Sunday, 4 September 2016

தாய்மொழிக்கு நிகரில்லை. ஆனாலும் ஆங்கிலம்...


நம்ம மொழிக்கு நிகர் நம்ம மொழிதான், அதற்கு ஈடான வேறொரு மொழி இல்லை. இது நாம் அனைவரும் ஏற்றுக் கொண்ட வாதங்களுக்கும்,, விவாதங்களுக்கும் அப்பாற்பட்ட உண்மை. 

ஆனாலும், நமது அரசாங்கம் ஏற்று நடத்தும் மன வள மேம்பாட்டு திட்டங்களில் வலியுறுத்தப் படும் முக்கிய கருத்து, நமது தாய்மொழிக்கடுத்து ஆங்கிலமும் முக்கியம் என்பதே. 

உலகளவிலான தொழில் நுணுக்கத்திலும் புத்தாக்கத் திறனிலும் நாம் மற்ற நாட்டினரோடு கலந்துறவாட ஆங்கிலம் இன்றியமையாத ஒன்றாகும். அதில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருப்போர் வெற்றிகளில் மிதக்கிறார்கள். இது ஒரு சிலருக்கே தெரிந்த, பலருக்கும் தெரியாத, பலராலும் அலட்சியம் செய்யப் படும் ஒரு உண்மை.

நம் நாட்டைப் பொறுத்தவரை, எழுபதுகளில் இருந்த ஆங்கில தரம், தற்போது இல்லை என பெரும்பாலோரின் கருத்தாக இருக்கிறது. இதற்கு நமதரசின், அவ்வப்போதான கல்விக் கொள்கையின் மாற்றங்களும் காரணமாக இருந்து வந்திருக்கிறது.

இடைநிலைப் பள்ளிகளின் போதனா மொழியாக இருந்த ஆங்கிலம் பின்பு மலாய் மொழிக்கு மாற்றம் கண்டபின் ஆங்கிலத்தின் சரிவு தொடங்கி விட்டது எனச் சொன்னால் அது மிகையாகாது.

19777 ம் ஆண்டு ஐந்தாம் படிவ தேர்வு மலாய் மொழியில் இருந்ததை நினைப்படுத்திப் பார்க்கிறேன். அப்போதே தொடங்கிவிட்டது ஆங்கில மொழியினை புறம் தள்ளும் நடவடிக்கைகள். காரணம், அதனைத் தொடர்ந்து வந்த அனைத்திலும் மலாய் மொழி முக்கிய இடத்தினை ஆக்கிரமிக்க, ஆங்கிலம் ஓரங்ககட்டப் பட்டது.

எனவே, இன்று நமது பட்டதாரிகள் ஆங்கிலத்தில் திறன் குன்றி இருக்கிறார்கள் என புலம்பும் அரசு அதிகாரிகள், அன்று பயிற்று மொழியாய் இருந்த ஆங்கிலத்தை மாற்றியது தான் காரணம் என்பதை ஏற்றுக் கொண்டால் சரிதான்.

இதனை வலியுறுத்திக் கூற மற்றொரு காரணமும் உண்டு. கல்விக் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், மாணவர்களை மட்டும் பாதிக்கவில்லை, ஆசிரியர்களையும் பெருமளவில் பாதித்து விட்டது. சான்றிதழ்கள் வைத்திருந்த, ஆங்கிலத்தில் சரளமில்லா ஆசிரியர்கள் கிராமங்களுக்கும், தோட்டப்புறங்களுக்கும் ஆங்கில போதகர்களாக பணியில் அமர்த்தப் பட, ஆங்கிலம் "கொட்டாவி'' விட ஆரம்பித்து விட்டது. தரமில்லாத ஆசிரியர்களிடமிருந்து தரமான மாணவர்கள் எங்கனம் வெளித்தெரிவார்கள்.

நமது தேசிய மொழி, மலாய். அதன் பயன்பாட்டை நாம் ஆதரிப்பது அவசியம். அதே வேளையில் அனைத்துலக வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு ஆங்கிலத்தின் தேவையையும் நாம் உணர்ந்திருக்க வேண்டும்.

பிறந்த குழந்தையின் சிந்தனை விரிவாக்கம் தாய்மொழியில் தொடங்குகிறது என்கிறார்கள். அது பிரத்தியேகமாக பளிச்சிடுவதற்கு பிற மொழிகளுக்கும் பங்குண்டு... அதிலும் ஆங்கிலம் உலக மொழி என்பதனால், அதனை வலியுறுத்துகிறோம் நாம்.

No comments:

Post a Comment