Monday, 13 August 2012

பெரியோர் சொல்வது...

 மன நிறைவோடு பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகள் நமது முன்னேற்றத்துக்கான நல்விதைகளாகும். நீண்ட கால தங்களின் அனுபவங்களை மின்னல் வெட்டாக பளிச்சென்று நம்மிடம் அவர்கள் பகிர்ந்து கொள்ளும்போது அவற்றை ஏற்றுக்கொள்ளும் மன ஆற்றல் நமக்கு வேண்டும்.

" நான் சொல்றத நானே கேக்கமாட்டேன்.இவர் சொல்றதையா கேட்பேன்.." என சினிமா வசனம் பேசுவோர் அதுபோன்ற பெரியோரின் கூற்றை தங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகலாம்.

இரண்டாகப் பிரியும் பாதையின் சந்திப்பில் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். போக நினைக்கும் ஊரின் பாதை எது என அவனுக்கு தெளிவாக தெரியவில்லை. அப்போது அங்கே பெரியவர் ஒருவர் ஒரு பாதையின் எதிர்முனையில் இருந்து வந்துகொண்டிருந்தார்.
"தம்பி, நான் வரும் பாதை பாதியிலே முடிகிறது. அடுத்த பாதைதான் ஊர் போகும் பாதை என நினைக்கிறேன்" என்றவாறு பிரியும் பாதையில் செல்லத்தொடங்கினார்.

இப்போது அவன், அவர் சொல்வதை நம்பாமல் பாதியில் முடியும் எல்லைவரை அந்தப் பாதையில் பயணம் செய்து 'ஆமாம்' பெரியவர் சொன்னது சரியே என ஊர்ஜிதப் படுத்திக்கொண்டு பிறகு பிரியும் அடுத்த பாதையில் செல்வானா, அல்லது  கண்டு  வந்து சொல்லும் பெரியவரின் வார்த்தையில் நம்பிக்கை வைத்து தனது பயணத்தை புதுப் பாதையில் தொடர்வானா?

சில சமயங்களில்  நம்மிடம் சொல்லப்படுகின்ற விசயங்கள் நமக்குத்தான், நமக்கு மட்டும்தான் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

அதுமட்டுமல்ல, பெரியோர் அறிவுரை என்பது நமக்கு நேரம் காலம் பொருட்செலவு ஆகியவற்றை மீதப்படுத்தும் ஒரு வழியாகும்.  நாமே சொந்தமாக தடைகளை அப்புறப்படுத்தி சாலை இட்டு ஒவ்வொரு நகருக்கும் போக நேர்ந்தால் என்னாவது??? நடக்கின்ற காரியமா இது...? யாரோ போட்ட பாதையில் தானே நாம் பயணிக்கிறோம்.

 எல்லாவற்றையும் அனுபவத்தில் தெரிந்து கொள்ள எண்ணினால் வாழ்க்கை முடியும் போதுதான் பல விசயங்கள் நமக்குத் தெரியத் தொடங்கும். அப்படி காலம் கடந்து விட்ட நிலையில், பாயோடும் நோயோடும் போராடிக்கொண்டிருக்கும் போது எல்லாம் தெரிந்து நாம் என்ன செய்யப் போகிறோம்....?

மகான்களின், பேரரிஞர்களின், சித்தர்களின் அறிவுரைகளோடு நம் பெற்றோர் சொல்வதையும் கேட்டு  நடைமுறைப் படுத்துவோம், நல்வழி நடப்போம்....


Saturday, 11 August 2012

ஊருக்குத்தான் உபதேசமா?

"ஊருக்குத்தான் உபதேசம், எனக்கில்லை" என்பது பொதுவாக சொல்லப்படுகின்ற ஒன்று.

அதாவது ஒரு விசயத்தை அறிவுரையாக சொல்பவர்கள் அதை தங்கள் வாழ்வில் கடைபிடிப்பதில்லை என பலரும் பரவலாக பேசிக்கொள்வதுதான்.

இவர்களே சரியில்லாத போது இவர்கள் சொல்வதை நாம் என்ன கேட்பது என்கின்றனர். இவர்களின் கூற்றில் உள்ள  நியாயம் நமக்கும் புரியாமல் இல்லை. ஆனால், சொல்லப்படுகின்ற கருத்தினைப் பற்றிதான் நாம் கவனிக்க வேண்டுமே தவிர சொல்கிறவர்களின் நிலையை அல்ல.

