Saturday, 12 October 2013

ஆக்க சக்தி...

ஆக்க சக்தியின் ஆணி வேரே பிறருக்கு உதவியும், ஒத்தாசையும் செய்வதுதான் என்கிறார் அமெரிக்க தன்முனைப்பு பயிற்சிகள் தரும் எம்.ஆர்.கொப்மேயெர்.

அவர் சொல்கிறார்,
" அடுத்தவருக்கு உதவி செய்யும் வரை அது ஆக்க சக்தியாக இருக்கும். ஒத்தாசை செய்யும் அதே நேரத்தில் அது ஆக்க சக்தியாக இருக்கின்ற காரணத்தால் வாழ்க்கையில் நீங்கள் அடைய விரும்பும் அனைத்தையும் அது பெற்றுத்தரும். ஆனால், உங்கள் சுய நலத்திற்கு மட்டுமே அச்சக்தியை நீங்கள் பயன்படுத்த முயன்றால், அது அந்நேரமே எதிர்ச் சக்தியாக மாறிவிடும்..."

சில செய்திகளும் சில உண்மைகளும்..

ஊடகங்களில் பலவற்றை பார்க்கிறோம், படிக்கிறோம். படைப்பவரின் பார்வையிலே நம்மைக் கொண்டுசெல்வதால் பொதுவில் அதுவே உண்மையென நம்பி விடுகிறோம். அதிலிருந்து விலகி ஊடுருவிப் பார்க்கும் தன்மை அடிபட்டுப்போகின்றது.

நிஜக்கதைகளில் இருந்து உண்மைக்கதையை தெரிந்துகொள்வது சிலருக்கு அவ்வளவு சுலபமாக இருக்காது.

நிஜமென நடந்தது ஒருபுறம் இருக்க அதிலிருக்கும் மையக் கருத்தை கவனித்தால் அது வேறு ஒரு திருப்பத்தைத் தருவது போல இருக்கும்.

மனிதர்களின் தவறுகள் கண்டிக்கப்படுவதை விடுத்து கொலையெனும் மரணத்தை தண்டனையாக கொடுப்பது இவ்வகையைச் சேர்ந்ததே.

ஆசிரியர் கண்டிக்கிறார் என அவரைக் கொலை செய்வது, கணவன் கொடுமைப் படுத்துகிறார் என அவரின் தலையை துண்டிப்பது, நிற்காமல் அழும் குழந்தையை சுவற்றில் அடித்து உயிர் போகச் செய்வது, தன் காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றி மரணமுறச்செய்வது இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம்.

நேரடி பாதிப்பில் நிகழ்ந்தவை போலப் பட்டாலும், இச்சம்பவங்களை உற்று நோக்கினால், இவற்றின் அடிப்படை சிறு வயதுமுதல் வளரும், வளர்க்கப்படும் பழக்க வழக்கங்களைக் கொண்டே அமைகின்றது என்பது தெரிய வரும்.

மழலைகள், குழந்தைகள், சிறுவர்கள் என அலட்சியம் காட்டுவோர் சிந்திக்க வேண்டிய செய்தி  இது. குழந்தைகள் தானே என இருக்காமல் ஓரளவுக்கு கண்டிப்பையும் அவர்கள் வளரும் போது நாம் கடைபிடிக்கவேண்டியது மிக மிக அவசியம். அதுதான் அவர்கள் மேஜர் ஆகும் வரை சரியான நெறிகளில் கல்வியின் பக்கம் கவனத்தை செலவிடத் தூண்டுகிறது.

இந்தச் சிறுவயது பழக்கவழக்கங்கள் அவர்களை நல்லவர்களாக, நல்ல குணங்களோடு வளரச் செய்யுமேயன்றி  தீய வழிகளுக்கு இட்டுச் செல்லாது.

அவர்களின் சிந்திக்கும் தன்மை சீர்படும்போது எல்லா சூழ் நிலைகளிலும் நடு நிலைப்போக்கையே அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். கடுமையான, கொடுமையான கோப தாபங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்கும்.

Friday, 11 October 2013

பார்த்து ரசித்த இடங்கள்...

உள்ளூரில் குடும்பத்தோடு சென்று பொழுது போக்க பல இடங்கள் இருந்தாலும், பலர் அது போன்ற குடும்ப உறவை வலுப்படுத்தும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்வதில்லை.
 
வெளி நாட்டுப் பயணங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அப்படிப் போகும்போதும் குடும்பத்தில் அனைவரும் என இல்லாமல் பொருளாதார சூழ் நிலை காரணமாக ஒரு சிலரே சென்று வருகின்றனர்.
 
குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்று கூடி மகிழக் கூடிய  அழகிய இடங்கள் பல நம்மூரில் இருக்கின்றன. அதில் ஒன்று, சைப்ர்ஜெயா மல்டிமீடிய பல்கலைக் கழகத்தின் முன்னே இருக்கும் இந்த  இயற்கை கொஞ்சும் பூங்காவாகும்.
 












Thursday, 3 October 2013

எல்லோரும் நலம் வாழ...

உண்மையோ இல்லையோ, எல்லோரும் தங்கள் மனதில் தங்களை ஒரு ஹீரோவாக உருவகப் படுத்திக்கொண்டுதான் உலா வருகின்றனர். அதோடு, நல்ல  எண்ணங்களை மட்டுமே தாங்கள் பறைசாற்றுவதாக கூறிக்கொள்கின்றனர். அதுமட்டுமா. மற்றவர் மகிழ்விற்கும் நலத்திற்கும் இறைவனை வேண்டுவதாக சொல்வோரும் பலர் இருக்கின்றனர்.

போலியானோர் பலர் மத்தியில் இப்படி எல்லோருக்கும் பிடித்த வரிகளைப் பாடும் நிஜக் கதாநாயகர்களை கண்டுகொள்வது சிரமமானதே.

எங்க மாமா திரையில் இருந்து ....
"எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்...

பூப்போன்ற என் உள்ளம் யார் கண்டது
பொன்னான மனமென்று பேர் வந்தது
வழியில்லாத ஊமை எது சொன்னாலும் பாவம்
என் நெஞ்சும் என்னோடு பகையானது

கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்
அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்
நியாயங்கள் தெளிவாக நாளாகலாம்
நான் யாரென்று அப்போது நீ காணலாம்

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்...

உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது
உன் எண்ணம் எதுவென்று தெரிகின்றது
நான் இப்போது ஊமை மொழியில்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்

உன் பாதை நீ கண்டு நீ வாழலாம்
இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம்
எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்
நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்"


Wednesday, 2 October 2013

பெண்மை...


மென்மையான தன்மைதான் பெண்மை. அந்த மென்மையே பெண்மையின் இலக்கணம்  என அனைவராலும் போற்றத் தூண்டும் என்பார்கள்.

பெண்ணுக்குரிய  நற்பண்புகளில், ஆர்ப்பாட்டமில்லாது அமைதியாகவும், மென்மையாகவும் நடந்து கொள்வதே மற்றவரின் அன்பையும் ஆதரவையும் அடையும் சிறந்த வழியென சான்றோர்களால் வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பெண்மை என்பதற்கு தனித்துவமான பொருள் ஒன்றுண்டு. அதில் அன்பு, அமைதி, அடக்கம், சாந்தம் போன்றவை மட்டுமே அரசாட்சி செய்யும் குணங்களாகும்.

பல பரிமாணங்களில் நமது பண்பாட்டினை உயர்த்திப் பிடிக்கும் தனிப்பெரும் சக்தி பெண்மைக்குண்டு.


பொது நிகழ்வொன்றில் அன்னை மங்களத்துடன், சகோதரி சுஸ்மிதா அவர்கள்.

அதிகாரமும், அகங்காரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாதபோது பெண்மை போற்றிப் புகழப் படுகின்றது. இவை மையமிடும் இடங்களில் சமத்துவம் மேலோங்குகிறதே தவிர பெண்மையின் புனிதம் காணாமல் மறைகின்றது.
பெண்கள் என்றிட பெண்மையாகிவிடாது. ஆளுமைத் திறன்  அனைத்துமிருந்தாலும், காரிருள் வேளையில் நிலவொளி போல் இதமான உணர்வுகளை அதிர்வுகளாய் வெளிக்கொணரும் குணமே பெண்மையாகும்.

ஒரு வீட்டுக்கு மருமகளாக வரும் மணப்பெண்ணை முதன் முதலில் குத்து விளக்கேற்றச் செய்கின்றனர். விளக்கு இருளைப் போக்கி ஒளியைப் பரப்புவதுபோல, வீட்டின் குறைகளை நீக்கி நிறைகளை கொணருவாள் என அதற்குப் பொருள்.  அன்றிலிருந்து அவள் அந்த வீட்டுக்குத் தலைவி ஆகிறாள். எல்லா நல்ல குணங்களும் பொருந்திய ஒருவரால் மட்டுமே அந்தத் தலைமைப் பதவியை நன் கு தற்காத்துக்கொள்ள முடிகிறது. பெண்மையின் பூரண குணங்களினால், புதிதாய் குடிவரும் ஒரு பெண்ணுக்கு அது சாத்தியமாகிறது.

நம்மை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தத் தாய்  பெண்மையின் பிறப்பிடமாக போற்றப் படுகிறார். மனைவின் அன்பும், பண்பும், மகளின் பாசமும், நேசமும் பெண்மையின் இலக்கனமென பெரியோர் சொல்கின்றனர். இறைவனிடம் கொண்டபக்தியில் சாந்தம் பெண்மையின் நட்சத்திர அந்தஸ்தைப் பெறுகிறது.

அம்புலிமாமா கதைகள்...


ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளிலும், எண்பதுகளிலும்  மிகவும் புகழ் பெற்று விளங்கிய மாணவர் நூல்களில் அம்புலிமாமா முதல் இடத்தில்  இருந்ததெனச் சொல்லலாம்.

பள்ளிசெல்லும் பிள்ளைகளுக்குத்தான் என்றாலும் அம்புலிமாமா கதைகளும், அவற்றில் சொல்லப்பட்ட நீதிகளும் மனிதர்கள் அனைவருக்கும் என்றால் அது மிகையாகாது.

நல்லது கெட்டதென இரு வேறுபாடுகளையும் சொல்லி, "நல்லது செய்யின் நல்ல முடிவும், தீயது செய்யின் அதன் விளைவு தீமை" என்றும் இளம் வயதிலேயே சொல்லித்தந்து பிள்ளைகளை சீர்படுத்திச் சென்ற பெருமை அம்புலிமாமாவிற்கு உண்டு. அறிவுரைகளைச் சொன்ன அதேநேரம், ஆக்கபூர்வமான கருத்துக் குவியலாகவும் ஒவ்வொரு இதழும் வெளிவந்தது.

வேதாளமும் விக்ரமாதித்தனும் தொடர் எனக்கு மிகவும் பிடித்தது.

ஒவ்வொரு கதையும்,
"தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான்..."
எனத்தொடங்கி...

"விக்ரமனின் இந்த சரியன பதிலால் அவனது மௌனம் கலையவே வேதாளம் தான் சுமந்து வந்த உடலோடு மீண்டும் முருங்க மரத்தில் ஏறிக்கொண்டது..."
என முடியும்.

கதையின் முடிவில் வேதாளம் கேட்கும் கேள்விக்கான பதிலை விக்ரமாதித்தன் எப்படிச்  சொல்லுவான் என முன்கூட்டியே யூகிக்கும் அன்றிருந்த  ஆர்வத்தை இன்று நினைத்தாலும் முகத்தில் புன்னகையை வரவழைக்கிறது. காரணம் சில நேரங்களில் எனது யூககத்திற்கும் அப்பாற்பட்டதாக  முடிவுகள் இருந்தன. "அடடா... இதைக் கவனிக்காது போனோமே எனவும்  எண்ணியதுண்டு.

கணினியின் வரவால் அம்புலிமாமா இதழ்கள் அதிகம் பேசப்படாது போனாலும், மாணவர்களின் மொழித்திறனை வளர்க்கவும்,  வாசிக்கும் பழக்கத்தினை தூண்டவும் ஆசிரியர்கள் அதனை பள்ளிப் பிள்ளைகளுக்கு பரிந்துரை செய்யலாம்.


குமுதம் அட்டைப்படங்கள் - செப்டம்பர் 2013





 நமது வலைப்பதிவிற்கு வர்ணம் கொஞ்சம் கம்மி என்போருக்காக ஆரம்பிக்கப்பட்டதே இந்த குமுதம் கவர்ஸ்... அதே நேரம், வாசிக்கும் பழக்கத்துக்கு இவை எந்த விதத்திலாவது பயனாக இருந்தால் நமக்கு மகிழ்ச்சியே...