Friday, 12 August 2016

பழைய பாவங்கள், புதிய தண்டனைகள் 2 - பகுதி 1

கார் கிரீச்சிடும் ஓசை....

ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு, "டமால்..."

ஒரு பிஎம்டபுள்யூ ரக கார் முன்னால் சென்று கொண்டிருந்த காரை இடித்திட, அதனை செலுத்திவந்த அமலா செய்வதறியாது அப்படியே அமர்ந்திருந்தாள்.

இடிபட்ட வாகனத்திலிருந்து ஒரு இளைஞன் கீழிறங்கினான். தனது காரின் பின்னால் வந்து பார்த்து விட்டு, இடித்தது யார் என உற்று நோக்கினான். கார் பலமாக கருப்பு நிற வர்ணத்தில் யாரும் உள்ளே பார்க்க இயலா வண்ணம் இருந்தது. சற்று அருகில் சென்று காரின் கதவைத் திறந்தான்.
அங்கே, அமலா ஓட்டுனர் இருக்கையில் இருப்பதை பார்த்து,
'என்னமா இப்படி செய்யுறீங்களே மா ' எனும் தோரணையில் தனது கைகளை அசைத்து தனது காரின் அடிபட்ட பாகத்தை காட்டினான்.

அவளும் தனது கார் இருக்கையிலிருந்து கீழிறங்கினாள்.
''சாரி, நான் இடிக்கனும்னு இடிக்கல, இடையிலே ஒரு மோட்டார் சைக்கிள்... அதை தவிர்க்கப்போய் உங்கள்  காரை இடிக்கவேண்டியதாகி விட்டது..."

அவனின் அடிபட்ட கார் பகுதியை கண்டாள். அதை விட தனது பிஎம்டபுள்யூ ரக கார் எப்படி என்பதிலும் கவனம் சென்றது. அதை அவனும் கவனித்தான்.

" இதற்கு இப்போ என்ன சொல்றீங்க?" என்றான் சற்று குரலை உயர்த்தி.

" அதற்குத்தான் சாரி சொல்லிட்டேனே..."

"சாரி சொல்லிவிட்டால், சரியாகிடுமா?"

" என் தவறு தான். காருக்கு நஷ்ட்ட ஈடாக எவ்வளவு எனச் சொன்னால், தந்துடுவேன்" என்றபடி அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

அவள் கண்களில் அதிகாரம் தெரிந்தது. ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவள் இது போன்ற சாதாரண விபத்துக்கெல்லாம் அசைந்துவிடுவாளா என்ன.

"காருக்கு நஷ்ட்டயீடாக கொடுத்திடுவீங்க, விபத்தின் போது நேர்ந்த எனது மன அதிர்வுக்கும், மன உளைச்சலுக்கும் என்ன செய்யப் போறீங்க...?"
பணிந்து பேசுவதை விட்டு, 'உன் விலை என்ன சொல்..' என்பது போல அவள் பேசியது அவனுக்குப் பிடிக்கவில்லை.

" என்ன செய்யணும்...? உன்னை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கணுமா?"
அவனின் முரட்டுத் தனமான குரலுக்கு ஈடாக அமலாவும் தன்னிலை மறந்து பதிலளித்துவிட்டாள்.

ஆனால் மறுகணமே சுதாரித்துக் கொண்டு  'சே, அதிகம் பேசிவிட்டோமோ' என மனதில் பட்டது.

"ஆமாம்.... கட்டிப் பிடிச்சி ஒரு முத்தம் கொடு, விட்டுடுறேன்..." என்றான் அவன்.

தன் வார்த்தையை அவன் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறான் என்பதை உணர்ந்து அவள் சற்று தடுமாறிப் போனாள். அதை தடுத்து நிறுத்த, கடுகடுப்பான அதே நிலையில்,
"டேய், உனக்கு என்னை யாருன்னு தெரியாது.... வேண்டாம், விட்டுடு, உனக்கு எவ்வளவு வேண்டுமோ சொல், தந்துடுறேன்...." என்றாள்.

இதற்கிடையே கூட்டம் கூடிவிட, இவர்களின் வாய்ச்சண்டையில் புன்னகை முகங்களாக தெரிந்தனர் அருகில் இருந்தோர்.

இது சரிப்பட்டு வராது. உடனடியாக இந்தப் பிரச்சினையை தீர்த்தாக வேண்டும், என சிந்தித்த படி  தனது விவேக கைபேசியில்  தனது மேனேஜரை தொடர்பு கொண்டாள். அவனின் கார் எண்ணைச் சொல்லி, "எவ்வளவு ஆகும்னு உடனே சொல்லுங்க" என உத்தரவிட்டாள்.

சில வினாடிகள் நகர்ந்தன....

கைபேசி ஒலிக்க, மறு முனையில் அவளின் மேனேஜர் ஏதோ பேசிக்கொண்டிருப்பது அவனுக்கும் லேசாக கேட்டது.

அவனிடம் திரும்பி,
" இங்க பார், இரண்டாயிரம் ரிங்கிட் தரேன். வாங்கிட்டு போ...."  என்றாள்.

" அதுதான் சொன்னேனே, காருக்கு நஷ்டயீடு கிடைச்சிடும்.... என்னுடை மன உளைச்சலுக்கு என்ன தீர்வு? கட்டிப் பிடிக்கிறியா, முத்தம் தரியா? " என்று மீண்டும் அவளை வம்புக்கிழுத்தான்.

" நீ அனாவசியாமா பேசுறே. போலிஸ்ல ரிப்போர்ட் பண்ணுவேன். ஜாக்கிரதை..."

"அட பாருடா... ''இவள் வந்து இடிப்பாளாம், போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணுவாளாம், நாம வேடிக்கைபார்த்தபடி கைகட்டி நிற்கணுமாம்....'' என்றவாறு அலட்சியமாய்ச் சிரித்தான்.

அவனின் காமிடி பேச்சைக் கேட்டு  சுற்றி இருந்தோர் கேலியாக தன்னைப் பார்ப்பதை உணர்ந்தாள். 'இவனிடமிருந்து எப்படி உடனே தன்னை விடுவித்துக் கொண்டு இவ்விடத்தை விட்டு அகல்வது' என அதிவேகத்தில் மனதில் ஓடியது.
"சரி இப்ப உனக்கு என்னதான் வேணும்...?"

இந்தச் சின்ன சின்ன விசயங்களுக்காக நேரத்தைக் கடத்திக்கொண்டு நடுத் தெருவில் முன் பின் தெரியாவனுடன் வாதிட தயாராயில்லை அவள்.

" இரண்டு விசயங்கள்..... ஒன்று, அடிபட்ட காரை நீயே உன் பொறுப்பில்  ஏதாவதொரு பட்டறைக்கு அனுப்பி வைத்து, அந்த பழுதுகள் முடிவடையும் வரை உடன் இருக்கணும். இரண்டு, உன் வாயிலிருந்து வந்தது போலவே, என்னைக் கட்டிப் பிடித்து ஒரு முத்தம் தரணும். அவ்வளவுதான், நாம சமாதானமா போயிடலாம்...."

அவளுக்கு ஜிவ்வென்று கண்கள் கோபத்தில் சிவந்தன....
மீண்டும் கைபேசியை எடுத்தாள்.... அவனுக்கு நேர் எதிர்பக்கம் திரும்பியபடி,
" மொத்த விலை எவ்வளோ சொன்னீங்க, சரி .. நான் செக் கொடுத்துடுறேன், நீங்க வந்து பார்த்துக்குங்க இதை " என தனது மேனேஜருக்கு  உத்தரவிட்டாள்.

' இங்க பாரு, உனக்கு ஐந்தாயிரம் வெள்ளி தரேன், வாங்கிட்டு போய் பழுது பார்த்துக்க"

" உன் பணம் எனக்கெதுக்கு. உன் தவற்றினால்  அடித்து நொறுக்கிய காரை நீயே சரி செய்து கொடுத்திடு.... அதுவரை நீ இங்குதான் இருக்கணும்...."

