Friday, 23 October 2015

அனல் குளியல் ...

அது ஒரு பலகை வீடு.
அதுவும் பழைய பலகை வீடு.
ஆயினும் அன்றைய நாட்களின் தனித்துவம் அப்படியே இருக்க, இரண்டாவது தலைமுறை எடுத்த முடிவுதான் இந்த பழைய கட்டிடத்தை அப்படியே வைத்து பாதுகாப்போம் என்பது.
அங்கு, வருவதும் போவதுமாக மூவின மக்களும் என ஒரு தனிக்கூட்டமே இருக்கிறது. மூளிகை மணத்துடன் அத்தனை பேரையும் ஈர்க்கும் இடமாக அமைவது, "ஸ்டீம் பாத்" எனும் அனல் குளியல் இடம்.
சுமார் பத்து ஆண்டுகளாக வருகை தரும் திரு&திருமதி.பாலகிருஷ்ணனுடன் நடந்த ஒரு நேர்காணலில், பலவற்றை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
- சுமார் 70 டிகிரி செல்சியஸில் வெப்ப சூழ்நிலையில், வடியும் வியர்வையில் அமர்ந்து, நீராவியின் சுகத்தை அனுபவிப்போருக்கான இடமாம் இது.
- உடலில் சேரும் நச்சுத் தன்மைகளையும், கொழுப்பினையும் மெள்ள மெள்ள கரைக்கும் சில மூளிகைகளை கொதிக்கும் நீரில் கலந்து அதன் அனலை ஒரு அறைக்குள் அனுப்புகின்றனர்.
- வந்தமர்ந்த சில நிமிடங்களில் உடலிலிருந்து வியர்வை வெளியேர, அதனுடன் உடற் கழிவுகளும் அகற்றப் படுவதை உணருவதாக சொல்கின்றனர்.
- தங்களின் விருப்பத்துக்கேற்ப, வசதிக்கேற்ப பலரும் இங்கு வந்து இந்த அனல் குளியலில் கலந்து கொள்கின்றனர்.
- சில நாட்களில் சிறப்பு பூக்குளியலும் உண்டாம்.
- இவ்வித பூக்குளியலில் சேர்க்கப்படும் மூளிகை மணம், வீட்டுக்குச் சென்று குளித்தாலும் தொடர்ந்து சில நாட்களுக்கு உடலில் இருக்குமாம்.
நாங்கள் அங்கிருக்கும் போது, வாத நோயில் பாதிக்கப்பட்டிருந்தவரும், இருதய நோயினால் அவதிப்பட்டவரும் வந்திருந்ததை எனக்கு சுட்டிக்காட்டினார் திரு பாலா. அவர்கள் எழுபது / என்பது வயதைக் கடந்தவர்களாக எனக்கு பட்டனர்.
திரு&திருமதி.பாலகிருஷ்ணன் இருவரும் இந்த அனல் குளியலில் கலந்து கொள்ள பழகிய பின் தங்களின் உடல் ஆரோக்கியம் பல மடங்கு நன்றாக இருப்பாதாக தாங்கள் உணர்வதாக சொல்லியது, எனக்கும் என் மனைவிக்கும் ஆர்வத்தை அதிகரித்தது.
என் மனைவி இங்கு வருவது இது முதல் தடவை. இருந்தும் குளியலுக்குப் பின், அடுத்து எப்போது நாம் இங்கு வரவிருக்கிறோம் என என்னை வினவியது அவர் எவ்வளவு ரசித்திருக்கிறார் இந்த மூளிகை நீராவியை என எனக்கு விளங்கியது.
25 காசு காணிக்கையாகவும், 15 ரிங்கிட் கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டாலும், இங்கு வரும் கூட்டம் இதனால் அடையும் பலன்களை உணர்ந்து அடிக்கடி வருகின்றனர். யாரும் விலையை பற்றி கவலைப் பட்டதாக காணோம்.



No comments:

Post a Comment