படித்ததில் பிடித்தது....
– டாக்டர் எஸ்.ஏ.பி. ஜவஹர் பழனியப்பன்
-------------------------------------------------------
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் டிசம்பர் 12!
பத்திரிகை உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யின் பிறந்த நாளும் டிசம்பர் 12.
எஸ்.ஏ.பி. குமுதம் பத்திரிகையை நவம்பர் 1947ல் துவக்கினார். முதல் இதழ் 2000 பிரதிகள் விற்றது. அவர், அடுத்த 47 ஆண்டுகளுக்கு அதன் ஆசிரியராக இருந்து பத்திரிகைத் துறையில் பல வெற்றிகளைக் கண்டார். விற்பனையை ஆறு லட்சத்துக்கு மேல் கொண்டு சென்றார்.
எஸ்.ஏ.பி. அப்போதுதான் எம்.ஏ. முடித்து பி.எல். சட்டப் படிப்பும் பாஸ் செய்திருந்தார். அவர் அத்தனை புத்தகங்களிலும் படித்து ஆசைப்பட்டு பல நாட்கள் திட்டமிட்டு வைத்திருந்த கனவு நனவாகவிருந்தது. அந்தக் கனவு, ஒரு மாதத்தில் ஆறு ஐரோப்பிய நகரங்களைச் சுற்றிப் பார்ப்பது.
எல்லா விசாக்களும் வாங்கியாகிவிட்டது. இன்னும் ஒரே ஒரு விசாதான் பாக்கி. அதைப் பெறுவதற்காகக் கான்சல் அலுவலகத்துக்குச் சென்றிருந்தார். இரண்டு வாரத்தில் புறப்பட வேண்டியிருந்ததால் எல்லா ஏற்பாடுகளையும் முடித்துவிட விரும்பினார்.
விசா அலுவலகத்திலிருந்த வயதான அதிகாரி எஸ்.ஏ.பி.யின் விண்ணப்பத்தைப் பரிசீலித்தார். எல்லாம் இருந்தது. அவர் எஸ்.ஏ.பி.யை ஒரு மாதிரியாகப் பார்த்தார். எஸ்.ஏ.பி.க்கு அப்போது 24 வயது. அவருக்கு அதிகாரி ஏன் அப்படிப் பார்க்கிறார் என்பது முதலில் விளங்கவில்லை. ஒரு மாதிரி ஏக்கமான சோகமான பார்வை அது. அல்லது பொறாமையா?
–
‘‘எத்தனையோ பேர் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புகிறார்கள். எனக்கும் போக ஆசைதான். ஆனால் என்னிடம் அத்தனை பணம் இல்லை. ஆனால் நீ? இத்தனை இளவயதில் உன்னால் செல்ல முடிகிறது. இந்தா உன் விசா. சென்று வாரும்.”
எஸ்.ஏ.பி. வீட்டுக்கு வந்ததும் சற்று படபடப்பாக இருந்தார். அவருக்கு அந்த தினத்தின் சம்பவங்கள் ஒரு சங்கடமான வினோதமான உணர்ச்சியை ஏற்படுத்தின.
ஒரு சக மனிதனின் பொறாமைக்கு உள்ளாகிவிட்டோம். அந்த இள வயதில்கூட எப்போதும் வெள்ளைக் கதராடை உடுத்திக் கையில் வாட்சுகூட கட்டுவதில்லை. இருந்தும் மற்றொரு மனிதனின் பொறாமைக்குள்ளாகிவிட்டோம் என்ற எண்ணம் அவருக்கு ஏற்கவில்லை. மறு தினம் தீர்மானித்துவிட்டார். தன் பயணத்தை ரத்து செய்துவிட்டார். யாராலும் அவருடைய முடிவை மாற்ற முடியவில்லை.
எஸ்.ஏ.பி.யின் வாழ்வில் இதுபோன்ற எளிமை போதிக்கும் நிகழ்ச்சிகள் ஏராளம்!
(டாக்டர் எஸ்.ஏ.பி. ஜவஹர் பழனியப்பன் எழுதிய ‘தூய்மைக்கு ஒரு வடிவம் எஸ்.ஏ.பி.’ புத்தகத்திலிருந்து…)
No comments:
Post a Comment