Thursday, 14 July 2016

படித்ததில் பிடித்தது - புக்கிட் நானாஸ் இயற்கைப் பூங்கா!




மாநகரத்தில் ஓர் இயற்கைப் பொக்கிஷம்:புக்கிட் நானாஸ் இயற்கைப்  பூங்கா!


நோன்பு பெருநாளுக்கு நீண்ட விடுமுறையாக சொந்த ஊர்களுக்குச் சென்று,  சாலை நெரிசலில் சிக்கி ஒருவழியாக தலைநகர் வந்து சேர்ந்தவர்கள்  நிச்சயம் இன்னும் சில வாரங்களுக்கு  நெடுந்தூர பயணத்தை மேற்கொள்ளப்போவதில்லை என்பது நிச்சயம்.  
அப்படியிருக்க, இந்த வார இறுதியை எங்கு கழிக்கலாம் என யோசிப்பவர்கள், குறிப்பாக  இயற்கை விரும்பிகள்  புக்கிட்  நனாஸ்  பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பூங்காவிற்குப்   போய் வரலாம்.  
ஆங்காங்கு வானுயர கட்டிடங்கள் நிறைந்துள்ள கோலாலம்பூர் மாநகரத்தில் பசுமை ததும்பும்  ஓர் இடமாகத் திகழ்கிறது இந்த புக்கிட் நானாஸ் இயற்கை பூங்கா. ஒரு காலத்தில் புக்கிட் வெல்ட் என்றழைக்கப்பட்ட இப்பகுதி, தீபகற்ப மலேசியாவிலேயே மிகவும் பழமையான  பாதுகாக்கப்பட்ட  காட்டுவளங்களுடன் கூடிய இயற்கைப் பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இயற்கை பொக்கிஷம் என்பதால் இப்பகுதி "Green Lung" என வர்ணிக்கப்படுகிறது. இயற்கைப் பூங்காவாகவும், காடு மற்றும் இயற்கை வளம் பற்றிய கல்வி மற்றும் ஆய்வுக்கான தளமாகவும் இந்த புக்கிட் நானாஸ் பாதுகாக்கப்பட்ட புக்கிட் நானாஸ் இயற்கைப் பூங்கா திகழ்கிறது. 
இங்கு என்ன இருக்கிறது?
இங்கு வருகைப் புரிபவர்கள்  பசுமையான இயற்கை வளங்களையும், பலதரப்பட்ட  செடிகள்,பூக்கள் மற்றும் காட்டு வளங்களையும்,  விதவிதமான பல வண்ணங்களாலான பறவைகளையும், பார்த்து மகிழலாம்.
 தினம் கேட்கும் வாகனங்கள் மற்றும் இயந்திரங்களிலிருந்து வெளிப்படும்  இரைச்சல்களிலிருந்து வெளியாகி, இயற்கையின் அமைதியையும், பறவைகள் எழுப்பும் இனிமையான ஓசையையும் கேட்கும் வாய்ப்பு கிட்டும். 


இது தவிர சிறுவர்களுக்கான விளையாட்டுப் பூங்கா,  ஓய்வெடுக்கும் வகையிலான கொட்டகைகள், நாற்காலிகள், கூடாரம் அமைப்பதற்கான வசதிகள், மெது ஓட்டத்திற்கான தடம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், இந்த பாதுகாக்கப்பட்ட காடு குறித்த விபரங்களைப் பெறுவதற்கான தகவல் அறையும் இங்கு உள்ளது. 
வருகையாளர்களுக்கான நேரம்:
பொது விடுமுறை, வார இறுதி நாட்கள் உட்பட வாரத்தில் 7 நாட்களும் புக்கிட் நானாஸ் பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பூங்கா காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். 
நுழைவு இலவசம் என்பதால், வார இறுதியை உற்சாகமாகக் கழிக்க விரும்புபவர்கள், புக்கிட் நானாஸ் இயற்கை பூங்காவில் இயற்கையின் ஸ்பரிசத்தை உணர்ந்து வரலாம். 

எங்கு இருக்கிறது?
முகவரி:
Hutan Simpan Buk​it Nanas​ 
Lot 240, Bukit Nanas, Jalan Raja Chulan,
50250 Kuala Lumpur.
Tel: 03-20706342
- நன்றி : வணக்கம் மலேசியா 

Tuesday, 17 May 2016

'சாந்தி'யை தொலைத்த சிவாஜி ரசிகர்கள்!

படித்ததில் பிடித்தது...

மூடப்பட்டது திரையரங்கம் !!!

ணிக வளாகங்களாக மாறிவரும் தியேட்டர்களின் வரிசையில் நடிகர் திலகம் சிவாஜியின் 'சாந்தி'யும் இடம்பெற்றுவிட்டது. அதன்படி நடிகர் சிவாஜிகணேசன் குடும்பத்தினருக்கு சொந்தமான 'சாந்தி தியேட்டர்' நேற்றுடன் தன் பொழுதுபோக்கு பணியை நிறுத்திக்கொண்டது. 

1952 ல் பகுத்தறிவு பேசிய பராசக்தி திரைப்படத்தில், 'சக்ஸஸ்... சக்ஸஸ்...' என கலைஞரின் வசனம் பேசி அறிமுகமான அந்தப் புதுமுக நடிகருக்கு, அன்றுமுதல் வாழ்வின் அத்தனை விஷயங்களும் சக்ஸஸ்தான். நடிக்கத்துவங்கிய சில படங்களிலேயே, வெற்றிகரமான நடிகராக பரிமளித்த அவரது ஆசைகளில் ஒன்று, தான் சம்பாதித்த பணத்தில் தியேட்டர் கட்டுவது. 

நடிப்பின் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்தி, பின்னாளில் உலகப்புகழ்பெற்ற அந்த நடிகர் வேறு யாருமல்ல; நடிகர் திலகம் சிவாஜிகணேசன்தான்.  

1961- ம் ஆண்டு, சென்னை அண்ணாசாலையில் தனது மூத்த மகள் 'சாந்தி'யின் பெயரில்,  தனது ஆசைப்படி ஒரு தியேட்டரை கட்டினார் சிவாஜிகணேசன். இதன் பங்குதாரர் ஆனந்த் தியேட்டர் அதிபரான ஜி.உமாபதி. 1961 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தியேட்டரை திறந்துவைத்தவர் அப்போதைய முதல்வர் காமராஜ். இங்கு திரையிடப்பட்ட முதல்படம், பீம்சிங் இயக்கத்தில், சிவாஜி நடித்து வெளியாகி அக்காலத்தில் சக்கைப் போடு போட்ட 'பாவ மன்னிப்பு'.
பின்னர் இந்த தியேட்டரின் மொத்தப் பங்குகளையும் சிவாஜிகணேசனே வாங்கி, முழு உரிமையாளரானார்.  அன்று முதல் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் அனைத்தும் சாந்தி திரையரங்கத்திலேயே திரையிடப்பட்டன. 
திரையுலகில் எம்.ஜி.ஆர் -சிவாஜி போட்டி நிலவிய காலத்தில்,  சிவாஜி ரசிகர்களுக்கு சாந்தி தியேட்டர் ஒரு வரப்பிரசாதம். சிவாஜி படங்கள் எங்கு திரையிடப்பட்டாலும் சென்னையின் இந்த தியேட்டரில் படத்தைக் காணவே ரசிகர்கள் பெரிதும் விரும்புவர். சென்னையின் முக்கிய அடையாளமாகவும், சிவாஜிக்கு பெருமையளிக்கும் விஷயங்களில் ஒன்றாகவும் இந்த தியேட்டர் கடந்த காலங்களில் விளங்கியது. 

தியேட்டரின் முழுநிர்வாகத்தையும்,  சிவாஜியின் மருமகன்களில் ஒருவரான நாராயணசாமி கவனித்துக் கொண்டார். பின்னாளில் சிவாஜியின் அறிவுறுத்தலின்படி தியேட்டரின் உள்ளே,  திரையுலகிற்குப் பெருமை சேர்த்த பிரபலங்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன.  அணிவகுத்து நிற்கும் இந்த புகைப்படங்களையும் ஒரு சினிமாவுக்குரிய ஆர்வத்துடன் நின்று ரசிகர்கள் பார்ப்பார்கள். தனது சக போட்டியாளரான எம்.ஜி.ஆரின் படத்தையும் இங்கு இடம்பெறச்செய்தவர் சிவாஜி கணேசன்.

