சிறப்புப் பார்வை
மாநகரத்தில் ஓர் இயற்கைப் பொக்கிஷம்:புக்கிட் நானாஸ் இயற்கைப் பூங்கா!
நோன்பு பெருநாளுக்கு நீண்ட விடுமுறையாக சொந்த ஊர்களுக்குச் சென்று, சாலை நெரிசலில் சிக்கி ஒருவழியாக தலைநகர் வந்து சேர்ந்தவர்கள் நிச்சயம் இன்னும் சில வாரங்களுக்கு நெடுந்தூர பயணத்தை மேற்கொள்ளப்போவதில்லை என்பது நிச்சயம்.
அப்படியிருக்க, இந்த வார இறுதியை எங்கு கழிக்கலாம் என யோசிப்பவர்கள், குறிப்பாக இயற்கை விரும்பிகள் புக்கிட் நனாஸ் பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பூங்காவிற்குப் போய் வரலாம்.
ஆங்காங்கு வானுயர கட்டிடங்கள் நிறைந்துள்ள கோலாலம்பூர் மாநகரத்தில் பசுமை ததும்பும் ஓர் இடமாகத் திகழ்கிறது இந்த புக்கிட் நானாஸ் இயற்கை பூங்கா. ஒரு காலத்தில் புக்கிட் வெல்ட் என்றழைக்கப்பட்ட இப்பகுதி, தீபகற்ப மலேசியாவிலேயே மிகவும் பழமையான பாதுகாக்கப்பட்ட காட்டுவளங்களுடன் கூடிய இயற்கைப் பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
கோலாலம்பூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இயற்கை பொக்கிஷம் என்பதால் இப்பகுதி "Green Lung" என வர்ணிக்கப்படுகிறது. இயற்கைப் பூங்காவாகவும், காடு மற்றும் இயற்கை வளம் பற்றிய கல்வி மற்றும் ஆய்வுக்கான தளமாகவும் இந்த புக்கிட் நானாஸ் பாதுகாக்கப்பட்ட புக்கிட் நானாஸ் இயற்கைப் பூங்கா திகழ்கிறது.
இங்கு என்ன இருக்கிறது?
இங்கு வருகைப் புரிபவர்கள் பசுமையான இயற்கை வளங்களையும், பலதரப்பட்ட செடிகள்,பூக்கள் மற்றும் காட்டு வளங்களையும், விதவிதமான பல வண்ணங்களாலான பறவைகளையும், பார்த்து மகிழலாம்.
தினம் கேட்கும் வாகனங்கள் மற்றும் இயந்திரங்களிலிருந்து வெளிப்படும் இரைச்சல்களிலிருந்து வெளியாகி, இயற்கையின் அமைதியையும், பறவைகள் எழுப்பும் இனிமையான ஓசையையும் கேட்கும் வாய்ப்பு கிட்டும்.
இது தவிர சிறுவர்களுக்கான விளையாட்டுப் பூங்கா, ஓய்வெடுக்கும் வகையிலான கொட்டகைகள், நாற்காலிகள், கூடாரம் அமைப்பதற்கான வசதிகள், மெது ஓட்டத்திற்கான தடம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், இந்த பாதுகாக்கப்பட்ட காடு குறித்த விபரங்களைப் பெறுவதற்கான தகவல் அறையும் இங்கு உள்ளது.
வருகையாளர்களுக்கான நேரம்:
பொது விடுமுறை, வார இறுதி நாட்கள் உட்பட வாரத்தில் 7 நாட்களும் புக்கிட் நானாஸ் பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பூங்கா காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
நுழைவு இலவசம் என்பதால், வார இறுதியை உற்சாகமாகக் கழிக்க விரும்புபவர்கள், புக்கிட் நானாஸ் இயற்கை பூங்காவில் இயற்கையின் ஸ்பரிசத்தை உணர்ந்து வரலாம்.
எங்கு இருக்கிறது?
முகவரி:
Hutan Simpan Bukit Nanas
Lot 240, Bukit Nanas, Jalan Raja Chulan,
50250 Kuala Lumpur.
Tel: 03-20706342