மிகச் சாதாரணமாக சில உதாரணங்களை நம் கண் முன்னே காணலாம். சாலை ஓரத்தில் கிடக்கும் குடிகாரன் மற்றவர்களைப் பார்த்து 'குடிக்காதே' என்பான். அவன் குடிகாரன் என்பதால் அவன் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாதா என்ன??

புகை பிடிக்கும் ஒரு தந்தை பிள்ளைகளைப் பார்த்து 'புகைபிடிக்காதீர்கள்" என்றால் அவர் சொல்லுவதில் உள்ள நண்மை தீமைகளைப்பற்றி ஆராய வேண்டுமேயன்றி எதிர் வாதம் செய்வது சரியாகப் படாது.

கண்ணதாசனுக்கு 3 மனைவிகள் 15 பிள்ளைகள்.

"அளவோடு பிள்ளைகள் பெற்று சுகமாக வாழ்வதெப்படி" என மேடையில் உரை நிகழ்த்திக்கொண்டிருந்த போது ஒருவர் எழுந்து சொன்னாராம் ' திரு கண்ணதாசன் அவர்களே, இன்றைய நிகழ்வில் கலந்துகொள்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. உங்களுக்கு நிறைய பிள்ளைகள். எனவே நீங்கள் பேசக்கூடாது..." என்று.

அதற்கு, சிரித்துக்கொண்டே கண்ணதாசன், " பிள்ளைகளை அதிகம் பெற்று படும் அவஸ்தை எனக்குத்தானையா நிறைய தெரியும்" என்றதோடு, அந்த கேள்வி   கேட்டவரிடம் " உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?" என வினவ, "மூன்று பேர்" என்று பதில் வந்ததாம்.

பின்னர் கண்ணதாசன், மற்றொருவரை நோக்கி, "உங்களுக்கு ? "
" எனக்கு இரண்டு பேர்"

அடுத்து மேடையில் இருந்த பிரமுகரிடம் "உங்களுக்கு எத்தனை பிள்ளைகளோ?" என வினவ, அவர் "ஐந்து" என்றாராம்.

முகத்தில் புன்சிரிப்புடன் கண்ணதாசன் தொடர்ந்தாராம் "எனவே, 'அளவோடு பிள்ளைகளைப் பெற்று வளமோடு வாழ்வதன் முக்கி்யத்துவம் பற்றி பேச இங்கு அதிகம் தகுதி வாய்ந்தவன் நான் மட்டுமே" .....
( "கண்ணதாசன் கவிதைகளில் காதல் உணர்வே அதிகம்" என்னும் தலைப்பில் இடம்பெற்ற பட்டிமன்றத்  தகவல் இது.)

பூக்கள்...




புத்ராஜெயா மலர்க் கண்காட்சி இன்னும் மனதிலிருந்து நீங்கல, அதுக்குள்ளே இன்னும் பூக்களின் படங்களா?'னு நீங்க கேட்பது காதில் விழுது.

நம் வாழ்க்கையில் போரடிக்காத சிலவற்றுள் பூக்களும் ஒன்று என்பது எனது கருத்து.

இப்போ ஆண்கள் பொருளாதாரத்தை மட்டுமல்ல, பூக்களின் தரத்தையும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

Sunday, 5 August 2012

kumudam cover stories July 2012

குமுதம் கவர் ஸ்டோரிஸ் இங்கு இடம்பெறுவதற்கு சில காரணங்கள் உண்டு.

நாம் பிறந்தது முதல் போகும்வரை நம்மோடு இணைந்து கூடவே வரும் சினிமா செய்திகள் இருக்கும். தமிழ் நாட்டு அரசியலின் அந்தத்த வார ஹாட் டொப்பிக்ஸ் இருக்கும். இலக்கியவாதிகளின் கைவண்ணங்கள் தெரியும். முக்கிய சம்பவங்களின் முன்னோட்டம் இருக்கும். இப்படி இன்னும் பல குமுதம் வார வெளி அட்டையிலே வந்துவிடும்.

