஒரு லெட்டர் எழுதிவிட்டார். "என் தம்பி உங்களை நம்பி ஏற்கனவே இருந்த வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டான். இப்போது என்னடாவென்றால் இப்படிச் சொல்கிறீரே?" என்று கேட்டு எழுதியிருந்தார். அப்படியெல்லாம் கடிதம் எழுதுவதென்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். அந்தக் கடிதத்திப் பார்த்துவிட்டு பயம் ஏற்பட்டதாலோ என்னவோ, என்னை  உடனேயே வந்து சேருமாறு அவர்கள் எழுதிவிட்டார்கள். என் அண்ணா எழுதியிருந்த கடிதத்தில், " நீங்கள் வேல தராவிட்டாலும் அவனுடைய காலச்சக்கரம் சுழலும்" என்று எழுதியிருந்தார். அந்தப் பத்திரிகையின் பெயரும் காலச்சக்கரம் என்பதால் அதை வைத்து அப்படி எழுதி விட்டதில் அண்ணாவுக்கு மிகவும் பெருமை.

தன் கடிதத்துக்கு நல்ல பலனும் இருந்தது பற்றி மிகவும் மகிழ்ந்து போனார். என்னை அனுப்பி வத்தார். நான் கோயாமுத்தூர் போனேன். சி. சுப்பிரமணியம் வீட்டில்தான் காலச்சக்கரம் ஆபீஸ் இருந்தது. அதற்கு இரண்டு ஆசிரியர்கள். பெரியசாமித் தூரன் ஒரு நாளும் பெரியசாமிக் கவுண்டர் என்பவர் இன்னொரு நாளும் வருவார்கள். நான் மற்ற நாட்களில் பத்திரிகையப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர் என்னிடம், "டைம் பத்திரிகையப் போல் நம் பத்திரிக வரவேண்டும்." என்று சொன்னார். நான் டைம் பத்திரிகையெல்லாம் அதிகம் பார்த்தது கிடையாது. நான் எப்படி என்று கேட்டபோது, " பத்திரிகையில் படங்களே கூடாது. செய்திகள்தான் அதிகம் இருக்க வேண்டும்." என்றார்.

நான் ஏற்கனவே கம்யூனிஸ்ட் சிந்தனையுள்ள பத்திரிகையில் வேலை செய்ததாலும், கம்யூனிஸ்ட் நண்பர்கள் அதிகம் என்பதாலும், கம்யூனிஸ்ட் பத்திரிகைகளை வாங்கி அவற்றிலிருந்து மொழிபெயர்ப்புச் செய்து எழுத ஆரம்பித்தேன்.

ஒரு சமயம், காலச்சக்கரம் பத்திரிகையில் வரும் தலையங்கமெல்லாம் காரசாரமாய் இல்லை என்று பேசிக்கொள்வதாய்ச் சொன்னார்கள். ஏனெனில், இரண்டு ஆசிரியர்களுமே விவசாயிகள் என்பதால் விவசாயப் பிரசினைகளை மையமாமாய் வைத்தே தலையங்கம் எழுதிக் கொண்டிருந்தார்கள். என்னிடம் வந்து தூரன் அவர்கள், " ஏன் ரங்கராஜி ( என்னை அவர் இப்படித்தான் கூப்பிடுவார் ) நம்ம தலையங்கமெல்லாம் காரமாய் இல்லைன்னு பேசிக்கறாங்களாமே?" என்று கேட்டார். நானும் ஆமாம் என்று தலையாட்டிவிட்டேன்.

அப்போது அவர் என்னைத் தலையங்கம் எழுதச் சொன்னார். நான் கம்யூனிஸ்ட் சிந்தனையுடன், ஜெய்ப்பூர் காங்கிரஸ்சைப் பற்றியும், அப்போது நடந்து கொண்டிருந்த ரயில்வே ஸ்ட்ரைக்கை ஆதரித்தும் தலையங்கம் எழுதிவிட்டேன்.

கொஞ்ச நாட்கள் கழித்து, " ஏம்ப்பா, என்ன தலையங்கம் எழுதினே ரங்கராஜி?"

அந்த அளவுக்குத் தன் பத்திரிகையில் என்ன வருகிறது என்று அவரே கவனித்துப் பார்க்க மாட்டார். நான் என் தலையங்கத்தைப் பற்றிச் சொன்னேன். அவ்வளவுதான். " ஐயைய்யோ...அப்படியெல்லாம் எழுதாதே! சி. சுப்பிரமணியம் கூட என்னிடம் கேட்டார். எல்லோரும் உன் பத்திரிகையில் யாராவது கம்யூனிஸ்ட் இருக்காரா என்று கேட்கிறார்கள். அப்படியெல்லாம் எழுதக் கூடாது" என்றார்.

