படித்ததில் பிடித்தது...
100 ஆண்டு தமிழ் சினிமா
http://mpmathivanan.blogspot.my/2013/01/100-2.html
-----------------------------------------
இளையராஜா
1976 ஆம் ஆண்டில் 'அன்னக்கிளி' திரைப் படத்தில் இசையமைப்பாளராகிய ராசையா என்ற இளையராஜா மண் மணக்கும் கிராமத்து இசையை அறிமுகப்படுத்தி திரைப்பட ரசிகர்களை தன வயப்படுத்தினார். பின்னாட் களில் நவீன மற்றும் சாஸ்திரிய இசையிலும் வியத்தகு வித்தைகள் புரிந்து 'மாஸ்ட்ரோ'வாக இன்றளவிலும் அதே சிறப்பான இடத்தில் அமர்ந்திருக்கிறார்.
சங்கர் -கணேஷ்,வி.குமார்,கங்கை அமரன்,சந்திரபோஸ் ஆகிய இசையமைப்பாளர்களின் பங்களிப்பும் சீர்காழி கோவிந்த ராஜன்,ஜேசுதாஸ்,மலேசியா வாசுதேவன்,டி.கே.கலா போன்ற பாடகர்களின் செல்வாக்கும் குறிப்பிடத் தக்கதாக இருந்தது.
கே.பாலச்சந்தரைத் தொடர்ந்து 1977ல் '16 வயதினிலே' படம் மூலமாக தமிழ்த் திரையுலகத்துக்கு வந்த தெற்கத்தி மண்ணின் கலைஞன் பாரதிராஜா தென் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வியல் கலாசாரத்தை வண்ணத் திரைப் படமாக்கிப் படைத்து பெரும் புரட்சியைத் தோற்றுவித்தார்.
16 வயதினிலேயின் கதையமைப்பும் அதில் கமல் ஏற்று நடித்த வித்தியாசமான கதாபாத்திரமும் ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியது.
பாரதிராஜாவும் சிவாஜியும் இணைந்து உருவான 'முதல் மரியாதை' உலகத் திரைப்பட வரிசையில் இடம் பெற்றது. பாரதியின் சீடன் பாக்கியராஜ் புத்திசாலித்தனமான திரைக் கதையாலும் சாதுர்யமான வசனங்களாலும் தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றார்.
மகேந்திரன்
1978 ஆம் ஆண்டில் வெளிவந்த 'முள்ளும் மலரும்' திரைப்படம் மகேந்திரன் என்ற மகத்தான படைப்பாளியை உலகுக்குத் தந்தது.மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்', 'நண்டு'போன்ற படங்கள் மனித உணர்வுகளை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தி பார்வையாளருக்கு புதிய திரை அனுபவங்களைத் தந்தன.
1979 ஆம் ஆண்டில் 'அழியாத கோலங்கள்' படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகத்துக்கு அறிமுகமான பாலு மகேந்திரா 'மூடுபனி',மூன்றாம் பிறை','வீடு', சந்தியா ராகம்' போன்ற திரைக் காவியங்களால் சினிமாவின் முப்பரிமாணங்களை வெளிப் படுத்தி அழியாப் புகழ் பெற்றார்.
.'தூரத்து இடிமுழக்கம்' திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் நுழைந்த கருப்பு நிற இளைஞர் ஒருவர் சினிமாவின் நிறக் கொள்கைகளைத் தகர்த்தெறிந்து வெற்றிக் கதாநாயகனாக வலம் வந்தார்.மக்கள் ஆதரவோடு அரசியலில் ஈடுபட்டு தற்போது தமிழ்நாடு சட்டசபை எதிக்கட்சித் தலைவராக இருக்கின்ற விஜயகாந்த்தான் அவர்.
'இது ஒரு பொன்மாலைப் பொழுது' என்னும் கவித்துவமான வரிகளோடு 1980ஆம் ஆண்டில் ஒரு கரிசல் காட்டிலிருந்து தமிழ்த் திரைக்கு வருகை தந்த வைரமுத்து ஏறத்தாழ 5800 பாடல்களை எழுதி இந்தியாவிலேயே முதல்வராக ஆறு தேசிய விருதுகளைப் பெற்று 'கவிப்பேரரசு'வாகத் திகழ்கிறார்.'