இந்த புகைப்பட அணிவகுப்பில் தன் படம் வைக்கப்படவில்லையே என  பிரபல கதாநாயக நடிகர் ஒருவர் ஒருமேடையில் வெளிப்படையாகவே தெரிவித்தார். அங்கு படம் வைக்கப்பட்டால்தான்,  தான் பிரபல நடிகர் என்பதை ஒப்புக்கொள்வேன் எனக் கூறினார். சில ஆண்டுகளில் அவரது படம் அங்கு வைக்கப்பட்டது. இத்தகைய அங்கீகாரத்துக்குரிய இடமாகவும் சாந்தி தியேட்டர் விளங்கியது.  

சிவாஜி ரசிகர்களைப் பொறுத்தவரை இந்த தியேட்டர் அவர்களுக்கு வெறும் தியேட்டர் மட்டுமல்ல; அவர்கள் ஒன்று கூடும் திருவிழா ஸ்தலம். திரையுலகப் போட்டியைத் தவிர்த்து, எம்.ஜி.ஆருக்கும் பிடித்தமான தியேட்டர் சாந்தி தியேட்டர். சென்னையில் பிரபல தியேட்டர் ஒன்றின் திறப்புவிழாவில் கலந்துகொண்டு பேசிய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், " சாந்தி தியேட்டரைப்போல தான் பிறந்த ஊரிலும் தம்பி சிவாஜிகணேசன் ஒரு தியேட்டர் கட்டவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தன் ஆசையை வெளிப்படுத்தினார். " கண்டிப்பாக அண்ணனின் ஆசையை நிறைவேற்றுகிறேன்" என அந்த மேடையில் சிவாஜி தெரிவித்தார். ஆனால் இருவரது ஆசையும்  நிறைவேறவில்லை என்பது வேறு கதை. 
2005 ம் ஆண்டு சாந்தி திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு சாந்தி, சாய்சாந்தி என இரண்டு திரையரங்குகளாக மாற்றப்பட்டது. அங்கு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படம் 800 நாட்களைத் தாண்டி ஓடி சாதனை படைத்தது. 

சிவாஜிக்கு சாந்தி அழியாத புகழை அவரது ரசிகர்கள் மத்தியில் வழங்கியது. சுமார் 55 வருடங்கள் சினிமா ரசிகர்களின் குறிப்பாக, சிவாஜி ரசிகர்களின் சொர்க்கபுரியாக விளங்கிய சாந்தி தியேட்டர், நேற்றுடன் தன் பணியை நிறுத்திக்கொண்டது.
சென்னையின் அடையாளங்களாக விளங்கி, தங்கள் பணியை நிறுத்திக்கொண்ட கெயிட்டி, கேசினோ, சஃபையர், மேகலா போன்ற தியேட்டர்களின் வரிசையில் சாந்தியும் இப்போது சிவாஜி ரசிகர்களின் 'சாந்தி'யை பறித்துக்கொண்டு தன் பணியை நிறுத்திக்கொண்டுவிட்டது,  சிவாஜி ரசிகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழர்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முதலிடம் வகிப்பது சினிமா. இதன் ஆதார ஸ்ருதி தியேட்டர்கள்தான். அந்த வகையில் தமிழர்களின் மனதில் முக்கிய இடம்பெற்றிருப்பது தியேட்டர்கள். இன்றும் மலரும் நினைவுகளில் மூழ்கிப்போகும் அந்தக்கால இளைஞர்கள், தங்கள் நினைவுகளில் கண்டிப்பாக சில தியேட்டர்களை குறிப்பிடுவர். அந்தளவிற்கு சினிமா ஒவ்வொரு தமிழனின் தனிப்பட்ட விருப்பங்களில் தவிர்க்கமுடியாத ஒன்று. சினிமா என்பது முழுக்க முழுக்க வணிகரீதியான ஒரு கலையாக மாறிய பின், சினிமா என்பது பல சிக்கல்களுக்கிடையில் இயங்கவேண்டிய நிலை உருவானது. 

அதிகபட்ச கட்டணம், திருட்டுவிசிடி,  தகவல் தொழில்நுட்ப வளரச்சி, வணிக ரீதியான தயாரிப்பாளர்கள் போன்ற காரணங்களால் இன்று சினிமா என்பது குற்றுயிரும் குலையுருமாகவே ரசிகர்களை மகிழ்வித்துவருகிறது. இந்த பிரச்னைகளால் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போய்,  இன்று தமிழத்தின் பல தியேட்டர்களில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே ரசிகர்கள் வருகிறார்கள். 

இதன் காரணமாக தமிழகத்தில் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. சில திரையரங்குகள் இடிக்கப்பட்டு வணிக வளாகங்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. ஸ்டுடியோக்கள் கூட இந்த சுனாமியில் தப்பவில்லை.
 அந்தவரிசையில் சென்னை நகரில் வெலிங்டன், சித்ரா, அலங்கார், ஆனந்த், சஃபையர், எமரால்டு, கெயிட்டி, பாரகன், புளூடைமண்ட்,  சன், ராஜகுமாரி உள்பட பல திரையரங்குகள் இடிக்கப்பட்டு, வணிக வளாகங்களாகவும், அடுக்கு மாடி குடியிருப்புகளாகவும் மாறி கால ஓட்டத்தில் கரைந்துபோன தியேட்டர்கள்.

இந்த காரணங்களால், கடந்த சில மாதங்களுக்கு முன் சாந்தி திரையரங்கமும் வணிக வளாகம்  கட்டும் நோக்கில் பிரபல நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஒப்பந்தத்தின்படி நவீன திரையரங்குடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படுவதற்கான முதற்கட்டமாக நேற்றுமுதல் சினிமா காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன.
தியேட்டர் இடிப்பு அறிவிப்பு வெளியான தகவலால் மிகுந்த துயரமடைந்த சிவாஜி ரசிகர்கள், நடிகர் பிரபுவிடம் இதுகுறித்து பேசினர். 'சாந்தி தியேட்டர் எங்கள் வாழ்வின் முக்கிய அங்கம். அதை இடிப்பது எங்கள் தலைவனுக்கு ஏதோ அசம்பாவிதம் நேருவதுபோல் உணர்கிறோம்'  என அவர்கள் சிவாஜி குடும்பத்தினரிடம்  கவலையுடன் பேசினர்.
இருப்பினும் காலத்திற்கு தக்கபடி மாறவேண்டிய அவசியத்தை அவர்களிடம் எடுத்துக்கூறிய பிரபு, தியேட்டரை இடித்தபின் நிர்மாணிக்கப்படும் மல்டி ஃபிளக்ஸ் காம்ப்ளக்ஸில் உருவாகும் தியேட்டருக்கு சாந்தி என்ற பெயரே சூட்டப்படும் என்று உறுதியளித்ததையடுத்து ரசிகர்கள் சமாதானமடைந்தனர். அதன்படி தியேட்டர் மூடப்படும் அறிவிப்பு பலகையை தியேட்டர் நிர்வாகம் சார்பில் நேற்று வைக்கப்பட்டது.  

இருப்பினும் சாந்தி தியேட்டர் இடிப்பு என்பது தங்களைப்பொறுத்தவரை தங்கள் திரையுல பிதாமகனை இன்னொருமுறை இழந்தது போன்ற ஒரு துக்கத்தில்தான் உள்ளனர். சிவாஜியின் திரைப்பட வரலாற்றையும் அவரது நினைவுகளையும் சுமந்து நின்ற சாந்தி தியேட்டர்,  சிவாஜி ரசிகர்களின் சாந்தியை தற்காலிமாக இழக்கவைக்கிறது.
தியேட்டர்கள் மூடப்பட்டு, வணிக வளாகங்களாக ஆடைபோர்த்திக்கொள்வதை வெறுமனே ரசிகர்களின் கவலையாக மட்டுமே கொள்ளக்கூடாது; அது ஒட்டுமொத்த திரையுலகிற்கும் விடப்படும் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியும் கூட. திரையுலகம் கவனத்தில் கொள்ளவேண்டும். 