டால்டாவ்ஸ்க்கியிம் 'கிரைம் அன்ட் பனிஷ்மென்ட்' என்று ரொம்ப நல்ல புத்தகம் ஒன்று உண்டு.



அதை மொழிப்பெயர்ப்புச் செய்ய ஆசை ஏற்பட்டது. ஒரு கொலையப் பற்றி மிகவும் அருமையாய் அதில் ஒரு பகுதி உண்டு. அது கொஞ்சம் கஷ்ட்டமான பகுதி. அதைச் சிரமப் பட்டு மொழிபெயர்த்தேன். சீனிவாசராகவன் அவர்கள் சிந்தை என்று ஒரு பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார். அதற்கு அனுப்பி வைத்தேன், பிரசுரமானது.

மொழிபெயர்ப்புக் கலையில் நான் ஏதோ சிறப்பாய் இருப்பாதாய்ச் சொல்கிறார்களே தவிர, அப்படியெல்லாம் இல்லை. அதெல்லாம் மிகவும் கஷ்ட்டம். மத்திய அரசாங்கத்திடமிருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது. ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தில் என்னை மொழிபெயர்ப்பு செய்யும்படி கேட்டுக் கொண்டார்கள். முதலில் குழந்தைகளுக்காகத் தாகூர் எழுதிய கதை ஒன்றைக் கொடுத்து மொழிபெயர்க்கச் சொன்னார்கள். அது சுலபமாய்ச் செய்ய வந்துவிட்டது. ஆனால் அதன் பிறகு, 'தி காம்ப்ளக்ஸஸ் அண்ட் பிரின்சிபில்ஸ் ஆஃப் பிராட்காஸ்டிங் இன் இண்டியா' என்கிற மாதிரி ஏதோ சிக்கலான தலைப்பு. எந்தெந்த நாட்டில் ஒலிபரப்புக் கலை எந்த நிலையில் உள்ளது என்று ஆரம்பித்து நிறைய இருந்தது. முதல் இரண்டு பக்கங்கள் மொழிபெயர்க்கவே எனக்கு இரண்டு நாட்கள் பிடித்தன. ஏனெனில் அதில் டெக்னிகல் வார்த்தைகள் மிகவும் அதிகமாய் இருந்தன. ஆகவே, இது எனக்கு ஒரு தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு முக்கிய காரணம் அதில் எனக்கு ஆர்வம் இல்லாதது தான். ஆர்வமாய்ப் படிக்கக்கூடிய விஷயத்தை மட்டும்தான் சுவையாய் மொழிபெயர்க்க முடியும். பட்டாம்பூச்சி அப்படி சிறப்பாய் அமைய அதுதான் காரணம். அந்தப் புத்தகத்துக்குச் சுஜாதா மிகவும் பிரமாதமாய் ஒரு முன்னுரை எழுதிக் கொடுத்திருந்தார். என்னை ஆகா ஓஹோ என்ரு பாராட்டி எழுதியிருந்தார். அதில், 'ரங்கராஜன் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதால்தான் அவருக்கு இவ்வளவு சிறப்பாய் மொழி பெயர்க்கவும் வருகிறது,' என்று எழுதியிருந்தார். ஆனால், எனக்கென்னவோ அந்தப் பாராட்டுச் சரியா என்று தெரியவில்லை. ஏனெனில் சாதாரணமாய் எனக்குத் தெரிந்த யாருமே, மூலத்தைப் படித்தால் மொழிபெயர்ப்பைப் படிப்பதில்லை. தமிழில் படித்தால் ஆங்கிலத்தில் படிப்பதில்லை. அதைப் படிப்பவரும் இதைப் படிப்பவரும் சந்தித்தால் என் பாடு ஆபத்துதான்.

ஏனெனில், மூல ஆசிரியருக்கு உண்மையில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று தெரிந்தால் என்னை வெட்டிப் போட்டுவிடுவார். வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்து அவர் எழுதியிருப்பதை அப்படியே கொடுக்க முயற்சி செய்தால் அதில் அவ்வளவு சுவாரஸ்யம் இருக்காது. வேகம், சரளம், சுவாரஸ்யம் இவைதான் ஒரு மொழிபெயர்ப்புக்கு அவசியம். நான் கஷ்ட்டப்பட்டுக் கொண்டு புரிந்துகொண்டு அதைக் கஷ்ட்டப்பட்டுக்கொண்டு இன்னொருவருக்கு விளக்குவானேன்?

நான் மொழிபெயர்க்கும் கதைகளை நிறையப் பேர் படித்துவிட்டு, இதைப் படித்தால் மொழிபெயர்ப்பு மாதிரியே இல்லையே என்று புகழ்கிறார்கள். நான் எங்கே மொழிபெயர்ப்பு செய்கிறேன்? படித்துவிட்டுத் தமிழில் அதையே எழுதிவிடுகிறேன். நடுவில் ஏதாவது புரியவில்லையென்றால் அதை விட்டுவிட்டு எழுதிக்கொண்டே போய்க்கொண்டிருப்பேன். புரிந்தால் அப்படியே எழுதிக்கொண்டு போவேன். மொழிபெயர்ப்பானாலும் என் சொந்த நடையில் எழுதிவிடுவேன். இதுதான் என் வெற்றியின் ( அப்படி ஏதாவது இருந்தால் ) ரகசியம்.

- புத்தக நண்பர்கள் நூலகக் கூட்டத்தில் ரா.கி.ரங்கராஜன் ( தொகுப்பு : பாமாஜி )

நன்றி : குமுதம் 




என் பார்வையில் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்களின் சிறந்த படைப்பாக இங்கே உள்ள 'பட்டாம்பூச்சி' நாவலைத் தான் சொல்வேன். தமிழில் படிக்கும் போது 'சஸ்பென்ஸ் ' தாங்காமல், ஆங்கிலத்தில் 'பாப்பிலான்' என வெளிவந்த இந்த புத்தகத்தை நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கேட்டு அலைந்து,  கண்டுபிடித்து வாங்கி வந்து, பாதி விளங்கியும் மீதி விளங்காமலும் படித்து முடித்ததை நினைவுகூர்கையில் அந்த இளமைக்கே பறந்து சென்று மீண்டும் வந்தது போன்ற ஒரு பிரம்மை.


மேலே: 13.4.1972ம் தேதி முதன் முதலில் குமுதத்தில் அச்சிடப் பட்ட 'பட்டாம்பூச்சி' நாவலின் முதல் அத்தியாயம். அன்று குமுதத்தின் விலை 30 மலேசிய காசுகள் ( இன்று 2.70 ம.ரி ). அன்றைய வாசகர்களிடம் இன்னொரு பழக்கமும்  இருந்தது. தங்களது விருப்பமான எழுத்தாளரின் தொடர்கதைகளை சேகரித்து 'பைன்டிங்' செய்து வைத்துக்கொள்வார்கள். 'பட்டாம்பூச்சி' நான் சுமார் நூறு வாரங்களாக சேகரித்து வைத்து, இன்றும் அழகு பார்க்கும் ஒரு புத்தகமாகும்.


Friday, 24 August 2012

நெடுஞ்சாலை மரணங்கள். . .

"சாலையின் குறுக்கே திடீரென்று கடந்த மாடு ஒன்றை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் அதை ஓட்டி வந்தவர் பரிதாபமாக அதே இடத்தில் உயிர் இழந்தார்"

மிகச்சாதாரணமாக நம்முடைய தினசரிகளில் நாம் படிக்கும் செய்திதான் இது. இறந்தவர் யாரோ ஒருவர் என்பதனால் நாம் இதுபோன்ற செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மோட்டார் சைக்கிள்கள் மட்டுமல்ல, சில நேரங்களில் கார்கள்கூட எதிர்படும் மிருகங்களையோ அல்லது இறந்து கிடக்கும் மிருகங்களையோ மோதி ஓட்டுனர்களோ  உடன் வருபவர்களோ உயிர் இழப்பதுண்டு.

60/70 கி,மீ என வேகக் கட்டுப்பாடு இருக்கும் மாநில சாலைகளில் இது போன்று விபத்துக்கள் நடக்கும்போது பாதிப்பு அவ்வளவாக இருப்பதில்லை. ஆனால், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 110கி மீ வேகத்தில் இப்படி எதிர்பாரா விபத்துக்களில் யாரை குறை சொல்வது என்று சிந்திக்கவேண்டி உள்ளது. அதுவும் சில இடங்களில் "கவனம், கால் நடைகள் கடக்கும் இடம் " என நெடுஞ்சாலையை பராமரிப்போரே அறிவுப்புப் பலகைகளை வைப்பது சற்று ஆச்சரியப் படவைக்கிறது.

