" நான் சொன்னதை அப்படியே போய் அபிராமி கிட்ட சொன்னியா? ராமசாமி?"
" சொன்னேனுங்க அய்யா. ஒரு வார்த்தைகூட பிசகாம அப்படியே சொன்னேனுங்க..."
" என்னன்னு சொன்ன?"
" இந்த வாரம் சனி, ஞாயிறு அய்யா உங்கள மலை பங்களாவுக்கு வரச் சொன்னாருங்க'ன்னு சொன்னேனுங்க அய்யா..."
" அதுக்கு என்ன சொன்னாள் அவ...?"
" இந்த வாரம் என்னோட பாய் பிரண்டோட வெளியூர் போறேன், வர ஒரு மாதமாகும்னு சொன்னாங்கயா.."
" நான் அதிகமா பணம் தர்றேன்னு சொன்னேனே ...அதை சொன்னியா?"
" அதையும் சொன்னேனுங்க. அபிராமி அம்மா, " எவ்வளவு பணம் கொடுத்தாலும் வரமாட்டேன்னு உங்கய்யாகிட்ட சொல்லிடுன்னுட்டாங்கய்யா...."
"ஆ, என்ன திமிரான பேச்சு... சும்மா சாதாரண பெண்ணுக்கு எவ்வளவு பணத்தையும் பெயரையும் கொடுத்திருப்பேன்....எங்கிட்டயே எப்படி பேசுறா பார்த்தியா? உம், வேற வழியில்ல.....முடிச்சிட வேண்டியதுதான் அவ கதைய...."
" என்னங்கைய்யா...கொலையா..?"
" ஆமா ராமசாமி. பின்ன, என்ன அவமானப் படுத்துற இவளை விட்டு வைக்க சொல்றியா?"
" பாவங்க...பொழச்சி போகட்டும்..."
" சரி, கொலைன்னு சொல்ல வேண்டாம். காருல அடிச்சி முடிச்சிட்டு விபத்துன்னுடுவோம்..."
" அய்யா வேண்டாங்க.... ரொம்ப நாளா நம்ம கூட இருக்குறவங்க... இருந்துட்டு போகட்டும்..."
" ஒண்ணும் பேசாத.... நான் சொன்னா சொன்னது தான். நீ போய், நம்ம கதாசிரியரை வரச் சொல்லு. அவ சாகிற மாதிரி கதையை மாத்திட்டு, வேறு கோணத்துல நாடகத்தை திருப்புவோம்...."
No comments:
Post a Comment