Tuesday, 26 April 2016

இப்படித்தான் தொடங்கியது இன்டர்நெட்!

படித்ததில் பிடித்தது....

சென்ற மார்ச் 12 ஆம் நாளுடன், இன்டர்நெட் தொடங்கி 27 ஆண்டுகள் முடிந்துள்ளது. இணையம் என அழைக்கப்படும் World Wide Web என்ற திட்டம், முதலில் ஒரு இயற்பியல் இளம் விஞ்ஞானியால், ஆய்வு கட்டுரையில் மட்டுமே அறிவிக்கப்பட்டது. 
ஸ்விட்சர்லாந்து நாட்டில் இயங்கிய CERN என்ற சோதனைச் சாலையில் பணியாற்றிய Tim BernersLee, எவ்வாறு ஓர் எளிய வழியில், உலகில் இயங்கும் கம்ப்யூட்டர்களை இணைக்கலாம் என்ற கருத்தினை வெளியிட்டார். இதுவே, பின்னர் உலகளாவிய திட்டமாக மாற்றப்பட்டு, இன்று பல நூறு கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒரு சாதனமாக இணையம் இயங்குகிறது.
முதலில் இந்த கருத்தினை டிம் பெர்னர்ஸ் லீ வெளியிட்ட போது, அது எப்படி சாத்தியமாகும்? என்ற கேள்வியுடன் பல முனைத்தாக்குதல்கள் இருந்தன. அவருடைய திட்டக் கருத்தினை அனைவரும் இது நடக்காத ஒன்று என ஒதுக்கித் தள்ளினர். 
ஆனால், அமெரிக்க இராணுவம் தன்னுடைய தேவைகளுக்காக, இந்த திட்டக் கருத்துரையைக் கவனத்துடன் படித்துப் பயன்படுத்த முன் வந்தது. 1969 ஆம் ஆண்டில், Arpanet என்ற இணைய முன்னோடித் திட்டத்தினைச் செயல்படுத்தியது. அந்த திட்டம், இராணுவ நடைமுறைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், டிம் பெர்னர்ஸ் லீ தந்த திட்டம், பொதுமக்களுக்கானதாகும். எந்த சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர்களையும் ஒரு மைய வலையில் இணைத்து, ஒன்றுக்கொன்று பைல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும் வகையில் அவரின் திட்டம் இருந்தது. 
இந்த வகையில் இணையம் உருவாக்கப்பட்ட போது, அப்படியே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதைக் காட்டிலும், அதற்குப் போட்டியாக அமெரிக்காவில் CompuServe, பிரான்ஸ் நாட்டில் Minitel என்ற இணைய திட்டங்கள் இயக்கத்திற்கு வந்தன. ஆனால், அவை அதிகக் கட்டணம் செலுத்தி மட்டுமே கிடைக்கும் வகையில் இருந்தன. ஆனால், பெர்னர்ஸ் லீ கொடுத்த திட்டம், மக்களுக்கு இலவசமாக இணையத்தினைத் தருவதாக இருந்தது. 
1990 ஆம் ஆண்டில், மின்னோஸ்டா பல்கலையில் அதற்குச் சொந்தமான Gopher system என்னும் இணைய திட்டம் செயலாக்கத்தில் இருந்தது.
ஆனால், இதனை முறியடிக்கும் வகையில், அப்போது அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்த அல் கோர், அரசின் துறைகள், பெர்னர்ஸ் லீ தந்த சிஸ்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். Whitehouse.gov என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டது. இதுவே இணையத்தை அரசு அங்கீகாரம் செய்தமைக்கு எடுத்துக் காட்டாகும். 
1993ல் இணையம் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அப்போது கோபர் சிஸ்டம் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப் பட்டது.
பெர்னர்ஸ் செயல்படுத்திய இணைய திட்டத்தில், பொது மக்கள் தாங்கள் விரும்பியதை, தங்களுடைய மற்றும் இணைய இணைப்பில் இருந்த கம்ப்யூட்டர்களில் பதிவு செய்து மற்றவர்கள் பார்க்கும்படி அமைக்கும் சுதந்திரம் இருந்தது. ஆனால், அந்த நேரத்தில், இணையம் மக்களுக்கு எப்படி எல்லாம் உதவ முடியும் என்று கற்பனையாகக் கூட மக்கள் எண்ணிப் பார்க்கவில்லை. இன்று கூகுள் மற்றும் யாஹூ மிகவும் சிறப்பாகப் புகழ் பெற்றுள்ளது என்றால், அதற்கு மக்கள் விரும்பும் தகவல்களை அவை தங்களின் சர்வர்களில் அமைத்துத் தந்து வருவதே காரணமாகும்.
இந்த கால கட்டத்தில் தான், பெர்சனல் கம்ப்யூட்டர் நம் வாழ்வின் பல நிலைகளை மாற்றி அமைத்தது. அத்துடன் இணையமும் இணைந்து கொண்டது. இணையவலையில் உள்ள பைல்களை அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற செயல்பாடு பல தொழில் பிரிவுகளில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இசை, திரைப்படங்கள், செய்தி எனப் பல தொழில் பிரிவுகள் என்ன செய்வது என அறியாமல் திகைத்தன. யார் வேண்டுமானாலும், எதனையும் கேட்டு பயன் பெறலாம்; அவர்களே பதிப்பிப்பவர்களாகவும் இருக்கலாம் என்ற நிலை ஏற்பட்டபோது, இத்தகைய தகவல்களை வழங்கும் தொழில் பிரிவுகள் தங்களின் செயல்பாட்டினை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. தொடர்ந்து இந்த நிலை பல தொழில் பிரிவுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியது. 
ஆனாலும், இணைய வலை மக்களுக்குத்தான் அதிக சக்தியை வழங்கியது. அவர்களே அனைத்து பிரிவுகளின் எஜமானர்களாக மாறினர். அரசு குறித்த விமர்சனங்கள் அனைவராலும் தரப்பட்டன. எந்த அரசின் நடவடிக்கையும் மக்களின் கவனத்திற்கு மறைக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உருவான இணையம், அரசு மற்றும் அது போன்ற மையங்களுக்கு சில பாதுகாப்பு வசதிகளை அளித்தது. சிலவற்றை மக்களுக்குத் தெரியாமல் இவை அமைத்தன. இருந்தும் மக்கள் இணையம் தரும் சக்தியை உணர்ந்தே உள்ளனர். இன்று ஸ்மார்ட் போன் போன்ற கையடக்க சாதனங்கள் வழியாக இணையத்தை எந்த நேரமும் அணுக முடியும் என்ற நிலை மக்களுக்கு அளவற்ற சக்தியையும், சுதந்திரத்தையும் தந்துள்ளது என்பதனை மறைக்க, மறுக்க முடியாது. 
இன்று இணையம் முழுமையாகத் தன் இலக்குகளை ஈடேற்றிவிட்டதா? என்ற கேள்விக்கு நிறைவான பதிலைத் தர இயலவில்லை. தொடக்க கால இலக்குகளில் பாதி அளவு தான், இந்த வைய விரி வலை எட்டியுள்ளது. இன்னும் பாதி அளவு அமைக்கப்பட வேண்டும். அது அமைக்கப்பட்டே ஆகும் என எதிர்பார்க்கலாம்.
( செந்தில்வயல்.காம்)


Friday, 19 February 2016

எம்ஜிஆர் 100 | 2

படித்ததில் பிடித்தது...

எம்.ஜி.ஆரின் அக்கறை

------------------------------------------------------


M.G.R. படங்களுக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு, அவர் தனது திரைப்படங்களில் பாடிய பாடல்கள், பேசிய வசனங்கள் பின்னாட்களில் அப்படியே நடந்தது வரலாறு. அதற்கு ஓர் உதாரணம்தான் ‘திருவளர்ச் செல்வியோ... நான் தேடிய தலைவியோ...’ என்று ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் கதாநாயகி ஜெயலலிதாவைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடிய பாடல்.