ஒரு சில  நேரங்களில் சரியான சாலை விளக்குகள் இல்லாததனால் சாலையின் நடுவே கிடக்கும் சிலவற்றை வாகன ஓட்டுனர்கள் கவனிக்க இயலாமல் போய்விடுகிறது.

நெடுஞ்சாலையில் நேரும் வாகன விபத்துக்களுக்கு பல காரணங்களைக் குறிப்பிடுகிறார்கள். அவற்றில்,
- வாகன சக்கரங்களின் ரப்பர் பகுதிகள்
- விபத்துக்குள்ளாகும் வாகனங்களின் உடைந்து விழும் பாகங்கள்
- கனரக வாகனங்களில் இருந்து அவர்களின் பயண்பாட்டுக்கு உபயோகப்படுத்தும் கட்டைகளோ ஏனைய இரும்புத்துண்டுகளோ
- இறந்த மிருகங்கள்
போன்றவை சாலையில் கிடப்பது சில முக்கிய காரணங்களாக சொல்லப்பட்ட போதிலும், தவிர்க்க முடியாதவைகளாக இவற்றை எண்ண முடியவில்லை.

நெடுஞ்சாலையின் இரு மடங்கிலும் உள்ள வேலியை கவனிக்காதது,
அப்படி அத்துமீறி சாலையில் நுழையும் மிருகங்களின் உரிமையாளர்களை சட்டத்தின் முன் நிறுத்தாதது,
சாலையின் பராமரிப்பில் பணிபுரிவோர் தங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சாலையின் எல்லைக்குள் விழுந்து கிடப்பவைகளை அல்லது இறந்து போன மிருகங்களை தகுந்த நேரத்தில் அப்புறப்படுத்தாமல் போவது,
என்பது போன்றவை நெடுஞ்சாலை அதிகாரிகளின் கவனக்குறைவே என எண்ணத்தோன்றுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் விபத்துக்களினால் உயிர் இழந்தோர் எண்ணிக்கை    ( பத்திரிக்கை  தகவல்களின் படி... ):
-   2008   - 728 பேர்
-   2009   - 759 பேர்
-   2010   - 720 பேர்
-   2011   -  805 பேர் 

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை பயண்படுத்துவோர் அதை கல்லறை நடுவே போகும் பயணமாக எண்ணாமல் இருக்க அங்கு நேரும் அநாவசிய மரணங்களை  சாலை பராமரிப்பின் அதிகாரத்தில் இருப்போர் தவிர்த்தல் அவசியம்.

கோயில்களில் சிலை உடைத்து திருட்டு

அன்மையில் நடந்த, நடந்துகொண்டிருக்கின்ற நம்மை திடுக்கிட வைக்கும் சம்பவங்களில் ஆலயங்களில் நுழைந்து கருவறை மூல தெய்வங்களின் சிலைகளை அகற்றி அதன் அடியில் வைக்கப்படுகின்ற நவரத்தினங்கள், தங்கம் மற்றும் தகடு போன்றவற்றை  திருடும் சம்பவங்கள் முதலிடம் பெறுகின்றன.

மே மாத இறுதியில் இருந்து இது போன்ற திருட்டுகள்  மிக அதிகமாக நடந்து வருவதை பார்க்கிறோம். அதிலும் ஒரு சில நாட்களுக்கு அல்லது ஒரு சில வாரங்களுக்கு முன் திருவிழா கண்ட பல கோயில்கள் களவு போயிருப்பது முக்கியமான ஒன்று.

சில்லறைத் திருடர்களாக இவர்கள் இருப்பார்களோ என எண்ணத் தோன்றினாலும், 'ஏதோ வந்ததுக்கு உண்டியை உடைப்போம்' என்கிற மாதிரி இவர்கள் நடந்து கொண்டிருக்கவில்லை. மூலதெய்வ விக்கிரங்களின் அடியில் இருக்கும் சக்தி வாய்ந்த தகடுகளையே இவர்கள் குறிவைத்து கோயில்களில் நுழைவது தெளிவாகிறது.

 நாடு தழுவிய நிலையில் கோயில் நிர்வாகத்தினரின் புகார்கள் மூலம் பல இடங்களில் இப்படி நடந்திருப்பது நமக்கு தெரிய வருகிறது.  இந்துக்களின் மனதை இது பெரிதும் பாதித்திருக்கிறது.  திருடுபவர்கள் நாம் அதிக பயமும் பக்தியும் செலுத்தும் அந்த மூல தெய்வங்களை உடைத்து சேதப்படுத்திப் போவது மனவேதனையை அதிகப் படுத்துகிறது. ஏன், வயதானவர்களின் மனக்கவலையாகவும் ஆகிவிட்டது இப்போது எனலாம்.

