Friday, 8 June 2012

இலக்கியம் ...

நாம் எங்கே எந்த சூழ் நிலைக்கு மாறினாலும் நம்மோடு உடன் வருவது நமது கலை, கலாச்சாரம், சடங்கு மற்றும் பண்பாடு போன்ற பூர்வீக குணங்களே.

வாழ்வியலின் பலவற்றுக்கு புதுபுது பரிமாணங்களைக் காணும் நாம் தமிழ் இலக்கியத்தில் மட்டும் இன்னும் சற்று பிந்தங்கியே இருக்கிறோம்.

திருக்குறளைச் சொல்லி விளக்குவதற்கு சிலர் இருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்னால் இருக்கும் இதிகாசங்களையும், இலக்கிய பொக்கிஷங்களையும் வெளிக்கொணற விழைவோர் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது.

புதுப்பாடல்களா பழைய பாடல்களா, மாமியாரா மருமகளா, கூட்டுக்குடும்பமா தனிக்குடித்தனமா என ஆங்காங்கே நடக்கும் பட்டி மன்றங்களும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஐயா சாலமன் பாப்பையா, லியோனி போன்றோரின் பட்டிமன்ற பேச்சாளர்கள் மிகவும் திறமைசாலிகள், நன்கு கற்றவர்கள். கொடுக்கப்படும் நேரம் கருதி குறைத்துப் பேசுகிறார்கள். அவர்களுக்கு சற்று அழுத்தமான தலைப்புகளில் இலக்கிய ரசம் சொட்ட பேச வாய்ப்பளித்தால் அவர்களின் பேச்சுத்திறமையும் மிளிரும் புதைந்து கிடக்கும் நம் இலக்கியச் செல்வங்களும் வெளிப்படும்.

"நாலாயிர திவ்ய பிரபந்தம், நாலடியார், நளவெண்பா, நான்மணிக்கடிகை,  ஐம்பெரும் காப்பியங்கள்" போன்ற தமிழின் உச்சத்தினைத் தொட்ட எழுத்தோவியங்களை பொதுமக்களுக்கு விளக்குவது நமது சமூகத்தின் அறிவுக்கண்களை திறக்க ஒரு வாய்ப்பாகும்.


வேதத்தில் வருகின்ற தர்ம விதிகளைப் புரிந்து கொள்வதற்கும் பின் பற்றுவதற்கும் சிரத்தை எடுத்து சிறு சிறு கதைகளாக, நீண்ட நெடுங்காவியங்களைப் படைத்தனர் நமது முன்னோர்.  சாதாரண மனிதர்களுக்கு விளங்கும் வண்ணம் சொல்லப்பட்ட அவைகளே புராணங்கள் எனப்படுகின்றன.


இவற்றை கசடற விளக்குவோர் பட்டியல்தான் தற்போது சுருங்கி வருகிறது.

இணையத்தில் இது போன்றவை இருந்தாலும் கற்றோர் நேரடியாக மக்களைச் சந்தித்து இந்த சேவையைச் அவர்களுக்கு செய்வது தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் அவர்கள் செய்யும் மாபெரும் திருப்பணியாகும்.

1969ல் பெட்டாலிங் ஜெயா சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் நான் பயின்ற காலத்தில், திரு சோமசுந்தரம், திரு மணியம், திரு கந்தசாமி போன்றோர் பாடங்களுக்கிடையேயும் பாடங்களுக்குப் பின்னரும் இலக்கியத்தின் சுவையான பகுதிகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வந்தது என் நினைவுக்கு வருகிறது இப்போது.

தலைமை ஆசிரியராக திரு விஜயரங்கம் பதவியேற்றிருந்த  அப்போது பள்ளியில் தமிழ்க் கல்வியின் தரம் உயர்ந்திருந்தது.

இன்றும் சில தலைமை ஆசிரியர்களோடு பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கிறது. ஆனால் இப்போது நான் தெரிந்து கொள்வது யாதெனில், பள்ளி ஆசிரியர்கள் தாங்கள் படித்துக் கொடுக்கவேண்டிய 'சிலபஸ்' பற்றியே முழு மூச்சாக எண்ணுகிறார்களே தவிர, இலக்கன இலக்கிய ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பொது வாழ்விற்கு உபயோகமானவற்றை கற்பதிலும் கற்றுத்தருவதிலும் ஆர்வம் காட்டுவதில்லை.

ஏன், பலர் தினமும் நாளிதழ்கூட வாங்குவதில்லை. இப்படி இருக்க இவர்கள் மூலம் கலை இலக்கிய சமுதாய சேவையினை எப்படி எதிர்பார்க்க முடியும்.