1981 ஆம் ஆண்டில் வெளியான பாரதிராஜாவின் ;அலைகள் ஓய்வதில்லை' ஆழமான காதல் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியது.அந்தப் படத்தில் அறிமுகமான கார்த்திக் பின் வந்த காலத்தில் உணர்வு பூர்வமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து நவரச நாயகனானார்.
ஸ்டுடியோ வட்டாரத்துக்குள் சுற்றிக்கொண்டிருந்த தமிழ் சினிமா பாரதிராஜாவின் வரவிற்குப் பிறகு கிராமங்களை நோக்கிப் பயணப்பட்டது.பொள்ளாச்சியும் திருநெல்வேலியும் தேனியும் வெளிப்புறப் படப்பிடிப்புக் களங்களாகின.
இந்தக் காலக்கட்டத்தில் விஜயகுமார், சத்யராஜ், மோகன், பிரபு,முரளி, அர்ஜுன், சரத்குமார்,நிழல்கள் ரவி போன்ற கதா நாயகர்களும் சுஜாதா, ரேவதி, சரிதா, குஷ்பு, அம்பிகா, ராதா, கவுதமி சில்க் ஸ்மிதா போன்ற கதாநாயகிகளும் எஸ்.வி.சேகர், சுருளிராஜன் ஆகிய நகைச்சுவை நடிகர்களும் புகழ் பெற்றுத் திகழ்ந்தார்கள்.
1982 ல் ஹரிஹரன் இயக்கிய 'ஏழாவது மனிதன் ' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான ரகுவரன் தனது தனித்துவமான உடல்மொழியாலும் வசன உச்சரிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்து பல மொழிப் படங்களில் நடித்து அண்மையில் இயற்கை எய்தினார்.
1983 ஆம் ஆண்டில் சாலையில் தான் கண்ட ஒரு பள்ளி மாணவியை தன படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார் பாரதிராஜா.அவரது தேர்வு வீண் போகவில்லை.ஆஷா என்ற அந்தப் பெண் ரேவதியாக 'மண்வாசனை'யில் அறிமுகமாகி சிறந்த நடிப்பால் தமிழ்த் திரையுலகில் தனியிடத்தைப் பிடித்தார்.சினிமாவில் முதிர்ந்த அனுபவத்தோடு தற்போது இயக்குனராகவும் பரிணமித்திருக்கிறார்.
மணிரத்னம் ,எஸ்.ஏ .சந்திரசேகர், மணிவண்ணன், ஆர்.சுந்தர ராஜன்,ஆர்.கே.செல்வமணி,விக்ரமன்,டி .ராஜேந்தர்,மனோபாலா, பாசில்,எஸ்.பி.முத்துராமன்,பி.வாசு, விசு, ஆர்.வி.உதயகுமார், கே.எஸ்.ரவிகுமார்,ஷங்கர் ஆகிய திறமையாளர்கள் 80 மற்றும் 90 ஆம் வருடங்களில் தமிழ்த் திரையுலகில் கோலோச்சி சிறந்த படங்களை இயக்கினார்கள்.
1985 ல் வெளியான 'கன்னிராசி' வெற்றிபெற்று பாண்டிய ராஜன்'என்ற திறமைசாலியைத் தமிழ்த் திரைக்குத் தந்தது. பாண்டியராஜன் கதாநாயகனாகவும் வெற்றி பெற்று சிறந்த இயக்குனர்-நடிகராகத் திகழ்ந்தார்.
1986 ஆம் ஆண்டில் 'ஊமைவிழிகள்' படத்தின் மூலமாக நிகழ்ந்த அரவிந்தராஜ், ஆபாவாணன் போன்ற திரைப்படக் கல்லூரி மாணவர்களின் பிரவேசம் தொழிநுட்ப ரீதியாக ரசிகர்களிடையே பிரமிப்பையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது.
'மவுனராகம் ','நாயகன்','அக்னி நட்சத்திரம்' ,'அஞ்சலி' ,தளபதி', 'ரோஜா',போன்ற மணிரத்னத்தின் படங்களும் 'ஜென்டில்மேன்', 'காதலன்',''இந்தியன்',ஜீன்ஸ்','முதல்வன்' போன்ற ஷங்கரின் படங்களும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு ஆங்கிலப் படங் களுக்கு இணையான பிரம்மாண்டத்தைக் காட்சிப்படுத்தி பிரமிப்பை ஏற்படுத்தின.