ஜெயலலிதா அரசியலுக்கு வந்து சிறந்து விளங்குவார் என்பதை முதலில் கணித்ததும் எம்.ஜி.ஆர்தான். ரேகை சாஸ்திரப்படி அவருக்கு கொஞ்சம் கைரேகை பார்த்து பலன் சொல்லத் தெரியும். இதே ‘ராமன் தேடிய சீதை’ படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு நாள் ஜெயலலிதாவின் கைரேகையைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர், ‘‘அம்மு (ஜெயலலிதா) நீ அரசியலுக்கு வருவாய்’’ என்று கூறினார்.

அப்போது ஜெயலலிதா அதை மறுத்தார். ‘‘நானாவது அரசியலுக்கு வரு வதாவது? அதற்கு சான்ஸே இல்லை’’ என்றார். எம்.ஜி.ஆர். விடாமல், ‘‘எழுதி வைத்துக்கொள் அம்மு. நான் சொல்வது நிச்சயம் நடக்கும்’’ என்றார். என்ன நடந்தது என்பதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே.

எம்.ஜி.ஆர். நடித்த ‘பாக்தாத் திருடன்’ படத்தில் பாலையாவின் ஜோடியாக ஜெயலலிதாவின் தாயார் சந்தியா நடித்திருப்பார். படப்பிடிப்பைக் காண 11 வயது சிறுமியான ஜெயலலிதாவும் வந்திருந்தார். அப்போதுதான் எம்.ஜி.ஆரை முதல்முறையாக பார்த் தார். ஜெயலலிதாவின் துறுதுறுப்பும் சுட்டித்தனமும் எம்.ஜி.ஆரை கவர்ந்து விட்டது. அடுத்த சில ஆண்டுகளில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் மூலம் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிப்போம் என்று ஜெயலலிதாவுக்கு அப்போது தெரியாது. எம்.ஜி.ஆருக்கே அது தெரியாது. பின்னர், இந்த ஜோடி எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மத்தியிலும் திரை யுலகிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

சத்யா மூவிஸ் பேனரில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்து எம்.ஜி.ஆர்., ஜெய லலிதா, வாணி நடித்த திரைப்படம் ‘கண்ணன் என் காதலன்’. படத்தில் ஜெயலலிதா கால் ஊனமுற்றவரைப் போல நடிப்பார். ஒரு நாள் காலை படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு மதியம் எம்.ஜி.ஆர். புறப்படத் தயாரானார். மதியம் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை. காரில் ஏறும்போது இயக்குநரிடம் ‘‘மதியம் என்ன காட்சி எடுக்கப் போகிறீர்கள்?’’ என்று கேட்டார்.

‘‘சக்கர நாற்காலியில் இருந்து மாடிப் படியில் ஜெயலலிதா உருண்டு விழும் காட்சி...‘‘இயக்குநரிடம் இருந்து பதில் வந்ததும் காரில் ஏறப்போன எம்.ஜி.ஆர். இறங்கிவிட்டார். ‘‘அது ரிஸ்க்கான காட்சி. நானும் உடன் இருக்கிறேன். அந்தப் பெண் (ஜெயலலிதா) விழுந்து விட்டால் என்ன ஆவது?’’ என்று கூறி வந்துவிட்டார்.

படியில் உருள்வது டூப்தான் என்றாலும் படியின் விளிம்பு வரை சக்கர நாற்காலியில் ஜெயலலிதா வரவேண்டும். சில அங்குலங்கள் கூடுதலாக நாற்காலி நகர்ந்தாலும் ஜெயலலிதா விழுந்துவிடுவார். எனவே, முன்னெச்சரிக்கையாக நாற்காலி சரியான தூரத்துக்கு மேல் நகர முடியாத படி நாற்காலியின் பின்னே கயிறு கொண்டு கட்டச் செய்தார் எம்.ஜி.ஆர்.

ஒத்திகையின்போது அந்த நாற்காலியில் எம்.ஜி.ஆர். தானே அமர்ந்து படியின் விளிம்பு வரை நகர்ந்து பார்த்து, அதற்குமேல் நாற்காலி உருண்டுவிடாமல் பின்புறம் கயிறு இறுக்கமாக கட்டப்பட்டுள்ளதா என்று ஒருமுறைக்கு 10 முறை உறுதி செய்த பின்னர்தான் ஜெயலலிதா நடித்த காட்சி படமாக்கப்பட்டது. அந்த அளவு உடன் நடிப்பவர்கள், ஸ்டன்ட் நடிகர்கள் ஆகியோரின் நலனில் அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.

ஜெயலலிதா இனிமையாகப் பாடக் கூடியவர். அதை அறிந்து ‘அடிமைப் பெண்’ படத்தில் ‘அம்மா என்றால் அன்பு...’ பாடலை இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் இசையில் ஜெயலலிதாவைப் பாடச் செய்தவர்தான் எம்.ஜி.ஆர்தான்.

1971-ம் ஆண்டு ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது வழங்கப்பட்டது. திரையுலகிலும் அரசியல் உலகிலும் யாரும் தொட முடியாத உச்சத்துக்கு எம்.ஜி.ஆர். சென்றதன் காரணம் என்ன? ‘பாரத்’ விருது பெற்றதற்காக நடிகர் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில் அதற்கான காரணத்தை ஜெயலலிதா தெளிவாக விளக்கினார். அவரது பேச்சு:

‘‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ‘பாரத்’ விருது பெற்றதில் ஆச்சரியம் இல்லை. அந்த விருதை அவர் பெறாவிட் டால்தான் ஆச்சரியம். தனக்கென்று அமைத்துக் கொண்ட கொள்கைகளை எம்.ஜி.ஆர். யாருக்காகவும் விட்டுக் கொடுத்தது இல்லை. அந்த பிடிவாத குணம்தான் அவரை சிறந்த நடிகராக்கி உள்ளது.

மக்களிடம் எம்.ஜி.ஆர். இவ்வளவு புகழடைந்திருப்பதற்கு என்ன காரணம்? ‘மக்களிடம் லட்சியத்தின் காரணமாக எவர் பெருமையடைகிறாரோ அவர்தான் சிறந்த கலைஞராக இருக்க முடியும்’ என்று ரஷ்ய எழுத்தாளர் மாக்காமோன் கூறியுள்ளார். அந்தப் பெருமைக்கு பாத்திரமாக எம்.ஜி.ஆர். இருக்கிறார். சிறந்த அரசியல்வாதியாகவும் லட்சியத் தில் தூய்மை உள்ளவராகவும் இருப்பதால்தான் இவ்வளவு பெரு மையும் எம்.ஜி.ஆருக்கு கிடைத் திருக்கிறது.’’

ஜெயலலிதாவைப் பற்றி எம்.ஜி.ஆர். கணித்தது சரி. எம்.ஜி.ஆர். பற்றி ஜெயலலிதா கூறியிருப்பது மிகச் சரி.

-தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
Return to frontpage

எம்ஜிஆர் 100 | 1

படித்ததில் பிடித்தது...

அண்ணா குறிப்பிட்ட 'கவிதை'!

--------------------------------------------



M.G.R. தமிழர்களைப் பொறுத்த அளவில் தமிழாகி விட்ட ஆங்கில எழுத்துக்கள்.

ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெறுவதே கடினம். அதிலும் முதலிடம் பெறுவது இன்னும் கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது அதைவிட கடினம். சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், முதலிடம் பெற்று, அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்ட அதிசயமே அசந்து போகும் அதிசயம் எம்.ஜி.ஆர்.

தமிழர்களை மயக்கும் மந்திரச் சொல்லாக அவர் பெயர் ஆனது ஏதோ மாயா ஜாலத்தால் அல்ல. அதற்கு பின்னணியில் இருக்கும் அவரது திட்டமிட்ட கடும் உழைப்பு. அவருக்கே அமைந்த வசீகரம். இந்த இரண்டும் கூட எல்லா நடிகர்களுக்கும் இருந்து விடலாம். ஆனால், மற்றவர்களுக்கு இல்லாத புகழும் பெருமையும் மக்கள் ஆதரவும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே ஏன்? இவற்றை எல்லாம் தாண்டிய மனிதாபிமானம் என்பதே பதிலாக இருக்கும். இந்த குணத்தால் மக்களை அவர் நேசித்தார். அதனால்தான் மக்கள் அவரை நேசித்தனர். அதனால்தான், இதுவரை எந்த தமிழக முதல்வரும் செய்யாத சாதனையாக அடுத்தடுத்து மூன்று முறை ஆட்சியைக் கைப்பற்றினார்.