இறைவனுக்கே இக்கதியா என பலர் ஆதங்கப்படுகின்றனர்.
'சாமி, உடனே வந்து  இது போன்றவற்றை கண்டிக்க வேண்டாமா?" என ஆங்காங்கே கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தாலும், அப்படி உடனே கண்டிக்கவும் தண்டிக்கவும் இறைவன்  'இன்ஸ்டன்   ஜஸ்டிஸ் ' அல்ல. பெரியவர்கள் சொல்லியது போல், சட்டம் ஏமாந்து போனாலும் போகலாம், ஆனால் தாமதம் ஆனாலும் தர்மம் நிச்சயம் நல்ல  தீர்ப்பையே  வழங்கும்'. உயிர் எடுக்கும் எமனுக்கே மெல்லப்போகும் எருமைதானே வாகனம். ஆக நிதானமான தர்மம் நம்முடையது என்பதை உணர்ந்து இறை நிந்தனையை தவிர்ப்போம்.

இதற்கிடையே, சாதாரணமானவர்களுக்கு தகடுகள் பற்றியும் ஐம்பொன்கள் பற்றியும் சரிவரத் தெரியாத நிலையில், இது போன்ற தீய நோக்கத்தில் நடைபெறும் செயல்கள் ஏதோ சிலரால் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேறிவருவபைகளாகவே நமக்குப் படுகிறது.

 ஒருவேளை, 'அறை எண் 305ல் கடவுள்' என்னும் திரைப்படத்தில் 'பிரகாஷ் ராஜ்' கையில் உள்ள கடவுளின் சக்தியாக, மூல தெய்வ விக்கிரகங்களின் அடியில் வைக்கப்பட்டிருக்கும் தகடுகள் களவாடுபவர்களின் கண்களுக்குத் தெரிகிறதோ....?


Wednesday, 22 August 2012

பாம்பும் ஏணியும், பாலகர் விளையாட்டு. . .

'ஸ்நேக் அன்ட் லெடர்'    என்பது 10 X 10 : 100 கட்டங்களைக் கொண்ட ஒரு விளையாட்டு.

இதன் கட்டங்களுக்கிடையே சில பாம்புகளும் சில ஏணிகளும் இருக்கும். இரண்டு பகடைக்காய்களைப் போட்டு  வரும் எண்ணிக்கையில் எத்தனைக் கட்டங்களுக்கு முன்னோக்கிச் செல்வது என  நிர்ணயிக்கப்படும்.


இவ்விளையாட்டை தமிழில் 'பரமபதம் ஆட்டம்' என அழைக்கிறோம்.

பாம்பினால் கடிபடாமல் மேல் நோக்கிச் சென்று 100 என்னும் இலக்கை அடையவேண்டும். அப்படி கடிபடும் போது கீழே பாதாளத்திற்கு தள்ளப்படுவோம்.

அதே நேரம் ஏணி இருக்கும் எண்ணுக்கு நாம் வீசும் பகடைக் காய்களின் எண்ணிக்கை இருந்தால் மிக எளிதில் மேல் நிலையை அடைந்து விடலாம்.

முதலில் 100 எனும் எண் கொண்ட  இலக்கினை சென்று அடைபவரே வெற்றியாளர் ஆவார்.

பாலகர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டாக இது திகழ்ந்தாலும் அரசியலில் உள்ளோரும் இதன் சூட்சுமத்தினை   தங்களின்     முன்னேற்றத்திற்கு உபயோகப் படுத்திக்கொள்கிறார்கள்.

ஏணியை பயன்படுத்தி மேலேறுவதைப் போல, அடுத்தவரைப் பயன்படுத்தி அரசியலிலும் மேலேறுகிறார்கள். எந்த அரசியல் தலைவரும் நிறந்தரமாக மேலேயே தங்கியதை பார்த்ததில்லை நான். பரமபதத்தினைப் போல, தவறி விழுவோரும், தவற்றால் விழுவோரும் அரசியலில் இன்றளவும் இருக்கிறார்கள்.


Tuesday, 21 August 2012

புகழ்பெற்ற எழுத்தாளர் ரா கி ரங்கராஜன் மறைந்தார்

            

 நன்றி : மலேசிய நண்பன்  

புகழ்பெற்ற எழுத்தாளர் ரா கி ரங்கராஜன் 
அவர்களின் இறப்புச்செய்தி இன்றைய மலேசிய நண்பன் நாளிதழில் இடம்பெற்றிருந்தது. சில நாட்களாக உடல் நலக் குறைவில் சிரமப் பட்ட அவர் 18ம் தேதி சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 85.