1987 ல் வெளியான மணிரத்னத்தின் 'நாயகன்' கமலஹாசனுக்கு தேசிய விருதினைப் பெற்றுத் தந்தது.இந்தப் படத்தில் ஒரு சிறப்பான பாத்திரத்தை ஏற்றிருந்த பீரங்கி மூக்கு நாசர் அனைவராலும் கவனிக்கப்பட்டு சிறப்பான எதிகாலத்தைப் பெற்றார்.
தமிழ்நாடு,இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் ஆகிய இடங்களை மட்டுமே கொண்டிருந்த தமிழ் சினிமாவின் வர்த்தகத் தொடர்பு இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களால் இங்கி லாந்து,அமேரிக்கா, கனடா நார்வே என உலக அளவில் விரிவடைந்தது.
'மவுனராகம்' படத்தின் மூலமாக அறிமுகமான பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் முப்பரிமான வித்தைகள் புரிந்தார்,அது மட்டுமல்லாமல் இன்றைய தமிழ்த் திரையின் வெற்றிகரமான ஒளிப்பதிவாளர்கள் பலரும் பயின்ற பல்கலைக் கழகமும் அவரே.
1989 ல் வெளியான 'புதியபாதை'யில் முற்றிலும் புதியதான கதைக்களத்தைப் படைத்து இயக்குனர்-நடிகர் ஆர்.பார்த்திபன் அனைவரையும் வியக்க வைத்தார்.
90 ஆம் ஆண்டுகளில் தமிழ்த் திரையுலகின் ரத்த நாளங்களில் இளரத்தம் புகுந்து புத்துணர்ச்சியும் அதன் மூலமாக புதிய சிந்தனைகளும் உருவானது என்று சொல்லலாம்.
விஜய்,அஜீத்,அரவிந்தசாமி, பிரபுதேவா,ராஜ்கிரண் ஆகிய கதாநாயகர்களும் சீதா,சிம்ரன்,மீனா,தேவயாணி,நக்மா ஆகிய கதாநாயகிகளும் ராஜீவ் மேனன்,கஸ்தூரிராஜா,சுந்தர்.சி.,செல்வா ஆகிய இயக்குனர்களும் இந்தக் காலக்கட்டத்தில் தமிழ்த் திரை வானில் தோன்றினார்கள்.
1991 ல் வெளிவந்த 'என் ராசாவின் மனசிலே' யில் ஒரு பாடல் காட்சியில் நடித்து திரை வாழ்க்கையைத் தொடங்கிய வடிவேலு ஷங்கரின் 'காதலன்' படத்தின் மூலமாகத் திருப்பம் பெற்று தனது ஜனரஞ்சகக் காமெடி மூலமாகப் புகழ் பெற்று விரைவில் நாட்கணக்கில் ஊதியம் பெரும் சகாப்தத்தைத் துவக்கி வைத்தார்.
'புரியாத புதிர்' படத்தை இயக்கி தனது கலைப்பயணத்தை துவங்கிய கே.எஸ்.ரவிகுமார் இன்று மிக வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனராக உலா வருகிறார்
ஏ.ஆர்.ரகுமான்
1992 ல் வெளிவந்த 'ரோஜா' திரைப்படத்தின் 'சின்ன சின்ன ஆசை' பாடல் உலகமெங்கும் ஒலித்தது.இங்கிலாந்து நாட்டின் டாப் 10 வரிசையில் இடம் பெற்றுச் சாதனை படைத்தது.அதன் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் 2009 ஆம் ஆண்டில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று சிகரம் தொட்டு எல்லாப்புகழையும் இறைவனுக்கே அர்ப்பணித்தார்
அதே ஆண்டில் வெளிவந்த 'தேவர் மகன்' மனித குலத்தின் பழிக்குப்பழி என்கிற கொடூரமான குணாதிசயத்தின் கொடுமையை விளக்கி மாபெரும் வெற்றி பெற்றது.
இயக்குனர் செல்வாவின் 'அமராவதி' அழகும் போராட்டக் குணமும் கொண்ட அஜித் குமாரை அறிமுகப்படுத்தியது. எஸ்.ஏ.சந்திரசேகரின் 'நாளைய தீர்ப்பு' அமைதியும் திறமையும் கொண்ட விஜயைத் தந்தது.
ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் நல்ல கதைகளைத் தேர்வு செய்து தொடர்ந்து வெற்றிப் படங்களைத் தயாரித்து ஏராளமான திறமைசாலி இளைஞர்களை இயக்குனராக அறிமுகம் செய்தது
தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழ்த் திரை யுலகில் நுழைந்து வெற்றி பெற்றார்கள்.அதன் விளைவாக தமிழ் சினிமாவின் கதைக்களத்திலும் பேச்சு மொழியிலும் மதுரை பகுதிகளின் தாக்கம் விரிவுபட்டது.
உதவி இயக்குனராகப் பணிபுரிந்த ஒருவர் கதாநாயகனாகி சூப்பர் ஸ்டாருக்கு இணையாக வியாபார மதிப்பு பெற்ற நிகழ்வு 1990 களில் நிகழ்ந்தது.கங்கை அமரனின் 'கரகாட்டக்காரன்' படத்தின் மூலமாக ராமராஜன் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று அடுத்தடுத்து கிராமத்துக் கதாநாயகனாக நடித்துப் புகழ் பெற்று 1998 ஆம் ஆண்டில் இந்திய பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆனார்.
கரகாட்டக்காரன்
கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற வாழைப்பழக் காமெடி நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணியும் செந்திலையும் அந்தக் காட்சியை எழுதிய வீரப்பனையும் தமிழ் சினிமா உள்ளவரைக்கும் நினைவு படுத்திக் கொண்டிருக்கும்.
பாலாஜியின் சுஜாதா புரொடக்சன்ஸ் ,கவிதாலயா, ஆர்.எம். வீரப்பனின் சத்யா மூவீஸ்,சிவாஜி புரொடக்சன்ஸ், ராஜ்கமல் இன்டர்நேசனல் ஆகிய படத்தயாரிப்பு நிறுவனங்கள் தரமான படங்களைத் தயாரித்து வெளியிட்டு தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் பெரும் பங்கேற்றன.
1996 ஆம் ஆண்டில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய 'ஔவை சண்முகி' படத்தில் கமல் படம் முழுவதும் முழு நீள பெண் வேடம் ஏற்று நடித்து மேலும் ஒரு சாதனையைப் படைத்தார்.
1997 ல் ஹென்றி தயாரித்த 'பாரதி கண்ணம்மா' படத்தின் இயக்குனராக அறிமுகமான சேரன் கமர்ஷியல் அடையாளம் தவிர்த்து 'பொக்கிஷம்',தவமாய்த் தவமிருந்து',ஆட்டோகிராப்' போன்ற மிகச் சிறந்த படங்களைத் தந்து பல தேசிய விருது களையும் வென்று நாளடைவில் கதாநாயகனாகவும் பரிணமித்துள்ளார்.
வசந்த்தின் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டில் உருவான ;நேருக்கு நேர்' படத்தில் அறிமுகமானார் நடிகர் சிவகுமாரின் புதல்வரான சூர்யா.நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்ததால் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து திறமையான இளைஞராகக் களத்தில் நிற்கிறார் சூர்யா.
சரண், எஸ்.ஜே.சூர்யா,வி.சேகர்,சுரேஷ் கிருஷ்ணா ,விகரமன், ஏ.வெங்கடேஷ் ஆகிய இயக்குனர்கள் அறிமுகமாகி வெற்றி பெற்றார்கள்.
அண்மைக் காலத்தில் உலகப் படைப்பாளிகளின் கவனத்தைத் தமிழ் சினிமாவை நோக்கித் திருப்பிய ஒரு இளைஞர் தன முதல் படைப்பைத் திரையிடுவதற்கு மிகப்பெரும் போராட்டங்களைச் சந்தித்தார்.இறுதியில் திறமை வென்றது.1999 ஆம் ஆண்டில் 'சேது'படம் பாலா என்ற புதுமை இயக்குனரை தமிழ் சினிமா வுக்குத் தந்தது.இதுவரையில் தமிழ் சினிமா அறியாத கதா பாத்திரங்களை வைத்து பாலா உருவாக்கும் படங்கள் உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெறுகின்றன.
சேதுவின் வாயிலாக அறியப்பட்ட சீயான் என்னும் விக்ரம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தரத்துக்கு மெருகேற்றி வருகிறார்.
'வாலி'யில் சிறு வேடத்தில் அறிமுகமாகி 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தின் கதாநாயகியானார் ஜோதிகா உணர்வு களை தத்ரூபமாக வெளிப்படுத்தும் கண்கள் ஜோதிகாவின் சிறப்பு.அவரது குழந்தை முகம் ரசிகர்களால் பெரிதும் நேசிக்கப் பட்டது.புகழின் உச்சத்தில் இருந்தபோதே ஜோதிகா தான் நேசித்த சூர்யாவை மணந்து குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார்.