பாடத்தேர்வில் பிள்ளைகளை வெற்றிபெறச்செய்வதே எங்கள் இலக்கு என்கிறார்கள். அவர்கள் பேசும்போது அதிலும் ஒரு ஞாயம் இருப்பது போலவே  படுகிறது.

வாய்ப்புள்ளோரும், வசதி படைத்தோரும் நடிகர் பட்டாளத்தை இங்கே வரவழைக்கும் அதே நேரம், பண்டித பெருமக்களையும் வரவழைத்து அதற்கான செலவுகளை ஏற்று புண்ணியம் தேடிக்கொள்ளலாம்.  தமிழும் தமிழ்ச்சமூகமும்  வளர வசதியுள்ளவர்களால் நிச்சயம் முடியும்.

இதனால் மூட நம்பிக்கைகள் குறையும் சந்தர்ப்பமும் உண்டு, நமது அக்கால மூதாதையர்  உலகத்தின் முன்னோடிகளாக வாழ்ந்ததின் அத்தாட்சிகளையும் தெறிந்து கொள்ளலாம்.

Thursday, 7 June 2012

"செஸ்" . . . 1

என்னுடைய "ஆல் டைம் டொப் டென்" வரிசையில் 'செஸ்" என்னும் சதுரங்கம் விளையாட்டு நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.


என்பதாம் ஆண்டுகளில் நான் விளையாடத் தொடங்கிய போது 'கஸ்பராவ்' என்னும் ரஷிய நாட்டு விளையாட்டாளர் தனது அபாரமான ஆட்டத்தினால் உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருந்தார். அவரின் வித்தியாசமான விளையாட்டு என்னையும் கவர்ந்தது. அவரைப்பற்றி மேலும் படிக்க 'செஸ்' மேல் உள்ள மோகம் இன்னும் கூடிவிட்டது.



சிலாங்கூர் ட்ரெட்ஜிங் என்னுமிடத்தில் வேலை செய்த போது, 'செஸ்' போட்டி விளையாட்டுக்களை அங்கிருந்த இளைஞர்களுக்காக ஏற்று நடத்தினேன்.  வீணே நேரத்தை செலவிடும் இளையோருக்கு 'செஸ்' விளையாட்டு போட்டியினை அறிமுகப்படுத்தி ஒரு 'செஸ்  லீக்" விளையாட்டு கேடையத்தினையும் பரிசாக வழங்கினேன்.

சுமார் ஒரு மாத காலம் இந்த 'செஸ் லீக்' போட்டிகள் ஒவ்வொரு மாலையிலும் நடந்து பலரின் கவனத்தை ஈட்டின. பலரும் இதில் பங்கு பெற்று மகிழ்ச்சியடைந்தனர்.

எனக்கு ஆதரவாக, அன்றிருந்த சக அதிகாரிகள் பலர் பல பரிசுப் பொருட்களையும் இந்த 'செஸ் லீக்' போட்டிக்கு வழங்கினர். அவர்களுள் திரு.சோக் யாவ் சியோங், ஹியு சீ ஹொங், மன்சோர், வோங், மேத்யூ போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

'செஸ்' விளையாட்டு மூளைக்கு வலு சேர்க்கும் ஒரு விளையாட்டு.  நாம் செய்யும் எதையும்  நன்கு அலசி ஆராயும் யுக்தியை சொல்லிக்கொடுக்கும்  விளையாட்டு.  யூகங்களை வியூகங்களாக மாற்றும் வித்தைகளை சொல்லித்தரும் விளையாட்டு.

சதுரங்கம் என போர் கால விளையாட்டாக சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் ஆடப்பட்டு வந்த இவ்விளையாட்டை தங்களின் முன்னோர்கள் விளையாட்டு என சீனர்களும் சொல்லிக்கொள்கின்றனர்.

ஏழாம் அறிவில் சொல்லப்படுகின்ற மற்றவற்றைப்போல நமது சதுரங்கமும் தனது பூர்வாங்கத்தை தற்காத்துக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறது இப்போது.

ம்ம்... எது எப்படியோ...தற்போது இவ்விரு நாடுகளைக்காட்டிலும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த அதிகமானோர் 'செஸ்' விளையாடுகின்றனர்.

யூகோஸ்லாவியா,செக்கோஸ்லோவாக்கியா,இங்கிலாந்து,ஹங்கேரி, பல்கேரியா, அமெரிக்கா, ஜெர்மனி, ரஷியா போன்ற நாடுகளில் ( உடைந்து போன, துண்டுபோடப்பட்ட, சிதறுண்ட முந்தைய ரஷ்ய மாநிலங்களிலும் )  இவ்விளையாட்டை  அன்றாட பணிகளில் ஒன்றாக பலர் விளையாடுகின்றனர்.

ஆயினும் கடந்த நூறாண்டுகளில் ரஷ்யா  இவ்விளையாட்டு போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது

Wednesday, 6 June 2012

அந்தக் காலத்தில் கம்பியூட்டர் மேஜிக் கிடையாது...