எனக்கு மிகவும் பிடித்த ஒரு எழுத்தாளர் அவர்.

எழுபதாம் ஆண்டுகளில் இருந்து அவரது படைப்புக்களை படித்து வருபவன் நான். அவர் மறைவு எழுத்துலகிற்கு ஒரு பேரிழப்பாகும்.
கடந்த ஆண்டு தமிழ் நாட்டுக்கு சென்றிருந்த போது அவரின் 'பட்டாம்பூச்சி' புத்தகத்தை தேடிச்சென்று வாங்கி பத்திரப் படுத்தி வந்தேன்.
அப்புத்தகம் படித்தவர் மனதை மிகவும் கவர்ந்த ஒன்றாக இது பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ஒரு மொழி மாற்றுப் புத்தமான இதற்கு கிடைத்த வரவேற்பு அவரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பப்பிலான் என்னும் ஹென்றி ஷாரியரின் மூலக் கதையை  ஐயா   ரா.கி.ர    அவர்கள் மொழிபெயர்த்த விதம் தமிழ் படித்த அனைவராலும் பெரிதாக பேசப்பட்டது.  

இவருடைய ஏனைய மொழிமாற்று நவீனங்கள்: சிட்னி ஷெல்டன் எழுதிய 'இஃப் டுமோரொ கம்ஸ்' என்னும் நாவல் 'தாரகை' என்றும், 'தி ஸ்டார்ஸ் ஷைன் டவுன்',  'லாரா' என்றும், ''ரேஜ் ஒஃப் ஏஞ்சல்ஸ்',  'ஜென்னிபர்' என்றும் மொழி மாற்றத்துடன் வந்து சாதனைகள் புரிந்தன.  இன்னும் பல தொடர்கள் இவரின் கைவண்ணத்தில் வெளிவந்து வெற்றிபெற்றன.

அவர் எழுதிய 'படகு வீடு"ம் படிக்க சுவாரசியம் குன்றாத ஒன்றே.  

1947 முதல் 'குமுதம்' ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்த இவருக்கு குமுதத்தின் நிறுவனர் எஸ் ஏ பி அவர்கள் "அரசு" பதில்கள் பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் எழுதும் முக்கிய பொறுப்பினைத் தந்தார். அந்த 'அரசு "வில் உள்ள 'ர' இவர்தான். அதில் 'அ',  அண்ணாமலை எனும் 'எஸ் ஏ பி' யையும், 'சு' , ஜ. ரா. சுந்தரேசனையும் குறிக்கும்.

42 ஆண்டுகளுக்குப் பின் குமுதத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னும் இடைவிடாமல் தொடர்ந்து பத்திரிகைகளுக்கு எழுதிக் கொண்டே இருந்தார். வாரா வாரம் வெளிவந்த 'எகஎ' ( எப்படி கதை எழுதுவது ) என்னும் தொடரின் மூலம் பல புதிய எழுதாளர்களை உறுவாக்கியவர் இவர்.

சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, வினோத் என்பன போன்ற புனைப் பெயர்களிலும்  கிருஷ்ணகுமார் என்ற பெயரில் 'கோஸ்ட்' மற்றும் 'எனக்குள் ஒரு ஆவி' எனும்  கதைகளும், டி.துரைசாமி என்ற பெயரில் குற்றங்கள் தொடர்பான கதைகளும் எழுதினார். அதிக காலம் முன்னனி எழுத்தாளராக இருந்த போதும் முகம் காட்டாது தனது புனைப்பெயர்களிலே சிறப்புப் பெற்றார். இன்னமும் வாசகர்கள் பலருக்கு அந்த புனைப்பெயர்களில் எழுதியது பற்றி சந்தேகம் இருக்கலாம். எல்லோரும் விரும்பிப் படித்த 'லைட்ஸ் ஒன்' சினிமா செய்திகளை சுவைபடச் சொன்னதும் இவரே. 'வினோத்' என்னும் பெயரில் இப்பகுதிக்கு இவர் எழுதினார்.

பல சிறுகதைகளை எழுதியிருக்கும் இவர் கடித வடிவக் கதைகள் எழுதுவதில் வல்லவர். இவற்றோடு குமுதத்தில் ஒரு பக்கக் கதைகளை அறிமுகப்படுத்தியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

அன்னார் மறைந்தாலும், அவரின் இலக்கியச்சேவை தமிழ் உள்ளளவும் இருந்துகொண்டு இருக்கும்.


அவரின் எழுத்தைப் படித்து வளர்ந்தோரில் நானும் ஒருவன். இன்று அவரின் ஆன்மா இறைவனடி சேர வேண்டிக்கொள்ளும் பல்லாயிரம் பேரில் ஒருவனாகிறேன்.


Tuesday, 14 August 2012

டத்தோ பஞ்ச் குணாளன் காலமானார்

பூப்பந்து உலகின் அன்றைய கதாநாயகன் டத்தோ பஞ்ச் குணாளன் தனது 68வது வயதில் இன்றுகாலை (புதன் கிழமை ) 6 மணியளவில் இயற்கை எய்தினார்.

அவரின் நிஜப் பெயர் குணாளன் பஞ்சாச்சரன். ஆனால் அவரின் ஆக்ரோஷமான 'ஸ்மெஷ்' காரணமாக 'என் எஸ் டி  ' நாளிதழ் அவருக்கு 'பஞ்ச்' என்னும் சிறப்புப் பெயரிட்டு அழைக்கத் தொடங்கியது. இந்த புதுப்பெயர்     டத்தோ   அவர்களுக்கு பிடித்துப்போகவே, அதிகாரப்பூர்வமாக அந்தப் பெயரை ஒரு சத்தியப்பிரமாணத்தின் வழி தனது பெயராக்கிக்கொண்டார். பின்னர் உலகம் முழுவதிலும் 'பஞ்ச் குணாளன்' என்றே அவர் அழைக்கப்பட்டார்.

நிகரற்ற விளையாட்டாளாராக திகழ்ந்த இவர் பின்னர் விளையாட்டிலிருந்து  ஓய்வு பெற்று அனைத்துலக பூப்பந்து சம்மேளனத்தின் துணைத்தலைவராக பதவி ஏற்றார். ஒரு உயர்தர அதிகாரியாக பூப்பந்து உலகிற்கு பல சேவைகளைச் செய்யும் சந்தர்ப்பம் இதன் பின்னர் தான் கிட்டியது.  அவ்விளையாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அதிக பங்காற்றினார்.

குறிப்பாக 15 புள்ளிகள் கொண்ட 3 செட் ஆட்டங்கள். அதில் 2 செட்களில் வெற்றி பெறுபவர் வெற்றியாளர் என்னும் முந்தைய ஆட்டமுறையிலிருந்து சற்று மாறுபட்டு இப்போதிருக்கும் 21 புள்ளிகள் அட்டமுறைக்கு தொலைக்காட்சி நேயர்களுக்காக மாற்றம் செய்தார்.

பொறுப்புக்கள் கூடிய அதே நேரத்தில்  பல மாற்றங்களையும்  பூப்பந்து  விளையாட்டுக்கு  அறிமுகப் படுத்தினார். ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் இனைவதற்கு பெரும் பங்காற்றியவர் இவர் ஆகும்.

அதோடு,  'ஐபிஎப்'   ( இன்டர் நேஷனல் பேட்மிண்டன் ஃபெடெரேஷன்) என்றிருந்ததை   'பிடபுள்யூஃஎப்'  ( பேட்மிண்டன் வெர்ல்ட் ஃபெடெரேஷன்) என மாற்றினார்.

" நான் ஆப்பிரிக்க நாட்டிற்கு சென்றிருந்த போது அவர்கள் 'ஐபிஃஎப்' என்றால் எதோ குத்துச்சண்டை சம்மேளனம் என தவறாக புரிந்துகொண்டிருந்தனர். எனவே இந்த பெயர் மாற்றம் மிக அவசியம்" என விளக்கினார்.

முதல் எழுத்தை 'பி'  அதாவது 'பேட்மிண்டன்' என அவர் மாற்றியமைத்து கொடுத்த பெயர் மாற்றதை பலர் ஆதரித்தாலும் சிலர் அதை எதிர்க்கவே செய்தனர். ஆக சின்னச் சின்னதாக எதிர்ப்பும் ஆங்காங்கே வரத்தான் செய்தது. எதிர்ப்பிலே வளர்ந்தாலும் யாரும் சாதரணமாக அசைக்க முடியாத ஒரு சக்தியாக பேட்மிண்டன் உலகில் வலம் வந்தார் டத்தோ பஞ்ச் குணாளன் அவர்கள். சுமார் 21 வருடங்கள் அந்த துணைத்தலைவர் பதவியில் அவர் இருந்தார்.