முழுச்செய்திகளாக இல்லாவிட்டாலும் உடனே வாங்கிப்படிக்கும் ஆர்வத்தைக் கொடுக்கும். தமிழ் சரிவர எழுதப் படிக்க    தெரியாதோர் இது போன்ற அட்டையில் உள்ள வாக்கியங்களை எழுத்துக்கூட்டி படிக்கலாமே...

ஐயா எஸ் ஏ பி, ரா கி ரா, சாண்டில்யன் போன்ற எனக்குப்பிடித்த எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படித்து வளர்ந்ததால் அவர்களுகளின் மேல் உள்ள மரியாதையினால் இப்படி குமுதம் வார இதழை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்கிறேன்.

அதுமட்டுமல்ல, "காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம்..." என அன்றிலிருந்து இன்றுவரை கவிஞர்கள் பாட  "இன் -ஸ்பிரேஷனாக" இருப்பது இது போன்ற அட்டைப்படங்களே... சந்தேகம் இருந்தால் மீண்டும் ஒருமுறை பாருங்களேன்...



Tuesday, 31 July 2012

மலரும் நினைவுகள் - சிலாங்கூர் டிரெட்ஜிங்


1979ல் டிரெட்ஜ் ஒன்றின் முன் எடுத்துக்கொண்ட படம். . .

Friday, 27 July 2012

தனியார் 'டியூஷன்' மையங்கள். . .


குமார் கார்த்திகேயன் என்னுடைய நெடுநாளைய நண்பர். அவரும் அவருடைய மனைவி மோனாவும் அன்மையில் அவர்களின் புதுவரவோடு எங்களின் வீட்டிற்கு விஜயம் செய்தனர். அப்போது எடுத்த படம் இது.

மூன்று தனியார் டியூஷன் மையங்களை நிர்வகிக்கும் இவர்கள், தங்களிடம் வரும் மாணவர்களுக்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பாடத் திட்டத்தின் வழி  நவீன முறையில் அதிக 'ஏ' எடுக்க கற்றுத்தருவதாக  கூறினர்.   இதனால் தேர்ச்சியின் விகிதம் உயர்வதாகவும், அதைக் கண்டு பெற்றோர் மகிழ்ச்சியடைவதாகவும், அவர்களின் மூலம் தங்களுக்கு நல்ல விளம்பரம் கிடைப்பதாகவும்  தெரிவித்தனர்.

பரவலாக சொல்லப் படுவதை போல், பள்ளிகளைவிட தனியார் டியூஷன் மையங்களில் கல்வித்தரம் உயர்ந்திருக்கிறதா..?  பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள்கூட  இதுபோன்ற டியூஷன் மையங்களுக்கு போகும் ரகசியம் இதுதானா ?  அல்லது காதில் விழும் கிசு கிசு போல் வரவிருக்கும் தேர்வுத்தாள்கள் பற்றிய கணிப்புக்களையோ, தலைப்புக்களையோப் பெற  இத்தகைய மையங்களில் கூட்டம் கூடுகிறதா...?

இதில் உள்ள உண்மை நிலவரம் நமக்கு சரிவரத் தெரியாது. ஆயினும் நமக்கு நன்கு தெரிந்த ஒன்று, மேலே படத்தில் இருக்கும் இருவரும் தங்களின் கடின உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் உயர்ந்தவர்கள்.

இவர்களின் சேவை மனப்பான்மை இவர்களோடு பழகும் பலருக்கும் தெரிந்தது. பத்து நிமிடம் இவர்களோடு பேசிக்கொண்டிருந்தால் அதில் மாணவர்களுக்கு உபயோகமான பலவற்றை இவர்கள் பேச்சியிலிருந்து தெரிந்து கொள்ளலாம். வெறும் வாய்வார்த்தைகளில் மட்டுமல்ல, இவர்களின் செயலிலும் நேர்மை இருக்கும். இதுவே ஒன்றிலிருந்து மூன்று டியூஷன் மையங்களை இவர்கள் பெற்றிருப்பதன் ரகசியமுமாகும்.

 ஒரு குடும்பத்தின் எதிர்காலம் உயர்கல்வி கற்றவர்கள் மூலமே மேன்மை அடைகிறது என்பதனை பலரும் உணர்ந்திருக்கின்றனர் தற்போது.