இப்போது யார் வேண்டுமானாலும் அழகிய படங்களாக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எடுத்துவிட முடியும். அறிவியல் அந்த ஆற்றலை நமக்குத் தந்திருக்கிறது.
புதிய வரவுகளான விவேக கைபேசிகள் புகைப்படக் கருவிக்கு நிகராக அருமையான, அபாரமான நுணுக்கங்களுடன் புகைப்படங்களை எடுத்துத் தர ஏதுவாக உள்ளன.
ஆனால், எழுபதுகளிலும், எண்பதுகளிலும், புகைப்படங்கள் எடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. செலவுகள் அதிகம். கேமெரா வைத்திருப்பவர் மேல் தனி ஒரு பாசம் வந்துவிடும். அந்த மதிப்பும் மரியாதையும் எங்கோ போய்விட்டது இப்போது. படமெடுப்பது அவ்வளவு சாதாரண நிலைக்கு வந்துவிட்டதே காரணம்.
1978 ல் பொழுது போக்காக நான் 'இரட்டை வேட' படங்களை எடுக்கத் தொடங்கி, எண்பதுகளின் மத்தியில் பிரத்தியேக படங்களாக பலருக்கும் எடுத்துத் தர ஆரம்பித்து விட்டேன்.
அப்போது கணினி கிடையாது. கம்பியூட்டர் மேஜிக் கிடையாது....எனவே எடிட்டிங் வேலைகளை கேமெராவிலேயே செய்திட வேண்டும். இரண்டாக எடுத்த படங்களை பிரிண்ட் போட்டு, வெட்டி, ஒட்டி மீண்டும் படமெடுத்து, தவறுகள் தெரியாவண்ணம் தயாரித்தளிக்க வேண்டும்.
இங்கே பதிவிட்டிருப்பது அப்படி 1984 ல் ( என நினைக்கிறேன் ) எடுத்த படம். சிலாங்கூர் டிரெட்ஜிங் எனும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்த போது, என்னுடன் இருந்த மலாய் நண்பருக்கு எடுத்துத் தந்த படம் இது.
அன்றைய நண்பர்கள் பலரும் இது போன்ற தங்களின் படங்களை பத்திர படுத்தி வைத்திருக்கின்றனர். சினிமாவில் வருவது போல தங்களின் 'டபுள்ஸ்'களை போட்டோக்களில் பார்த்து வியக்காதவர் இல்லை.
1990 களில் வந்த கணினி, எனது வேலையை எவ்வளவோ குறைத்து விட்டது. இப்போது இப்படி ஒரு டபுள்ஸ் உருவாக்க வெறும் இரண்டு நிமிடங்கள் போதும். (அன்று இதற்காக நான் எடுத்துக் கொண்டது, சுமார் மூன்றிலிருந்து 4 மணி நேரங்கள்.)

மாற்றங்கள், ஒண்ணா ரெண்டா....




அறுபதுகளில் நாம் கண்ட தமிழர்களுக்கும் இன்றிருப்போருக்கும் நிறைய மாறுதல்கள், அதிலும் நல்ல மாறுதல்கள்.
மூலைக்கு மூலை எழுதப் படிக்கத்தெரிந்தோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது . கோயில் குளங்களில் பக்தர்கள் கூட்டம் படையெடுக்கத் தொடங்கிவிட்டது. முன்பு போல குருவெல்லாம் கடவுள் என்பது மாறி, அறிவு சார்ந்த வழிகளில் கடவுளுக்கான கடமைகளை நிறைவேற்றுகிறோம். நல்ல முன்னேற்றமே.
மாத வருமானத்தைமட்டுமே நம்பிக் கொண்டு இல்லாமல் இப்போது அனைத்துலக ரீதியில் நாம் வாணிபத்தில் பொருளீட்டுவது அதிகரித்துவிட்டது. உதாரணத்துக்கு, முகநூலில் வியாபாரம் தொடங்க எந்தவொரு தடங்கலும் இல்லை இன்று. சுதந்திரமாக தொழிலை தொடர இது ஏதுவாகிறது.
வெறுமனே வாழாமல் ஒருவிதப் பிடிப்புடன் நாம் வாழ்கிறோம் இப்போது. கல்வி, பொருளாதார, சமைய நுணுக்கங்கள் நமக்கு விளங்கத் தொடங்கிவிட்டன. அல்லது, குறைந்தது அவற்றை கற்றுணர ஆர்வம் காட்டுகிறோம்.
இது இன்னும் பல மடங்கு பெருகவேண்டும். அப்போதுதான் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஈடுகொடுத்து நாமும் நமது அன்பான குடும்பத்தினரோடு சரிசமமாக நடைபோட முடியும்.


