உலகியலில் உழன்று கிடக்கின்ற ஒருவனை பெரியவர் ஒருவர் ஆற்றுப்படுத்த, அவனை நல்வழிப்படுத்த எண்ணுகிறார். அவர்களுக்கு இடையில் நடைபெறும் உரையாடலைக் கேட்போம்.
பெரியவர்: நீ ஒரு ஞான குருவை சென்று பார். உன் வாழ்க்கையில் பெரும் திருப்பம் வரும்.
உலகியலான்: குரு என்றாலே அச்சமாக இருக்கிறது. நான் எந்த குருவையும் சந்திக்க மாட்டேன்.
பெரியவர்: சரி எல்லா கோயில்களுக்கும் சென்று சிவலிங்கத்தை வணங்கு.
உலகியலான்: கோயில் குளம் எல்லாம் சுத்த முடியாது.
பெரியவர்: சரி சிதம்பரம் மட்டும் சென்று வா. அனைத்து கோயில்களுக்கும் சென்றதற்கு அது சமம்.
உலகியலான்: போகலாம் தான். ஆனால் எந்த வாசல் வழியே போவது? பெரும் குழப்பம். அதுவும் வேண்டாம்.
பெரியவர்: சரி, அடியார்களோடு இணங்கி இரு.
உலகியலான்: அவர்களோடு சேர்ந்தால் அவர்களும் நீங்கள் சொல்லியதைத் தான் என்னை செய்ய சொல்லுவார்கள். நான் சேர மாட்டேன்.
பெரியவர்: சரி சைவசித்தாந்தம் கற்றுக்கொள்ளேன்.
உலகியலான்: எப்போது பார்த்தாலும் பதி பசு பாசம் என்பார்கள். சொல்பவர்களுக்கே புரியாது. எனக்கு எப்படி புரியும். வேண்டாம்.
பெரியவர்: சரி திருமுறை கற்றுக்கொள்.
உலகியலான்: பள்ளியில் படிக்கும்போதே மனப்பாடச் செய்யுளாக கூட இவற்றை கற்றதில்லை. வேண்டாம்.
பெரியவர்: சரி தியானம் செய்.
உலகியலான்: கண்ணை மூடினால் பயமாக இருக்கிறது. இது முடியாது.
பெரியவர்: சரி வீட்டில் பூஜை அறையில் சுவாமிகளுக்கு பூ வைத்து அந்த இடத்தை தூய்மைப்படுத்தி பூசை செய். விளக்கு ஏற்றி வை. அது போதும்.
உலகியலான்: இதற்கெல்லாம் என் உடல் வளையாது.
பெரியவர்: சரி கோயிலுக்கு செல். பூக்கள் பறித்து மாலை தொடுத்து எடுத்துச் செல். கோயிலில் ஏதாவது ஒரு புறத்தை தூய்மை செய்.
உலகியலான்: வீட்டில் காபி டம்ளரை கூட எடுத்து வைப்பது இல்லை. இது முடியாது.
பெரியவர்: பரவாயில்லை. நமசிவாய, சிவாயநம சொல்.
உலகியலான்: அஞ்சு எழுத்தா? முடியாது.
பெரியவர்: சரி, சிவ சிவ என்று சொல்.
உலகியலான்: நான்கு எழுத்தா? முடியாது.
பெரியவர்: சரி சிவாய சொல்.
உலகியலான்: மூன்றெழுத்தா முடியாது.
பெரியவர்: சிவ என்று சொல்.
உலகியலான்: இரண்டு எழுத்தா? முடியாது.
பெரியவர்: சி சொல்.
உலகியலான்: இப்படி எல்லாம் சொல்ல முடியாது ஐயா.
பெரியவர்: சரி வேண்டாம். நாயைப் பார்க்கும் பொழுது அது உனக்கு இடையூறு செய்யவில்லை என்றாலும் அதை நீ ஓட்டு. அதை நீ விரட்டு. அது போதும்.
உலகியலான் குழம்பினான்.
உலகியலான்: நாயை ஓட்டுவதற்கும் சிவனை நினைப்பதற்கும் என்ன தொடர்பு ?
பெரியவர்: நாயை எப்படி ஓட்டுவாய்?
உலகியலான்: சி சி என ஓட்டுவேன்.
பெரியவர்: அப்படி செய்யும் பொழுது உன்னையும் அறியாமல் சிவனை நினைப்பாய். அது போதும். அவன் உனக்கு அருள் புரிவான்.
உலகியலான்: !!!!! !!!!! !!!!! !!!!! !!!!! !!!!! !!!!! !!!!! !!!!! !!!!! !!!!!
சுவாமி ! நான் இனி அனைத்து கோவில்களுக்கும் செல்வேன். ஞானகுருவை தரிசிப்பேன். அடியார்களோடு இணங்கி இருப்பேன். எல்லா விதமான தொண்டுகள் கிரியைகள் தியானங்கள் செய்வேன். சித்தாந்தம், திருமுறை கற்பேன். இவை அனைத்தையும் நான் செய்வேன்.
பெரியவர்: திடீரென உனக்கு என்ன ஆனது? ஏன் இவை அனைத்தையும் செய்ய முடியாது என்று சொன்ன நீ இப்பொழுது அனைத்தையும் செய்கிறேன் என்று சொல்லுகிறாய்?
உல: இப்படி எதையும் செய்ய முடியாது என்று சொல்லுகிற எனக்காக, சிவபெருமான் இவ்வளவு இறங்கி,இரங்கி வருகிறான் என்றால் அவன் என் மீது எத்தனை கருணை கொண்டு இருக்க வேண்டும்? அப்படிப்பட்ட பெரும் கருணையாளன் அவன் என்பதை அறிந்துகொண்டேன்.
நாய் ஓட்டுவது கூட மந்திரம் என்றால் அவன் என்மீது எத்துணை அன்பு கொண்டிருக்கிறான்! அந்த அன்பிற்கு நான் அடிமை ஆகிறேன். அந்த பெரும் கருணைக்கு, அன்புக்கு நான் என்றென்றும் அடிமை என்பதை உணர்கிறேன். இனி அனைத்தையும் செய்வேன் என்று உள மகிழ்வோடு, பெரும் களிப்போடு, மனநிறைவோடு அவன் சொன்னான்.
பெரியவர் இறைவனது கருணையை எண்ணி எண்ணி மகிழ்ந்தார். ஒவ்வொருவரையும் அவர் பணி கொள்ளும் ஆறு அறிந்து களிப்புற்றார்.
நாமும் அவன் கருணையை உணர்வோம்! பேரின்ப வாழ்வு பெறுவோம்!!.