1917-ம் ஆண்டு ஜனவரி 17ல் பிறந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியுள்ளது. இலங்கையில் கண்டியில் பிறந்து, தந்தையை இழந்து, தாய் மற்றும் தமையனுடன் தமிழகம் வந்து நாடகத்தில் சேர்ந்து சினிமாவில் சிறிய வேடங்களில் தலைகாட்டி, கதாநாயகனாக உயர்ந்து, பொதுவாழ்வில் ஈடுபட்டு, கட்சியின் தலைவராகி, அவர் தமிழக முதல்வரானது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால், எம்.ஜி.ஆரின் இந்த நெடிய சாதனை வாழ்வில் ஊடாடி இருக்கும் சினிமா, அரசியல், தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது அருங்குணங்களை, திறமைகளை, சாதுர்யங்களை, மனிதாபிமானத்தை, பண்பு நலன்களை விளக்கும் வகையில், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். 100 என்ற பெயரில் 100 முத்துக்களை தொகுத்து வாசகர்களுக்கு அளிக்கிறோம்.

‘‘மரத்திலே பழுத்த கனி தங்கள் மடியிலே விழாதா? என்று பலர் ஆவலாக காத்திருந் தனர். நல்லவேளையாக அது எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன். அந்த இதயக்கனிதான் எம்.ஜி.ஆர்.’’

எம்.ஜி.ஆரைப் பாராட்டி அறிஞர் அண்ணா கூறியதுதான் இது. அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’நாடகத்தில் நடிப்பதற்காக நடிகர் டி.வி.நாராயணசாமியால் அண்ணாவிடம் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தப்பட்டார். சினிமா வில் துணை வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க முதலில் ஒப்பந்தமான படம் ‘சாயா'. படத்தின் கதாநாயகி டி.வி. குமுதினி. அப்போதே அவர் புகழ் பெற்ற நடிகை. புதுமுக நடிகரான எம்.ஜி.ஆருடன் நடிப்பதற்கு குமுதினியின் கணவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதுபோன்ற சில காரணங்களால் ‘சாயா' படம் நின்று போனது.

பின்னர், தீவிர முயற்சிக்குப் பிறகு வாராது வந்த மாமணிபோல, ஜூபிடர் நிறுவனத்தின் ‘ராஜகுமாரி’ படத்தில் கதாநாயகனாக நடிக்க எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடிக்க வேண்டி இருந்ததால் நாடகத்தில் நடிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால், அந்த நாடகத்தில் எம்.ஜி.ஆரால் நடிக்க முடியாமல் போனது. என்றாலும் அண்ணாவோடு எம்.ஜி.ஆருக்கு பழக்கம் தொடர்ந்தது. அவரது பணத்தோட்டம், சந்திரோதயம் புத்தகங்களைப் படித்து அண்ணாவாலும் அவரது கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

திமுக கொடியை முதன்முதலாக திரையில் காட்டியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரே தயாரித்து இயக்கி நடித்த ‘நாடோடி மன்னன்' படத்தில் ஆணும் பெண்ணும் இருவண்ணக் கொடியை ஏந்தியபடி திரும்புவது போன்ற எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் இலச்சினை (லோகோ) படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் காட்டப் பட்டது. எம்.ஜி.ஆரின் படங்களில் அண்ணாவைப் பற்றியும் திமுக கொள்கைகளைப் பற்றிய வசனங் களும் பாடல்களும் கட்டாயம் இடம்பெற்றன.

அண்ணா தமிழக முதல்வரானதும் சென்னையில் 1968-ம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அப்போது, சென்னையில் மையப் பகுதியான அண்ணா சாலையில் (அப்போது மவுண்ட் ரோடு) ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் அலுவலகம் எதிரே கையை உயர்த்தியபடி கம்பீரமாக நிற்கும் அண்ணாவின் சிலையை தனது சொந்த செலவில் எம்.ஜி.ஆர். நிறுவினார். சர்.ஏ.ராமசாமி முதலியார் சிலையை திறந்து வைத்தார்.

உலகத் தமிழ் மாநாட்டில் கருத்தரங்கு ஒன்றில் எம்.ஜி.ஆர். பேசினார். கவிதையைப் பற்றிய நயமான விளக்கம் அளித்தார். ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை ’ என்று கூறினார். கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினர்.

பின்னர், அண்ணா பேச வந்தார். எம்.ஜி.ஆருக்கே குருவாயிற்றே? கேட்க வேண்டுமா? கவிதை பற்றி அவர் கூறும்போது,

‘அறிந்ததனை அறிந்தோர்க்கு

அறிவிக்கும் போதினிலே

அறிந்ததுதான் என்றாலும்

எத்துணை அழகம்மா? என்று

அறிந்தோரையும் வியக்க வைக்கும்

அருங்கலையே கவிதையாகும்’

... என்று கவிதையாலேயே கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேர மாயிற்று.

தொடர்ந்து அண்ணா பேசும்போது, ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார். ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானே...’ என்றார் அண்ணா.

மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. இதயக்கனியின் ஈர்ப்பு ரகசியம் அறிந்தவர் அண்ணா!

தொடரும்..

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
Return to frontpage

Thursday, 18 February 2016

சில சுவாரஸ்யமான வலைப் பதிவுகள்

வளவு

வாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.

http://valavu.blogspot.my/?expref=next-blog



கணேஷ்

i have no particular talent, i am merely inquisitive

http://ganeshmoorthyj.blogspot.my/?expref=next-blog

இவ்வுலகம் இனிது

எதிர்பார்ப்புகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் இடையில்...

http://nchellappa.blogspot.my/?expref=next-blog


வாழ்க்கையின் வண்ணங்களாக............................................................... அன்புடன் - பிரபாகரன்
http://vanavillinvannangal.blogspot.my/2015/12/blog-post_67.html








http://akshayapaathram.blogspot.my/?expref=next-blog

அக்ஷ்ய பாத்ரம்

"இது நான் கையால் அள்ளிய கடல்
http://akshayapaathram.blogspot.my/?expref=next-blog

100 ஆண்டு தமிழ் சினிமா - பாகம்-2

படித்ததில் பிடித்தது...

100 ஆண்டு தமிழ் சினிமா
http://mpmathivanan.blogspot.my/2013/01/100-2.html
-----------------------------------------

இளையராஜா

1976 ஆம் ஆண்டில் 'அன்னக்கிளி' திரைப் படத்தில் இசையமைப்பாளராகிய ராசையா என்ற இளையராஜா மண் மணக்கும் கிராமத்து இசையை அறிமுகப்படுத்தி திரைப்பட ரசிகர்களை தன வயப்படுத்தினார். பின்னாட் களில் நவீன மற்றும் சாஸ்திரிய இசையிலும் வியத்தகு வித்தைகள் புரிந்து 'மாஸ்ட்ரோ'வாக இன்றளவிலும் அதே சிறப்பான இடத்தில் அமர்ந்திருக்கிறார்.

சங்கர் -கணேஷ்,வி.குமார்,கங்கை அமரன்,சந்திரபோஸ் ஆகிய இசையமைப்பாளர்களின் பங்களிப்பும் சீர்காழி கோவிந்த ராஜன்,ஜேசுதாஸ்,மலேசியா வாசுதேவன்,டி.கே.கலா போன்ற பாடகர்களின் செல்வாக்கும் குறிப்பிடத் தக்கதாக இருந்தது.


கே.பாலச்சந்தரைத் தொடர்ந்து 1977ல் '16 வயதினிலே' படம் மூலமாக தமிழ்த் திரையுலகத்துக்கு வந்த தெற்கத்தி மண்ணின் கலைஞன் பாரதிராஜா தென் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வியல் கலாசாரத்தை வண்ணத் திரைப் படமாக்கிப் படைத்து பெரும் புரட்சியைத் தோற்றுவித்தார்.