இங்கு வசூலிக்கப்படும் கட்டனம் அதிகமாயிருந்தாலும் அதைப் பற்றி யாரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அதிக அளவில் பிள்ளைகள் டியூஷன் மையங்களுக்குப் போவது இதையே காட்டுகிறது.

"இதயத்தில் இடம்பெற்றவை..."

மார்கழி மாத வைகறை.  பனித்துளி விழுந்து மலர்கள் மென்மையான கணத்தோடு தலை வணங்கி அங்கும் இங்கும் சாய்கின்ற காட்சி. விடிந்தும் விடியாதது போன்ற இளம் காலை.  வண்டினம் துயில் நீங்கி மலர்களிடம் வருவதற்குள், பெண்கள் முந்திக்கொண்டு அவற்றைப் பறித்து இறைவனுக்கு மாலையாக்கத்  தொடங்கி விடுகின்றனர்.

அவர்களுள் ஒருத்தி மலர்களைப் போன்றே மனதில் தோன்றும் வண்ண நினைவுகளில் மூழ்கி தன்னையும் மறந்து பாடுகிறாள்....

"மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே"

1965ல் வெளிவந்த இதயக் கமலம் திரையில் கே வி மகாதேவன் அவர்களின் இசையில் கண்ணதாசனின்  எழுத்தாற்றலில் இந்தப் பாடல். குரல்: P சுசீலா.

--0--0--0--0--0--0--

மரிக்கொழுந்துச் செடியை பார்த்திருப்போம்.  நுனித் தளிரிலிருந்து அடி வேர் வரை, எங்கு கிள்ளி முகரும் போதும்  வீசுகின்ற மணம் போல், இந்த பாடலில் எந்த வரியில் எந்த வார்த்தையில் பார்த்தாலும் அதில் ஒரு இனிமை தெரிகிறது.  பண்பும் ஒழுக்கமும் நிறைந்த இருவரின் காதல் உரையாடல் இப்பாடல்....

மலரும் கொடியும் பெண்ணென்பார்...
மதியும் நதியும் பெண்ணென்பார்...

மலரும் கொடியும் நடப்பதில்லை...
அவை மணம் தர என்றும் மறப்பதில்லை...

மலரும் கொடியும் பெண்ணென்பார்...
மதியும் நதியும் பெண்ணென்பார்...


--0--0--0--0--0--0--

எந்தப் பெரிய பதவியில் இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் சோதனை என்று வந்திடும் போது எல்லோரும் துவண்டு விடுகிறார்கள். தனிமைப்படுத்தப்படும் அது போன்ற நேரங்களில் தங்களுடன் இருப்பது கடந்து போன காலங்களின் அனுபவங்களே. அருகே இருந்தும் மனம் விட்டுப் பேச முடியா சூழ்நிலையில் இருவர் படும் துயரத்தை கவிஞர் கண்ணதாசன் சிவாஜி பிலிம்ஸ் ஒன்றுக்காக பாடலாக எழுதியிருந்தார். சோகத்தில் சுகமுண்டு என்போரின் சாட்சி இப்பாடல்.

"தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னை கண்டு

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

வெகுதூரம் நீ சென்று நின்றாலும்
உன் விழி மட்டும் தனியாக வந்தாலும்
வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)"

--0--0--0--0--0--0--

தொடர் வரிகளில் தேனைப்போல் இனிமையை தரத்தெரிந்திருந்தவர் கண்ணதாசன் அவர்கள். சினிமாப் பாடலாய் இருந்தாலும் அதில் மொத்தப் படத்தின் சிக்கலான  கதைக்கருவை சிரமமில்லாமல் சொல்லிச் சென்றவர் அவர். 

இருவர் உள்ளம் திரையில் பின்வரும் பாடலில் அவரின் திறமை தெளிவாகத்தெரிந்தது.

"மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே

அடிமை செய்தானே

உருகிவிட்ட மெழுகினிலே ஒளி ஏது
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது
பழுது பட்ட கோவிலிலே தெய்வம் ஏது
பனி படர்ந்த பாதையிலே பயணம் ஏது
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா


இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா
விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா
வீட்டு குயிலை கூண்டில் வைத்தால் பாட்டு பாடுமா

பாட்டு பாடுமா
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா"