இனி தீபத்திற்கான எண்ணையைப் பார்ப்போம்.
இல்லங்களிலும், கோவில்களிலும் தீபம் ஏற்றுவதில் எண்ணை முக்கிய பங்கு வகிக்கின்றது, காரணம் நமது பூஜை, வேண்டுதல்கள் போன்றவற்றை குறிப்பிட்ட தெய்வங்கள், தேவதைகள், எல்லா அதிதேவதைகள் மற்றும் கிரகங்களுக்கு கொண்டு செல்லும் ( அந்த அந்த கதிர்வீச்சுகளோடு சேர்ப்பிக்கும்) உன்னதமான பணியை நாம் ஏற்றும் தீப சுடரின் அதிர்வுகளே செய்கின்றன.
தற்போது சில இல்லங்களிலும், கோவில்களிலும் பயன்பாட்டில் உள்ள சில எண்ணெய்களை பார்ப்போம்.
தற்போது எங்கும் விற்பனை செய்யப்படும் தீபஎண்ணை எனும் எண்ணை.
இதில் மூன்று எண்ணெய்களை கலந்து தீபத்திற்கென்றே தயாரானதாக சொல்கிறார்கள்.
உண்மையில் மூன்று வித எண்ணைகள், ஐந்து வித எண்ணைகள் போற்றவற்றை கலந்து வீடுகளில் அல்லது கோவில்களில் விளக்கேற்றுவது ஆகாது.
ஏனென்றல் அவ்விதமான கலப்பு எண்ணையை மாந்த்ரீக வேலைகள் செய்யும் போதும் , சில அமானுஷ்ய சக்திகளை பெறும் நோக்கிலும் பூஜையில் ஈடுபடுவோர் தங்களது பூஜைக்கு மேற்கண்ட கலப்பில் உள்ள எண்ணெய்களை விளக்கிற்கு பயன்படுத்துவர்.
நாம் இவ்வகை எண்ணெய்களை விளக்கேற்றி வணங்கினால் துஷ்ட தேவதைகள், ஆவிகள், அமானுஷ்யமான சில உருவங்கள் உடனே வந்து விடும், ஆனால் நமக்கு இவைகளில் பழக்கமில்லாததால் , அவைகள் வந்ததே தெரியாமல் நாம் நமது பூஜையை முடித்துக்கொண்டு எழுந்துவிடுவோம்,
ஆனால் அந்த குறிப்பிட்ட தேவதைகளோ,ஆவியோ,அமானுஷ்யமோ வந்திருந்தும் நாம் அதனை (அறியாத காரணத்தினால்) வரவேற்கவில்லை , அதற்கான நைவேத்யம் படைக்கவில்லை என நம்மீது கோபமாகி விடும்.
அதனால் நல்லநாள் , ஒரு பண்டிகை போல மற்ற எந்த விசேஷ காலமானாலும் அதனை சந்தோஷமாக கொண்டாட முடியாது. மேலும் விசேஷ நாளில் சண்டைகள் வந்து, நம்மால் அந்தநாளின் பெரும்பகுதி நிம்மதியற்று விடும். மேலும் நிறைய பொருட்கள் நல்லநாட்களில் உடைவதும், கிழிபடுவதும் நடைபெறுவது வாடிக்கையாகி விடும். இதனால் ஸ்வாமி கும்பிடவே பயமாக இருக்கும்.
ஏனென்றால் ஸ்வாமி கும்பிடும் அன்று ஏதாவது ஒரு பிரச்சினை வந்தே தீருமே.
ஆனால் மேற்படி நபர்கள் அந்த தேவதையோ , ஆவியோ, அமானுஷ்யமோ வந்தவுடன் அதற்குண்டான நைவேத்யம் இரத்தமோ, இறைச்சியோ ஏதோ ஒன்றினை அதற்கு உடனே தந்து விடுவதால் அவர்களுக்குண்டான தேவையை பூர்த்தி செய்யும்.
நமக்கு அது வந்ததே தெரியாது, அப்புறம் எங்கே அதற்கு படைப்பது?
ஆகையால் , அந்த தீப எண்ணை என்று விற்கப்படும், கலப்பு எண்ணையை வீட்டிலும், கோவில்களிலும் இல்லறவாசிகள் பயன்படுத்தலாகாது.
சரி எந்த எண்ணையைத்தான் விளக்கேற்ற பயன்படுத்தலாம்?
இல்லங்களிலும் கோவில்களிலும் விளக்கேற்று வதற்கு உரிய எண்ணைகள் மூன்று .
1. முதல் தரமானது , நெய் , இது நித்ய வழிபாட்டிற்கும், கோவில்களில் பூஜைக்கும் மிகவும் உகந்ததாகும் , எளிதில் நமது கோரிக்கைகளை குறிப்பிட்ட இடத்தில் மிக வேகமாக கொண்டு சேர்க்கவல்லது.
2. இரண்டாவது தேங்காய்எண்ணை, இதுவும் நித்ய வழிபாட்டிற்கும், கோவில்களில் பூஜைக்கும் மிகவும் உகந்ததாகும் , எளிதில் நமது கோரிக்கைகளை குறிப்பிட்ட இடத்தில் வேகமாக கொண்டு சேர்க்கவல்லது.
3. மூன்றாவதாக நல்லெண்ணெய், இதுவும் நித்ய வழிபாட்டிற்கும், கோவில்களில் பூஜைக்கும் மிகவும் உகந்ததாகும் , எளிதில் நமது கோரிக்கைகளை குறிப்பிட்ட இடத்தில் மிதமான வேகத்தில் கொண்டு சேர்க்கவல்லது.
எல்லா இல்லங்களிலும், கோவில்களிலும், எந்தவிதமான விழாக்களுக்கும், எந்த விதமான சூழலுக்கும் விளக்கேற்றி பூஜிக்க தகுந்த எண்ணைகள் மேலே சொல்லப்பட்ட மூன்று எண்ணைகள்தான் உகந்தவை.
இவைகளையும் (நெய்யை,தேங்காய்எண்ணையை,நல்லெண்ணையை)
தனித் தனியாகத்தான் உபயோகிக்கவேண்டும், கலந்து உபயோகிக்கக் கூடாது.
தனித் தனியாகத்தான் உபயோகிக்கவேண்டும், கலந்து உபயோகிக்கக் கூடாது.
இப்போது எலுமிச்சம்பழத்தில் தீபம் நல்லதா? ஏற்றலாமா? பார்க்கலாம்.
கனிகளில் ராஜகனி என்று போற்றப்படுகிறது எலுமிச்சம்பழம்.
மதிப்புக்குரியவர்களை காணும்போது அவர்கள் கைகளில் எலுமிச்சம்கனியை அளிப்பது இன்றும் வழக்கில் உள்ள செயலாகும்.
இறைவியான துர்க்கைக்கு நிகரானதாக கருதப்படும் எலுமிச்சம்பழம் , தனது பிஞ்சு, காய், பழம், ஊறுகாய் போன்ற எல்லா நிலைகளிலும் தனது புளிப்புத்தன்மையை மாற்றிக் கொள்ளாதது. (இறைவனும் எந்த நிலையிலும் தன் இறைத்தன்மை மாறாதவன்).
இப்படி எல்லா வகையிலும் உயர்ந்த கனியை ஸ்ரீஸ்ரீ துர்க்கைக்கு முன்பாகவே வைத்து இருதுண்டாக்கி , அதனை பிதுக்கி திருப்பி அதில் எண்ணையை ஊற்றி விளக்கேற்றினால் அதனால் நிச்சயமாக எந்த நற்ப் பலனும் ஏற்படாது. மேலும் தீய பலன்கள் நடைபெறத்தான் வழியுள்ளது.
ஏதோ விபரமறியாத சில ஜோதிடர்கள் சொன்ன வார்த்தையை கேட்டு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி அதனால் அவர்களுக்கே தெரியாமல் மேலும் மேலும் துன்பங்களை அடைகிறார்கள். இந்த காரியத்தினால்தான் நாம் துன்பம் அடைகிறோம் என அறியாமல் மக்கள், “ நானும் துர்க்கைக்கு வாராவாரம் விளக்கெல்லாம் வைத்தேன் , ஆனால் ஒரு பயனும் இல்லை “ என சலித்துக் கொள்வார்கள் .
அதுமட்டுமல்ல எலுமிச்சம்பழ விளக்கினால் கர்ப்பப்பையில் கோளாறுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன , அதிலுள்ள சிட்ரிட் எனும் அமிலம் நமது சுவாசத்தில் கலந்து உள்சென்று தீங்கினை செய்கின்றது.
அதாவது ஒருவர் வைத்து விட்டுப் போன எலுமிச்சம்பழ விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது மற்றொருவர் தனக்காக சில எலுமிச்சம்பழ விளக்குகளை ஏற்றுவார் அல்லவா? அப்போது இவருக்கு முன்னர் ஏற்றப்பட்ட விளக்கிலிருந்து எலுமிச்சம்பழத்தின் ஓரங்கள் கருகி எரியும் போது அதிலிருந்து வெளிப்படும் சிட்ரிட் அமிலப் புகையானது நமது உள்சென்று கர்ப்பப்பையினை அரித்து குழந்தையினை தாங்கும் வலிமையை இழந்து விடுவதாகவும் அதனால் புத்திரபாக்கியமே கிடைக்காது எனவும் தெரிவிக்கின்றார்கள் ஆய்வாளர்கள்.
அப்படியென்றால் எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றக்கூடாதா ? என்றால் ஏற்றலாம்.
ஆனால் , சாஸ்திரம் என்ன சொல்கிறது என்றால்...
எலுமிச்சை மரத்தில் எப்போதாவது ஒருமுறை எலுமிச்சம்பழம் மேல் நோக்கியவாறு காய்க்குமாம், (எல்லா பழங்களும் கீழ்நோக்கி நிற்க ஒன்றுமட்டும் மேல்நோக்கி இயற்கையை எதிர்த்து நிற்பதால்) அந்த பழம் பாதிஅளவு மஞ்சளும், பாதியளவு பச்சையுமாக கனிந்துவரும் போது ஒரு வெள்ளிக்கிழமை காலையில் முதல்ஓரையான சுக்கிர ஓரையில் ஆயுதமின்றி விரல்களால் கிள்ளி எடுத்து , அதனை ஒரு சிகப்பு கலர் பட்டுத்துணியின் உள்வைத்து , இரண்டு கைகளாலும் அப்படியே அந்த பழத்தை கசக்கி வேண்டும். அதிலிருந்து கொஞ்சமும் நீர் வெளியாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் அந்த பழத்தினை விரல் நகத்தினால் இரண்டாக கிழித்து அந்த சாற்றினை அந்த பட்டுத் துணியிலேயே பிழிந்து அந்ததுணியை ஸ்ரீஸ்ரீ துர்க்கையின் பாதங்களில் சார்த்தி , பின் அந்த எலுமிச்சம்பழத்தை பிதுக்கி திருப்பாமல் அப்படியே வைத்து விளக்கேற்ற வேண்டும்.
இப்படி விளக்கேற்ற முடியுமானால் யார் வேண்டுமானாலும் எலுமிச்சம்பழ விளக்கேற்றுங்கள்.
இறைவன், இறைவி உலக மக்களின் நன்மையை கருதி தரும் எல்லாமே கீழ்நோக்கியே இருக்கும், நாம் கையேந்தி வாங்குவதாக அமையும் , ஆனால் இயற்கையை மீறி இறைவனை எதிர்த்து மேல் நோக்கி இருக்கும் அந்த எலுமிச்சம்கனியை அன்னை தனக்கே தீபமேற்ற பணிக்கிறாள் , அதை விடுத்து அவள் நமது நன்மைக்காக தந்த பரிசினை அவள் எதிரிலேயே கசக்கி பிழிந்து எரியூட்டினால் நன்மை விளையுமா ? தீமை விளையுமா?
விளகேற்றுவதால் நன்மையும் , எலுமிச்சம் கனியில் ஏற்றியதால் துயரமும் உருவாகும்
- திருச்சி லால்குடி., ஸ்ரீ சப்தரீஸ்வரர் கோவில்
.
No comments:
Post a Comment