16 வயதினிலேயின் கதையமைப்பும் அதில் கமல் ஏற்று நடித்த வித்தியாசமான கதாபாத்திரமும் ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியது.

பாரதிராஜாவும் சிவாஜியும் இணைந்து உருவான 'முதல் மரியாதை' உலகத் திரைப்பட வரிசையில் இடம் பெற்றது. பாரதியின் சீடன் பாக்கியராஜ் புத்திசாலித்தனமான திரைக் கதையாலும் சாதுர்யமான வசனங்களாலும் தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றார்.




மகேந்திரன்

1978 ஆம் ஆண்டில் வெளிவந்த 'முள்ளும் மலரும்' திரைப்படம் மகேந்திரன் என்ற மகத்தான படைப்பாளியை உலகுக்குத் தந்தது.மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்', 'நண்டு'போன்ற படங்கள் மனித உணர்வுகளை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தி பார்வையாளருக்கு புதிய திரை அனுபவங்களைத் தந்தன.

1979 ஆம் ஆண்டில் 'அழியாத கோலங்கள்' படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகத்துக்கு அறிமுகமான பாலு மகேந்திரா 'மூடுபனி',மூன்றாம் பிறை','வீடு', சந்தியா ராகம்' போன்ற திரைக் காவியங்களால் சினிமாவின் முப்பரிமாணங்களை வெளிப் படுத்தி அழியாப் புகழ் பெற்றார்.


.'தூரத்து இடிமுழக்கம்' திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் நுழைந்த கருப்பு நிற இளைஞர் ஒருவர் சினிமாவின் நிறக் கொள்கைகளைத் தகர்த்தெறிந்து வெற்றிக் கதாநாயகனாக வலம் வந்தார்.மக்கள் ஆதரவோடு அரசியலில் ஈடுபட்டு தற்போது தமிழ்நாடு சட்டசபை எதிக்கட்சித் தலைவராக இருக்கின்ற விஜயகாந்த்தான் அவர்.


'இது ஒரு பொன்மாலைப் பொழுது' என்னும் கவித்துவமான வரிகளோடு 1980ஆம் ஆண்டில் ஒரு கரிசல் காட்டிலிருந்து தமிழ்த் திரைக்கு வருகை தந்த வைரமுத்து ஏறத்தாழ 5800 பாடல்களை எழுதி இந்தியாவிலேயே முதல்வராக ஆறு தேசிய விருதுகளைப் பெற்று 'கவிப்பேரரசு'வாகத் திகழ்கிறார்.'


1981 ஆம் ஆண்டில் வெளியான பாரதிராஜாவின் ;அலைகள் ஓய்வதில்லை' ஆழமான காதல் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியது.அந்தப் படத்தில் அறிமுகமான கார்த்திக் பின் வந்த காலத்தில் உணர்வு பூர்வமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து நவரச நாயகனானார்.


ஸ்டுடியோ வட்டாரத்துக்குள் சுற்றிக்கொண்டிருந்த தமிழ் சினிமா பாரதிராஜாவின் வரவிற்குப் பிறகு கிராமங்களை நோக்கிப் பயணப்பட்டது.பொள்ளாச்சியும் திருநெல்வேலியும் தேனியும் வெளிப்புறப் படப்பிடிப்புக் களங்களாகின.


இந்தக் காலக்கட்டத்தில் விஜயகுமார், சத்யராஜ், மோகன், பிரபு,முரளி, அர்ஜுன், சரத்குமார்,நிழல்கள் ரவி போன்ற கதா நாயகர்களும் சுஜாதா, ரேவதி, சரிதா, குஷ்பு, அம்பிகா, ராதா, கவுதமி சில்க் ஸ்மிதா போன்ற கதாநாயகிகளும் எஸ்.வி.சேகர், சுருளிராஜன் ஆகிய நகைச்சுவை நடிகர்களும் புகழ் பெற்றுத் திகழ்ந்தார்கள்.


1982 ல் ஹரிஹரன் இயக்கிய 'ஏழாவது மனிதன் ' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான ரகுவரன் தனது தனித்துவமான உடல்மொழியாலும் வசன உச்சரிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்து பல மொழிப் படங்களில் நடித்து அண்மையில் இயற்கை எய்தினார்.


1983 ஆம் ஆண்டில் சாலையில் தான் கண்ட ஒரு பள்ளி மாணவியை தன படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார் பாரதிராஜா.அவரது தேர்வு வீண் போகவில்லை.ஆஷா என்ற அந்தப் பெண் ரேவதியாக 'மண்வாசனை'யில் அறிமுகமாகி சிறந்த நடிப்பால் தமிழ்த் திரையுலகில் தனியிடத்தைப் பிடித்தார்.சினிமாவில் முதிர்ந்த அனுபவத்தோடு தற்போது இயக்குனராகவும் பரிணமித்திருக்கிறார்.

மணிரத்னம் ,எஸ்.ஏ .சந்திரசேகர், மணிவண்ணன்,  ஆர்.சுந்தர ராஜன்,ஆர்.கே.செல்வமணி,விக்ரமன்,டி .ராஜேந்தர்,மனோபாலா, பாசில்,எஸ்.பி.முத்துராமன்,பி.வாசு, விசு, ஆர்.வி.உதயகுமார், கே.எஸ்.ரவிகுமார்,ஷங்கர் ஆகிய திறமையாளர்கள் 80 மற்றும் 90 ஆம் வருடங்களில் தமிழ்த் திரையுலகில் கோலோச்சி சிறந்த படங்களை இயக்கினார்கள்.


1985 ல் வெளியான 'கன்னிராசி' வெற்றிபெற்று பாண்டிய ராஜன்'என்ற திறமைசாலியைத் தமிழ்த் திரைக்குத் தந்தது. பாண்டியராஜன் கதாநாயகனாகவும் வெற்றி பெற்று சிறந்த இயக்குனர்-நடிகராகத் திகழ்ந்தார்.


1986 ஆம் ஆண்டில் 'ஊமைவிழிகள்' படத்தின் மூலமாக நிகழ்ந்த அரவிந்தராஜ், ஆபாவாணன் போன்ற திரைப்படக் கல்லூரி மாணவர்களின் பிரவேசம் தொழிநுட்ப ரீதியாக ரசிகர்களிடையே பிரமிப்பையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது.


'மவுனராகம் ','நாயகன்','அக்னி நட்சத்திரம்' ,'அஞ்சலி' ,தளபதி', 'ரோஜா',போன்ற மணிரத்னத்தின் படங்களும் 'ஜென்டில்மேன்', 'காதலன்',''இந்தியன்',ஜீன்ஸ்','முதல்வன்' போன்ற ஷங்கரின் படங்களும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு ஆங்கிலப் படங் களுக்கு இணையான பிரம்மாண்டத்தைக் காட்சிப்படுத்தி பிரமிப்பை ஏற்படுத்தின.


1987 ல் வெளியான மணிரத்னத்தின் 'நாயகன்' கமலஹாசனுக்கு தேசிய விருதினைப் பெற்றுத் தந்தது.இந்தப் படத்தில் ஒரு சிறப்பான பாத்திரத்தை ஏற்றிருந்த பீரங்கி மூக்கு நாசர் அனைவராலும் கவனிக்கப்பட்டு சிறப்பான எதிகாலத்தைப் பெற்றார்.


தமிழ்நாடு,இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் ஆகிய இடங்களை மட்டுமே கொண்டிருந்த தமிழ் சினிமாவின் வர்த்தகத் தொடர்பு இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களால் இங்கி லாந்து,அமேரிக்கா, கனடா நார்வே என உலக அளவில் விரிவடைந்தது.

'மவுனராகம்' படத்தின் மூலமாக அறிமுகமான பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் முப்பரிமான வித்தைகள் புரிந்தார்,அது மட்டுமல்லாமல் இன்றைய தமிழ்த் திரையின் வெற்றிகரமான ஒளிப்பதிவாளர்கள் பலரும் பயின்ற பல்கலைக் கழகமும் அவரே.