"டேய் என்ன புதுசா பேசுற, வேறு  எங்கும் இதுபோல விபத்துக்கள் நடக்காதது மாதிரி. அங்கெல்லாம் உன்னை மாதிரியா திமிரா பேசினாங்க?"

" யாருக்கு திமிர், உனக்கா எனக்கா?" அவனுக்கும்  கோபம் வந்தது.

" கடைசியா கேட்குறேன், உனக்கு என்னதான் வேணும்...?"

சுற்றி நின்றவர்களில் ஒருவன்,
"இங்க பாருங்க மேடம். ரிப்பேர் சுமார் இரண்டாயிரம் வரும். நீங்க சொன்னது போல ஐந்தாயிரமா அவருக்கு கொடுத்திடுங்க... நீங்க சும்மா பேசிக்கொண்டே இருந்தா காரியம் ஆகாது" என்று அழைக்காத நடுவரானார்.

அவள் உடனடியாக அவனுக்கு பணத்தை கொடுத்து பிரச்சினையில் இருந்து விடுவித்துக் கொள்ள எண்ணினாள். காருக்குச் சென்று தனது செக் புத்தகத்தில் 'ஐந்தாயிரம்' என தயார் செய்து, அவனுக்கு கொடுத்திட அவனைப் பார்த்தாள்.

ஆனால் அவனோ, தனது காரில் ஏறி செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான்.

" ஏய் மிஸ்டர். இந்தா செக்...." என அவனை நோக்கி வேகமாக நடந்து வருவதற்குள், அவன் அங்கிருந்து சென்று கண்ணில் இருந்து மறைந்தான்....

'யார் இவன். அதிக பணம் கொடுத்தாலும்  வேண்டாம் என்று போய்விட்டானே....' அதிகாரத் தோரணையில் அவனுடன் பேசி இருந்தாலும், அவனின் ஒரு சில வார்த்தைகளில் தான் சினத்தில் சிக்குண்டதை எண்ணிப் பார்த்தாள். மற்றவர்களின் பார்வையில் தன்னை அவன் கேலிப் பொருளாக்கி நகர்ந்துவிட்டான் என்பது மட்டும் அவளின் அடி மனதில் பதியத் தொடங்கியது.

ஓட்டுனர் இருக்கையில் வந்தமர்ந்து காரை செலுத்தி,  தனது நிறுவனத்துக்கு வந்து சேர்ந்தாள்.

அங்கு  அவளின் வருகைக்காக மேனேஜர் காத்திருந்தார்.
" மேடம் உங்களுக்கு ஒன்னும் ஆகலையே?" என அக்கறையுடன் விசாரித்தார்.

அமலாவின் தந்தை காலத்தில் இருந்து அவர்களின் நிறுவனத்தில் மேலாளராக புரிந்து வந்தவர். தனது தந்தையின் மறைவுக்குப் பின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட அமலா, இந்தப் பெரியவரையே தனது மேனேஜராகவும் தொடரச் சொல்லிவிட்டாள்.

" இல்ல ... எனக்கு ஒண்ணுமில்ல.... என் அறைக்கு வாங்க..."
என்றபடி அவருக்கு முன்னால் நடந்து சென்று தனது இருக்கையில் அமர்ந்தாள்.

" என்ன நடந்தது மேடம். ஏன் ஒரு சின்ன விபத்துக்கு இப்படி விசனப் படுறீங்க? அவன் ஏதும் முரட்டுத் தனமா நடந்து கொண்டானா....? நான் என்ன ஏதுன்னு விசாரிச்சு ஒரு தட்டு தட்டச் சொல்லவா?" என்றார் பெரியவர்.

" வேண்டாம்..வேண்டாம்... அப்படி ஒன்னும் நடக்கல"

"பிறகு என்னதான் நடந்தது...."

" ஒரு மோட்டார் சைக்கிள் குறுக்கே போனது. அதை தவிர்க்க நினைத்து வேறு பக்கம் ஸ்டியரிங்கை வளைத்தேன். எதிர்பாரா விதமாக முன்னால் சென்ற அவன் காரை மோதிவிட்டேன்.... என் தவறுதான். ஆனா அவன் ரொம்பவே பேசிவிட்டான்...." என்றாள் மீண்டுமொரு முறை நடந்ததை  நினைவுபடுத்திபடி....

" அப்படி என்ன பேசிவிட்டான், உங்களுக்கு கோபம் வரும்படி...?" என  பெரியவர் கேட்க,  சுய உணர்வுக்கு வந்தாள், அமலா....

உம்.. இவரிடம் எப்படிச் சொல்வது, அவன் கட்டிப்பிடித்து முத்தம் ஒன்றைக் கேட்டான் என்று....

" அது பரவாயில்ல. விடுங்க.... ஆனா, அவன் எந்த போலிஸ் நிலையத்திலாவது ரிப்போர்ட் செய்த்திருக்கானான்னு மட்டும் பார்த்துக்குங்க....  அடுத்த  24 மணி நேரம் நாமும் கவனமா இருக்கணும்."

சரியென தலையாட்டிவிட்டு நகர்ந்தார் பெரியவர்.

அவளும் அன்றைய வேலைகளில் மூழ்கத் தொடங்கினாள்.

வேலைகள் நகர்ந்தனவே தவிர, மனம் மீண்டும் அவனை சுற்றியே வலம் வந்தது. அதிக விலையில் காரின் உபரி பாகங்கள் விற்கப் படும் இக்காலத்தில், அவன் தான் கொடுக்க வந்த பணத்தை வாங்க மறுத்து அங்கிருந்து அகன்று விட்டது அமலாவை என்னவோ செய்தது.

அவன் ஒரு நடுத்தர வர்கத்து இளைஞனாகவே அவளுக்கு பட்டது. தூக்கலான தொனியில் தான் பேசியது அவனுக்கு எரிச்சலைத் தந்திருக்குமோ..... அல்லது போலிஸ் என நான் மிரட்டியதும் பயந்து அங்கிருந்து நகர்ந்துவிட்டானா? முகத்தையும் உருவத்தையும் பார்த்தால், அவன் கெட்டவனாக கற்பனை பண்ணிட முடியவில்லையே.

விபத்துக்களை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தா தீர்த்துக் கொள்கிறார்கள்.... இவன் மட்டும் ஏன் அப்படி சிந்திக்க வேண்டும்....?
இல்லை.... அது அவனாக உதிர்த்த சொல் அல்ல.... அவசரத்தில் நான் உளறியதை அவன் கையிலெடுத்துக் கொண்டான். அவ்வளவுதான்.....
பெயரையும் வசிக்கும் இடத்தையும் கேட்டிருக்கலாம். ஹூஹும் ... நமக்கெதற்கு அவன் பெயரும், வசிக்கும் இடமும்...??? மனது என்னென்னவோ சிந்திக்க, அவனின் குறு குறு பார்வையோடு, அந்த புன்னகையும் சேர்ந்து அவனை அழகாகவே காட்டியது.

கதவு தட்டப் படும் சத்தம் கேட்டு நினைவலைகளில் இருந்து திரும்பியவள்,
"யெஸ் , கம் இன்..." என்றாள்.

தனது நிறுவன பரிசோதனைக்கு   வந்திருந்த அரசாங்க அதிகாரிகளுடன் பேசி பணியில் கவனம் திரும்பிட மணி மதியம் இரண்டாகியது.

தனது மேனேஜரிடம் வந்திருப்போரை அருகில் இருக்கும் உணவகத்துக்கு அழைத்துச் சென்று  மதிய உணவு வாங்கித் தந்துவிடும் படி கேட்டுக் கொண்டாள்.
" நீங்களும் வாங்களேன், மேடம்...." பெரியவர் அவளையும் அழைத்தார்.

" இல்லை நீங்க போயிட்டு வாங்க ..." என மறுத்து விட்டாள் அமலா.
தான் கொண்டு வந்திருந்த சிற்றுண்டியை கொறித்துக் கொண்டே, பார்வை ஏதோ ஓரிடத்தில் பதிந்திட மீண்டும் கற்பனை உலகில் மிதக்கலானாள்.