எஸ்.ஏ.ராஜ்குமார்,தேவா போன்ற இசையமைப்பாளர்கள் இந்தக்காலக்கட்டத்தில் புகழோடு விளங்கினார்கள்.
கே.பாலசந்தரால் 'டூயட்' படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரகாஷ்ராஜ் தனித்துவமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களின் செல்லமானார்.சம்பாதித்த பொருளை தமிழ் சினிமாவிலேயே முதலீடு செய்து 'மொழி', 'அபியும் நானும்' போன்ற நல்ல படங்களைத் தயாரித்தார்.
விளம்பரப் படங்களில் நடித்து வந்த ஆர்.மாதவன் 2000 ஆவது ஆண்டில் மணிரத்னம் அவர்களால் 'அலை பாயுதே' என்ற படத்தில் அறிமுகப் படுத்தப்பட்டு தொடர்ந்து வந்த கவுதம் வாசுதேவ் மேனனின் 'மின்னலே' படத்தின் மூலம் காதல் நாயனாக இடம் பிடித்தார்.
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் மென்மையான காதலை நளினமாக வெளிப்படுத்துகின்ற படங்களை இயக்கி தனக்கென தனியான ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார்.
2001 ஆம் ஆண்டில் அஜித்தின் 'தீனா' வை இயக்கி அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ் 'ரமணா' மற்றும் 'கஜினி'ஆகிய மிகவும் பேசப்பட்ட படங்களை இயக்கி ஹாட்ரிக் சாதனை படைத்து குறிப்பிடத் தகுந்த இயக்குனரானார்.
இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் புதல்வரும் இஞ்சினியரிங் பட்டதாரியுமான செல்வராகவன் அவரது சகோதரரான தனுஷ் அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' படத்தின் கதையை எழுதி அடுத்து ;காதல் கொண்டேன்; வெற்றிப் படத்தின் மூலமாக இயக்குனரானார்.இந்தப்படம் சகோதரர்கள் இருவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை அமைத்துக் கொடுத்தது.
இயக்குனர் டி .ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக இருந்து 2002 ஆம் ஆண்டில் வெளியான 'காதல் அழிவதில்லை' படத்தின் வாயிலாக கதாநாயகனானார்.பிறகு வந்த 'மன்மதன்', வல்லவன்' ஆகிய படங்களின் மூலமாக இயக்குனராகவும் பரிணமித்தார்.
இளையராஜாவின் புதல்வரான யுவன் சங்கர் ராஜா 1996 ஆம் ஆண்டில் தனது 16 ஆவது வயதில் 'அரவிந்தன்' திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் பெற்று 2002ல் வெளியான ;துள்ளுவதோ இளமை'படத்தில் புதுப்புது இசைக் கோர்வைகளைக் கையாண்டு புகழ் பெற்று இளமை ததும்பும் பாடல்களைத் தருகிறார்.
'பிதாமகன்','அந்நியன்', 'காக்க காக்க'. 'அன்பே சிவம்', சிவாஜி' .தசாவதாரம்' போன்ற படங்கள் 21 ஆம் நூற்றாண்டுத் துவக்க ஆண்டுகளின் குறிப்பிடத் தக்க தமிழ்ப் படங்களாகும்.
'தசாவதாரம்' படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களை ஏற்று நடித்து நடிகர் திலகம் சிவாஜியின் உலக சாதனையை விஞ்சினார்.
இலங்கைப் போர்
இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது தமிழ் மக்களுக்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகம் போராட்டக் களத்தில் இறங்கியது.இயக்குனர்கள் சீமான்,அமீர் ஆகியோர் சிறை சென்றார்கள்.தமிழ் மக்களின் உரிமைகளைக் காக்கும் நோக்கத்தோடு சீமான் 'நாம் தமிழர்' இயக்கத்தைத் தொடங்கினார்.
ஷங்கர் இயக்கிய 'இந்திரன்' சுமார் 162 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு தமிழ் சினிமாவின் மெகா பட்ஜெட் படமாகியது. இதில் ரஜனி இயந்திர மனிதனாக நடித்தார். ஹாலிவுட் படங் களுக்கு இணையாக இந்தப்படத்தின் தொழிநுட்பம் அமைந்திருந் தது.