1989 ல் வெளியான 'புதியபாதை'யில் முற்றிலும் புதியதான கதைக்களத்தைப் படைத்து இயக்குனர்-நடிகர் ஆர்.பார்த்திபன் அனைவரையும் வியக்க வைத்தார்.


90 ஆம் ஆண்டுகளில் தமிழ்த் திரையுலகின் ரத்த நாளங்களில் இளரத்தம் புகுந்து புத்துணர்ச்சியும் அதன் மூலமாக புதிய சிந்தனைகளும் உருவானது என்று சொல்லலாம்.

விஜய்,அஜீத்,அரவிந்தசாமி, பிரபுதேவா,ராஜ்கிரண் ஆகிய கதாநாயகர்களும் சீதா,சிம்ரன்,மீனா,தேவயாணி,நக்மா ஆகிய கதாநாயகிகளும் ராஜீவ் மேனன்,கஸ்தூரிராஜா,சுந்தர்.சி.,செல்வா ஆகிய இயக்குனர்களும் இந்தக் காலக்கட்டத்தில் தமிழ்த் திரை வானில் தோன்றினார்கள்.


1991 ல் வெளிவந்த 'என் ராசாவின் மனசிலே' யில் ஒரு பாடல் காட்சியில் நடித்து திரை வாழ்க்கையைத் தொடங்கிய வடிவேலு ஷங்கரின் 'காதலன்' படத்தின் மூலமாகத் திருப்பம் பெற்று தனது ஜனரஞ்சகக் காமெடி மூலமாகப் புகழ் பெற்று விரைவில் நாட்கணக்கில் ஊதியம் பெரும் சகாப்தத்தைத் துவக்கி வைத்தார்.


'புரியாத புதிர்' படத்தை இயக்கி தனது கலைப்பயணத்தை துவங்கிய கே.எஸ்.ரவிகுமார் இன்று மிக வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனராக உலா வருகிறார்



ஏ.ஆர்.ரகுமான்

1992 ல் வெளிவந்த 'ரோஜா' திரைப்படத்தின் 'சின்ன சின்ன ஆசை' பாடல் உலகமெங்கும் ஒலித்தது.இங்கிலாந்து நாட்டின் டாப் 10 வரிசையில் இடம் பெற்றுச் சாதனை படைத்தது.அதன் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் 2009 ஆம் ஆண்டில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று சிகரம் தொட்டு எல்லாப்புகழையும் இறைவனுக்கே அர்ப்பணித்தார்


அதே ஆண்டில் வெளிவந்த 'தேவர் மகன்' மனித குலத்தின் பழிக்குப்பழி என்கிற கொடூரமான குணாதிசயத்தின் கொடுமையை விளக்கி மாபெரும் வெற்றி பெற்றது.


இயக்குனர் செல்வாவின் 'அமராவதி' அழகும் போராட்டக் குணமும் கொண்ட அஜித் குமாரை அறிமுகப்படுத்தியது. எஸ்.ஏ.சந்திரசேகரின் 'நாளைய தீர்ப்பு' அமைதியும் திறமையும் கொண்ட விஜயைத் தந்தது.


ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் நல்ல கதைகளைத் தேர்வு செய்து தொடர்ந்து வெற்றிப் படங்களைத் தயாரித்து ஏராளமான திறமைசாலி இளைஞர்களை இயக்குனராக அறிமுகம் செய்தது

தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழ்த் திரை யுலகில் நுழைந்து வெற்றி பெற்றார்கள்.அதன் விளைவாக தமிழ் சினிமாவின் கதைக்களத்திலும் பேச்சு மொழியிலும் மதுரை பகுதிகளின் தாக்கம் விரிவுபட்டது.


உதவி இயக்குனராகப் பணிபுரிந்த ஒருவர் கதாநாயகனாகி சூப்பர் ஸ்டாருக்கு இணையாக வியாபார மதிப்பு பெற்ற நிகழ்வு 1990 களில் நிகழ்ந்தது.கங்கை அமரனின் 'கரகாட்டக்காரன்' படத்தின் மூலமாக ராமராஜன் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று அடுத்தடுத்து கிராமத்துக் கதாநாயகனாக நடித்துப் புகழ் பெற்று 1998 ஆம் ஆண்டில் இந்திய பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆனார்.



கரகாட்டக்காரன்

கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற வாழைப்பழக் காமெடி நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணியும் செந்திலையும் அந்தக் காட்சியை எழுதிய வீரப்பனையும் தமிழ் சினிமா உள்ளவரைக்கும் நினைவு படுத்திக் கொண்டிருக்கும்.


பாலாஜியின் சுஜாதா புரொடக்சன்ஸ் ,கவிதாலயா, ஆர்.எம். வீரப்பனின் சத்யா மூவீஸ்,சிவாஜி புரொடக்சன்ஸ், ராஜ்கமல் இன்டர்நேசனல் ஆகிய படத்தயாரிப்பு நிறுவனங்கள் தரமான படங்களைத் தயாரித்து வெளியிட்டு தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் பெரும் பங்கேற்றன.


1996 ஆம் ஆண்டில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய 'ஔவை சண்முகி' படத்தில் கமல் படம் முழுவதும் முழு நீள பெண் வேடம் ஏற்று நடித்து மேலும் ஒரு சாதனையைப் படைத்தார்.


1997 ல் ஹென்றி தயாரித்த 'பாரதி கண்ணம்மா' படத்தின் இயக்குனராக அறிமுகமான சேரன் கமர்ஷியல் அடையாளம் தவிர்த்து 'பொக்கிஷம்',தவமாய்த் தவமிருந்து',ஆட்டோகிராப்' போன்ற மிகச் சிறந்த படங்களைத் தந்து பல தேசிய விருது களையும் வென்று நாளடைவில் கதாநாயகனாகவும் பரிணமித்துள்ளார்.


வசந்த்தின் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டில் உருவான ;நேருக்கு நேர்' படத்தில் அறிமுகமானார் நடிகர் சிவகுமாரின் புதல்வரான சூர்யா.நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்ததால் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து திறமையான இளைஞராகக் களத்தில் நிற்கிறார் சூர்யா.


சரண், எஸ்.ஜே.சூர்யா,வி.சேகர்,சுரேஷ் கிருஷ்ணா ,விகரமன், ஏ.வெங்கடேஷ் ஆகிய இயக்குனர்கள் அறிமுகமாகி வெற்றி பெற்றார்கள்.


அண்மைக் காலத்தில் உலகப் படைப்பாளிகளின் கவனத்தைத் தமிழ் சினிமாவை நோக்கித் திருப்பிய ஒரு இளைஞர் தன முதல் படைப்பைத் திரையிடுவதற்கு மிகப்பெரும் போராட்டங்களைச் சந்தித்தார்.இறுதியில் திறமை வென்றது.1999 ஆம் ஆண்டில் 'சேது'படம் பாலா என்ற புதுமை இயக்குனரை தமிழ் சினிமா வுக்குத் தந்தது.இதுவரையில் தமிழ் சினிமா அறியாத கதா பாத்திரங்களை வைத்து பாலா உருவாக்கும் படங்கள் உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெறுகின்றன.


சேதுவின் வாயிலாக அறியப்பட்ட சீயான் என்னும் விக்ரம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தரத்துக்கு மெருகேற்றி வருகிறார்.

'வாலி'யில் சிறு வேடத்தில் அறிமுகமாகி 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தின் கதாநாயகியானார் ஜோதிகா உணர்வு களை தத்ரூபமாக வெளிப்படுத்தும் கண்கள் ஜோதிகாவின் சிறப்பு.அவரது குழந்தை முகம் ரசிகர்களால் பெரிதும் நேசிக்கப் பட்டது.புகழின் உச்சத்தில் இருந்தபோதே ஜோதிகா தான் நேசித்த சூர்யாவை மணந்து குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார்.


எஸ்.ஏ.ராஜ்குமார்,தேவா போன்ற இசையமைப்பாளர்கள் இந்தக்காலக்கட்டத்தில் புகழோடு விளங்கினார்கள்.


கே.பாலசந்தரால் 'டூயட்' படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரகாஷ்ராஜ் தனித்துவமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களின் செல்லமானார்.சம்பாதித்த பொருளை தமிழ் சினிமாவிலேயே முதலீடு செய்து 'மொழி', 'அபியும் நானும்' போன்ற நல்ல படங்களைத் தயாரித்தார்.