'அவனிடம் போதுமான அளவுக்கு பணம் இருக்கிறதோ இல்லையோ... தான் ஒரு பணக்காரி எனும் தோற்றத்தை அவன் மதித்தது போல் இல்லையே. கார், உடை, பேசும் தோரணையில் என்னைப் பார்த்தபின்னுமா எனக்கு மரியாதை தர அவனுக்குத் தோன்றவில்லை....? எங்கே வேலை செய்கிறான். என்ன வேலை செய்கிறான்.... ' சிந்தனைகள் வட்டவட்டமாய் தலைக்கு மேல் அசையத் தொடங்கிவிட்டன...

'சே, அவனை இன்னும் கொஞ்சம் நன்றாக நடத்தி இருக்கலாம்.... அவனுடன் இன்னும் கொஞ்சம் பொறுமையாக பேசி இருக்கலாம். அவன் கார் பழுதுகளை  நாமே செய்து தர ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கலாம்.'

ஆனாலும் அமலாவிற்கு ஆச்சரியமாகவே இருந்தது. வேறு யாரையும் இப்படி, இந்த அளவில் தான்  நினைத்துப் பார்த்ததில்லை என்பதே சற்று வித்தியாசமாகப் பட்டது.

மீண்டும் பணிகளில் தொடர்ந்திட எண்ணினாள். முடியவில்லை.

மதிய உணவுக்குப் போய் வந்தததும் மேனேஜரை அழைத்தாள்.
"அங்கிள், கொஞ்சம் என் ரூமுக்கு வரிங்களா...?"

பெரியவருக்கு ஆச்சரியம் மேலெழுந்தது.  தன்னை 'அங்கிள்' என அழைக்கிறாளே? அலுவலக நேரத்தில் 'மேனேஜர்' என்று தானே அழைப்பாள், வழக்கமாக... இன்று என்ன நடந்தது.... '

தாய் தந்தை இறந்ததும், அமலாவிற்கும், அவள் அண்ணனுக்கும் பெரியவர்தான் எல்லாம். இவர்களிருவரையும் வளர்த்து ஆளாகியதும் இவர்தான். ஆனால், வேலை நேரத்தில் பாசத்துக்கு இடமில்லை என்று கண்டிப்புடன் நடந்துகொள்வார். அதன் படியே அலுவலக நேரத்தில் மேனேஜராகவும், மற்ற நேரங்களில் அங்கிளாகவும் அழைக்கச் செய்துகொண்ட ஏற்பாடு. இப்போது தன்னை அங்கிள் என அழைத்திருக்கிறாளே.... உம், என்னவாக இருக்கும்????

'' மேடம் வரச்சொன்னீங்களா....?"
எனக் கேட்டபடியே அறையின் உள்ளே பிரவேசித்தார் மேனேஜர்.

" நான் இப்போ என்னோட மேனேஜரை வரச் சொல்லல, என்னோட அங்கிளைத்தான் வரச் சொன்னேன்".

புன்னகைத்தார் பெரியவர்....
" சரிமா ., இப்ப என்ன நடந்தது, ஏன் இப்படி டல்லா இருக்க?"

" அங்கிள், நீங்க எனக்கொரு உதவி செய்யணும்."

"சொல்லுமா.... இதை கேட்கணுமா ....?"

"இன்றைக்கு காலையில நான் ஒருத்தனை காரில் மோதிட்டேன் இல்ல, அவனுடைய பெயரும், முகவரியும் வேணும்...."

" அது ஏன் உனக்கு. அது ஒரு சாதாரண விபத்து. அதை அப்படியே விட்டுடுடனும்...." பெரியவரிடமிருந்து அறிவுரையாக வந்தது.

" இல்ல அங்கிள், அவன் காருக்கு சேதம் அதிகமாத்தான் இருக்கும். நீங்க சொன்னது போல பணம் கொடுக்க நினைத்தேன். ஆனா, அவன் என் பணத்துக்கு காத்திருக்கல. அங்கிருந்து போயிட்டான்.  எப்படியாவது அவனைப் பற்றி தெரிந்து வந்து சொல்லுங்க. அவனுக்கு சேரவேண்டியதை கொடுத்திடுறேன்....."

" அதுக்கு ஏனம்மா நீ போகனும், நானே பார்த்து செட்டில் பண்ணிடுறேன்."

" இல்லை அங்கிள். நீங்க அவனைப் பற்றிய தகவல் மட்டும் கொடுங்க, நான் பார்த்துக்கிறேன்."

அமலா, பெரியவரை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தாள். கொஞ்சம் கூச்சப் படுவது போல   பெரியவருக்கும் தெரிந்தது.

29 வயதில் இவள் நெளிகிறாளே.... ???? சில விசயங்களை தந்தை ஸ்தானத்தில் இருந்து கேட்கமுடிவதில்லை. இதற்கெல்லாம் தாய் தான் சரியானவர். ஆனால், இவளுக்கு இப்போது இரண்டும் நான் தானே. எப்படி கேட்பது ...? என மனதில் தோன்ற,
" ஏனம்மா அமலா, அவனைப் பற்றிய பிரச்சினையை நீயே தீர்த்துக் கொள்ள தனிப்பட்ட காரணம் ஏதும் இருக்கா, நான் தெரிஞ்சிக்கலாமா? " என்றார்.

"அப்படி எதுவும் இல்லை அங்கிள். கேட்டதை மட்டும் கண்டு பிடிச்சு கொடுத்திடுங்க. போதும், ப்ளீஸ்..." என்று பெரியவரை பார்த்தாள்.

“உம்,  சரியென” சொல்லி தலையாட்டி விட்டு அறையில் இருந்து வெளியேறினார் பெரியவர். அவருக்கு தான் வளர்த்து ஆளாக்கிய செல்லப் பெண் எந்த வம்பிலும் மாட்டிக் கொள்ளக் கூடாதே எனும் பயம் மட்டும் இருந்தது.

அடுத்த வாரம் தொடரும்.


Wednesday, 10 August 2016

புற்றுநோய்க் கிருமிகளை அழிக்கும் திராட்சை விதைகள்...

திராட்சை விதைகளில் உள்ள சத்துகள், புற்றுநோய்க் கிருமிகளை விரட்டி நோயைக் கட்டுப்படுத்துகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உடலில் உள்ள மற்ற ஆரோக்கியமான செல்களை இவை பாதிக்காது என்பது கூடுதல்  சிறப்பு.
கொலராடோ பல்கலைக்கழக புற்றுநோய் ஆராய்ச்சி பிரிவினர் இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையில் இணைந்து புற்றுநோய்க்கான தீர்வு குறித்த ஆய்வை மேற்கொண்டனர். அதில்தான் திராட்சை விதையின் மகத்துவம் தெரியவந்துள்ளது.

ஆய்வு குறித்து ராஜேஷ் கூறியதாவது: உலகம் முழுவது புற்றுநோயால் பதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தீர்வுக்கான ஆராய்ச்சிகளும் தொடர்கின்றன. சமீபத்தில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் , திராட்சை விதையில் உள்ள மூலப்பொருட்கள் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவது தெரியவந்துள்ளது. பொதுவாக அனைத்து வகையான புற்றுநோயைக் கிருமிகளுமே மிக வேகமாக பரவக்கூடியவை.

இவற்றை கட்டுப்படுத்த கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் கிருமிகள் பன்மடங்கு பெருகி உயிர்க்கொல்லியாக மாறும் ஆபத்து உள்ளது. கீமோதெரபி உள்ளிட்ட முறையில் சிகிச்சை அளிக்கப்படும்போது நோய்க் கிருமிகள் மட்டுமின்றி ஆரோக்கியமான செல்களும் பெருமளவில் அழிக்கப்படுகின்றன.

இந்நிலையில், திராட்சை விதையில் உள்ள மூலப்பொருட்கள் புற்றுநோய் கிருமிகளை வேகமாக அழிப்பதுடன் ஆரோக்கியமான செல்களை பாதுகாப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் எந்தவித பாதிப்போ பக்க விளைவுகளோ இருக்காது என்று ராஜேஷ் கூறியுள்ளார்.