'இங் பூன் பி' யோடு அவர் சேர்ந்து ஆடிய இரட்டையர் ஆட்டங்கள், இந்தோனிசியாவின் 'ரூடி ஹர்தோனோ'வோடு அவர் மோதிய தனி நபர் ஆட்டங்கள் ஆகியவை என்னைப  போன்ற பூப்பந்து பிரியர்களின் நினைவில் என்றென்றும்  நிலைத்திருக்கும்.

இளம்வயதில் பெட்டாலிங் ஜெயா 'டன்லொப்' நிறுவனத்தில் நான் பணியில் இருந்த போது இவரை  சிலமுறை சந்தித்து உரையாடிய ஞாபகம் எனக்குண்டு. அதி நவீன பூப்பந்து காலணியை தயாரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார் அப்போது.

இதய நோய் காரணமாக 2008ல் அவர் செய்து கொண்ட அறுவை சிகிச்சையினால் கடைசி சில வருடங்கள்   இவர் முன்பு போல் சுறுசுறுப்பாக இருக்க இயலவில்லை. சுமார்  நான்கு ஆண்டுகளுக்குப் பின் இன்று காலை ஆறு மணிக்கு டத்தோ பஞ்ச் குணாளன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். இவ்வாண்டு மார்ச் மாதத்திலிருந்து கல்லீரல் புற்று நோயால் சிரமப்பட்டுவந்த அவர் அதன் பாதிப்பு அதிகமாகி  ஏராளமான நண்பர்களையும் உறவினர்களையும் கண்ணீர்க் கடலில் தள்ளி மறைந்து விட்டார்.

பூப்பந்து உலகில் அவர் விளையாட்டின் சாகசங்களுக்காகவும,  அவர் செய்த மாற்றங்களுக்காகவும,  அவர் பெயர் என்றென்றும் சரித்திரத்தில் இடம்பெறும்.

நம் இனத்துக்கும் சமூகத்துக்கும் மட்டுமல்லாது, தேசிய அளவில் நம் நாட்டுக்கே பெருமை சேர்த்த அந்த மாமனிதர் நிஜத்தில் ஒரு சகாப்தமே. இன்று அந்த சகாப்தம் மறைந்தது பூப்பந்து உலகை செயலிழக்கச் செய்து விட்டது. பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

உள்ளூர் விளயாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், பிரமுகர்களோடு, அனைத்துலக ரீதியில் பஞ்ச் குணாளன் அவர்களுக்கு இரங்கட்செய்திகள் பலரிடம் இருந்து கம்ப்யூட்டர் சமூக  வலைத்தளங்களில்  வந்து கொண்டிருக்கின்றன.

80ம் ஆண்டுகளுக்குப்பின்னர் வந்த பூப்பந்து விளையாட்டாளர்கள் அனைவருக்கும் இவர் ஒரு முன்னோடியாகத்திகழ்ந்தார். பலர் இவரிடம் இருந்து புதுப் புது யுக்திகளை கற்று தங்களின் விளையாட்டினை மேம்படுத்திக்கொண்டனர். சம்மெளனத்தில் இவரோடு பணியாற்றியவர்கள் இவரின் ஆளுமைத்திறன்  கண்டு ஆச்சரியப்பட்டனர். பத்திரிக்கைகளில் நிதானமான ஆனால் நிச்சயமான தனது கருத்துக்களினால் இங்கு மட்டுமல்ல வெளி நாட்டிலும் உயர்வாக கருதப்பட்டார்.

"சிங்கள்ஸ்"  எனப்படும் தனி நபர் விளையாட்டில் அவரின் எதிரியாக கருதப்பட்ட ரூடி ஹர்த்தனோ மறைந்த தன் நண்பரின் குடும்பத்தினருக்கு மனம் உறுகி தனது இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.

கடைசியாக சில வருடங்களுக்கு முன்பு தனது அழைப்பை ஏற்று இந்தோனிசியாவுக்கு தனது புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த டத்தோ குணாளன் அவர்களோடு உரையாடிக்கொண்டிருந்ததை நினைவுப்படுத்தி பேசினார். அவர் பலருக்கும் பல உதவிகளை தன்னால் இயன்றவரைச் செய்தவர் என புகழாரம் சூட்டினார். அவரின் இறுதி யாத்திரையில் கலந்து கொள்ள முடியாதது வருத்தமளிக்கிறது என்று தனது இரங்கட்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

 ஸ்டார் நாளேட்டின் ஒன்லைன் பதிப்பில் இடம்பெற்ற சில படங்களை இங்கே பார்க்கலாம்.
















  நன்றி : தி ஸ்டார், ஒன்லைன் பதிப்பு  15.8.2012