விளம்பரப் படங்களில் நடித்து வந்த ஆர்.மாதவன் 2000 ஆவது ஆண்டில் மணிரத்னம் அவர்களால் 'அலை பாயுதே' என்ற படத்தில் அறிமுகப் படுத்தப்பட்டு தொடர்ந்து வந்த கவுதம் வாசுதேவ் மேனனின் 'மின்னலே' படத்தின் மூலம் காதல் நாயனாக இடம் பிடித்தார்.


இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் மென்மையான காதலை நளினமாக வெளிப்படுத்துகின்ற படங்களை இயக்கி தனக்கென தனியான ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார்.


2001 ஆம் ஆண்டில் அஜித்தின் 'தீனா' வை இயக்கி அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ் 'ரமணா' மற்றும் 'கஜினி'ஆகிய மிகவும் பேசப்பட்ட படங்களை இயக்கி ஹாட்ரிக் சாதனை படைத்து குறிப்பிடத் தகுந்த இயக்குனரானார்.


இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் புதல்வரும் இஞ்சினியரிங் பட்டதாரியுமான செல்வராகவன் அவரது சகோதரரான தனுஷ் அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' படத்தின் கதையை எழுதி அடுத்து ;காதல் கொண்டேன்; வெற்றிப் படத்தின் மூலமாக இயக்குனரானார்.இந்தப்படம் சகோதரர்கள் இருவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை அமைத்துக் கொடுத்தது.

இயக்குனர் டி .ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக இருந்து 2002 ஆம் ஆண்டில் வெளியான 'காதல் அழிவதில்லை' படத்தின் வாயிலாக கதாநாயகனானார்.பிறகு வந்த 'மன்மதன்', வல்லவன்' ஆகிய படங்களின் மூலமாக இயக்குனராகவும் பரிணமித்தார்.

இளையராஜாவின் புதல்வரான யுவன் சங்கர் ராஜா 1996 ஆம் ஆண்டில் தனது 16 ஆவது வயதில் 'அரவிந்தன்' திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் பெற்று 2002ல் வெளியான ;துள்ளுவதோ இளமை'படத்தில் புதுப்புது இசைக் கோர்வைகளைக் கையாண்டு புகழ் பெற்று இளமை ததும்பும் பாடல்களைத் தருகிறார்.


'பிதாமகன்','அந்நியன்', 'காக்க காக்க'. 'அன்பே சிவம்', சிவாஜி' .தசாவதாரம்' போன்ற படங்கள் 21 ஆம் நூற்றாண்டுத் துவக்க ஆண்டுகளின் குறிப்பிடத் தக்க தமிழ்ப் படங்களாகும்.

'தசாவதாரம்' படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களை ஏற்று நடித்து நடிகர் திலகம் சிவாஜியின் உலக சாதனையை விஞ்சினார்.



இலங்கைப் போர்

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது தமிழ் மக்களுக்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகம் போராட்டக் களத்தில் இறங்கியது.இயக்குனர்கள் சீமான்,அமீர் ஆகியோர் சிறை சென்றார்கள்.தமிழ் மக்களின் உரிமைகளைக் காக்கும் நோக்கத்தோடு சீமான் 'நாம் தமிழர்' இயக்கத்தைத் தொடங்கினார்.

ஷங்கர் இயக்கிய 'இந்திரன்' சுமார் 162 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு தமிழ் சினிமாவின் மெகா பட்ஜெட் படமாகியது. இதில் ரஜனி இயந்திர மனிதனாக நடித்தார். ஹாலிவுட் படங் களுக்கு இணையாக இந்தப்படத்தின் தொழிநுட்பம் அமைந்திருந் தது.

தமிழ்த் திரையுலகில் அதிக அளவில் புதிய தயாரிப்பாளர்கள் குறைந்த முதலீட்டுப் படத் தயாரிப்பில் ஈடுபட்டார்கள்.புதிய நாயகர்களும் நாயகிகளும் அறிமுகம் ஆனார்கள்.அதிக அளவில் படங்கள் வெளியாகின.

பரத், ஆர்யா, ஜெயம் ரவி, விஷால்,கரன், பிரித்விராஜ், பசுபதி, சந்தானம் ஆகியவர்கள் இந்தக் காலக்கட்டத்தில் வெற்றிகரமான நடிகர்களாகத் திகழ்ந்தார்கள்.

பிரியன், விஜய் மில்டன், கே.வி.ஆனந்த், ரத்னவேல், ஆர்தர்.பி. வில்சன் ஆகிய ஒளிப்பதிவாளர்களும் நா.முத்துக்குமார், கபிலன், பா.விஜய், சினேகன்,பழனி பாரதி ஆகிய பாடலாசிரியர்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
.
பாலாவிடம் சினிமாவைக் கற்றுக்கொண்ட அமீர் 'பருத்தி வீரன்' என்ற படத்தை இயக்கி வெளியிட்டபோது தமிழ் சினிமா உலகத் தரத்துக்கு உயர்ந்தது.தமிழ்த் திரை தனக்கென வகுத்திருந்த பல நியதிகள் பருத்திவீரனில் அடித்து நொறுக்கப்பட்டன. கதாநாயகனாக மிகச் சிறப்பாக நடித்து அறிமுகமான சூர்யாவின் தம்பி கார்த்தி இந்த ஒரே படத்தின் மூலம் நட்சத்திரத் தகுதி பெற்றார்.

அமீரின் உதவியாளரான சசிகுமார் 'சுப்ரமணியபுரம்' என்ற மற்றுமொரு புரட்சிக் கதையைக் கொண்ட படத்தை எழுதி இயக்கி ,தயாரித்து வெற்றி பெற்று தமிழ் சினிமாக் கலாசாரத்தின் மாற்றத்தை மேலும் உறுதிப்படுத்தினார்,

பாண்டிராஜின் 'பசங்க', சமுத்திரக்கனியின் 'நாடோடிகள்', சுசீந்திரனின்'அழகர்சாமியின் குதிரை',சசியின் 'பூ',பிரபு சால மோனின் 'மைனா' ஆகிய படங்கள் தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான வளர்ச்சியை உலகுக்கு எடுத்துக்காட்டின.

துவக்க காலத்தில் பெரும்பாலான படப்பிடிப்புத் தளங்கள் இங்கே அமைந்திருந்ததால் சென்னை நகரின் ஒரு பகுதியான கோடம் பாக்கம் தமிழ் சினிமாவின் தலைமையகமாகக் கருதப்பட்டது. அதன் விளைவாக தமிழ் சினிமா 'கோலிவுட்' என்று பெயர் பெற்றது.

நடிகர் சூர்யா 'அகரம்' என்கின்ற அறக்கட்டளையைத் தொடங் கினார்,அதன் மூலமாக ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாக் கலைஞர்களின் புதுமையான உத்திகளும் தொழில்நுட்பத் திறமையும் மற்ற மொழிகள் சார்ந்த திரை உலகத்தினரை வியக்க வைத்தது.இந்த புதிய விஷயங்களை அவர்கள் தங்களின் படங்களில் பயன்படுத்தினார்கள்.

தமிழ் இயக்குனர்களும் நடிகர்களும் ஒளிப்பதிவாளர்களும் நடன மற்றும் சண்டைப் பயிற்சியாளர்களும் மற்ற மொழிக் கலைஞர் களின் அழைப்பின் பேரில் நேரடியாகவும் பங்குபெற்று பிற மொழிப் படங்களிலும் தங்கள் சிறப்புக்களை வெளிப்படுத்தினார் கள்

100ஆண்டுக் கால வரலாற்றைக் கொண்டு எல்லாத் துறை களிலும் தமிழ்த் திரையுலகம் ஏற்றம் பெற்று விளங்கும் காலம் இது. வருங்காலமும் இதேபோல வளமும் நலமும் பெற்றுத் திகழ வேண்டும் என்பது உலகத் தமிழ் மக்களின் விருப்பம்.

http://mpmathivanan.blogspot.my/2013/01/100-2.html