தமிழ்த் திரையுலகில் அதிக அளவில் புதிய தயாரிப்பாளர்கள் குறைந்த முதலீட்டுப் படத் தயாரிப்பில் ஈடுபட்டார்கள்.புதிய நாயகர்களும் நாயகிகளும் அறிமுகம் ஆனார்கள்.அதிக அளவில் படங்கள் வெளியாகின.
பரத், ஆர்யா, ஜெயம் ரவி, விஷால்,கரன், பிரித்விராஜ், பசுபதி, சந்தானம் ஆகியவர்கள் இந்தக் காலக்கட்டத்தில் வெற்றிகரமான நடிகர்களாகத் திகழ்ந்தார்கள்.
பிரியன், விஜய் மில்டன், கே.வி.ஆனந்த், ரத்னவேல், ஆர்தர்.பி. வில்சன் ஆகிய ஒளிப்பதிவாளர்களும் நா.முத்துக்குமார், கபிலன், பா.விஜய், சினேகன்,பழனி பாரதி ஆகிய பாடலாசிரியர்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
.
பாலாவிடம் சினிமாவைக் கற்றுக்கொண்ட அமீர் 'பருத்தி வீரன்' என்ற படத்தை இயக்கி வெளியிட்டபோது தமிழ் சினிமா உலகத் தரத்துக்கு உயர்ந்தது.தமிழ்த் திரை தனக்கென வகுத்திருந்த பல நியதிகள் பருத்திவீரனில் அடித்து நொறுக்கப்பட்டன. கதாநாயகனாக மிகச் சிறப்பாக நடித்து அறிமுகமான சூர்யாவின் தம்பி கார்த்தி இந்த ஒரே படத்தின் மூலம் நட்சத்திரத் தகுதி பெற்றார்.
அமீரின் உதவியாளரான சசிகுமார் 'சுப்ரமணியபுரம்' என்ற மற்றுமொரு புரட்சிக் கதையைக் கொண்ட படத்தை எழுதி இயக்கி ,தயாரித்து வெற்றி பெற்று தமிழ் சினிமாக் கலாசாரத்தின் மாற்றத்தை மேலும் உறுதிப்படுத்தினார்,
பாண்டிராஜின் 'பசங்க', சமுத்திரக்கனியின் 'நாடோடிகள்', சுசீந்திரனின்'அழகர்சாமியின் குதிரை',சசியின் 'பூ',பிரபு சால மோனின் 'மைனா' ஆகிய படங்கள் தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான வளர்ச்சியை உலகுக்கு எடுத்துக்காட்டின.
துவக்க காலத்தில் பெரும்பாலான படப்பிடிப்புத் தளங்கள் இங்கே அமைந்திருந்ததால் சென்னை நகரின் ஒரு பகுதியான கோடம் பாக்கம் தமிழ் சினிமாவின் தலைமையகமாகக் கருதப்பட்டது. அதன் விளைவாக தமிழ் சினிமா 'கோலிவுட்' என்று பெயர் பெற்றது.
நடிகர் சூர்யா 'அகரம்' என்கின்ற அறக்கட்டளையைத் தொடங் கினார்,அதன் மூலமாக ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாக் கலைஞர்களின் புதுமையான உத்திகளும் தொழில்நுட்பத் திறமையும் மற்ற மொழிகள் சார்ந்த திரை உலகத்தினரை வியக்க வைத்தது.இந்த புதிய விஷயங்களை அவர்கள் தங்களின் படங்களில் பயன்படுத்தினார்கள்.
தமிழ் இயக்குனர்களும் நடிகர்களும் ஒளிப்பதிவாளர்களும் நடன மற்றும் சண்டைப் பயிற்சியாளர்களும் மற்ற மொழிக் கலைஞர் களின் அழைப்பின் பேரில் நேரடியாகவும் பங்குபெற்று பிற மொழிப் படங்களிலும் தங்கள் சிறப்புக்களை வெளிப்படுத்தினார் கள்
100ஆண்டுக் கால வரலாற்றைக் கொண்டு எல்லாத் துறை களிலும் தமிழ்த் திரையுலகம் ஏற்றம் பெற்று விளங்கும் காலம் இது. வருங்காலமும் இதேபோல வளமும் நலமும் பெற்றுத் திகழ வேண்டும் என்பது உலகத் தமிழ் மக்களின் விருப்பம்.
http://mpmathivanan.blogspot.my/2013/01/100-2.html