பிறவிகள். . .

முன் ஜென்மம் இல்லையென்பதற்கு யாரும் ஆதாரம் தரமுடியாத நிலையில் அது இருப்பதாகத்தான் கொள்ள வேண்டி இருக்கிறது.

 "புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி
 பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி
 கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
 வல்லசுரராகி முனிவராய் தேவராய்
 செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
 எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன்!"

என சிவபுராணத்தில் படித்ததை வைத்துப்பார்த்தால் முன் பிறவி இருப்பது மனதில் படுகிறது.

 நமது வேத நூல் கற்றரிந்த ஞானிகள் நாம் அனுபவிக்கும் நன்மை தீமைகளுக்கு நமது பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களே காரணம் என்கிறார்கள்.

அதிலிருந்து இப்பிறவியில் நாம் நன்மைகளை மட்டுமே செய்யவேண்டியதன் அவசியம் தெரிகிறது. இப்போது நாம் செய்யும் நல்வினைகளுக்கு பலன் அடுத்த பிறவியில் தெரியும் என்கிறார்கள்.

முன் பிறவிக்கடனை தீர்க்க முடியாததால்தான் மேலும் மேலும் பிறவிகளை இறைவன் கொடுக்கிறார்.  அதாவது இப்பிறவியில் பழைய கணக்கு வழக்குகளை முடிக்க ஆயுட்காலம் போதாதனால் மீண்டும் ஒரு ஜென்மம் தேவைப்படுகிறதாம், மத நூல்கள் சொல்கின்றன.

"யாரும் உடனே தன் தீய குணங்களையும் செயல்களையும் நிறுத்திக் கொள்வதில்லை.எனவே அவர்கள் மெல்ல மெல்ல உணர்ந்து திருந்தும் வரை பிறவிகள் தொடரும்.." என்கிறார் மயிலாடுதுறை ஏ. வீ. சுவாமினாத சிவாச்சாரியார்.

Sunday, 3 June 2012

எண்ணங்கள் ஆயிரம்... மனம்

வாழ்க்கை ஒரு விபத்து என்று சிலர் சொல்வார்கள்.  பல சந்தர்ப்பங்களில் நடக்கும் நிகழ்வுகளை எண்ணுகையில் எதுவும் நாம் எதிர்பார்த்து நடப்பதாக தோன்றாததும் இதற்கு ஒரு காரணம்.

பலரையும் நாம் ஒரு விபத்தைப்போன்றே  சந்திக்கிறோம். நமது நல்ல நண்பர்களும் இப்படியே அமைகிறார்கள் சில நேரங்களில்.

 'வாகனங்களால் மோதித்தள்ளப்படுவது மட்டுமல்ல விபத்தென்பது. வழக்கத்துக்கு மாறாக ஒரு சம்பவம் நடந்தால், அதுவும் ஒரு வகையில் விபத்தே'.

இதற்கு நேர்மாறாக சொல்வோரும் நம்மிடையே உண்டு.  ' நடக்கிற எல்லா காரியங்களுக்கும் ஒரு காரணம் நிச்சயம் உண்டு' என்கின்றனர்.

'எதுவும் தற்செயலாக நடப்பதில்லை. எல்லாம் ஏற்கனவே திட்டமிடப் பட்டுவிட்ட ஒன்றே' என்பது இவர்கள் வாதம்.

'உதிக்கும் போது விதிக்கப்பட்டது' என்று இவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். அதாவது பிறக்கும்போதே நம் தலையில் எழுதப்பட்டுவிட்ட ஒன்று என இதற்கு அர்த்தம்.

இதில் எது சரியானது,  எது  உண்மையானது எனத் தெரியாவிட்டாலும், ஒன்று மட்டும் நமக்கு விளங்குகிறது.

எந்த ஒரு சம்பவமும் நமது மனோ நிலைக்கேற்பத்தான் கணிக்கப்படுகிறது.  சிலருக்கு இனிமையாகவும் சிலருக்கு கசப்பாகவும் அமைய அவர்களின் மனமே காரணமாகிறது. ஆக மனதே நடக்கின்ற அனைத்தையும் விகிதாச்சாரப்படி நல்லவைகளாகவும் தீயவைகளாகவும் மாற்றியமைத்துக்கொள்கிறது.

விதியையும் விபத்தையும் நம் கட்டுப்படுக்குள் கொண்டுவர இயலாவிட்டாலும் நம் மனதை எவ்வித உச்சத்திற்கும் போகாமல் ஒரே வித சமச்சீர் நிலையில் வைத்துக்கொள்ள, " நடக்கும் அனைத்தும் நன்மைக்கே " என தூர நோக்குப்பார்வையில் பயிற்ச்சிக் கொடுக்கலாம்.